சரியான தத்துவார்த்தப் புரிதல் இல்லாத நிலை யில் எந்த ஒரு தனிநபராயினும் சரி; அமைப்பாயினும் சரி; தடம்மாறிச் செல்வதையும், கொண்ட குறிக் கோளை அடைய முடியாமல் போவதையும் தவிர்க்க முடியாது. ஆகவே கொண்ட குறிக்கோளை அடைவ தற்குத் தத்துவார்த்தப் புரிதல் என்பது மிக..மிக..மிக... அவசியமான முன் தேவையாகும்.

இந்திய அரசினால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு இருக்கும் வீரஞ்செறிந்த தெலுங்கானா விவசாயிகளின் புரட்சி ஒடுக்கப்பட்டதற்கும் இதுவே முக்கியமான காரணமாகும். தெலுங்கானா விவசாயிகளின் எழுச் சிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் ஹைத ராபாத் நிஜாம் சமஸ்தானம் தனக்குள் தானே சுருட்டிக் கொண்டுவிட்டது. ஆனால் வெள்ளையர்கள் வெளி யேறிய பின் அமைந்த இந்திய அரசு தனது இராணு வத்தை ஏவிவிட்டது. நிஜாமின் வீரர்களை விரட்டி யடித்த விவசாயிகளின் வலிமை, இந்திய இராணு வத்தைச் சந்திக்கும் திறனைப் பெற்றிருக்கவில்லை. தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள ஆயுதங்கள் கிடைத்தால் போதும் என்று நினைத்த கம்யூனிஸ்டுகள் ஆயுதங்களுக்காக ஸ்டாலினை அணுகினர். அப்பொழுது ஸ்டாலின் இந்தியக் கம்யூனிஸ்டுகளின் தத்துவார்த்தப் புரிதலில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக் காட்டினார்.

இந்திய இராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டுவந்த தொடர் வண்டிகளை ஓட்டமாட்டோம் என்று இரயில்வே தொழிலாளர்கள் ஏன் போராட வில்லை என்ற ஸ்டாலினின் வினாவிற்கு விடையளிக்க முடியாமல் புரட்சிக்குழு திணறியது. மேலும் நிலவியல் அமைப்பும், தான் ஆயுதங்களை வழங்குவதற்கு முடியாத நிலை உள்ளதைச் சுட்டிக்காட்டி நாடு முழுமைக்கும் புரட்சிகர உணர்வை ஏற்படுத்தத் தத்து வார்த்தப் போராட்டத்தை வலுப்படுத்தும்படி யோச னை கூறி, ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இந்த யோசனையை ஏற்க இந்திய கம்யூனிஸ்டுகள் இன்று வரைக்கும் மறுத்தே வருகின்றனர்.

இன்று பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக மாவோயிஸ்டுகள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களுடைய போராட்டத்தைத் தேச விரோத சக்தி என்று அரசு பரப்புரை செய்து கொண்டு இருக்கிறது. சமூக அக்கறை கொண்ட எழுத்தாளர்கள் பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் மாவோ யிஸ்டுகளை அதிகாரத்தினால் ஒடுக்க முயல்வது தவறு என்று எடுத்துக்காட்டுகின்றனர். தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் எதுவும் பழங்குடி மக்களின் வாழ்வு ரிமையைப் பற்றி அக்கறை கொள்ளவும் இல்லை; மாவோயிஸ்டுகளை அதிகாரத்தின் மூலமாகச் சந்திக் காமல் அரசியல் ரீதியாகச் சந்திக்க வேண்டும் என்று கூறவும் இல்லை. இந்த விஷயத்தில் ஆளுங்கட்சி களும், எதிர்க் கட்சிகளும் ஒரே அணியில் உள்ளன.

தேர்தலில் ஈடுபடாமல் புரட்சியை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறும் புரட்சிகரக் கட்சிகளும் தெலுங்கானாப் போராட்டத்தின் படிப்பினையை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தெலுங்கானா விவசாயிகளின் போராட்டத்தின்போது நாட்டின் பிற பகுதிகளில் இருந்த உழைக்கும் மக்களிடையே புரட்சிகர உணர்வு சிறிதும் இல்லாமல் இருந்தது. பழங்குடி மக்கள் வாழ்வுரிமைக்காகப் போராடும் இன்னும் மற்ற பகுதிகளில் புரட்சிகரச் சிந்தனையின் ஆரம்பப் புள்ளி கூடத் தெரியாமல் இருக்கிறது.

நியூயார்க் நகரில், வால்ஸ்ட்ரீட்டில் முற்றுகைப் போராட்டம் ஆரம்பமான உடன் புரட்சி வெடித்து விட்டது என்று இங்குள்ளவர்கள் துள்ளிக்குதித்தனர். விவரம் அறிந்தவர்களாகத் தங்களை நினைத்துக் கொள்ளும் (தேர்தலில் ஈடுபடாத) புரட்சிகரக் கட்சி களோ, இந்த எழுச்சி போதாது என்றும், தொளதொளப் பில்லாத வலுவான புரட்சிகரக் கட்சிகளின் கீழ் செயல் பட்டால்தான் புரட்சி ஏற்படும் என்றும் நிதானமான (!) அறிவுடன் கூறின. தொளதொளப்பில்லாத வலுவான புரட்சிகரக் கட்சி வேண்டுமென்றால் வலுவான தத்துவார்த்த அடிப்படை வேண்டும் என்று அக்கட்சிகளின் நிதானமான அறிவுக்கு எட்டவில்லை.

“எங்களுக்கு எல்லாம் தெரியும்; கண்களை மூடிக்கொண்டு எங் களைப் பின்பற்றினால் போதும்” என்ற தலைமைக் கனவிலேயே இன்னமும் மிதந்து கொண்டு இருக் கிறார்கள். தனிநபரின் தலைமை முக்கியமல்ல; தத்து வார்த்தப் புரிதல் தான் முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்ள எந்த உதிரி அமைப்பும் தயாராக இல்லை. தத்துவார்த்தப் புரிதல் மிக...மிக... மிகப் பலவீனமாக உள்ள இந்தச் சூழலில் தெலுங்கானா விவசாயிகளை வெற்றி கொண்டதுபோல், மாவோயிஸ்டுகளையும் இந்திய அரசு வெற்றி கொள்ளும் வகையில் தான் புரட்சிகரக் கட்சிகளாகத் தங்களைச் சித்தரித்துக் கொள்வோர் நடந்து கொள்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் தோழர்கள் வெற்றியின் ஒளியை நீண்ட காலமாகப் பார்க்க முடியாதிருந்தால் அவர்களுடைய மனம் விரக்தி அடைவது இயல்பு. நாட்டு மக்களின் மிகப் பெரும் பகுதியினர் பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் மாவோ யிஸ்டுகளுக்கு முழு ஆதரவு தரவில்லை என்பது மட்டுமல்ல; தார்மீக ஆதரவு கூடத் தரவில்லை என்பது மட்டுமல்ல; தங்களுக்கும் அப்போராட்டத்திற்கும் எவ் விதத் தொடர்பும் இல்லை என்பது போல் இருப்பது போராட்டத் தோழர்களின் மனவலிமையைப் பாதிக்கத் தான் செய்யும்.

மாவோயிஸ்டுத் தோழர்களில் பலர் தாங்கள் போராடும் நோக்கத்தை விட, துப்பாக்கியைச் சுடுவதில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதாக மாவோ யிஸ்டுக் கட்சியின் அமைப்புச் செயலாளர் சபியாசச்சி பாண்டா  10.02.2012 அன்று கூறினார். புரட்சிகரத் தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாததுதான் இதற்குக் காரணம் என்றும், அரசின் அடக்கமுறைகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் போது, தத்துவார்த்த வகுப்புகள் எடுப்பது சிரமமாக உள்ளது என்றும் அவர் கூறினார். இது மாவோயிஸ்டு இயக்கம் தடம்புரண்டு கொண்டு இருப்பதையே காட்டுகிறது.

இவ்வியக்கம் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை யை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் நாட்டில் இன்னும் மிகப்பல பிரச்சினைகள் உள்ளன. அப்பிரச்சனைகளை எல்லாம் கணக்கில் கொண்டு தத்துவார்த்த ரீதியாக நாட்டின் அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைத்து அதன் அடிப் படையில் இயக்கத்தை உருவாக்கி வளர்த்தெடுத் தால்தான், அது புரட்சிகர இயக்கமாகவும் இருக்கும்; புரட்சிக்கும் இட்டுச் செல்லும். ஆனால் நம் நாட்டில் புரட்சி இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லா இயக்கங்களும், சொல்லி வைத்தாற்போல சாதிப் பிரச் சனையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கின்றன.

சாதிப் பிரச்சனையைக் கணக்கில் எடுத்துக் கொள் வதில்லையே; இது இந்நாட்டின் பிரத்யேகப் பிரச்சனை ஆயிற்றே என்று வலுக்கட்டாயமாகக் கேட்டால், பிற் படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையேயான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்த முற்படுகின்றனரே ஒழிய, சாதி அமைப்பின் உச்சியில் அமர்ந்துகொண்டு சுகம் அனுபவிக்கும் பார்ப்பனர் களை ஆதிக்கத்திலிருந்து விரட்டக் கூடிய வழிமுறைகளை விவாதம் செய்யவும் மறுக்கின்றனர். பார்ப்பனர்களை உரக்கத் திட்டிவிட்டு அதுதான் பார்ப்பன எதிர்ப்பு என்று விளக்கம் கூறுகின்றனர். கேந்திரமான இடங்களில் பார்ப்பனர் அல்லாதார் போதுமான எண்ணிக்கையில் அமர வேண்டும் என்றும், இன்று நடப்பது போல் திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பவிடக் கூடாது என்னும் கருத்துப் பரவல் செய்வதையும், செயல்திட்டம் கொண்டு வருவதையும் அறவே வெறுக்கின்றனர். அதாவது புரட்சிகர இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள் எல்லாமே பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கத் தயாராக இல்லை. பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்காத வரையில் இந்தியாவில் புரட்சி என்பது சாத்தியமே இல்லை. 

இச்சூழ்நிலையில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இல்லாமல் புரட்சிகர இயக்கங்களைக் கட்டுவது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். ஆயுதந்தாங்கும் இயக்கங்களைக் கட்டுவது தொண்டர்களைப் பலி கொடுப்பதில்தான் இட்டுச் செல்லுமே ஒழிய வெற்றிக்கு இட்டுச் செல்லாது.

Pin It