மனித சமூக அமைப்பானது அது தோன்றிய காலத்திலிருந்து இன்றைய காலம் வரையிலும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது. மேலும், ஒவ்வொரு கால கட்டத்திற்குத் தகுந்தாற் போன்ற உற்பத்தி முறைகளையும் - அவற்றுக்கான உற்பத்தி உறவுகளையும் அது கட்டமைத்துக் கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சமூகக் கட்டமைப்புகளுக்கு உடன்பட்டும் ஒத்திசைந்தும், மறுத்தும் மாறுபட்டது மான சிந்தனைப் போக்குகள் வெவ்வேறு தன்மைகளிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. இவ்வாறான சிந்தனைப் போக்கு களின் ஊடா கவே இயற்கை -மனிதர் - சமூகம் குறித்த உலகக் கண் ணோட்டங்களும் முன் வைக்கப் பட்டுள்ளன.

இயற்கை- மனிதர்- சமூகம் குறித்த அந்தந்தக் காலத்திய உலகக் கண்ணோட்டச் சிந்தனைகளே அன்றைய காலத்து தத்துவங்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான தத்துவங்களைச் சமூக அறிவியல் அடிப்படையில் பொருள்முதல்வாதம் எனவும் கருத்து முதல்வாதம் எனவும் வகைப் படுத்துவர்.

stalin 336பொதுவாக, தத்துவங்கள் யாவும் உலகைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களை அதனதன் நிலைப்பாட்டிலிருந்து விளக்கி நிற்கின்றன. சுருக்கமாகச் சொல்வதெனில், உலகில் தோன்றிய அனைத்து வகைத் தத்துவங்களும் உலகைப் பற்றிய - அதாவது, இயற்கை-மனிதர்-சமூகம் குறித்த விவரிப்புகளாகவும் விளக்கங்களாகவுமே அமைந் திருக்கின்றன மாறாக அவற்றை மாற்றி யமைப்பதற்கான வழிகாட்டுதல்களை எந்தத் தத்துவமும் முன்வைக்கவில்லை.

இந்நிலையில், கருத்து முதல்வாதத் தத்து வங்களிலிருந்தும் மற்ற பொருள் முதல்வாதத் தத்துவங்களிலிருந்தும் வேறுபட்டு நிற்பது மார்க்சியத் தத்துவம்தான்.

மார்க்சியத்தின் அடிப்படை, பொருள் முதல்வாதம்தான். எனினும், இதுவரையிலான பொருள்முதல்வாதத் தத்துவங்களில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, வளர்ச்சியடைந்த சமூக அறிவியலாக இயங்கியல் பொருள் முதல்வாதத் தத்துவமாக மார்க்சியம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உலகைப் புரிந்து கொள்வதற்கும்-அதை மாற்றியமைப்பதற்கும் வழி காட்டும் தத்து வமாக இருந்துகொண்டிருப்பது மார்க்சியத் தத்துவம் மட்டும்தான்.

இயங்கியல் முறை

மார்க்சியமானது மற்ற தத்துவங்களைப் போல வறட்டுக் கோட்பாட்டைக் கொண்ட தல்ல; அது வளரும் அறிவியல். உலகில் புதிய நிலைமைகள் தோன்றும்போது அதைப் புரிந்து கொள்ளவும், புரட்சிகரமானதாக மாற்றியமைக் கவும் மார்க்சியம் வழிகாட்டுவதோடு அதுவும் வளர்ச்சியடைகிறது. இதுதான் மார்க்சியத் தத்துவத்தின் இயங்கியல். அதாவது, காரல் மார்க்சு-ஏங்கெல்சு ஆகியோர் முன்மொழிந்த இயங்கியல் பொருள் முதல் வாதத் தத்துவம் தான் முழுமையான சமூக அறிவியல் கோட் பாடாக வளர்ச்சியடைந்திருக்கின்றது. சமூக வரலாற்றை முதன் முதலாக உற்பத்தி உறவுடன் தொடர்புபடுத்திச் சொன்னவர்கள் மார்க்சு ஏங்கெல்சு ஆவர். பின்தங்கிய - பிற் போக்கான அல்லது ஆளும் உடைமை வர்க்கத் திற்குச் சாதகமான உற்பத்தி உறவுகளைத் துடைத்தெறிந்து, முன்னேறிய அல்லது உழைக்கும் வர்க்க நலனுக்கான உற்பத்தி உறவுகளையும், அதற்கு ஒத் திசைந்த சமூக அமைப்பு, அவற்றுக்கான தத்துவம், கட்சி, செயன்மை போன்றவற்றின் தேவைகளையும் அறிவியல் அடிப்படையிலான கோட்பாடாக உருவாக்கி வலியுறுத்தி வழிகாட்டியவர்கள் மார்க்சு-ஏங்கெல்சு ஆவர். இவர்கள் முன் வைத்த கோட்பாடுதான் புரட்சிக்கு வழி காட்டும் தத்துவமாக அமைந்திருந்தது / அமைந்திருக்கின்றது.

புரட்சிக்கு தலைமை

உலகில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த ஒரு புதிய நிலைமை தோன்றியபோது, அதை மார்க்சிய அடிப்படையில் விளக்கிப் புரட்சிக்கு வழி காட்டியதோடு நிகழ்த்தியும் காட்டியவர் இலெனின் ஆவார். இரசியாவில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவி, அக்கட்சியின் மூலமாக மக்களை ஒன்றுதிரட்டிப் புரட்சியை ஏற்படுத்தியவர் இலெனின். இலெனினால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட இரசிய சோசலிசப் புரட்சிதான் உலகின் பின்தங்கிய நாடுகளிலும் புரட்சியை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது / கொடுக்கின்றது. இங்கு மார்க்சியமானது மார்க்சிய லெனினியமாக வளர்ச்சியடைந்தது.

மாபெரும் மக்கள் புரட்சியின் மூலம் உரு வாக்கப்பட்ட இரசிய சோசலிசத்தை லெனினுக் குப்பின்பு பேணிப் பாதுகாத்தவர் ஜே.வி.ஸ்டாலின் ஆவார். லெனின் உருவாக்கிய இரசிய சோசலிசத்திற்கு எதிராக இருந்த ஏகாதிபத்தியவாதிகள், கட்சிக்குள்ளேயே இருந்த துரோகிகள், முதலாளித்துவ முக வர்களின் பலவகைப்பட்ட சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி அவற்றையெல்லாம் முறியடித்து இரசிய சோசலிசத்தையும் மார்க்சிய லெனினியத்தையும் பாதுகாக்கும் அரணாகவும், அவற்றுக்குச் செயன்மை வடிவமும் கொடுத்தவர் ஸ்டாலின்தான்.

1950களிலிருந்து உலகில் சோசலிச நாடுகளில் முதலாளித்துவ நீட்சியும் அதற்கெதிரான போராட்டங்களும் தொடங்கியிருக்கின்றன. இரசியாவில் மார்க்சியத் திரிபுவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவந்து சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழித்திருந்தார்கள். இத் தகைய நிலைமைகளை மார்க்சிய லெனினிய அடிப்படையில் புரிந்து விளக்கிப் புரட்சிக்கு வழிகாட்டியவர் மாவோ ஆவார்.

மாவோவியம்

சோசலிச சமூக அமைப்பில் இருந்து கம்யூனிச சமூக அமைப்பிற்குச் செல்வதற்கான புரட்சிகரத் திசைவழியைச் சீனப் புரட்சியின் மூலம் ஏற்படுத்திக் காட்டியவர் மாவோ. அதாவது, சோசலிச நாடுகளில் முதலாளித்துவப் பாதையாளர்களுக்கு எதிராகவும், முதலாளித்துவ மீட்சிக்கு எதிராகவும் பாட்டாளி வர்க்கத்தைத் தயார்படுத்துவதாக மாவோவின் புரட்சிகர நடவடிக்கைகளும் சிந்தனைகளும் அமைந்திருந்தன/அமைந்தி ருக்கின்றன. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத் தின் கீழ் புரட்சியைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம் கம்யூனிச சமுதாயத்தைக் கட்டமைப்ப தற்கு மாவோவியம் வழிகாட்டுகின்றது. இங்கு, மார்க்சிய லெனினியமானது மார்க்சிய லெனி னிய மாவோவியமாக வளர்ச்சியடைந்திருக் கின்றது. ஆக, மார்க்சு-ஏங்கெல்சு முன்வைத் ததை மட்டுமே மார்க்சியம் என்பதாகப் பொத் தாம் பொதுவாக வரையறுத்திட முடியாது. மார்க்சிய லெனினிய மாவோவியத்தின் மொத்தத் தொகுப்பையே மார்க்சியம் என வரையறுப்பதுதான் சமூக அறிவியல் கோட் பாட்டைச் சரியான முறையில் புரிந்து கொண்ட தற்கான புரிந்து கொள்வதற்கான பொருளாகும்.

மார்க்சியத்தின் எல்லை எது?

மார்க்சு, ஏங்கெல்சு, லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் ஒட்டு மொத்தச் சிந் தனைத் தொகுப்பே மார்க் சியத் தத்துவத்தின் முழுமை யாகும். மார்க்சிய லெனினிய மாவோ வியத்தின் கூட்டுத் தொகுப்பே உலகின் புரட்சி கர நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் தத்துவமாக அமைந்திருக்கின்றது. ஆனால், மார்க்சியம் குறித்து எழுதவும் பேசவும் கூடிய அறிவுஜீவிகள், மார்க்சியம் என்பதின் எல் லையை மார்க்சு-ஏங்கெல்சு முன்மொ ழிந்தவற்றை மட்டும் வரை யறுப்பதோடு நின்று கொள் கிறார்கள். மார்க்சு, ஏங்கெல்சு ஆகி யோரின் புரட்சிகரச் சிந்தனைகளோடு லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் புரட்சிகரச் சிந்தனைகள் மார்க்சிய வளர்ச்சி நிலையாய் அமைந்திருப்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள்; பார்க்க மறுக்கிறார்கள். அதேவேளையில், மரபு மார்க்சியம், நவ மார்க்சியம், பண்பாட்டு மார்க்சியம் என்றெல்லாம் மார்க்சியத்தை வகைப்படுத்துகின்ற பேரில் மார்க்சியத்திற்கு மாறான திரிபுவாதங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்

திரிவுவாதிகளின் மதிப்பீடுகள்

காவுட்ஸ்கி, ட்ராட்ஸ்கி, அல்தூசர், அந்தோணியா கிராம்சி, ப்ராங்பர்ட் மார்க்சியர், ஹெபர் மார்க்சு... போன்றவர்கள் முன்வைத்துள்ள சிந்தனைகளையே மார்க்சியம் என அறிவுஜீவிகள் பலர் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் லெனின், ஸ்டாலின், மாவோ சிந்தனைகளை மார்க்சியம் என ஒத்துக்கொள்ள மறுப்பதோடு, அவர்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகளையே முன்வைத்துள்ளனர் / முன்வைக்கின்றனர். லெனின், ஸ்டாலின், மாவோ குறித்த மார்க்சியத் திரிபு வாதிகளின் மதிப்பீடுகள் யாவும் அவர்களைக் கொடூரமானவர்களாகவும் சர்வதிகாரிகளாகவுமே காட்டுகின்றன. உழைக்கும் பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தின் பக்கம் நின்றவர்களை வெறுமனே சர்வதிகாரிகள் என முத்திரை குத்திக் கொச்சைப்படுத்துவதோடு, அவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பி விடுவது முதலாளிய வர்க்கத்தின் சிந்தனை முறை. இச்சிந்தனைமுறை மார்க்சியத்தின் பேரால் இயங்கிக் கொண்டிருக்கும் சில பல அறிவுஜீவிகளிடமும் இருந்து கொண்டு தானிருக்கிறது. இத்தகைய அறிவுஜீவிகள் மார்க்சியத்தின் பக்கம் நிற்கிறோம் என்கிற பேரில் உழைக்கும் பாட்டாளி வர்க்க நலனுக்கு எதிராக இருந்து கொண்டிருக்கிறார்கள்; மார்க்சியத்தின் அடிப்படையே தெரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

ஸ்டாலின் குறித்து தவறான மதிப்பீடுகள்

சோசலிசப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர்கள் லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோராவர். இவர்கள் மார்க்சியத்தின் பக்கம் நின்றார்கள்; பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை யில் புரட்சியின் பக்கம் நின்றார்கள். இதன் காரணமாகவே, ஏகாதிபத்தியச் சார்பாளர்கள், உடைமை வர்க்க முதலாளியச் சிந்தனை முகவர்கள், மார்க்சியத் திரிபுவாதிகள், மார்க்சிய இயக்கத் துரோகிகள் போன்றோர் லெனின், ஸ்டாலின், மாவோ பற்றிய தவறான மதிப்பீடுகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, ஸ்டாலின் மீதான அவதூறுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டன. ஸ்டாலின் மீதான அவதூறுகள் யாவும் மார்க்சியத் திரிபுவாதிகளால்- மார்க்சிய எதிராளிகளால் உருவாக்கப்பட்டவை. உண்மையில், ஸ்டாலின் மார்க்சியத்தின் பக்கமே நின்றிருக்கிறார். அதாவது, ஸ்டாலினின் புரட்சிகர நடவடிக்கைகளும் சிந்தனைகளும் மார்க்சியத்திற்கும் சோசலிச சமூக அமைப்பிற்கும் பெரும் பங்களிப்பாக அமைந்திருந்தன என்பதைப் புரட்சிகர வரலாறு பதிவு செய்திருக்கிறது.

(தொடரும்)

மகாராசன்

Pin It