எரிசக்தியால் இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் தொழிலாளர்களின் உழைப்பைக் கொண்டு பொருள்களை உற்பத்தி செய்வது என்பது 1760களில் அய்ரோப்பாவில் தொடங்கியது. இதுவே முதலாளிய உற்பத்தி முறை எனப்படுகிறது. தொழில் முதலாளியத்தின் தோற்றம் என்பதும் இதுவே ஆகும்.

தொழிற்சாலைகளில் உடல்நலத்துக்குக் கேடு தரும் கொடுமையான பணிச்சூழலில் குறைந்த கூலிக்கு 14 முதல் 18 மணி நேரம் உழைக்குமாறு தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். வேலை நேரத்தைப் பத்து மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் போராடினர். அமெரிக்காவில் பிலடெல்பியாவில் 1806இல் உலகின் முதலாவது தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட தொழிற் சங்கங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் 1864 செப்டம்பர் 28 அன்று இலண்டனில் “சர்வதேசத் தொழிலாளர் சங்கம்” (International Working Men’s Association) என்பது தொடங்கப்பட்டது. இது ‘முதல் அகிலம்’ என்று அழைக்கப்பட்டது. இதில் காரல்மார்க்சு முதன்மையான பங்களிப்புச் செய்தார்.

அதன்பின், வேலை நேரத்தை 8 மணிநேரமாகக் குறைக்கக் கோரி பல நாடுகளிலும் தொழிலாளர்கள் சங்கம் அமைத்துப் போராடி வந்தனர். இக்கோரிக்கையை முன்னிறுத்தி 1886 மே முதல் நாள் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் போர்க் குணத்துடன் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தைக் காவல்துறை கொடுமையாகத் தாக்கியதில் தொழிலாளர்கள் சிந்திய குருதியே 1890 முதல் ‘மே நாளாக’த்-தொழிலாளர்களின் உரிமை நாளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுவதற்கு மூலகாரணமாயிற்று.

maruthisuzuki strike1917இல் சோவியத் நாட்டில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்ற பின் அங்கு தொழிலாளர்களின் உரிமைகளும் வாழ்க்கைத்தரமும் வியத்தகு முறையில் உயர்ந்தன. இது முதலாளிய நாடுகளில் தொழிலாளர்களின் போராட் டங்களுக்கு ஓர் உந்து விசையாக விளங்கியது. முதலாளிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் நாடு களிலும் சோசலிசப் புரட்சி வெடிக்குமோ என்ற அச்சத்தால் தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை ஏற்க முன் வந்தனர். குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொழிலாளர்களுக்குப் பல பாதுகாப்புகளும், நலத் திட்டங்களும் உறுதி செய்யப்பட்டன.

1990இல் சோவியத் நாட்டிலும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலும் சோசலிச ஆட்சி முறை வீழ்ந்தது. முதலாளியம், ‘தனக்கு மாற்றே இல்லை’ என்று மார்தட்டிக் கொண்டு, தன் ஏகாதிபத்தியப் பிடியை மேலும் இறுக்கியது.

1991 முதல் இந்தியாவில் தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்கிற கொள்கையை நடுவண் அரசும், மாநில அரசுகளும் முழு வீச்சுடன் செயல் படுத்தத் தொடங்கின. அதனால் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களும் அவற்றின் மூலதனமும் தங்குதடை யின்றி இந்தியாவுக்குள் நுழைந்தன.

“இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் உலகமயச் சூழலின் உயர்தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சிக்குத் தடை யாக உள்ளன. இவற்றை மாற்ற வேண்டும். அப்போதுதான் மூலதனம் அதிக அளவில் இந்தியாவுக்குக் கிடைக்கும். உலகத் தரத்திலான பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். அதன்மூலம் ஏற்றுமதி அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்று, பெரு முதலாளிய நிறுவனங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன. பெரு முதலாளி களின் நோக்கம் தங்கள் தேவைக்கு ஏற்ப வேலைகளில் ஆட்களைச் சேர்க்கவும், நீக்கவும் (Hire and Fire தங்குதடையற்ற உரிமை வேண்டும்; தாங்கள் தருகின்ற கூலியை வாய்ப் பொத்தி வாங்கிக் கொள்ளும் ஆட்கள் தேவை என்பதே ஆகும். இதைச் செயல்படுத்துவதற்காகத் தொழிற்சாலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்கள் தங்களுக்கான-சுதந்தரமான தொழிற் சங்கம் அமைப்பதை ஆட்சியாளர்களின்-காவல் துறை யின் துணையுடன் முதலாளிய நிறுவனங்கள் ஒடுக்கி வருகின்றன.

மாருதி சுகி தொழிலாளர் போராட்டம்

தில்லியை அடுத்துள்ள அரியானாவில் ஒக்லா - பரிதாபாத் - குர்கான் - மனேசர் ஆகிய பகுதிகளில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுப் பெரு முதலாளிய நிறுவனங்களின் மகிழுந்து, சரக்குந்து, இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று மாருதி சுசுகி நிறுவனம். தொடக்கத்தில் இந்திய நிர்வாகத்தின் கீழ் இருந்த இந்நிறுவனம் 1990 -2000 காலத்தில் சப்பான் நிர்வாகத்தின்கீழ் சென்று விட்டது.

மாருதி சுகி தொழிற்சாலையில் 50 நொடிக்கு ஒரு மகிழுந்து தயாராகிறது. தானியங்கி வாகனத் தயாரிப்பில் இந்தியச் சந்தையில் 50 விழுக்காட்டிற்குமேல் மாருதி சுசுகியிடம் இருக்கிறது. இந்தியாவின் உற்பத்தித் துறையில் 22 விழுக்காடு இதனிடம் உள்ளது (EPW சூன் 16, 2018). மனேசரில் உள்ள மாருதி சுகி தொழிற்சாலையில் நிர்வாகத்திற்கு வாலாட்டும் சில தொழிற்சங்கங்கள் இருந்தன. 2011ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் தமக்கான -சுதந்தரமான தொழிற்சங்கம் அமைக்க உரிமை கோரிப் போராட்டங்கள் நடத்தினர். மூன்று தடவைகள் வேலை நிறுத்தம் செய்தனர். இறுதியாக 2012 சனவரியில் மாருதி சுகி நிறுவனம் தொழிலாளர்களின் சங்கத்தை அங்கீகரித்தது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் சுகி நிர்வாகம் தொழிற்சாலையில் குண்டர் படையை வைத்திருந்தது.

2012 சூலை 14 அன்று தொழிற்சங்கப் பிரதிநிதி களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட ஏற்க மறுத்தது நிர்வாகம். இதனால் தொழிலாளர்கள் மனக்கொதிப்படைந்தனர். அந்தச் சூழலில் 2012 சூலை 18 அன்று தொழிலாளி ஒருவருக்கும் கண்காணிப்பாளர் ஒருவருக்கும் இடையே நடந்த தகராறு காரணமாக, அத்தொழிலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதுகுறித்து சங்கப் பொறுப்பா ளர்கள் நிர்வாகத்துடன் பேசிய போது, நிருவாகத்தின் குண்டர்களால் தொழிற்சங்கத் தலைவர்கள் தாக்கப் பட்டனர். இதையறிந்த தொழிலாளர்கள் நிர்வாகத்தின் குண்டர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பகுதியில் தீப்பற்றியது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான மேலாளர் அவனிஷ்தேவ் என்பவர் தீயில் சிக்கி இறந்தார். குண்டர்களின் தாக்குதலால் நாற்பது தொழிலாளர்கள் காயமடைந்தனர். நிர்வாகத்தின் தரப்பில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

மாருதி சுசுகி நிர்வாகம் 148 தொழிலாளர்களின் பெயரைக் காவல் துறையிடம் அளித்தது. அவர்கள் மீது கொலைக்குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினர் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து கொடுமையாகத் தாக்கினர். மாருதி சுசுகி நிர்வாகம் தொழிற்சங்கத்தை ஒடுக்குவதற்காக 546 நிரந்தரத் தொழிலாளர்களையும், 1800 ஒப்பந்தத் தொழி லாளர்களையும் பணியிலிருந்து நீக்கியது. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசுக் கட்சி இக்கொடுஞ்செயலை ஆதரித்தது. கைது செய்யப்பட்ட 148 தொழிலாளர்களில் ஒருவருக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த வழக்கில் குர்கான் மாவட்ட நீதிபதி இராஜேந்தர் பால் கோயல் 2017 மார்ச்சு 10 அன்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 148 பேரில் 117 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 31 பேருக்கு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டது. 117 பேர் மீது எந்தக் குற்றமும் நிரூபிக் கப்படவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்ட போதிலும் பிணை மறுக்கப்பட்டதால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் முதல் நான்கு ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்தனர். வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டவர்களில் 30 பேர் தொழிற்சங்கத்தின் பொறுப்புகளில் இருந்தவர்கள். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது தொழி லாளர்கள் சாட்சியம் அளிக்க முன்வந்ததை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். நிர்வாகத்தின் சார்பிலான சாட்சிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அநீதியான இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. நிர்வாகத்தின் சாட்சியாளர்களில் எவரும் தீ வைத்தது யார் என்று கூறவில்லை. நீதிமன்றம் மாருதி சுசுகி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டது என்பதை இத்தீர்ப்பு அப்பட்டமாகக் காட்டுகிறது.

இத்தீர்ப்பின் நோக்கம், மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர் களுக்கும் ஆளும் வர்க்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுப்பதாகும். சங்கம் அமைக்க வேண்டும் என்றோ, பெருமுதலாளிய நிறுவனங்களின் சர்வாதிகாரப் போக்கைத் தட்டிக் கேட்க வேண்டும் என்றோ முயல்கின்ற தொழி லாளர்களுக்கு இது ஓர் அச்சுறுத்தலாகும்.

அத்துடன் நிற்காமல், தற்போது அரியானாவில் ஆட்சியில் இருக்கும் பா.ச.க. அரசு, 2018இல் பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் 13 பேரின் வாழ்நாள் தண்டனையை மரணதண்டனையாக மாற்ற வேண்டும் என்று விண்ணப்பித்தது. உயர்நீதிமன்ற நீதிபதி, அரியானா அரசின் வழக்குரைஞரிடம், ‘மரண தண்ட னையாக மாற்ற வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு “இந்தியாவின் தொழில் வளர்ச்சி சரிவடைந்துவிட்டது. அயல்நாட்டு மூலதன வரவு வற்றிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி ‘இந்தியா வில் தயாரிப்போம்’ என்று முழங்கி வருகிறார். மாருதி சுசுகி நிறுவனத்தில் தொழிலாளர்கள் நடத்திய தாக்குதல் பெரும் களங்கமாகும்” என்று அரசு வழக்குரைஞர் கூறினார்.

பா.ச.க. ஆட்சியாக இருந்தாலும், காங்கிரசுக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் பெரு முதலாளிய நிறுவனங் களின் கொள்ளை இலாபத்திற்காகத் தொழிலாளர்களின் உரிமைகளை-நலன்களை மட்டுமின்றி, அவர்களின் உயிர்களையும் பலியிடத் தயாராக இருக்கின்றன என்பதை அரியானா அரசு வழக்குரைஞரின் கூற்று மெய்ப்பிக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம் அரசு மற்றும் நீதிமன்றத்தின் துணையுடன் தொழிலாளர்களைப் பழிவாங்குவதற்கான காரணம், தொழிற்சங்கம் நிரந்தரத் தொழிலாளர் களுக்காக மட்டுமல்லாமல், ஒப்பந்தத் தொழிலாளர் களுக்காகவும் போராடியதே ஆகும். 148 தொழிலாளர் களைச் சிறைக்கு அனுப்பிய பின் 2015இல் எஞ்சி யிருந்த நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டு களுக்கும் சேர்த்து ரூ.16,800 ஊதிய உயர்வு அளித்தது. ஒப்பந்தத் தொழிலாளர்களும் இதுபோன்ற ஊதிய உயர்வு கேட்டனர். இதற்காகப் போராடினர். ஆனால் நிரந்தரத் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. மாருதி சுசுகி நிறுவனத்தின் தொழிலாளர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெற்றது. மாருதி சுசுகியில் 2013இல் 6,578 பேராக இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண் ணிக்கை 2018இல் 10,626ஆக உயர்ந்துள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை உழைப்புச் சுரண்டலின் கொடிய வடிவமாகும்.

royalenfieldstrike 350ஓரகடம் யமகா தொழிலாளர் போராட்டம்

சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூர், மறைமலை நகர், ஒரகடம் பகுதிகளில் மகிழுந்து, இருசக்கர வாகனங்கள், சரக்கு உந்துகள் தயாரிக்கும் பல தொழிற்சாலைகள் உள்ளன. ஃபோர்டு, ஹூண்டாய் மோட்டார், பி.எம்.டபிள்யு., தய்ம்லர், ரிநாலட் - நிசான், மிட்சுபுசி மோட்டார்ஸ், யமகா மோட்டார்ஸ், ராயல் என்ஃபீல்டு, அப்பல்லோ டயர்ஸ், மியாங் சின் ஆட்டோ முதலான பெருமுதலாளிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. உலகில் தானியங்கி வாகனங்கள் தயாரிக்கும் முதன் மையான பத்து பகுதிகளில் (Auto Hubs) இதுவும் ஒன்றாக இருக்கிறது.

இப்பகுதியில் 6 நொடிக்கு 1 மோட்டார் சைக்கிள், 20 நொடிகளில் ஒரு மகிழுந்து, 90 நொடிகளில் ஒரு சரக்கு உந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியா வில் தானியங்கி வாகன உற்பத்தியில் தமிழ் நாட்டில் 35 விழுக்காடு உற்பத்தியாகிறது. டயர் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 40 விழுக்காடு ஆகும். 2017-18இல் தமிழ்நாட்டிலிருந்து 40 இலட்சம் தானியங்கி வாகனங்கள் ஏற்றுமதியாயின.

மேலே குறிப்பிட்டுள்ள பெருமுதலாளிய நிறுவனங் களில் கடந்த சில ஆண்டுகளாகத் தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களின் முதன்மையான நோக்கம் 1. சுதந்தரமான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, 2. மற்ற மாநிலங்களில் இருப்பது போன்ற ஊதியம் தரவேண்டும் என்பனவாகும்.

தானியங்கி வாகன உற்பத்தித் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் ஒருநாள் ஊதிய விவரம் - தமிழ்நாடு ரூ.241, ஆந்திரம் ரூ.233, குசராத் ரூ.322, மகாராட்டிரம் ரூ.312, அரியானா ரூ.368, மத்தியப் பிரதேசம் ரூ.312, கர்நாடகம் ரூ.314.

ஒரகடத்தில் இருசக்கர வாகனம் தயாரிக்கும் யமகா தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தமக்கான தொழிற்சங்கத்தை அமைத்தனர். இச்சங்கத்தை சி.ஐ.டி.யு. மத்திய தொழிற்சங்கத்துடன் இணைத்தனர். அதனால் யமகா நிர்வாகம் சங்கத்தின் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் இராசமணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிலிருந்து நீக்கியது. இவர்களின் பணிநீக்கத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று கோரி 21.9.18 முதல் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மனிதச் சங்கிலி, உண்ணாநோன்பு, ஆர்ப்பாட்டங்கள் என்று பலவகையான போராட்டங்களை யமகா தொழிலாளர்கள் நடத்தினர். இப்போராட்டங்களில் மியாங்சின் ஆட்டோ தொழிற்சாலை, ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை ஆகியவற்றின் தொழிலாளர்களும் பங்கேற்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் 14.11.2018 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் அ. சவுந்தரராசன் தலைமையில் தொழிற்சங்கப் பிரதிநிதி களுடன் யமகா நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டது. அதுவரை 500 தொழி லாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் : பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்கள் மீதான ஆணை பணியிடை நீக்கமாக மாற்றப்படும். அவர்கள் மீது துறை விசாரணை நடத்தப்படும். விசாரணை முடியும் வரையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படமாட்டார்கள். 55 நாள்களாக வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதே சமயம் 55 நாள்களுக்கான சம்பளம் தரப்படாது. இவர்கள் பணியில் சேர்ந்ததும் இவர்களுக்கான போனசு வழங்கப்படும். தொழிலாளர் நீதிமன்றத்தின் வழக்கு களும், காவல்துறையின் வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

இன்று தொழிலாளர்கள் பெற்றுள்ள சங்கம் அமைக்கும் உரிமை, எட்டு மணிநேர வேலை, உறுதி செய்யப்பட்ட ஊதியம், போனசு, ஊதியத் துடனான விடுமுறை, குறைந்த கட்டணத்தில் உணவு, மருத்துவ வசதிகள், இழப்பீடு முதலானவை நீண்ட போராட்டங்களின் விளைவாக ஏற்பட்டனவாகும். தாராள மயம், தனியார் மயம், உலக மயச் சூழலிலும் அய்ரோப்பிய நாடுகளில் இந்த உரிமைகளை - பாதுகாப்பைத் தொழிலாளர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் 1991 முதல் ஆட்சி செய்த - ஆட்சியில் இருக்கும் எல்லாக் கட்சிகளும் தொழிலாளர்களின் உரிமைகள், நலன்கள் முதலாளிய நிறுவனங்களால் பறிக்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. ஏனெனில் இக்கட்சிகள் முதலாளிய நிறுவனங் களிடம் கோடிக்கணக்கில் தேர்தல் நிதி பெறுகின்றன.

பெருமுதலாளிய நிறுவனங்கள் தொழிற்சங்கம் என்பதே இல்லாமல் செய்திடும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கையை வேகமாகக் குறைத்து, ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்வோர் நல்ல சம்பளம் பெறுகின்ற போதிலும் சங்கம் அமைக்க முடியாது. ஏனெனில் எவரையும் ஒரே நாளில் வேலையிலிருந்து நீக்குகின்ற அதிகாரம் இவற்றுக்கு இருக்கிறது. இதே நிலையைப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளிலும் நடைமுறைப் படுத்திட முதலாளிய நிறுவனங்கள் முயல்கின்றன. ஒப்பந்தத் தொழிலாளர் முறை மூலம் இதில் பெரு மளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

பெருமுதலாளிய நிறுவனங்களில் மொத்தத் தொழிலாளர்களில் 75 விழுக்காட்டினர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். குர்கானில் ஹோண்டா மோட்டார் நிறுவனத்தில் 3000 தொழிலாளர்களில் 466 பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள், நடுவண் அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி என்.எல்.சி. போன்ற நிறுவனங்களிலும் 75 விழுக்காட்டினர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். எனவே பெருமுதலாளிய நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் பற்றி எந்த அரசும் வாய் திறப்பதில்லை.

2018 ஏப்பிரல் மாதம் நடுவண் அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10,000 என்று உயர்த்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை முதலாளிய நிறுவனங்கள் எதிர்த்தன. எனவே அமைச்சரின் அறிவிப்பு ஆணையாக வரவேயில்லை.

இன்றைய ஆட்சிமுறை முதலாளிகளுக்கும் பெரு வணிகர்களுக்கும் ஏவல் செய்து, உழைக்கும் மக்களைச் சுரண்டி ஒடுக்குவதாகவே இருக்கிறது என்கிற உண்மையை மக்களுக்குப் புரிய வைத்து, அவர்களை அணிதிரட்டி, இந்த ஆட்சியமைப்பை மாற்றுவதே உழைக்கும் மக்களுக்கு உண்மை யான விடுதலையாகும்.

Pin It