Cuba Meeting1959ல் உலக நாடுகளில் க்யூபாவிற்கு மட்டும்தான் புத்தாண்டு பிறந்தது. அன்றுதான் அவர்களின் வாழ்க்கையில் புதுவாழ்வு சாத்தியமானது. ஜனவரி 1ல் அமெரிக்கக் கைப்பாவையான அதிபர் பாடிஸ்டா நாட்டைவிட்டு ஓடினான். சாண்டா கிளாராவிலிருந்து வெற்றியை கைகளில் ஏந்தி ஹவானாவிற்குள் புன்னகையுடன் நுழைகிறார் சே குவேரா. ஜனவரி 2ல் பிடல் அறிவிக்கும் வேலை நிறுத்தத்தில் நாடே ஸ்தம்பிக்கிறது. ஜனவரி 3 சே குவேரா ஹவானாவில் இருக்கும் கபானா கோட்டையை தன்வசமாக்குகிறார். ஆனால் ஜனவரி 8ல் தான் பிடல் ஹவானாவுக்குள் பிரவேசிக்கிறார்.

ஒருவார காலம் ஆயிரக்கணக்கான கிராமங்களின் ஊடே மலைகளின் வழியாக பயணித்து மக்கள் அளிக்கும் மரியாதையையும், வரவேற்பையும் கனிவோடு ஏற்றுக்கொண்டு வருவதற்குத்தான் இந்த அவகாசம். இந்தப் புரட்சி மக்களின் விருப்பம் சார்ந்ததாகத்தான் இருந்தது. மக்களின் ஆதரவு என்றும் பிடலுக்குத்தான். அது 1959லிருந்து 2006 வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் துல்லியமாய் நீடிக்கிறது. 1960ல் க்யூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் அமுலாயின. கடந்த 46 ஆண்டுகளாக அந்த தடையும் நீடிக்கிறது. க்யூபாவுடன் வர்த்தக உறவுகளை வைத்துக் கொள்ள அஞ்சுகின்றன உலக நாடுகள். ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் எப்பொழுதும் க்யூபாவிற்கு ஆதரவாக வாக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. 198 நாடுகள் ஆதரவு மூன்று நாடுகள் எதிர்ப்பு - இதுதான் வாக்கு நிலவரம். அமெரிக்கா, இஸ்ரேல் உடன் ஒரு சின்னஞ்சிறு நாடு (தீவு) மட்டுமே தனிமைப்பட்டு நிற்பது உலகறியும்.

இந்த நட்புறவுகளைப் புதுப்பிக்கும் தருணமாக உற்சாகம் பெருக்கெடுக்கத் துவங்கியது. 3வது ஆசிய பசிபிக் பிராந்திய க்யூபா ஆதரவு மாநாடு. 16 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். 1995ல் முதல் மாநாடு கொல்கத்தாவிலும், இரண்டாவது மாநாடு ஹொனாயிலும் அதைத் தொடர்ந்து 2000ல் சர்வதேச மாநாடு ஹவானாவிலும் நடந்தேறியது. இந்த மாநாடு சென்னையில் நடந்தது.

ஸ்பானிய பாடல்கள் மாநாட்டு வெளியில் புதிய உற்சாகத்தை பரப்ப, பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் புதிய மொழிகளில் உலகை உலுக்கும் குரல்களாக வெளிப்பட்டன. சகோதரத்துவ செய்திகள் மனதை நெகிழவைத்தன.

46 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மனிதத்துவமற்றது என அறிவிப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. ஜப்பானிலிருந்து மாணவர்களைச் சுமந்து உலகை வலம் வரும் அமைதிக் கப்பலின் அமைப்பாளர் யோசியாகோ தத்சுயா தங்கள் கப்பலில் பயணிக்கும் மாணவர்களுக்கு சுற்றுப்புறச் சூழல், அரசியல் என பல சமூகம் சார்ந்த பார்வைகளை உருவாக்குவதுடன், பிரத்யேகமாக உலகமயத்தின் தீமைகளைப் பற்றி பயிற்றுவிப்பதாகக் கூறினார். அமைதிக் கப்பல் க்யூப ஆதரவைச் சுமந்து உலக மகா சமுத்திரங்களின் பயணிப்பது நம்பிக்கையை விதைக்கும் செயல்.

சீன - லத்தீன் அமெரிக்கக் கூட்டமைப்பின் செயலர் வாங் ஹோங்கியாங்க், சீனா க்யூபாவிற்கு ஆதரவாக ஆற்றிவரும் செயல்களை, அவர்கள் நடத்தவிருக்கும் பல்வேறு இயக்கங்கள் பற்றி விளக்கினார். பாகிஸ்தான் லேபர் பார்ட்டியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பாருக் சுலேரியா, உலகமயத்தின் விளைவுகளால் பாகிஸ்தான் மக்கள் எவ்வாறு துன்புறுகிறார்கள் என்பது பற்றியும், பாகிஸ்தானில் தன்னலமற்று செயல்பட்டுவரும் 2345 க்யூப சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் சேவையை குறிப்பிட்டார்.

Cuba Meetingநேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கணேஷ் ஷா உணர்ச்சிமயமாய், அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தான் உலகம் முழுவதிலும் நடந்து வரும் தீவிரவாத இயக்கங்களின் நாற்றாங்கால் என்றார். இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாய்கே அடுத்த ஆசிய பசிபிக் பிராந்திய மாநாட்டை அவர்கள் மண்ணில் நடத்த விருப்பம் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்தத் தடைகளை மீறி, நாங்கள் வெகுதூரம் பயணித்துள்ளோம். எங்கள் பயணங்களில் துணைபுரிந்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று தனது உரையைத் துவக்கினார் செர்ஜீயோ கொரெரீ ஹெர்னாண்டஸ். இவர் க்யூபாவின் பாராளுமன்ற உறுப்பினரும், க்யூப மக்கள் நட்புறவு மையத்தின் தலைவரும் ஆவார்.

க்யூபா என்றும் தன் நிலையை விட்டுக் கொடுத்ததில்லை. க்யூப மக்கள் அரசுடன் தோல் கொடுத்து நிற்கிறார்கள். புரட்சி நடந்தேறிய காலத்து மனஉறுதி இன்றும் எஃகு போல் உள்ளது. பிடல் துயரம் மிக்கத் தருனங்களில் தீவிர கலந்தாலோசனைகளுக்குப் பிறகு தீர்வுகளுடன் வருபவர். தடைகளால் பெரிய சமூக விலையைக் கொடுத்துள்ளோம். இருப்பினும் நாங்கள் எங்கள் வாழ்நாளில் பெற்றெடுத்த பொக்கிஷத்தை பாதுகாத்து வைத்துள்ளோம் - சுதந்திரம்.

உலகம் முழுவதிலும் 1850 நட்புறவுக் குழுக்கள் இயங்கி வருவது எங்கள் மனங்களுக்கு திடம் அளிக்கிறது. அமெரிக்காவின் மியாமியில் வசித்து க்யூபாவிற்கு எதிராகச் செயல்படும் மாஃபியாக்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பும், நிதியுதவியும் கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் பட்டியலில் சிரியா, கொரியா, ஈரானுடன் க்யூபாவும் உள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கு எதிராக பொது புத்தியை உருவாக்குவதில் நாங்கள் முன்கை எடுப்போம்.

க்யூபாவைச் சேர்ந்த ஐவர் அமெரிக்காவின் சிறைகளில் அடைபட்டிருக்கும் அவலத்தைக் கூறினார். அட்லாண்டா நீதிபதிகள் குழு இவர்கள் மீதான வழக்கை செல்லத்தக்கதல்ல என அறிவித்தும் இவர்கள் விடுதலை செய்யப்படாமலிருப்பது கேள்விக்குரியது.

க்யூபா பலத்துறைகளில் புரிந்து வரும் சாதனைகள் நம்மை வியக்க வைப்பதாக இருந்தது. 5,00,000 க்யூப மாணவர்கள் இலவசமாக உயர்கல்வி, 17,000 வெளிநாட்டு மாணவர்கள் இலவச உயர்கல்வி, அதில் 12,000 மாணவர்கள் மருத்துவம் பயிலுவதும், பிரமிக்க வைத்த புள்ளி விபரங்கள். 27,000 சுகாதாரப் பணியாளர்கள் உலகில் 60 நாடுகளில் தன்னலமற்று செயல்படுவது இன்றைய வர்த்தக உலகில் ஆச்சரியங்களே.

க்யூபா உலக நாடுகளுக்கு ஆயுதங்களையோ, யுத்தங்களையோ, மரணங்களையோ ஏற்றுமதி செய்வதில்லை. ஆனால் க்யூபா எப்பொழுதும் நல்ல சுகாதாரத்தை, கல்வியை, வாழ்நிலையைத்தான் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது என்று தனது உரையை முடித்தார் கொரேரீ.

மார்ச் முதல் வாரத்தில் புஷ் இந்தியவிற்குள் நுழையும் பொழுது க்யூபாவின் மீதான உனது ‘கைகளை அகற்று’ என முற்றுகைப் போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடக்கவிருப்பதை அறிவித்தார் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் கரட். ஜூலை 26ஐ க்யூப நட்புறவு நாளாக அறிவிக்கப்பட்டு அன்று ஆசிய பசிபிக் நாடுகளில் க்யூபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவித்தார் கரட். ஜூலை 26 க்யூபப் புரட்சியின் போர் துவங்கியதன் குறியீடான நாள், மான்கடா படைத்தளம் முற்றுகையிடப்பட்ட நாளது.

மாநாட்டு இறுதி நிகழ்வுகள் பொது அரங்காக பெரும் திரள் மக்கள் பங்கேற்புடன் நடந்தேறியது. குற்றவாளிக் கூண்டில் வடஅமெரிக்கா, பிடல் காஸ்ட்ரோவின் எனது இளமைக்காலம் என்ற இரு நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரியமிக்க நாட்டுக் கலைகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் மனதைக் கவர்ந்து, அவர்கள் ஆடத் துவங்கியது கலைகளின் வலிமையை உணர்த்தியது.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட பொழுது அரங்கமே கொந்தளித்தது. பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எழுந்து ஸ்பானிய மொழியில் அரங்கை பிளக்கும் கோஷங்கள் இட்டனர்.

மார்க்வேஸ் சொன்னதுபோல் க்யூபப் புரட்சி தடுத்து நிறுத்த முடியாதது. அதன் செய்தியை அதன் சகோதரத்துவத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம். Viva Cuba! Hasta la Victoria Siempre!

-
அ. முத்துக்கிருஷ்ணன்
(கட்டுரையாளர் ஆசிய பசிபிக் பிராந்திய க்யூப ஆதரவு மாநாட்டின் பிரதிநிதி)