தேசியம், தேசிய இனம் என்பதன் கருதுபொருள் ஒரு குறிப்பிட்ட சமுதாய (தேசிய இன) மக்களிடையே மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு, மரபுகள், நிலஎல்லைப் பகுதி போன்றவை உளப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தி விடும். அதனைத் தேசியம் அல்லது நாட்டுப்பற்று என்கிறோம்.

Lenin and stalinதேசிய இனம் என்பது ஒரு பொது மொழியையும், வாழ்க்கை முறையும், வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பையும் பொதுப் பொருளியல் அமைவையும், தனிப் பண்பாட்டின் சிறப்பியல்புகளையும், அவற்றால் உருவான உளவியல் உருவாக்கத்தையும் பெற்ற வரலாற்று அடிப்படையில் அமைந்த ஒரு நிலையான சமுதாய மக்களே தேசிய இனம் என வரையறைப்படுத்தப்படுகிறது. தோழர் ஜே.வி.ஸ்டாலின் கருத்துப்படி, ஒரு தேசிய இனத்திற்கு நான்கு சிறப்புக்கூறுகள் தேவை. அவை, 1.பொதுமொழி, 2.தொடர்ச்சி யான ஆட்சி எல்லை, 3.பொதுவான பொருளியல் வாழ்வு, 4.பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம்.

தேசியத்தின் இரண்டு முற்போக்கான உட்கூறுகளின் வளர்ச் சியை ஒட்டியே அதன் தேசியப் பண்பை அறிந்து கொள்ள முடியும்.

 1. அதன் அனைத்துப் புலன்களிலும் சமுதாய மாற்றத்தை நோக்கி செலுத்துகிற புரட்சிக்கர மாற்றங்கள்.
 2. ஆட்சியியல், பொருளியல் துறைகளில் வழங்கத்தக்க மக்கள் நாயக உரிமைகளையும், சமனியத்தையும் ஒட்டு மொத்தமாக மேம்பாடுகளையும் வழங்கத்தக்க மாற்றங்கள் ஆகும்.

தேசிய இன வளர்ச்சியை ஓராண்டிலோ அல்லது சில ஆண்டு களுக்குள்ளோ பெற முடியாது. தோழர் வி.அய்.லெனின் அவர்கள் தேசிய இன வளர்ச்சியை ஒரு "திறன்மிக்க தொடர் செயல்முறை" (Process) என்கிறார். அச்செயல்முறை தேசிய வாழ்க்கை விழிப்புணர்ச்சி, தேசிய இயக்கங்கள், தேசிய இனத்தின் மேல் ஏவப்படும் அடக்குமுறைகளை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள், தேசிய அரசை நிறுவுதல் ஆகிய நான்கு படிக்கட்டுகளைக் கொண்டது என்றும் விளக்குகிறார்.

அந்த ஆக்க வழியினதான செயல்முறையானது ஒரு குறிப்பிட்ட தேசிய இன மக்களிடையே நிலவும் வேறுபாடுகளைப் (சாதி, சமய, சமுதாய, பொருளியல், மொழி போன்ற பலவகை வேறுபாடுகளை) போக்கி, ஒற்றுமையைச் செயற்படுத்துவதற்கும், தம் வாழ்க்கையைத் தாமே முடிவு செய்வதற்கும், தேசியத்தை வளர்ப்பதற்கும், நவீன அறி வியல் தொழிலியல், பொருளியல் உயர்வைப் பெறுவதற்கும், சமுதாயப் புரட்சி களுக்கு முன்னுரிமை தந்து ஏற்றத் தாழ்வை அகற்று வதற்கும், இவற்றிற்கெதிராகவுள்ள சக்திகளை அடையாளம் காட்டி அவற்றை வெல்வதற்கும், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கும், தன்னாட்சி அமைப்பதற்கும் தேவையான அனைத்தையும், வல்லமை யுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் இறுதிநிலை, பொதுவுடைமை அரசையும், அதன் நீட்சியாய் பொதுவுடைமைச் சமூக மாற்றத்தையும் பெறுவது. இத்திறன் மிகு செயல்முறை, தேசிய அரசை நிறுவிய பின்னரும் பல்லாண்டுகள் தொடர்ந்து உயிரோட் டத்துடன் இயங்கி வர வேண்டும்.

தேசிய இனத்தின் இயக்கங்களும் போராட் டங்களும், சமுதாய மாற்றத்தை நோக்கிச் செலுத் தும் அடிப்படைக் கூறுகளை செய்து கொண்டே, முழு இறையாண்மையைப் பெறுவதற்குரிய வகையில் நடைபெற வேண்டும்.

தேசிய இனங்களைப் பற்றி ஆராய்ந்த மார்க்சிய அறிஞர் மைக்கல் லோயி (Michael Lowy) அவர்கள், "பண்டைய நாடுகளான இந்தியா, சீனா போன்றவற்றில் மொழி, வரலாறு, பொதுப் பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பல தேசிய இனங்கள் இருந்தன. அம் மொழித் தேசிய இனங்களிடம் நாட்டின் அமைவும் (Nationhood) இருந்தது. ஆனால் (தனித்தன்மை கொண்ட சில விந்தையான வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாக அவை முழுத்தன்னுணர்வுடன் (Full Consciousness) வளரவில்லை" என விளக்குகிறார்.

தமிழ்ச் சமுதாயம் ஒரு தேசிய இனமாக முழுத் தன்னுணர்வுடன் வளருவதற்கு தடையாக உள்ள வரலாற்றுச் சூழல்:-

வருணாசிரம தர்மம் சாதியம் தீண்டாமை, இந்து மதம் என்றழைக்கப்படும் பல்சமயக் கதம்பக்கூளம் பார்ப்பனிய வேதமதம், மனித முயற்சியை ஒடுக்கும் பக்தி மார்க்கம், அதன் உள்ளீடான சமய, சாத்திர, சம்பிரதாய மூடப்பழக்க வழக்கங்கள், இவற்றின் அடிப் படையிலான பண்பாட்டுத் தளத்தில் ஏற் பட்ட ஏற்ற தாழ்வான பிளவுகள், அரசோடும், நாட்டோடும் தொடர்பற்ற பொது மக்கள், அவர்களுடைய அறியாமையைப் பயன் படுத்தி ஆட்டிப் படைக்கும் ஆளும் வகுப்பு களுக்கு இடையே நிலவிய ஆழ்ந்த கன்ற இடைவெளி இவையனைத்தும் தமிழரின் விழிப்புணர்ச்சியையும் தேசிய இன வளர்ச்சி யையும் தவிடுபொடியாக்கி விட்டன.

வருணாசிரமதர்மம் சாதியம் தீண்டாமை

தமிழ் சமூகத்தில் வழிவழியாக குறிப் பிட்ட தொழில்களைச் செய்து வந்த தொழில் குலங்களும் வேறு பல பண்டைய வரலாற்று குழுக்களும் பின்னர் ஊடுருவிய வருணாசிரம தர்மத்தில் புதையுண்டு போய், பார்ப்பனியம் வடிவமைத்த ஏற்றத்தாழ்வான புதியதோர் சமுதாய அமைப்பான சாதியம் தோன்றியது.

சாதிய முறை என்பது மக்களை மேல் சாதியினர், கீழ் சாதியினர் என்று நிலையாக பிளவுபடுத்தும் ஓர் அடக்குமுறை அமைப்பு. பார்ப்பனர், சத்திரியர், வைசியர் ஆகி யோருக்கு கீழாக அடிமைகளைப் போல நடத்துவதற்குரிய சூத்திரன், தீண்டப்படா தவன் என்னும் இரு பெரும் பிரிவு, சாதியத் தால் வளர்க்கப்பட்டது.

ஒவ்வொரு சாதிக்காரனும் தான் சார்ந்த சாதிக்கு மட்டும் தான் விசுவாசமுள்ளவனாக, தன்னை இழந்தாவது தன் சாதியைக் காப் பாற்றும் தீவிரம் கொண்டவனாக இருக்கி றான். தான் ஒரு மொழி, இன சமுதாயத்தைச் சார்ந்தவன் என்ற எண்ணமே அவன் கருத்து நிலையில் கூட எழாத வண்ணம், சாதிக் காரனைப் பொருத்தமட்டில் சமுதாயம் என்பது அவன் சார்ந்த சாதிச் சமுதாயமே! மற்ற சாதியர் வேற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தன் சாதிக்குக் கீழே கீழ்ச் சாதிகள் பல உள்ளன என்பதை எண்ணி பூரிப்படைகின்ற வகையில் உருவாக்கப் பட்டனர். தன் சாதிக்கு மேலான மேல் சாதிகளும் உள்ளன என்று அறிந்தாலும் தன் அடிமை நிலையை, மனமாற ஏற்று வாழும் சுய மரியாதை இன்மை, இப்பிறவி அடி மைத்தனம் அவன் குருதியோடு கலந்து விட்டது. ஒவ்வொரு இந்துவும் குறிப்பிட்ட தொரு சாதிகாரனாகவே பிறக்கிறான். இவன் பிறந்ததிலிருந்து புதை குழிக்குப் போகும் வரை அவனுடைய குடும்பம், சமுதாய, பொருளாதார, மத வாழ்க்கையை அவன் சார்ந்த சாதியே நிர்ணயம் செய்கிறது.

சாதியைச் சார்ந்தோர் தத்தம் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும். பெயர் சூட்டுதல், காதணி விழா, முடி யெடுத்தல், இறுதிக் கடனாற்றுதல், திதி நடத்துதல், விரதங்களை மேற்கொள்ளுதல் முதலான பல சடங்குகளையும் சாதிக் கட்டமைக்குள் நின்று அந்தந்தச் சாதி முறைகளுக்கு ஏற்பவே நடத்த வேண்டும். சாதிக் கட்டுப்பாட்டை மீறினால் சாதி நீக்கம் செய்யபடுவார்கள். தீண்டாமை மெத்த வலிவுடன் நடைமுறையில் இருந்தது. தீண் டாதவர் என்பவர், பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வர் குலத்திற் கும் அப்பாற்பட்டவர்கள் அதனால் ஐந்தாம வர் அல்லது பஞ்சமர் ஆயினர்.

மனுநீதி விதிகளை மீறிய மற்ற உயர் குலத்தில் பிறந்தவரும் சண்டாளன் அல்லது பஞ்சமன் ஆகிவிடுவான். கீழ்ச் சாதி மக்கள் எவ்வகையான சமூக உரிமையும், உடைமை களையும் பெற்றுக் கொள்ள கூடாது. அவனுடைய ஒரே உடைமை உடல் மட்டுமே அவன் உழைப்போ மற்ற மேல் வர்ணத்துக் குரியது.

தீண்டாமை என்பது மூவகை கொடுமைகளை உள்ளடக்கியது. அவை தீண்டாமை, அண்டாமை, காணாமை என்ற சமூக அவலத்தைக் கொண்டது. பெண்களுக்குச் சொத்துரிமை கூடாது. பெண்களுக்கு மோட்சம் கிடையாது. ஆண்களுக்கு உள்ள எந்த உரிமையும் பெண்களுக்குக் கிடையாது என்றும் கீழ்சாதி மக்கள் என்பவர்கள் உடைமை இல்லாதவர்கள் என மனுநீதியின் மூலமே ஆக்கப்பட்டனர்.

இவைகள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கைச் சட்டமாக அரசர்களால் எல்லா நிலைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வலுக் கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. இந்த நடைமுறை தமிழகத்தில் குறைந்தது ஒரு 1200 ஆண்டுகளாக இங்கு நிலவி வருகிறது. கிராம அமைப்பு: வீடுகள், தெருக்கள், கோயில்கள் போன்ற அமைப்புகள் புரோகிதம் செய்தல், ஊர்த் தொண்டு செய்தல் இப்படி எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் ஒரு தமிழனுடைய அன்றாட வாழ்க்கை என்பது இந்த ஆரியர்களின் சாஸ்திரப்படி தான் நடைபெறுகிறது. அது போலவே, அர்த்த சாஸ்திரம் அரசன் அல்லது ஆட்சிக் காரன் மக்கள் கூட்டத்தை எப்படியெல்லாம் அடிமைப்படுத்த முடியும், சுரண்ட முடியும், வன்மையாக ஒடுக்கி ஆட்சி செய்ய முடியும் என்பதையும், பெண் என்பவள் பிள்ளை பெறும் ஒரு தோல் பை என்றும் கௌடில் யன் எழுதி இருக்கிறான். இவ்வகையில் தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று எழுச்சி பெறாமல் சாதிய இந்துப் பண்பாடு என்ற தன்மையிலேயே இங்கு கட்டமைக்கப்பட் டுள்ளது. இந்துப் பண்பாடு என்றால்,

 1. பார்ப்பானைக் குருவாக ஏற்றுக் கொள்வது.
 2. சிலையைக் கும்பிடுவது.
 3. சாஸ்திரங்கள் சொல்லிய படி மனிதன் அன்றாடம் வாழ வேண்டும் என்பதும் ஆகும். இந்த இந்து மதப் பண்பாட்டுத் தளத்தை உடைக்க இந்தியாவில் இந்து மதப் பண்பாட்டுக்கு ஆட்பட்டோரிடையே ஒரு பண்பாட்டுப் புரட்சியை உண்டாக் குவது எவ்வளவு பெரிய தேவை என்பதை அது எவ்வளவு கடினமான பணி என்பதையும் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

".....இப்படிப்பட்ட சிறிய சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும் அடிமைத்தனத் தினாலும் பீடிக்கப்பட்டிருந்தன என்பத னையும், அதனால் சூழல்களின் பேரில் ஆதிக்கம் செலுத்துகின்ற அளவுக்கு மனிதனை உயர்த்துவதை விட்டுவிட்டு, புறச் சூழல் களுக்கு மனிதன் அடிமையாவதை ஏற்றிருந் தனர் என்பதனையும், தாம் பெற்றிருந்த வளர்ச்சிக்குரிய சமூக அமைப்பை எப்போ தும் மாறாத பாதைக்குத் திருப்பி விட்டு விட்ட தன்மையினராக மக்கள் இருந்ததை யும் நாம் மறந்து விடக் கூடாது. இப்படிச் செய்து, இயற்கையை வழிபடும் தன்மையை வளர்த்தெடுப்பது, இயற்கையை வென் றெடுத்திருக்க வேண்டிய மனிதனின் நிலை யைத் தாழ்த்திக் கொண்டு, மண்டியிட்டு அனுமான் என்கிற குரங்கையும், பசுவையும் கடவுளாக மதித்து வணங்குகிற நிலைக்கு மக்கள் ஆளாகிவிட்டதையும் நாம் மறந்து விடக் கூடாது".

".... ஆசியச் சமூக அமைப்பில் அடிப் படையானதொரு புரட்சியைக் கொண்டு வராமல், மனித குலம் விடுதலை அடைய முடியுமா என்பதே நம்முன் உள்ள வினாவாகும். அது முடியாது என்னும் பட்சத்தில், எவ்வளவு கொடுமைகளை இங்கிலாந்து இழைத்திருந்தாலும், தன்னை அறியாம லேயே, அத்தகைய சமுதாயப் புரட்சிக்கு ஒரு கருவியாக இங்கிலாந்து அமைந்து விட்டது".

(Marx-Engels: “The First Indian War of Independence 1854-1857, Pg 16, 17, 18; 1978 Edition)

இந்தியப் பண்பாடு என்பது, மனிதனை ஒரு பொருட்டாக எண்ணுவதனை விட, ஒரு பசு மாட்டை வணங்குவதை, பார்ப்பானை மதிப்பதை உயிராகக் கருதுவது என்பதை, மார்க்சு மேலும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

".... மேலே சொல்லப்பட்டுள்ள செய்தி யுடன் மானவதர்ம சாஸ்திரத்தின் பகுதி 10, சுலோகம் 62 அய் ஒப்பிட்டுப் பார்க்கலாம். எந்தப் பலனையும் எதிர் பார்க்காமல் ஒரு புரோகிதனுடைய அல்லது ஒரு பசுவினு டைய நன்மையைக் கருதி உயிரை விட்டு விடுவது தான் கீழ்ச்சாதி மக்கள் மோட் சத்தில் இன்பம் பெறுவதற்கு வழியாகும்" Das Capital, Volume II, Pg. 241, 1971 Edition)

மேற்கண்ட செய்திகளின் வழியாக, தமிழ்தேசிய இன ஓர்மைக்குத் தடையாக விளங்கும் காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, வருணசிரம சாதிய வர்க்கங் களாகத் தமிழ்ச் சமூகம் பிளவுபட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இத்தகைய பிளவுகள் பல நேர்வுகளில் பகைமை தன்மையோடு உள்ளது இத்தகைய சமூகச் சூழ்நிலையில் எல்லாச் சாதிகளின் எல்லா வர்க்கங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசிய இன ஓர்மை என்பது வரலாற்றுக்கு முரணாகும். அத்தகைய ஓர்மையைக் கருத்தளவில் முன் வைத்த அனுபவங்கள் அனைத்தும் மேல் சாதிய வர்க்கங்களின் மேலாதிக்கத்தை ஒத்துக் கொள்வதில் போய் முடிந்தன.

எந்த தமிழருக்கான விடுதலை?

தேசிய இன சிக்கலுக்கான தீர்வை ஒட்டு மொத்த தேசிய இன பார்வையிலிருந்து அணுக இயலாது. தமிழ்ச் சமூகம் தமக்குள் பகைமை கொண்டுள்ள சாதிகளாகவும், வர்க்கங்களாகவும் பிளவு கொண்டுள்ள இன்றையச் சூழலில் இது வரலாற்று முரண் ஆகும். அது மட்டுமல்ல, இத்தகையப் பார்வை மேல் சாதியினருக்கும், மேல் வர்க்கத்தினருக்கும் தமக்கான அரசியலை தமிழ்த் தேசிய அரசியலாக்கி ஒடுக்கப்பட்ட வர்ண சாதியினரையும் வர்க்கங்களையும் தம் அரசியல் வலை பின்னலுக்குள் இறுக்கிக் கொள்ள முடியும். எனவே, ஒடுக்கப்பட்ட சாதிகள் வர்க்கங்களின் ஓர்மை சாதிய ஆதிக்கத்தையும் வர்க்கச் சுரண்டலையும் எதிர்த்த போராட்டங்களின் மூலமே கட்டப் பட வேண்டும்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 400 உட் சாதிகள் உள்ளன. இவர்களில் உண்பது, தின்பது என்பது அண்மைக் காலமாகத் தான் புழக்கத்தில் வந்துள்ளது. ஆனால் இவர்களிடம் பெண் கொள்வினை கொடுப்பினை 100க்கு 5, 6 என்கிற அளவில் தான் இப் போது படிப்படியாக வந்துள்ளது. சாதிப் பழக்கம், வழக்கம் என்பது அவ்வளவு இறுக்கமாக இவர்களைப் பழமையில் கட்டிப் போட்டுள்ளது. தேசிய இன ஒற்றுமை ஓரளவு உருவாகிவிடும் காலத்தில் உயர் சாதியினரும் வர்க்கத்தினரும் இவற்றைக் கலைத்து விடவும் இவர்களுக்குள் பகைமை யை உருவாக்கவும்,

"எத்துணையளவு நியாயமான பெரும் போராட்டமும் தனி நிலையில் மேற்கொள்ளப்பட்டால் முதலில் நடைபெற அனுமதிக்கப்பட்டு, அயர்வு உண்டாக்கப்பட்டு, போராளிகளிடையே ஒழுக்கம், நாணயச் சிதைவுகளை விளைவித்து, இறுதியில் இராணுவம் மூலம் அடக்க" ஆன எல்லா முயற்சிகளையும் மிகக் கடுமையாகச் செய்வர். இத்தகைய முயற்சி களை எதிர்த்த போராட்டங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட சாதிகள், வர்க்கங்கள் ஆகியவை கொண்ட தேசிய இன ஓர்மை உறுதிப்பட வேண்டும். தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒடுக்கப்பட்ட தமிழர்களின் விடுதலையை முதன்மையாகக் கொள்ள வேண்டியுள்ளது.

ஏகாதிபத்தியம், தரகு பார்ப்பனியம், நிலப்பிரபுத்துவம் ஆகியன தமிழகத்தில் ஆதிக்க வர்க்கங்களின் மூலமாகவும், மேல் சாதிய மனோபாவத்தின் மூலமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நாம் தமிழர்கள் என்பது மொழி வழியிலான நியாயமாக மட்டுமே இருக்கலாமே தவிர, சமூக விடுதலைக்கான நியாயமாக இருக்காது. எனவே தமிழ்த் தேசிய இனத்தவரிலும், மேல் சாதி கீழ்ச் சாதி என்ற பாகுபாட்டை வர்ண-வர்க்க பிளவுகளை தகர்க்க கடவு ளோடும், பண்பாட்டோடும் மனித உளவிய லோடும் பின்னிப் பிணைந்த சாதிய ஆதிக் கத்தையும் வர்க்கச் சுரண்டலையும் எதிர்த்த போராட்டத்தைக் கட்டமைப்பது அவசியம். இதுவே பரிணாம வளர்ச்சிப் பெற்றத் தமிழ்த் தேசிய இனம் என்றும் "நாம் தமிழர்" என்னும் மொழி இன உணர்வு இங்குள்ள வர்களுக்கு வருவதற்கு மிகமிகத் தேவை. தமிழ்த் தேசிய எழுச்சி வருவதற்கான சில வேலைத் திட்டங்கள்

 1. தமிழ் வழியில் கல்வி தரப்பட வேண் டும். கல்வி மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப் பட வேண்டும்.
 2. உலக மயம், தாராளமயம், தனியார் மயம் அதன் விளைவாக ஆங்கில மொழித் திணிப்பு எல்லாம் சேர்ந்து தமிழ் மொழியின் நிலைப்புக்கே ஓர் அறைகூவல் இன்று வந்து விட்டது. இவைகளிலிருந்து தமிழ் மொழி யைக் காப்பது அவசியம்.
 3. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகள் 343, 344, 348 முதலானவற்றில், எட்டாவது அட்டவணையில் கண்ட எல்லா (22) மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி மொழிகள், நீதிமன்ற மொழிகள் எனத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
 4. அந்தந்த மொழி வழித் தேசிய எல்லைக்குள் இருக்கிற மய்ய அரசு அலுவலகங்களின் அந்தந்த மொழி வழித் தேசிய மொழியே தமிழ்நாட்டில் தமிழ் மொழியிலேயே நீதி, நிர்வாகம் நடைபெற வேண்டியது அவசியம். இவற்றை முன் வைத்தும் இந்திய அரசை எதிர்த்துப் போராடுவது அவசியம்.
 5. நிலமற்றோர்க்கு நிலத்தை பிரித்து தரும் பணியை விரைவுபடுத்தப் போராட வேண்டும். உழைப்பாளி மக்களை ஒன்று திரட்டிட இவை உதவும்.
 6. பார்ப்பன இந்து மதத்திற்கு எதிராகப் பகிரங்கமான போர் தொடுத்து, சாதிய, வர்ண ஒடுக்குமுறையை நியாயப் படுத்தும் வேத இதிகாச புராணங்களையும், மனு நீதியையும் பகிரங்கமாகத் தீயிட்டு கொளுத்த வேண்டும்; இது வர்க்கப் போராட்டத்திற்கு இணையாகவும், துணையாகவும் நடத்தப் பட வேண்டும்.
 7. அக மணமுறையை ஒழித்து சாதி மறுப்புத் திருமணங்கள் செய்வது, தனிக் குடியிருப்பை ஒழிப்பது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பள்ளிகள், விடுதிகளைப் பொதுப்பள்ளி, பொது விடுதிகளுடன் இணைக்கக் கோருவது, தீண்டாமையை ஒழிப்பது, பரம்பரைத் தொழில்களை ஒழிப்பது, அனைத்துச் சாதியினரையும் அர்ச்சராக்குவது, விகிதாசாரப் பங்கீடு கோருவது போன்ற போராட்டங்களைத் திட்டமிட்டு நடத்துவோம்.

பொருளியல் மட்டுமல்லாமல் சமூக நிலையிலும் மேலாதிக்கம் நிலவுகிறது. மத மேலாதிக்கம், மொழி மேலாதிக்கம், சமூக மேலாதிக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த மேலாதிக்கங்களை வென்றெடுப்பது நமது வரலாற்று கடமை.

- தி.துரைசித்தார்த்தன்

Pin It