தெலுங்கானாவில் கடந்த 27 ஆம் தேதி பிரியங்கா என்ற பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய நான்கு பேரும் போலி மோதல் மூலம் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தெலுங்கானாவை தாண்டி நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் நான்கு பேரின் மரணத்தைக் கொண்டாடி இருக்கின்றனர். குற்றவாளிகளை போலி மோதல் மூலம் கொலை செய்த காவலர்களை மக்கள் மலர் தூவி வரவேற்றதோடு, தூக்கி வைத்தும் மகிழ்ந்திருக்கின்றார்கள். பல அரசியல் கட்சித் தலைவர்கள் கூட இந்த போலி மோதல் கொலையை வெளிப்படையாக ஆதரித்துப் பேசி இருக்கின்றார்கள்.
சமூகத்தின் கூட்டு மனசாட்சி, சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பாக மிக எளிதாக நிறைவேற்றப்பட்ட தண்டனையை கொண்டாடித் தீர்க்கின்றது என்றால், அதற்கான காரணத்தை நாம் எப்படி புரிந்து கொள்வது? காதல் மறுக்கப்படும் சமூகத்தில் காதல் கொண்டாடப்படுவதுபோல், நீதி மறுப்படும் சமூகத்தில் நீதியின் வடிவில் இழைக்கப்படும் அநீதி கொண்டாடப்படுகின்றது.
(பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சாகர்)
மக்கள் இந்த நீதி அமைப்பின் மீது பெரும் நம்பிக்கை இழப்புக்கு ஆளாகி இருக்கின்றார்கள் என்பதையே அவர்கள் போலி மோதல் கொலைகளை வரவேற்பதில் இருந்து தெரிகின்றது. நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பல்கிப் பெருகி வரும் சமீபத்திய ஆண்டுகளில், அரசு அமைப்புகள் அதன்மீது எடுத்த தீவிர நடவடிக்கைகள் என்று எதையுமே சொல்ல முடியாது. வெறும் சட்டங்கள் போடுவது மட்டுமே அவர்களால் செய்ய முடிந்த ஒன்றாகவே இருக்கின்றது.
சென்ற ஆண்டு பிஜேபி அரசு 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் படி பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளின் குறைந்தபட்ச சிறைத் தண்டனை 7 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் 16 வயதுக்கும் குறைவானவராக இருந்தால், குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் முதல் வாழ்நாள் வரை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயதுக்கும் குறைவானவராக இருந்தால், குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை இந்த சட்டத்தின் மூலம் விதிக்க முடியும். மேலும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் அதாவது அனைத்து பாலியல் பலாத்கார சம்பவங்களிலும் 2 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும். இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என புதிய சட்டம் பரிந்துரை செய்தது.
2016-ம் ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 குற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை கூறுகின்றது. இது 2015-ம் ஆண்டின் 3,29,243 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 2.9 சதவிகிதம் அதிகமாகும். 2017-ம் ஆண்டில் மட்டும் பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, சைபர் குற்றங்கள், கடத்தல், கொலை, ஆசிட் வீசுதல் என 3,59,849 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரம் கூறுகிறது. 2016-ல் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 165 பாலியல் வன்கொடுமை வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன. இந்தியா முழுவதும் 2017-ம் ஆண்டு மட்டும் பாலியல் வன்முறை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 227 ஆகும். 2017-ம் ஆண்டு இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக 32,254 பாலியல் வன்முறைக் குற்றங்கள் நடந்துள்ளன.
ஆனால் இதில் ஒரு சதவீதம் வழக்குகளில் கூட குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தாலே அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாஜக புதிய சட்டத்தைக் கொண்டு வந்ததற்குப் பிறகு உத்திரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் மத்திய முன்னாள் இணை அமைச்சரும், பாஜக தலைவருமான சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்து, வீடியோ வெளியிட்டிருந்தார். பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராகப் புகார் கொடுத்தார். ஆனால் அந்தப் புகாரை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் சுமார் மூன்று நாட்கள் கழித்து ஏற்றுக் கொண்டது காவல்துறை. அதேநேரம் இது போன்று வீடியோவை வெளியிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த அந்த மாணவியும், அவரது குடும்பத்தாரும் முயற்சி செய்ததாக சின்மயானந்தா அளித்த புகாரை உடனடியாக காவல்துறை பதிவு செய்தது.
அதே போல உத்திரப் பிரதேச மாநிலத்தில் உன்னவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அப்பெண் 16 வயதாக இருந்த போது, வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப்பின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் புகார் அளித்தார் ஆனால் என்னவானது? அப்பெண்ணின் தந்தை 2018 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் போது காவலர்களால் அடித்தே கொல்லப்பட்டார். அப்பெண் தனது தாய், வழக்கறிஞர் மற்றும் ஒரு உறவினருடன் காரில் ரேபரேலி சென்று கொண்டிருந்தபோது, அவரின் கார் மீது லாரி மோதி அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் உயிரிழந்தனர். தற்போது அதே உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட 23 வயதான பெண் டெல்லி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமையன்று இரவு உயிர் இழந்திருக்கின்றார்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்று எழுத்தளவில் சொல்லப்பட்டாலும் வர்க்க சமூகத்தில் அப்படி இருப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதுதான் உண்மை. இங்கே அரசு அமைப்புகள் முழுவதும் நீதிமன்றம், காவல்துறை, ராணுவம் என அனைத்துமே ஒடுக்கும் வர்க்கத்தின் அடியாள் படையாகவே செயல்பட்டு வருகின்றன. அது அப்படித்தான் இருக்கும். இதை அரசியல் தெளிவுடன் புரிந்து கொள்ளும் போதுதான், ஏன் ஒரே வகையான குற்றத்தை இரு வேறு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும் போது, ஒடுக்கப்படும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அரசு இயந்திரம் சிரம் மேற்கொண்டு ஒடுக்குவதையும், ஒடுக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் முன் அதே அரசு என்னும் ஒடுக்கு முறை இயந்திரம் நாயைப் போல வாலாட்டி நிற்கின்றது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறுவு செய்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டி, அரசியல்வாதிகளுக்கும் அந்தப் பெண்களை பணிந்துபோக நிர்பந்தித்த பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளான வக்கிரம் படைத்த பணக்கார வெறி நாய்கள், ஆளும் கட்சியின் ஆதரவுடன் தற்போது ஜாமீனில் வெளியே விடப்பட்டதைப் பார்க்கும் சாமானிய மக்கள் இந்த நீதிமன்றத்தின் மீது, அரசு அமைப்புகளின் மீதும் காறித் துப்ப மாட்டார்களா? நிச்சயம் துப்புவார்கள் என்று ஜாமீன் கொடுத்த நீதிமன்றத்திற்கும், அவர்களை ஜாமீனில் வெளிவர உதவிய அரசுக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் மக்களின் மனநிலை மீது அவர்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் பல பெண்களை ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் அரசியல்வாதிகள் மற்றும் கிழட்டுப் பொறுக்கிகளின் பாலியல் வக்கிரங்களை தீர்த்து வைப்பதன் மூலம் பலனடைய நிர்மலா தேவி போன்ற பாலியல் தரகர்களையும் தூண்டியது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள், நிர்மலா தேவி, அவருக்கு உடந்தையாக இருந்தவர்க, சின்மயானந்தா, பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகருக்கு எதிராக ஏன் போலீசாரின் துப்பாக்கி நீளவில்லை என்பதற்கான காரணத்தை ஆய்வு செய்தால் அங்கே நிற்பது சாதியும், வர்க்கமும்தான். ஆனால் சாமானிய மக்களுக்கு இதைப் பற்றியெல்லாம் ஆழ்ந்து சிந்தித்து அறியும் அளவிற்கு அரசியல் அறிவு இன்னும் வளரவில்லை என்பதும், அப்படி வளரக்கூடாது என்பதற்காகத்தான் சாதிய, மதவாத, இனவாத சக்திகள் ஒடுக்கும் வர்க்கத்துடன் கூட்டணி அமைத்து மக்களின் சிந்தனையை எப்போதுமே மழுங்கடிக்கும் வேலையைச் செய்து வருகின்றன. அதனால் பொதுச் சிந்தனையில் நீதி மறுக்கப்படுகின்றது என்பதை அறிந்து வைத்துள்ள சாமானிய மக்கள், அது மிக எளிதாக எந்த வகையில் கிடைத்தாலும் அதை கொண்டாடித் தீர்க்கும் மனநிலைக்கு வந்து விடுகின்றார்கள்.
நிச்சயமாக பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை இதே போன்று தமிழக காவல்துறை போலி மோதலில் சுட்டுக் கொன்றாலும், நிர்மலா தேவியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சுட்டுக் கொன்றாலும், அதே போல உ.பி காவல்துறை சின்மயானந்தா மற்றும் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் போன்றோரை சுட்டுக் கொன்றாலும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மக்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். ஆனால் ஒருபோதும் காவல்துறை அதைச் செய்யாது என்பது இந்த அரசின் வர்க்கத் தன்மையை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்.
அரசு அமைப்புகளின் மீதான நம்பிக்கை இழப்புதான் இந்த மக்களை இப்படி போலி மோதல் கொலைகளை கொண்டாட வைக்கின்றது. இந்தக் கொண்டாட்டம் அரசு அமைப்புகளின் ஜனநாயக வேடத்தைத்தான் அம்பலமாக்கி இருக்கின்றது.
மக்களின் இது போன்ற மனநிலை அவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தும்? நாளை பாலியல் வழக்கில் தொடர்புள்ள ஒரு காவல்துறை அதிகாரியையோ, இல்லை அமைச்சர், எம்.எல்.ஏவையோ அல்லது அரசு அதிகாரிகளையோ நீதியை நிலை நாட்ட விரும்பும், ஆனால் சட்டத்தில் நம்பிக்கையற்ற நபர்கள் வேட்டையாடும் போதும் சாமானிய மக்களை நிச்சயம் மகிழ்ச்சி கொள்ள வைக்கும். காரணம் மக்கள் நீதியை மிக விரைவாக எதிர்பார்க்கின்றார்கள். ஆது சட்டப்படியா, இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படும் அளவிற்கு அவர்கள் இன்னும் அரசியல் மேதமையை அடையவில்லை. அதனால் தெலுங்கானாவில் நான்கு பேரை காவல்துறை சுட்டுக் கொன்தற்காக மக்கள் அவர்களைக் கொண்டாடுவதை காரணம் காட்டி, தங்களை ஜனநாயக சக்திகள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் மக்களுக்கு ஜீவகாருண்ய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக்காமல் இந்த அமைப்பு ஏன் சாதாரண ஒடுக்கப்படும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே பழி தீர்க்கின்றது, மற்றவர்களை ஏன் தப்ப வைக்கின்றது என்பதைப் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால் மட்டுமே தோற்றுப் போன இந்த அரசு அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து புரட்சிகர அரசியலை நோக்கி நகர்வார்கள். காவல்துறை மட்டுமல்ல, மக்களும் கூட குற்றவாளிகளை மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தி பழி தீர்க்க முடியும் என்று நம்பிக்கை கொள்வர்கள்.
- செ.கார்கி