தலைநகர் தில்லியில், கடந்த திசம்பர் மாதம் 16 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில், இளம் பெண் ஒருவர் ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில் காலிக்கும்பல் ஒன்றால் கொடிய முறையில் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுப் பேருந்திலிருந்து வீசியெறியப்பட்ட நிகழ்ச்சி இந்தியா முழுவதிலும் பரபரப்பாகவும் கவலையோடும் பேசப்படும் செய்தியாகிவிட்டது. துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக டேராடூன் கல்லூரியிலிருந்து தில்லிக்கு வந்திருந்தார் இந்த இளம்பெண். கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தன் ஆண் நண்பருடன் பேருந்தில் ஏறிய நிலையிலும் இப்பெண்ணின் கற்பு சூறையாடப்பட்டது. அந்த ஆண் நண்பரும் வெறிக்கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

தில்லி நகரம் நாட்டின் தலைநகரமாக மட்டுமல்லாமல் கற்பழிப்புக்கும் தலைநகரமாகத் திகழ்கின்றது. 2012ஆம் ஆண்டில் மட்டும் 600க்கு மேற்பட்ட பெண்கள் வல்லுறவுக்கு இலக்காகியுள்ளனர். ஆனால் திசம்பர் 16 இரவு நடந்த வல்லுறவு நிகழ்ச்சி மட்டும் காட்டுத்தீயாக மாறியது எப்படி? நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்ததால், திசம்பர் 17 திங்கட்கிழமை இரு அவைகளிலும் இந்நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சினையாக்கின. குற்றவாளி களை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கொந்தளித்தார். இதற்கான விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்ற முழக்கத்தால் நாடாளுமன்றமே அதிர்ந்தது. ஏனெனில் பாலியல் தாக்குதல்கள் தொடர்பான தனியான சட்டம் இந்தியாவில் இன்னும் இயற்றப்படவில்லை.

ஊழல்கள், முறைகேடுகள், அப்பட்டமான சந்தர்ப்ப வாத அரசியல் போக்குகள், வேலையின்மை முதலான வற்றால் படித்த - ஓரளவுக்கு வசதிபடைத்த இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினரிடம் வெறுப்பும், சினமும் குமைந்து கொண்டிருந்தன. இத்தரப்பினரின் உணர்வுகளைத் திட்டமிட்டுப் பயன்படுத்தி அன்னா அசாரே `ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தின் சார்பில் பல்லாயிரம் பேர்களைத் திரட்டினார்.

இதே தன்மையில் இப்போதும் இளைஞர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் சமூக வலைத்தளங்கள் மூலமான கருத்துப் பரிமாற்றங்கள் வாயிலாக ஒன்று திரண்டனர். திசம்பர் 21, 22 சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் 144 தடை ஆணைகளை மீறியும், மெட்ரோ இரயில் சேவையை முற்றிலுமாக முடக்கிய நிலையிலும் பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் இந்தியா கேட் பகுதியில் திரண்டு, குற்றவாளிகளை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல்துறையினர் இவர்கள் மீது தண்ணீரைப் பீச்சி அடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் தாக்கினர். இம்மோதலில் காவல்துறையினர் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இப்போராட்டத்தில் கெஜ்ரிவாலின் `ஆம் ஆத்மி' கட்சியினரும், பா.ச.க. வினரும், பாபா ராம்தேவ் ஆட்களும் கலந்து கொண்ட னர்.

அநீதிக்கும் அட்டூழியத்துக்கும் எதிராக இளைஞர்கள் அணிதிரண்டு அடக்குமுறைகளுக்கு அஞ்சாது வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடுவது வரவேற்கத்தக்க - ஊக்குவிக்கப்பட வேண்டிய செயலாகும். அதேசமயம் எதற்காகப் போராடுகிறோம்? அதற்கான தெளிவான தீர்வு என்ன? என்ற புரிதலும் வேண்டும்.

தில்லிப் பேருந்தில் இளம் பெண்ணைக் கற்பழித்த ஆறு பேரையும் உடனடியாகத் தூக்கில் போடவேண்டும் என்பதே முதன்மையான முழக்கமாக முன்வைக்கப் பட்டது. 2011 ஆம் ஆண்டில் தேசியக் குற்றப்பிரிவு ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, வன்புணர்ச்சிக்கு ஆளானவர்களில் 94.2 விழுக்காட்டினர் அதாவது 22,549 பெண்கள் - தம்முடன் வல்லுறவு கொண்ட வர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களே என்று கூறியிருக்கின்றனர். எனவே 22,549 பேர்களையும் தூக்கிலிடுவது தீர்வாக அமையுமா? உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் ஆகியோர்தாம் சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் தொல்லை களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்குகின்றனர். ஆகவே 90 விழுக்காடு பாலியல் குற்றவாளிகள் நன்கு அறிமுகமானவர்களாகவே இருக்கின்றனர்.

பெண்கள் மீதான ஆண்களின் பாலியல் சீண்டல்கள், தொல்லைகள், வன்முறைகள், வல்லுறவுகள் ஆகியவை இளம்பருவத்துக்குரிய வெறும் பாலியல் சார்ந்த உணர்ச்சிகள் மட்டுமல்ல. வரலாறு நெடுகிலும் ஆண் பெண்ணின் மீது, செலுத்திவரும் `ஆண்மை', அதிகாரம், அடிமைத்தனம், இழிவுபடுத்தல், ஏகபோக உரிமை ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட வெளிபாடுகள் இவை.

வட அமெரிக்காவில் 1865இல் ஆபிரகாம் லிங்கன் ஆட்சியில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது. கறுப்பின மக்களை ஆடுமாடுகளைச் சந்தையில் விற்பது வாங்குவது போன்ற நிலை நீங்கியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின், அந்நியர் ஆட்சிகளின் கீழ் அடிமைப்பட்டிருந்த அனைத்து நாடுகளும் விடுதலை பெற்றுவிட்டன. ஆனால் மனிதகுலத்திற்குள்ளேயே மிகப்பெரிய காலனியாக உள்ள பெண்கள் -பெண்ணடிமைத்தனம் மட்டும் சிற்சில மாற்றங்களுடன் அப்படியே நீடிக்கிறது. கல்வி, வேலை, உயர்பதவி என்று பெண்கள் எவ்வளவோ முன்னேறியுள்ளனரே என்று வினவலாம்! ஆனால் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ILO) அறிக்கை கூறுகிறது - ``உலகில் மனிதர்களால் செலுத்தப்படும் மொத்த உழைப்பில் 66 விழுக்காடு உழைப்பு பெண்களின் உழைப்பாகும். ஆனால் மொத்த வருவாயில் பெண்கள் 10 விழுக்காடு மட்டுமே பெறுகின்றனர். உலகில் உள்ள மொத்த சொத்தில் பெண்களிடம் ஒரு விழுக்காடு சொத்து மட்டுமே இருக்கிறது.'' (தி இந்து 2.12.12)

சொத்துரிமை மறுக்கப்பட்டமையே பெண்ணடிமைத் தனத்தின் தொடக்கப் புள்ளியாகும். இது குறித்து மார்க்சிய ஆசான்களில் ஒருவரான பிரெடரிக் எங்கெல்சு, ``குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்'' என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். ``தாயுரிமைச் சமூகம் தூக்கியெறியப்பட்டது. இது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள். அடிமைப்படுத்தப் பட்டாள். ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவி யானாள், கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனமாக ஆகிவிட்டாள். இதுவே வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கப்பகையாகும். ஒருதாரமணம் என்ற பெயரில் இது நிலைநாட்டப்பட்டது. இதுவே முதல் வர்க்க ஒடுக்குமுறை; பெண்பாலை ஆண்பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையாகும். ஒருதார மணமுறை வரலாற்று ரீதியில் மகத்தான முன்னேற்றமாகும். ஆனால் அதே சமயத்தில்,அது அடிமைமுறையுடனும் தனிச் சொத்துடனும் சேர்ந்தாற்போலவே இன்றளவும் நீடிக்கிற ஒரு யுகத்தைத் துவக்கியது'' என்று எங்கெல்சு அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தைப் பெரியார், சென்னை விக்டோரியா மண்டபத்தில் 30.9.1948இல் ஆற்றிய சொற்பொழிவில், ``என்றைக்கு ஆணுக்கு மட்டும் தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக்கொள்ளும் உரிமை ஏற்பட்டதோ, அதன் பிறகுதான் ஒருதார திருமணமுறை ஏற்பட்டிருக்க வேண்டும். பிறகு அந்தச் சொத்துக்கு வாரிசு தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வாரிசு தேட ஆரம்பித்த காலத்தில்தான், தன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பெண்ணைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளவும், அவளைத் தன்னையன்றி வேறு ஆணை நாடாமல் இருக்கும்படி செய்யாமல் ஆன நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனவே பெண் அடிமையாக்கப்படவும், அவளது இயற்கை ஆதிக்கங்கள் பறிமுதல் செய்யப்படவும், ஆணுக்கு மட்டும் சொத்துரிமை கொடுக்கப்பட்டதுதான் காரண மாகும். (விடுதலை 11.10.1948)

கடந்த மூவாயிரமாண்டுகால மானுட வரலாற்றில் பெண்ணடிமைத்தனத்தை வளர்த்ததிலும், கட்டிக் காத்ததிலும் மதங்கள் முதன்மையான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. இந்து மதம், கிறித்துவமதம், இஸ்லாம் மதம் ஆகிய மூன்று பெரிய மதங்களின் அடிப்படையான கருத்து, `பெண் ஒரு இழிந்த பிறவி; எளிதில் ஆணைமயக்கி ஏமாற்றுபவள்; நம்பிக்கைக்கு உரியவள் அல்லள்' என்பதாகவே இருக்கிறது. ஏவாள், ஆதாமைத் தன் ஆசைக்கு இணங்க வைத்துப் `பாவம்' செய்தது முதல், இந்துமத இதிகாச - புராணக்கதைகள் அனைத்தும் பெண்களை இழிவுபடுத்துவனாகவே உள்ளன. இஸ்லாத்தில் பெண்ணுக்குச் சொத்துரிமை இருப்பதாகக் கூறப்பட்டாலும், பெண்ணடிமைத்தனத்தின் கொடிய வடிவங்கள் அதில் மிகுந்து காணப்படுகின்றன.

``பெண்கள் எந்த நிலையிலும் சுதந்தரத்திற்கு அருகதையற்றவர்கள் என்பதே மத சம்பிரதாயம், ஒரு பெண்ணானவள் குழந்தைப் பருவத்தில் தாய், தந்தை மேற்பார்வையிலும், வாலிபப்பருவத்தில் கணவன் மேற்பார்வையிலும், வயோதிகப் பருவத்தில் தன் மக்களின் மேற்பார்வையிலும் இருக்க வேண்டுமே யொழிய, சுதந்தரமாய் இருக்கக்கூடாதென்று மனுதர்ம சாத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இது மாத்திரமல்லாமல் பெண்களைக் கடவுள் பிறவியிலேயே விபச்சாரிகளாகப் பிறப்பித்திருப்பதால், அவர்களைச் சர்வ ஜாக்கிரதை யாகக் காவல் காக்க வேண்டும் என்று மத சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது'' என்று பெண்கள் கூட்டத்தில் பெரியார் பேசியிருக்கிறார் (குடிஅரசு 10.1.1948)

கடந்த 250 ஆண்டுகளில் உலக அளவில் - அதற்கு முன்னைய 2000 ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் - முன்னேற்றம் - வளர்ச்சியைப் போலப் பன்மடங்கு மாற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டன. இதற்கு மாபெரும் உந்துவிசையாக முதலாளிய உற்பத்தியும் அதன் விளைவான காலனிய ஆட்சிகளும் அமைந்தன. தனிமனித சுதந்தர உணர்ச்சிக்கும் உரிமைகளுக்குமான போராட்டங்கள் நடந்தன. முதலாளியம், சமூகத்தின் சிந்தனைப் போக்கைத் தன் திசையில் திருப்புவதற்காக - அதற்குத் தடையாக இருந்த மத ஆதிக்கத்தையும் நிலப் பிரபுத்துவப் பொருளியல் கட்டமைப்பையும் கலாச்சாரத்தையும் எதிர்த்தது. இதனால் ஆட்சியதிகாரத்தில் மதம் செலுத்திவந்த ஆதிக்கம் சரிந்தது. குறிப்பாக அய்ரோப்பிய நாடுகளில் மதச் சார்பின்மை சிந்தனை மேலோங்கியது. சனநாயக ஆட்சிமுறை, மதச் சார்பின்மை ஆகியவற்றின் காரணத்தால் பெண்கள் பல சமூக உரிமைகளையும் வாக்குரிமையும் பெற்றனர்.

இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சியில் உடன்கட்டை ஏறும் வழக்கம், குழந்தை மணம், தேவதாசி முறை முதலானவை ஒழிக்கப்பட்டன. சுதந்தர இந்திய அரசியல் சட்டத்தில் பல பெண்களை மணந்துகொள்ளும் பலதார திருமணமுறை ஒழிக்கப்பட்டு, ஒருதாரமண முறையே சட்டமாக்கப்பட்டது. மணவிலக்கு உரிமையும் வழங்கப் பட்டது. ஆனால் நம்நாட்டில் அரசியல் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன் வாழ்கின்றனர். ஆனால் அய்ரோப்பிய நாடுகளில் தன்மனைவியைத் தவிர வேறோர் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்திருப்பது வெளியில் தெரிந்தால் அமைச்சர் பதவி பறிபோகிறது. இசுலாம் மதத்தில் ஒரு ஆண் நான்கு பெண்கள் வரை மணக்கலாம் என்பது இன்றளவும் நீடிக்கிறது.

மேலை நாடுகளில் நல்ல கல்வியும், ஓரளவுக்குப் பொருளாதாரச் சுதந்தரமும் பெற்றுள்ள பெண்களே ஆணாதிக்கத்தின் அடக்குமுறைகளிலிருந்தும் வன் முறைத் தாக்குதல்களிலிருந்தும் முற்றிலுமாக விடுபட வில்லை. இந்தியாவிலோ, மணிச் சுருக்கமாகப் பெரியார் கூறினார், ``ஓர் ஆணுக்கு ஒரு சமையற்காரி; ஓர் ஆணின் வீட்டுக்குக் காவல்காரி; ஓர் ஆணின் குடும்பப் பெருக்குக்கு ஒருபிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஓர் ஆணின் கண் அழகிற்கும் மனப்புளாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள்?'' (திருபத்தூரில் 15.9.1946 இல் சொற்பொழிவு, குடிஅரசு 21.9.1946) இன்றும் பெண் நிலையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதே நாம் காணும் கண்கூடான உண்மையாகும்.

பிறப்பின் அடிப்படையிலான சாதியமைப்பின் காரணமாக ஆண்களுக்கிடையிலேயே உயர்வு - தாழ்வு கடைப்பிடிக்கப்படுகின்ற இந்தியச் சமூகத்தில், பிறப்பு காரணமாகப் பெண்கள் அனைவரும் தாழ்ந்தவர்கள்; பலவீனமானவர்கள்; ஆணுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று புரையோடிக் கிடக்கும் சிந்தனையை - செயல்பாடுகளைக் களைவதற்குக் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. தாயே தான் பெற்ற பெண் மகவைக் கண்டு முகம் சுளிக்கக்கூடிய பேதைமை நீடிக்கிறது. ஆண் குழந்தை மோகம் குன்றாமல் இருக்கிறது. ஆண் மகவு மோகம் மத நம்பிக்கைகளோடுப் பின்னிப்பிணைந் துள்ளது. பெற்றோர் செத்தால் கொள்ளிப்போட - சொர்க்கத்துக்குப் போக - திதி கொடுக்க ஆண்மகன் வேண்டுமாம். பிறப்பதற்கு முன்பே - கருநிலையிலேயே பெண்சிசுக் கொலை என்பது நவீன மருத்துவத் தொழில் நுட்ப உதவியுடன் தில்லி போன்ற பெரிய நகரங்களில் படித்த - பணக்கார குடும்பங்களில் அதிகமாக நடக்கிறது. சிற்றூர்களில் பல பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறந்ததும் கொல்லப்படுகின்ற கொடுமை நீடிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் போல் ஊட்டமான உணவு அளிப்பதில்லை. நோய் வந்தால் மருத்துவம் செய்து கொள்வதில்லை. அதனால் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 5 அகவைக்கு உட்பட்டவர்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கின்றன. 1901ஆம் ஆண்டும் இதே நிலைதான் இருந்தது. கடந்த 110 ஆண்டுகளில் பெண்களை இந்தியச் சமூகம் எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்கான ஓர் அளவுகோல் இது!

பெண்கள் `பருவம் எய்துவதை' ஒரு விழாவாக் கொண்டாடும் இழிதகைமை வளர்ந்துவருகிறது. தன் பெண் `ஆணின் அனுபவிப்புக்கு உரிய பொருளாகி விட்டாள்' என்று தந்தையே தம்பட்டம் அடிக்கும் செயல் அல்லவா இது! திருமணம், பிள்ளைகளைப் பெற்று வளர்த்தல், குடும்ப வாழ்க்கை குறித்து நிலவுகின்ற சமூகக் கருத்துகள் ஆண் ஆதிக்கத்தை நிலைநாட்டுவன வாகவே உள்ளன.

தில்லியில் ஒரு வெறிக்கும்பலால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மூளை, இதயம், வயிற்றுப்பகுதி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் தில்லி மருத்துவ மனையிலிருந்து மேலும் உயர்ந்த மருத்துவம் அளிப்பதற்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த 29.12.2012 விடியல்காலை உயிர் நீத்தார். கடும் எதிர்ப்பு காரணமாகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் அரேச அப்பெண்ணுக்கு உயரிய அளவிற்கு மருத்துவம் செய்கிறது. ஆனால் நாள்தோறும் இந்தியா முழுவதும் சிறு நகரங்களிலும் சிற்றூர்களிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் கொடுமை களுக்கு இலக்காகி வருகின்றனர். இவர்களில் 40 விழுக்காட்டினர் மட்டுமே காவல்நிலையங்களை நாடுகின்றனர். காவல்நிலையத்திலோ இவர்கள் விலை மகளிர்போல் நடத்தப்படுகின்றனர். நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் இவர்களை நோக்கித் தொடுக்கும் வினாக்களோ அப்பெண்களின் மாண்பைக் குலைப் பனவாக உள்ளன.

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனை விதிப்பது தொடர்பாக ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வர்மா தலைமை யின்கீழ் ஒரு குழுவை நடுவண் அரசு அமைத்துள்ளது. தில்லியில் பேருந்தில் நிகழ்ந்த இளம் பெண்ணின் வல்லுறவுக் கொடுமையைத் தடுக்கத் தவறியதற்கான காரணங்களை ஆராய மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காவல்துறையால் பெண்களுக்கு - குறிப்பாக பழங்குடி - தாழ்த்தப்பட்ட - ஏழை எளிய பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. காவல் நிலையத் திலேயே கற்பழிக்கப்படுகின்றனர். நீதித்துறையும் இதில் ஆண் ஆதிக்க மனப்பான்மையுடனேயே நடந்து கொள்கிறது.

ஆயினும் கடுமையான சட்டங்களை உருவாக்குவ தும், அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவதும் தேவையே! அதைவிட சமூகத்தில் பெண்களைப் பலவீனமானவர்களாக - அனுபவிப்புப் பொருளாக - ஆணுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியவர்களாகக் கருதும் சிந்தனைப் போக்கில் பெரும்மாற்றம் ஏற்பட வேண்டும். முதலாளிய ஊடகங்கள், திரைப்படங்கள் முதலானவை பெண்களைக் கடைச் சரக்காக மாற்றும் இழிவை எதிர்த்துப் போராட வேண்டும். பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துகள் வலிமையான ஆயுதங் களாக விளங்குகின்றன. தன்னைத் தாக்கி அழிக்க வரும் அத்தனை பகைச் சக்திகளையும் அடித்துத் தூளாக்கும் ஆற்றல் வாய்ந்த இனமாகப் பெண்ணினம் உருப்பெற்றுப் பீடும் பெருமிதமும் கொள்ளும் நாளே மானுடம் மாண்பு பெறும் நாளாம்.

Pin It