pavalar thamzhilandhi 350பாவலர் தமிழேந்தி தொகுத்த ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ நூலில் பெரியாரும் தமிழும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அவர் நினைவாகப் பதிவு செய்கிறது.

பெரியாரின் முன்னோர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் பின்னாளில் அவர்கள் தமிழ்நாட்டிற்குக் குடிபெயர்ந்து பல ஆண்டுகளாய் இங்கு வாழ்ந்து தம் தாய்மொழியாகத் தமிழ் மொழியை ஏற்றுக் கொண்டவர்கள். இது பற்றிப் பெரியாரே பின்வருமாறு கூறுவார்:

“என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்த போதிலும் அதை நான் தினசரி பேச்சு வழக்கில் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் தமிழ் மொழியைத்தான் பயன்படுத்தி வருகின்றேன். எனக்குக் கன்னடத்தைவிடத் தெலுங்கில் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். இருந்தாலும் தமிழ்மொழியால்தான் என்னுடைய கருத்துகள் அனைத்தையும் நான் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்த முடியும்.” (விடுதலை 21.5.1959)

“மேலும், எனக்கு மொழிப் பற்று, இனப்பற்று, கடவுள் பற்று, நாட்டுப் பற்று, மதப் பற்று போன்ற வேறு எந்தப் பற்றும் இல்லை. மனிதப் பற்று ஒன்றுதான் உண்டு. அதுவும் வளர்ச்சி நோக்கிய மனிதப் பற்று, எனக்கு வளர்ச்சியே முக்கியம். எனக்கு வேறு எந்த அபிமானமும் கிடையாது.” (15.10.1962 விடுதலை - தலையங்கம்) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியெல்லாம் பெரியார் பல இடங்களில் பேசி இருந்தாலும் ஆதிக்கம் எந்த வடிவில் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் அதனை எதிர்க்கும் முதல் போராளியாய் அவர் களத்தில் நின்றுள்ளார். அவரின் இந்தி எதிர்ப்பு, சமற்கிருத ஆதிக்க எதிர்ப்புப் போராட்டச் சுவடுகளை யாராலும் எளிதில் அழித்துவிட முடியாது. திருக்குறளைத் தமிழ் மக்களிடையே முன்னெடுத்துச் சென்றதிலும், தமிழ் நாடெங்கும் தமிழிசை இயக்கத்தை வளர்த் தெடுத்ததிலும் பெரியாரின் பங்கு மிகப் பெரிதாகும்.

இந்த உண்மைகளையெல்லாம் மறுத்தும் மறைத்தும் இன்று தம்மைத் தீவிரத் தமிழ்த் தேசியர்களாய்க் காட்டிக் கொள்ள முயலும் சிலர் பெரியாரைக் கன்னடர் என்று பழித்தும் காஞ்சி சங்கராச்சாரியுடன் ஒப்பிட்டும் பகை கக்குகிறார்கள். பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று தரந்தாழ்த்தி விட்டார் என்று அங்கலாய்க்கிறார்கள்.

எவரும் தமிழிலக்கிய வரலாற்றை நேர்மையான முறையில் அணுக வேண்டும். அப்போதுதான் தமிழிலக்கியங்கள் மீது பெரியார் கொண்ட சினத்திற்கான காரணம் புரியும். தமிழில் இன்றுள்ள மிக மூத்த இலக்கியம் மற்றும் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இது சங்க இலக்ககியங் களுக்கெல்லாம் முற்பட்டது. அந்தத் தொல்காப்பியத்திலேயே நால்வருணக் கருத்தியல் கால் கொண்டுவிட்டது. அரசர்களால் போற்றப்படும் அறிவாளர்களாக ஆரியப் பார்ப்பனர்கள் வளர்ச்சிப் பெற்று விட்டார்கள். அறுவகைத் தொழில் புரியும் பார்ப்பனரை வழிபட்டு அதனால் பெருமை அடையும் தமிழ் அரசர் பலர் தோன்றிவிட்டார்கள் என்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறிய இயலும்.

சேர மன்னர்களைப் புகழ்ந்து பாடும் பதிற்றுப் பத்து நூலில், “மறைஓதல், வேட்டல், அவை இரண்டையும் பிறர் செய்யச் செய்தல், வேள்வியை இயற்றல், வறியார்க்கு ஒன்றை ஈதல், தமக்கு ஒருவர் கொடுத்ததை ஏற்றல் என்ற ஆறு  தொழில்களைச் செய்து ஒழுகும் அறநூல் பயனை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு அதனால் உலகம் நின்னை வழிபட வாழி!” என ஒரு புலவர் சேரனை வாழ்த்துகிறார்.

“ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல் ஏற்றல்

 ஈதல் வேட்டல் என்று ஆறு புரிந்தொழுகும்

 அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி”                                                      (பதிற்றுப்பத்து 24:6-8)

இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்கிற இருதமிழ் மன்னர்களைப் பற்றிப் புறநானூறு பேசுவதும் இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.

தொல்காப்பியத்தில் அந்தணர்க்கு உரியவாய்ச் சுட்டப்படும் பொருள்களைத் தாங்கிய பார்ப்பனர்கள் பற்றிய குறிப்புகளும் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றாகிய கலித்தொகையில் இடம் பெற்றுள்ளது.

‘பெருமா அந்தணரே! உறியில் பொருந்திய கமண்டலத்தையும், அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லும் சொல்லை உடைய முக்கோலையும் தக்கபடி தோளில் சுமந்து வருபவரே!

“எறிதரு கதிர்தாங்கி ஏந்திய குடைநிழல்

 உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்

 நெறிப்படச் சுவல் அசைஇ வேறொரா நெஞ்சத்துக்

 குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை

அந்தணீர்”        (கலித்தொகை, பாடல் 9)

பிறவி வேற்றுமைப் பாராட்டும் இருபிறப்புக் கோட்பாடும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்று விட்டதைப் பரிபாடல் எடுத்து மொழிகிறது.

‘பூணூல் அணிவதற்கு முன்னம் ஒரு பிறவியும், பின்னம் ஒரு பிறவியும் ஆன இரு பிறவிகளையும் உடைய அந்தணர் அறத்தைப் பொருந்தியவனே’ எனச் செவ்வேள் முருகன் புலவர் கேசவனாரால் புகழப்படுகிறான்.

“இருபிறப்பு இருபெயர் ஈர நெஞ்சத்து

 ஒருபெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே”                                                   (பரிபாடல் 14:27-28)

“அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

 ஐவகை மரபின் அரசர் பக்கமும்

 இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்”

என்பது தொல்காப்பியப் புறத்திணை இயல் சூத்திரம்.

இச்சூத்திரத்திற்குத் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் பின்வருமாறு பொருள் கூறுவார்.

“அறுவகையான தொழில்களையுடைய பார்ப்பனப் பகுதி; ஐந்து வகையான தொழில்களை யுடைய அரசர் பகுதி; ஆறு வகைத் தொழில்கள் உடைய வணிகர் வேளாளர் பகுதி என்பது” அச்சூத்திரத்தில் காணப்படுகிறது.

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பவை அந்தணர்க்குரிய அறுவகைத் தொழில்.

ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டம் என்பவை அரசர்க்குரிய ஐவகைத் தொழில்.

ஓதல், வேட்டல், ஈதல், உழுதல், நிரை காத்தல், வாணிகம், இவ்வாறும் வணிகர் தொழில்.

ஓதல், ஈதல், உழவு, நிரைகாத்தல், வணிகம், ஏனையோர்க்கு உதவுவதல் இவை வேளாளரின் ஆறு தொழில்.

இப்பிரிவுகளே தமிழகத்தில் தோன்றியிருந்த நால்வகைப் பிரிவுகள். இதனை இன்னும் தெளிவாகத் தொல்காப்பிய மரபியலில் காணலாம்.” (நூல்: சாமி சிதம்பரனார், பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், பக்கம் 93)

அவர் கூற்றுப்படியே தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியில் ஒவ்வொரு பிரிவார்க்கும் உரிய பொருள்கள் இன்னின்ன என்று தனியே சுட்டப் படுகின்றன. அதன்படி அந்தணர்க்கு முப்புரிநூல், கரகம் (தண்ணீர் செம்பு), முக்கோல், ஆசனம் இவைகள் உரியனவாம்.

“நூலே கரகம் முக்கோல் மணையே

 ஆயுங் காலை அந்தணர்க் குரிய”                         (தொல்காப்பியம், மரபியல் - 71:615)

இவையும் இவைபோலும் நூற்பாக்கள் பிறவும் தொல்காப்பியத்தில் நிகழ்ந்த இடைச் செருகல்கள் என்று சில தமிழறிஞர்கள் கருத்துரைக்கின்றனர்.

தொடக்கத்தில் மக்களிடையே உயர்வு தாழ்வுக்கு இடமில்லாமல் இருந்தது. ஆனால் நாளடைவில் இந்தப் போக்கு மாறிவிட்டது. சாதி வேற்றுமை வந்துவிட்டது. பிறப்பிலே வேற்றுமை உண்டு என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது. சங்க இலக்கியங் களிலேயே பார்ப்பனர்களைப் போற்றும் பண்பாடு முளைவிடத் தொடங்கிவிட்டது.

பிற தமிழர்கள் பார்ப்பனர்களைத் தொழ வேண்டும் என்பதை அகத்துறை நூலாகிய ஐங்குறுநூறு பேசுகிறது.

“அறம்புரி அருமறை நவின்ற நாவின்

 திறம்புரி கொள்கை அந்தணிர் தொழுவல்” (ஐங்குறுநூறு - 387)

சேர மன்னர்களின் பெருமை பேசும் புற இலக்கியமாகிய பதிற்றுப்பத்து நூலில் பார்ப்பனரைப் பணிந்து அவர்கள் சொற்படி நடப்பதுதான் உயர்ந்த பண்பாகச் சொல்லப்படுகிறது.

“பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே” (பதிற்றுப் பத்து)

பொருள் வேண்டி இரந்து நின்ற பார்ப்பனர்க்கு அவர்கள் கை நிறையும்படிப் பொன்னும் பொற்காசும் நீர்வார்த்துத் தரவேண்டும் என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று கட்டளை இடுகிறது.

“ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்

 பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து” (புறநானூறு 367)

இந்துக் கடவுள் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. முருகன்தான் தமிழ்க் கடவுள் என்று நம்மவர்கள் சாற்றுவார்கள். முருகன் என்றாலே அழகு என்றும் அவர்கள் மொழிவார்கள். ஆனால்,

“அறுமுகத்து ஆறு இருதோளால் வென்றி

 நறுமலர் வள்ளிப்பூ நயந்தோயே”  (பரிபாடல், 21, 22)

என்ற இதே பாடலில் ஆறுமுகங்களும் பன்னிரு கைகளும் கொண்ட ஆரியக் கற்பனையான முருகக் கடவுள் காட்சி அளிக்கிறார்.

ஆலம் எனும் நஞ்சுண்ட சிவன் (புறம் 240), கவுரவர்களின் அரக்கு மாளிகை அழித்த மகாபாரத வீமன் (கலித் தொகை 25), தலையில் குடுமி வைத்த பார்ப்பான் (ஐங்குறுநூறு 202), சாபத்தால் தேய்ந்தும் வளர்ந்தும் காட்சி தரும் சந்திரன் (பரிபாடல் 159-163) எனப் பலவாறாய்த் தமிழ் மண்ணோடு ஒட்டாத பஞ்சாங்கப் பொய்க் கதைகள் சங்க இலக்கியங்களில் எண்ணற்ற இடங்களில் காணப்படுகின்றன.

பசுவையும் பார்ப்பனரையும் புனிதப் பொருள்களாகப் போற்ற வேண்டும் என்பது ஆரியம் உரைக்கும் அறங்களுக்கெல்லாம் தலையாய அறமாகும். இந்த அறத்தை நம் சங்ககாலத் தமிழ் மன்னர்களும் தலைமேல் வைத்துக் கொண்டாடியுள்ளனர்.

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

 பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

 தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

 பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும்

 எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்”

என அந்த அரசன் பசுவையும் பார்ப்பனரையும் காத்தலுக்கு முன்னுரிமை தருகிறான். இதே கருத்திலதான் சங்க இலக்கியங்களுக்குப் பின் தோன்றிய சிலப்பதிகாரத்திலும் கண்ணகி மதுரையை எரிக்கும்போது அங்கே காக்கப்பட வேண்டிய வற்றுள் முதன்மையான இரண்டு உயிர்களாகப் பார்ப்பனரையும் பசுவையும் மறவாமல் குறிப்பிடுகிறாள்.

“பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்

 மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத்

 தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய”  (சிலம்பு - அழற்படுகாதை 53-55)

அடுத்த இதழில் முடியும்

Pin It