நான், 1927ல் திருநெல்வேலி மாநாட்டில் கம்யூனிசம் பற்றிப் பேசினேன். பிறகு, பொதுக் கூட்டங்களில் கம்யூனிசப் பிரச்சாரம் பலமாகச் செய்து வந்தேன்.

இரயில், தபால் தந்தி முதலிய இலாகாக்கள் சர்க்காரால் நடத்தப்படுவது - கம்யூனிசத்துக்கு ஒரு உதாரணம் என்றும், அதுபோல மக்களுக்குத் துணி தைததுக் கொடுத்தல், சவரம் செய்தல் போன்ற மக்களுக்குத் தேவையான எல்லாக் காரியங்களும் சர்க்காரால் நடத்தப்பட வேண்டும் என்றும் 1927- லேயே பேசியிருக்கிறேன்.

1929-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்துக் ‘குடியரசு’ இதழில் பிரசுரித்து இருக்கிறேன்.

கம்யூனிசம் சாத்தியமானதே!

பிறகு, 1931-ல் ரஷ்யா சென்றேன் என்றால், அங்குப் போய் நான் எதையும் கற்றுக் கொண்டு வரவில்லை. அங்கிருந்து நான் தெரிந்து கொண்டு வந்தது ஏதாவது இருக்குமானால், அது - “கம்யூனிசம் காரியத்தில் - செய்கையில் சாத்தியமானது தான்” என்பது தான்.

1932ஆம் ஆண்டுக் கடைசியில் நான் இரஷ்யாவில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்க வேலைத் திட்டம் என்பதாகக் கம்யூனிச பாணியில் சில திட்டங்கள் தயாரித்துச் சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள், செயலாளர்கள், முக்கிய தொண்டர்கள் கூட்டத்தில் நிறைவேற்றினேன். இதற்காகவே சிங்காரவேலு செட்டியாரையும் சென்னையிலிருந்து வழிச் செலவு அனுப்பி வர வழைத்து வாசகங்கள் அமைத்துத் தீர்மானித்தேன்.

அதன் பிறகு ஜமீன்தார் அல்லாதார் மாநாடு, லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு, நிலச்சுவான்தார் மாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மாநாடு என்றெல்லாம் பல மாநாடுகள் போட்டு நடத்தினேன். பிறகு மலையாளத்துச் சென்று அங்கும் பல இடங்களில் மதமில்லாதார் மாநாடு, கடவுள் ஒழிப்பு மாநாடு, மதம் மாற்ற மாநாடு என்றெல்லாம் ஏற்பாடு செய்து பெரிய கிளர்ச்சிப் போரையும் செய்து வந்தேன்.

எனக்கு ஏற்பட்ட கம்யூனிச உணர்ச்சி கடவுள், மத சாஸ்திர, காங்கிரசை வெறுக்க ஏற்பட்ட உணர்ச்சிதான் என்னைக் கம்யூனிசத்தில் கொண்டு போய் விட்டது. இன்று நான், கடவுள் ஒழிப்பில், மத ஒழிப்பில் அன்றிலிருந்து ஒரு சிறு மாற்றங்கூட அடையவில்லை. நாளுக்கு நாள் பலப்படுகிறது. பலாத்காரத்தை விட்டால் வேறு வழி இல்லையே என்ற கவலை என்னைச் சதாவாட்டுகிறது.

..........

கம்யூனிசம் என்பது என் கருத்துப்படி, மனித சமுதாயத்திற்கு இருந்து வரும் இழிவுகளும் குறைபாடுகளும், கவலையும் நீக்கப்படுவதுதான்.

நன்றி : “விடுதலை”, 24-10-99

Pin It