“என் ஜென்னி ஆ. சுசீலா அவர்களை இழந்தேன்” என, அய்யா ஆனைமுத்து தன் அருமை வாழ்விணையர் சுசீலா அம்மையார் மறைவுற்ற போது, காவிய வரிகளாய் “சிந்தனையாளன்” 2019 மே இதழில் எழுதினார்.

பொது வாழ்வில் சுசீலா அம்மையார் பங்களிப்பும், அவருக்கு இருந்த அரசியல் தெளிவும் அவர் அருகே இருந்து பழகியவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

பெரியார் அச்சிடுவோர், வெளியிடுவோர் குழுமம் சென்னையில் 1982-ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் லால்பேகம் தெருவில் தொடங்கப்பட்டது. திருச்சியில் இருந்து அய்யாவின் குடும்பம், சென்னை, திருவல்லிக்கேணி, இராஜாபகதூர் தெருவில் குடியேறினர். திராவிடக் கழகத்தில் தாம்பரம் நகரில் பொறுப்பில் இருந்த நான், அய்யாவை 18.12.1982-இல் நேரில் சந்தித்தேன்.

கட்சியில் நான் மற்றும் கி. மாஜினி, தாம்பரம் பழனி, முடிச்சூர் ராஜா உள்ளிட்ட எண்ணற்ற தோழர்கள் சேருவதற்கு தாம்பரம் காந்தி சாலை கலியபெருமாளும், சி. பெரியசாமியும், கலச. இராமலிங்கமும் உதவியாக இருந்தனர்.

பின்னாளில், நான் கட்சியின் தலைமையகம் மற்றும் அச்சகத் திற்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், அய்யாவின் மூத்த மகன் ஆனை. பன்னீர் செல்வம், இளைய மகன் வெற்றி ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அய்யாவின் வீட்டுக்குச் சென்று பழகவும் முடிந்தது.

அலுவலகம் - வீடு என இரண்டும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்தாலும், அய்யா ஆனைமுத்து பெரும்பாலும் கட்சி அலுவல கத்தில் தங்கிவிடுவார். வீட்டில் இருந்து உணவு வரும். அப்படி வரும் உணவை, சிலநேரம் எடுத்துவரும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பங்களில் சுசீலா அம்மையாருடன் பேசவும், பழகவும் எனக்கு வாய்ப்பு அமைந்தது.

அம்மாவின் பேச்சில் அரசியல் நையாண்டி இருக்கும். அய்யாவைப் பற்றிய அரிய தகவல்கள் சொல்லுவார். அப்படித்தான் பெரியார் அறிவித்த அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் 26.11.1957-இல் அய்யா ஆனைமுத்து கைதாகிப் பதினெட்டு மாதங்கள் சிறைத்தண்டனை அடைந்தார். அப்போது, அம்மா வுக்கு ஏற்பட்ட நெருக்கடி களைச் சொல்லக் கேட்டு நெகிழ்ந்து போனேன்.

சுசீலா அம்மாவின் தந் தையின் பேர் சுப்ரமணி என்பதால், என்மீதான பாசத் திற்கு ஒரு காரணமாக இருந்தது.

அய்யா ஆனைமுத்து தில்லி மற்றும் வட மாநிலங்களில் பயணம் தொடர்ந்து சென்ற காலம் அது. கட்சி அலுவலகத்தில் எப்போதும் ஏராளமான தோழர்கள் புடைசூழ அரசியல் விவாதங்களுக்குப் பஞ்சம் இருக்காது.

முற்போக்கு இயக்கம், பெரியார் இயக்கம், தி.மு.க., அ.தி.மு.க., திராவிடர் கழகம், தமிழ் இயக்கங்கள் மற்றும் காங்கிரசு என்று பலதரப்பட்ட இயக்கங்களின் முன்னணித் தோழர்கள், தலைவர்கள் வருகை எப்போதும் இருக்கும்.

கட்சி அலுவலகத்தில் அய்யா ஆனைமுத்து இல்லாத போதும் வீராணந்தபுரம் ஆசிரியர் கணபதி, காட்டுமன்னார்கோயில் து. தில்லைவனம், மதுரை எஸ்.டி. விவேகி, தாதம்பட்டி எம்.ராஜு, சீர்காழி மா. முத்துசாமி, அரியலூர் ஆ.செ. தங்கவேல், சோளிங்கபுரம் க. முகிலன், அரக்கோணம் தமிழேந்தி, வேலூர் து. மூர்த்தி, தாம்பரம் சங்கமித்ரா, சென்னை இரா. பச்சமலை, வழக்கறிஞர் தென்னன், வாலாஜா கிருஷ்ண மூர்த்தி, வாலாஜா வல்லவன், சென்னை சி. பெரியசாமி, கலச. இராமலிங்கம், நாஞ்சில் நடராசன், பெரியார்தாசன், செஞ்சட்டை பஞ்சாட்சரம், புலவர் து. தயாளசாமி, கவிஞர் சுரதா, பேராசிரியர் இளவரசு, திருக்கோயிலூர் தி.ரா. விசயன், கவிஞர் காவிரிநாடன், வேலூர் செந்தமிழ்க்கோ, வழக்கறிஞர் கோவிராமலிங்கம், வடிவேல், சுகுணா, ஆவடி நாகராஜன் என எண்ணற்ற தோழர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்,

அங்கே எளியவர்களுக்குப் புரியும் வகை யில் எண்ணற்ற அரசியல் விவாதங்கள் தொடர்ந்து நடக்கும்.

1983-இல் இலங்கையில் ஈழப்போராட் டம் நடைபெற்ற காலத்தில், இலங்கை ஈழப்போராளிகள் அச்சகத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

என்னைப் போன்றோர்க்கு அது பயிற்சிக் களம். அய்யா ஆனைமுத்துவின் மூத்த மகன் ஆனை பன்னீர்செல்வத்தின் உலக அரசியல் பார்வை, பேச்சு என்னை எப்போதும் கவரும்.

பின்னாளில் ஆனை பன்னீர்செல்வம் வெளிநாட்டிற்கு வேலை செய்யச் சென்றார்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் பழைய வீடு விற்பனைக்கு வந்தது.

தாம்பரம் மா.பெ.பொ.க. நகரச் செயலாளர் கு. கிருஷ்ணமூர்த்தி இந்தத் தகவலை என்னிடம் சொல்ல அய்யா ஆனைமுத்துவிடம் இதைச் சொன்னேன்.

எந்தப் பற்றும் அற்றத்தன்மையில் அணுகும் அய்யா-இதையும் அப்படித்தான் அணுகினார்.

அதன்பின் அம்மா சுசீலாவிடம் எங்கள் விருப்பத்தையும், இடத்தின் சிறப்பையும் பற்றிச் சொல்ல - அம்மாவே, ‘உங்க அய்யாவிடமே சொல்’ என எங்களைத் திரும்பப் பேசச் சொன்னர் - பலமுறை அய்யாவிடம் பேச, ஒருமுறை தாம்பரம் வந்து விலைக்கு வரும் வீட்டைப் பார்க்க அய்யா ஒப்புக் கொண்டார்.

அய்யா தாம்பரம் வரும்போது, கலச. இராமலிங்கத்தின் சகோதரர் பொறியாளர் சோதி வெங்கடாச்சலத்தை உடன் அழைத்து வந்தார். இருவருக்கும் அந்தப் பழைய வீடு பிடித்தது.

தாம்பரம் வீட்டையும் இடத்தையும் வாங்க, அய்யா திருச்சியில் இருந்த நிலத்தை விற்றார். கூடுதலாக மூத்த மகன் ஆனை பன்னீர்செல்வம் வெளிநாட்டிலிருந்து சம்பாதித்து அனுப்பிய பணமும் உதவியது.

இதனால் அய்யா ஆனைமுத்துவின் குடும் பத்தினர் ஒரு வழியாக தாம்பரத்திற்குக் குடிவந்தனர்.

அம்மாவுக்குப் பல வகைகளில், சென் னையை விட, தாம்பரம் மிகவும் பிடித்து இருந்தது. எங்களுக்கு அதில் மகிழ்ச்சி.

அய்யா ஆனைமுத்து எப்போதும் போல் பெரும்பாலான நாள்கள் வடநாடு மற்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் என்று சுழன்று கொண்டு இருந்தார்.

தாம்பரத்தில், அய்யாவின் மூத்த மகன் ஆனை பன்னீர்செல்வம், மல்லூர் போதம்மாள், இளைய மகள் அருள்மொழி, க. இராமச்சந்திரன் ஆகியோருக்கு அய்யா வீட்டை ஒட்டியிருந்த சிவசக்தி திருமண மண்ட பத்தில் 26.2.1995-ஆம் நாள் திருமணம் நடைபெற்றது.

26.6.1999-ல் அய்யா ஆனைமுத்துவின் மூத்த மகன் ஆனை பன்னீர்செல்வம், போதம் மாள் இணையர்க்கு ஒரு மகள் பிறந்தது. அக்குழந்தைக்கு ஆசுபள் என்று பெயர் சூட்டினர்.

‘ஆ’ என்பது ஆனைமுத்து. ‘சு’ என்பது சுசீலா ஆனைமுத்து, ‘ப’ என்பது ஆனை பன்னீர்செல்வம். ‘ள்’ என்பது போதம்மாள் ஆகியவர்களின் தலைப்பெயர் எழுத்தைக் கொண்டு அக்குழந்தைக்குப் பெயராகச் சூட்டப்பட்டது.

திருமண நிகழ்ச்சிக்கு அப்போதைய தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவர் வாழப்பாடி கூ. இராமமூர்த்தி, புதுவை ந. அரங்கசாமி, புதுவை விஸ்வநாதன், வீரப் பாண்டி ஆறுமுகம் என்று ஏராளமான தலை வர்கள் வருகை தந்து திருமணம் நடை பெற்றது.

10.7.1994-ல் என் அண்ணன் இராமசாமி - வசந்தா இராமசாமியின் மூத்த மகள் மோகனாவுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தோம். அப்போது அய்யா ஆனைமுத்து வடநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.

அய்யாவுக்கு பதில், திருமணத்திற்கு, அம்மா சுசீலாவைத் தலைமை தாங்கி நடத்தித் தர விரும்பினேன்.

அய்யாவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, “அதை நீ அம்மாவிடமே கேட்டுத் திருமண பத்திரிகை அச்சிடு” என்று கூறினார்.

அம்மாவிடம், “என் அண்ணன் மகள் திருமணத்தையும் நீங்கள்தான் நடத்தித் தர வேண்டும். அய்யா, அந்தத் தேதியில் வட நாட்டுச் சுற்றுப்பயணம் சென்று விடுகிறார்” என்று கூறி அனுமதி கேட்டேன்.

எங்கள் குடும்பத்தின் மீது பாசம் கொண்ட அம்மா, மறுப்பு ஏதும் கூறாமல் ஒப்புக் கொண்டார்.

அம்மா, தில்லியில் நடந்த பெரியார் நூற்றாண்டு விழா 23.03.1979-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது தில்லியின் வீதிகளில் பதாகைகளைத் தூக்கிச் சென்று ஊர்வலத்தில் பங்கேற்றார். அதே இயக்க உணர்வோடுதான், அம்மா எங்கள் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

திருமணத்தில், சுசீலாம்மா தலைமை யில், தோழர்கள் செஞ்சட்டை பஞ்சாட்சரம், நாத்திக நந்தனார், க. முகிலன், வழக்கறிஞர் கோவிராமலிங்கம், தாம்பரம் பழனி, கி. சேதுராசன், புதுவை நட ராஜன், பேராசிரியர் சல்மான் பாரிசு என எண்ணற்ற தோழர்கள் வாழ்த்துரை வழங்கிப் பேசினார்கள்.

அம்மா சுசீலா மணமக்களுக்கு மாலை எடுத்துக்கொடுக்கும் போது “பெரியார் வாழ்க-பெரியார் வாழ்க” என முழக்கமிட் டார்.

இந்தத் திருமணத்திற்குப்பின், தொடர்ச் சியாக எங்கள் வீட்டில் நடந்த மேலும் மூன்று விழாக்களுக்கும் அம்மா சுசீலாவே தலைமையேற்று நடத்திக் கொடுத்தார்.

20.01.1997-ல் தாம்பரம் சுப்ரமணி, த. கஸ்தூரி இருவருக்கும் திருமணம் அய்யா ஆனைமுத்து தலைமையில் நடைபெற்றது.

17.09.1998-ல் எங்களுக்கு மகள் பிறந்தாள். எங்கள் குழந்தைக்கு அய்யா ஆனைமுத்து, “முல்லை” என்று பெயர் சூட்டினார்.

என்னுடைய நீண்ட நாள் உழைப்பால் உருவான எங்களின் “முல்லை இல்லம்” தாம்பரத்தில் 28.4.2000 அன்று புதுமனை புகுவிழாவுக்கும் அய்யா ஆனைமுத்து தலைமை தாங்க, அம்மா சுசீலா இல்லத்தைத் திறந்து வைத்தார்.

ஏறத்தாழ என் அண்ணன் மகள் திருமணத்திற்கும் எங்கள் இல்லத்திறப்பு விழாவுக்கும் 8 ஆண்டுகள் இடைவெளி.

இல்லத்தின் திறப்பு விழாவின் போது அம்மா சுசீலா “ரிப்பன்” வெட்டும் போது “பெரியார் வாழ்க - பெரியார் வாழ்க” என உற்சாகம் பொங்கக் குரல் கொடுத்தார். புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்த பலரும் அம்மாவின் குரலைத் தொடர்ந்து “பெரி யார் வாழ்க” என, முழக்கமிட்டு அம்மா சுசீலாவை உற்சாகப்படுத்தினர்.

அதன் பின் மேலும் எட்டு ஆண்டு இடை வெளியில், 21.09.2008-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் படப்பையில் எங்களின் புதிய இல்லத்தை அய்யா ஆனைமுத்து தலைமையில், அம்மா சுசீலாவே திறந்து வைத்தார்.

மகள் முல்லையின் நாட்டிய அரங்கேற்றம் 2012 பிப்ரவரி 12-ந் தேதி சென்னை தியாகராய நகர், கிருஷ்ண கான சபையில் நடந்தது. நாட்டிய அரங்கேற்ற நிகழ்வுக்கு அம்மா சுசீலா தலைமை தாங்கினார். விழாவில் அய்யா ஆனைமுத்து, திரைப்பட இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, நடிகை ரோஜா செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

கவிஞர் தமிழேந்தி நாட்டிய அரங்கேற்றத்திற்குக் கவிதை நடையில் தொகுப்புரை வழங்கியது கூடுதல் சிறப்பாகும். அரங்கேற்ற மேடை நிர்வாகப் பொறுப்பைத் ‘தாம்பரம் எழில்’ ஆசிரியர் பூவைமணி, தாம்பரம் ONGC ரவி, தி.ரா.வி. நல்லதம்பி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, மகள் முல்லையின் நாட்டிய அரங்கேற்ற நிகழ்வில், விழா மேடையிலே, என் மகள் முல்லையையும் மனைவி கஸ்தூரியையும் சுசீலா அம்மா கட்டிப்பிடித்து வாழ்த்தியதை எங்கள் வாழ்வின் அரிய நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.

மகள் முல்லை - மருத்துவப் படிப்புக்காக “மொரிசியஸ்” செல்லும் தருணத்தில், அம்மாவின் வாழ்த்தைப் பெற்றே வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தோம். மகள் முல்லையைப் பார்க்கும் ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும், “நீ இந்திராகாந்தி மாதிரி ஆளுமையோடு வளர வேண்டும்” என்று கட்டிப் பிடித்து வாழ்த்தி, சுசீலா அம்மா பாராட்டு வார்.

karunanidhi and ve.aanaimuthuஅம்மாவுக்கு எப்போதும் கலைஞர் கருணாநிதி மீது பாசம் உண்டு. அம்மாவின் சொந்த சித்தப்பா ஆ.கோவிந்தசாமி, 1968-இல் தி.மு.க.வில் கலைஞர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.

அய்யா குடும்பத்தின் பிள்ளைகள் வெற்றி, வீரமணி இருவரின் திருமணம் 13,09,1998-இல் ஒரே மேடையில் தாம்பரம், டீ.ஜி.பி. மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டுத் திருமணத்துக்குப் பல்வேறு இயக்க முன்னணி யினர் கலந்துகொள்ள திருமண அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டிய நேரத்தில், அம்மா சுசீலா ‘திருமணம், கலைஞர் தலைமையில் நடைபெற வேண்டும்’ என்று விரும்பினார். ஆனை பன்னீர்செல்வமும் நானும் அய்யாவிடம் அம்மாவின் விருப்பத்தை எடுத்துச் சொன்னோம். சரி ‘கலைஞரை நேரில் போய்ப் பாருங்கள்’ என மூத்த மகன் ஆனை பன்னீர் செல்வத்திடம் சொன்னார்.

சென்னை அறிவாலயத்தில் கலைஞரை நேரில் சென்று திருமணத்துக்கு அழைத்தோம்.

தமிழ்நாடு திட்டக்குழு முன்னாள் தலைவர் மு.நாகநாதனும் இதை வலியுறுத்த, கலைஞர் கருணாநிதி மகிழ்ச்சியோடு திருமணத்திற்கு வர ஒத்துக் கொண்டு திருமணத்திற்கு அமைச்சர்கள் புடைசூழ வருகை தந்து தலைமை யேற்று நடத்திக் கொடுத்தார்.

இந்த திருமணத்தில், கலைஞர் இரண்டு செய்திகளைப் பதிவு செய்தார். “ஆனைமுத்து அழைக்காமலே இந்தத் திருமணத்துக்கு வந்து இருக்கிறேன்”. “தாடி வைத்து இருப்ப தால், ஆனைமுத்து என்னைவிட மூத்தவர் என்று எண்ணிவிடாதீர்கள். அவர் இளையவர்; என் தம்பி” என்று, பெருத்த கைத்தட்டலுக்கு இடையே கூறினார்.

கலைஞரின் வருகையால் ஏற்பட்ட சிறப்பு, அம்மா சுசீலாவை அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்திற்று.

அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் அய்யா ஆனைமுத்து தொகுத்த “பெரியார் சிந்தனைகள் இரண்டாம் பாகம்” சென்னை அறிவாலயத்தில் கலைஞர் 21.3.2010-இல் வெளியிட, அம்மா சுசீலா பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, அய்யா ஆனைமுத்து பெரியார் சிந்தனைகள், முதல் பதிப்பு வெளியீட்டு விழா 01.07.1974-இல் திருச்சியில் தேவர் மண்டபத்தில் கலைஞர் வெளியிட, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மணியம்மை பெற்றுக் கொண்டார். இந்தப் புகைப்பட ஆல்பத்தைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நேரத்தில், ஒரு நாள், நான் தாம் பரத்தில் அய்யா வீட்டிற்குச் சென்ற போது, 1974-ஆம் ஆண்டு பெரியார் சிந்தனைகள் வெளியிட்ட விழா புகைப்பட ஆல்பத்தை சுசீலா அம்மா என்னிடம் கொடுத்து, அதை அய்யாவிடம் கொடுக்கச் சொன்னார்.

அய்யாவுக்கும், தேடிக் கொண்டு இருந்த புகைப்பட ஆல்பம் புதையல் கிடைத்த மகிழ்ச்சி.

21.3.2010-இல் “பெரியார் சிந்தனைகள், இரண்டாம் பதிப்பு” வெளியீட்டு விழாவுக்கு, கலைஞரை அய்யா ஆனைமுத்து அழைக்கச் சென்ற புகைப்படம் தான் 2010-ஆம் ஆண்டு சனவரி சிந்தனையாளன் அட்டைப் படமாக அலங்கரித்தது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் அய்யாவின் “பெரியார் சிந்தனைகள்” முதல் பதிப்பு மற்றும் இரண்டாம் பதிப்பு மற்றும் “ஆனைமுத்து கருத்துக் கருவூலம்” (இருபது தொகுதி) பெரும் சொத்து என்றால், அய்யா வின் புகழுக்கும், உழைப்பிற்கும் அவருடைய புத்தகச் சேமிப்பின் பாதுகாப்பிற்கும் அய்யாவின் பொது வாழ்க்கைக்கும் அம்மா சுசீலாவே சொத்தாக இருந்தார் என்றால், அது மிகையில்லை.

அம்மா சுசீலா, எப்போதும் சிலரிடம் பேசுவதை அதிகம் விரும்புவார். அந்தக் குறிப்பிட்ட சிலரில், நானும் என் மனைவி கஸ்தூரியும் அடக்கம்.

அம்மா பேசும் போது, எப்போதும், “நான் இறந்தால், கண்ணையும் உடலையும் தானம் செய்ய வேண்டும்” என்று வற் புறுத்திக் கொண்டே இருந்தார். அவருடைய விருப்பம் போலவே, அம்மாவின் இறப்புக் குப் பிறகு அம்மாவின் உடல் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது.

அம்மாவின் பெரும் பொழுது, அவர் வளர்த்த நாய்கள் மற்றும் பூனைகளுடன் மகிழ்ச்சியோடு இருந்தார்.

அம்மாவின் கடைசி நாள்கள், மிக விரைவாகக் கடந்து போயின என்றே சொல்ல வேண்டும். யாரும் எதிர்பாரா வண்ணம் இரண்டு நாள்களிலே நலிவுற்று 30.4.2019 அன்று சாவைத் தழுவினார்.

1.5.2019 மே, தொழிலாளர் தினத்தன்று அம்மாவின் உடல் தானமாக வழங்கப் பட்டது.

கடைசி நாள்களிலும் மூத்த மகன் ஆனை பன்னீர்செல்வம், மருமகள் போதம்மாள், பேத்தி ஆசுபள், விஜயலட்சுமி, மலர்க் கொடி ஆகியோரும் அவரைக் காப்பாற்ற போராடியதை மறக்க இயலாது.

அம்மாவின் இளைய மகன் கோவேந்தன் அம்மாவின் பாசத்துக்கு மிக நெருக்கமானவர். மருமகன் புதுவை அரிமா, மூத்த மகள் தமிழ்ச்செல்வி அரிமா, இளைய மகள் அருள்மொழி, மருமகன் க. இராமச்சந்திரன் மற்றும் மகன் வெற்றி, மருமகள் விஜயா வெற்றி, மகன் வீரமணி, மருமகள் மலர்க் கொடி, வீரமணி, பேரன் பேத்தி ஆகியோரிட மும் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்.

அம்மா சுசீலாவின் வாழ்வியல் வரலாற் றைப் பதிவு செய்ய வேண்டியது தேவை. இதைக் கட்சியினர், அய்யா குடும்பத்தினர் செய்ய வேண்டும் என்பது பலரின் விருப்பம்.

ஆசா பாசங்கள் அற்று, எதிர்பார்ப்பில் லாத தூய பொது வாழ்வில் தொண்டு புரிய வருபவர்களின் துணைவியர் எப்படிப் பங்களிப்பு செய்தும் துணையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு, அம்மா சுசீலாவின் பெருவாழ்வு ஒரு படிப்பினை என்றே தோன்றுகிறது.

“வாழ்க அம்மா, சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்!”

Pin It