இந்திய நாடு, பெண்கள் மீதான வன்முறையில் உலகிலேயே, முதன்மையானதாக இருக்கிறது என்று ஒரு ஆய்வு சமீபத்தில் வெளிவந்தது. அதை ‘‘இந்தியாதான் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு’’ என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தார்கள் அந்த ஆய்விலே போரிலே சிக்கிக்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானும், சிரியாவுக்கு கூட, இரண்டாவது, மூன்றாவது இடத்தில்தான் வருகின்றன.பாலியல் தாக்குதல் ஆபத்து, அடிமைத் தொழில் செய்ய ஏற்படும் நிர்ப்பந்தம் ஆகியவை காரணங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இந்த ஆய்வை  ‘தாம்சன் ரையடர்ஸ்  பவுண்டேசன்’ என்ற அமைப்பு நடத்தியுள்ளது. பெண்கள் பிரச்சனையில் நிபுணர்களாக உள்ள 550  பேரிடம் கேட்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நான்காவது இடத்தில் சோமாலியாவும், ஐந்தாவது இடத்தில் சௌதி அரேபியாவும் வருகின்றன. முதல் பத்து மோசமான நாடுகள் பட்டியலில், வருகின்ற ஒரே மேற்கத்திய நாடு, அமெரிக்காதான். பாலியல் வன்முறை, பாலியல் சித்திரவதை, பாலியல் நிர்ப்பந்தம் ஆகியவற்றில், அமெரிக்கா மூன்றாவதாக வருகிறது.

2011ஆம்  ஆண்டு  இதே ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ஆப்கானிஸ்தான், காங்கோ குடியரசு, பாகிஸ்தான், இந்தியா என பட்டியலிட்டது. அதாவது நான்காவது இடத்தில் நமது நாடு இருந்ததாகக் கூறியது. இப்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளதாகக் கூறுகிறது. சோமாலியா அப்போதும் நமக்கு பின்னால்தான் வந்தது. ஏழு ஆண்டுகளில் இப்படி ஒரு முன்னேற்றமா? இது கேவலமாக இல்லையா என மனித உரிமை ஆர்வலர்கள் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு,  ‘தேசிய பெண்கள் ஆணையம்’ இந்த ஆய்வு வேண்டுமென்றே இந்தியாவை அசிங்கப்படுத்த வெளியிடப்பட்ட ‘தவறான ஆய்வு’ என்று கூறியிருக்கிறார்கள். அதேநேரம், 2007இலிருந்து 2016 வரை அரசாங்க புள்ளிவிவரங்களின் படியே, 83  விழுக்காடு பெண்கள் மீதான குற்றங்கள் கூடியுள்ளன என்று கூறப்படுகின்றது.

மேற்கண்ட ஆய்வு செய்தவர்கள், ஐ.நா.சபையின் 193  நாடுகளில், ஐந்து நாடுகளை மட்டுமே எடுத்து அங்கே இருக்கும் சிலரிடம் கேள்விகள் கேட்டுள்ளனர். அதில்தான் இந்தியா முதலிடத்தில் வந்துள்ளது. அவர்கள் எடுத்த ஆய்வு, பெண்களுக்கான சுகாதார உதவி, பொருளாதார உத்தரவாதம், பண்பாட்டு அல்லது பாரம்பரியமான பழக்கங்கள், பாலியல்  வன்முறை, சித்திரவதை, பாலியலற்ற வன்முறை, கடத்தல் ஆகியவற்றில் எந்த நாடு அதிக மோசமாக உள்ளது என்பதையே கேள்விகளாகக் கேட்டுள்ளனர். பெண்கள் கடத்தல், பாலியல் அடிமைப்படுத்தல், குடும்ப அடிமைப்படுத்தல், நிர்ப்பந்த திருமணங்கள், கல்லெறிந்து தாக்குதல், பெண்சிசுக் கொலை போன்ற பாரம்பரிய பழக்கங்களிலும் இந்தியா முதல் மோசமான இடத்தைப் பிடித்துள்ளதாக பதில்கள் கிடைத்துள்ளன என்கிறார்கள். நடுவண் ‘பெண்கள், குழந்தைகள் அமைச்சகம்’ இதற்கு பதில் கொடுக்க மறுத்துவிட்டது.

இதுபற்றிய கருத்துக்களை எழுதும் ஆங்கில ஏடுகளில், இன்னுமொரு  செய்தியும் கூறுகிறார்கள். அதாவது இங்குள்ள ஊடகவியலாளர்கள், இந்தியாவில் நடக்கும், பாலியல் குற்றங்களை எழுதும்போது ஒரு பாணியிலும், மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும் பெண்கள் மீது நடக்கும் வன்முறைகளை எழுதும் போது வேறு பாணியிலும் எழுதுகிறார்கள் என்பதாகவும் கருத்துக்கள் வந்துள்ளன.

மனித உரிமைகள் மீறப்படுதல்கள் பற்றிய செய்திகளில், மேற்கத்திய நாடுகளோ, அவற்றில் உள்ள ஊடகங்களோ, கீழை நாடுகளை பற்றி ‘இழிவான கருத்துப் பரவலுக்கு’ வழி வகுத்து எழுதுவார்கள் என்பது உண்மைதான். ஒரு ‘காட்சி ஊடகத்தில், பேச்சுக் காட்சியில்’, ஒரு காவல்துறை அதிகாரி, இது பற்றி காட்டமாகவே கூறினார். அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகைக்கு, அங்கே பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்களின் எண்ணிக்கை, விகிதாச்சார ரீதியில் பார்த்தோமானால் கூடுதலாக இருக்கும் என்று கூறினார். அது என்னவோ உண்மைதான். ஆனாலும் நம் நமது நாட்டில் நடக்கும் தவறுகள் பற்றி ஒரு வெளிப்படையான பார்வையுடன், ‘களைந்தெறிய வேண்டிய தவறுகளை’ கணக்குப் பார்க்க வேண்டும் என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். பெண்களை  மானுடத்தின் ஒரு பகுதியாகப் பார்க்காமல் இருப்பதுவே இத்தகைய தவறான போக்குகளுக்கான அடிப்படைக் காரணம் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். 

நாம் உண்மையில் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்  கப்பட்ட புள்ளிவிவரங்களை காண்போமானால், சில விளக்கங்கள் கிடைக்கும். 2008 இலிருந்து, 2012  வரை, அரசியல்வாதிகளும், ஊடகங்களும் பெண்கள் மீதான வன்முறைகள் பற்றிய விவாதங்களை அதிகமாகச் செய்து வந்தனர் என்கிறது இணையதளம். ‘தேசிய குற்றவியல் பதிவுகள் அலுவலகம்’

2012ஆம் ஆண்டு, பெண்கள் மீதான குற்றங்கள், 6.0% {விழுக்காடு} கூடியதாகத் தெரிவிக்கிறது. 244270  குற்றங்கள் பதிவு ஆகி உள்ளன என்கிறது. ஆனால் 2011ஆம் ஆண்டு, 228650 குற்றங்கள் பதிவாகி உள்ளன என்கிறது. இந்தியாவில் வாழும் பெண்களில், 7.5%  மேற்கு வங்கத்தில் வாழ்கிறார்கள். அவர்களில், 12.7% குற்றங்கள் பதிவாகி உள்ளன என்கிறது அந்த இணையம். ஆந்திராவில், 7.3% பெண்கள். அதில் 11.5% பெண்கள் மீதான குற்றங்கள் பதிவாகி உள்ளன. 65% இந்திய ஆண்கள், பெண்கள் தங்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளை தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இங்கேதான் கேவலமான இந்த ‘பண்பாடு’ இடிக்கிறது. 24% இந்திய ஆண்கள், வாழ்க்கையில் எப்போதாவது, பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று 2011ஆம் ஆனது ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆகவே, வெளியிடப்பட்டுள்ள ஆய்வைக் குறை கூறுவதை நிறுத்தி விட்டு, நம் ‘பெண்களை மானுடத்தின் ஒரு அங்கமாக காண வேண்டிய’ அவசியத்தை வலியுறுத்த வேண்டும். பெண்களின் உரிமை, மனித உரிமையே.

தொடரும்

Pin It