பகுத்தறிவு விரிவடையும் பொழுது அது பொதுவுடைமை என்பதை வந்தடையும். நானும் அப்படித் தான் பொதுடைமை வந்தடைந்தேன். புரட்சிகர இயக்கங்களின் நடைமுறையால் ஈர்க்ப்பட்டு மா.லெ அமைப்பில் செயல்பட்டேன் இந்தியப் பாட்டாளிவர்க்க விடுதலை என்று முழங்கியும் வந்தேன். அகில இந்திய புரட்சி நடத்த முதல் நிபந்தனையே ஒரு கட்சி ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிளை பரப்பியிருக்க வேண்டும்.ஆனால் உண்மை என்ன.எந்த அகில இந்திய புரட்சிகர மா.லெ கட்சிக்கும் கிளைகள் இல்லை. அவ்வாறு கிளைகள் இருக்கும் பொழுது அது தேசிய இன விடுதலைக்கு குரல் கொடுப்பதும் தேசிய இன விடுதலையை ஆதரிப்பதும் அதன் கடமை ஆகிறது.ஆனால் இந்தியாவில் அது போன்ற நிலைமை இல்லை.
இந்திய பூகோள அமைப்பு பல்வேறு தேசிய இனங்களை கொண்ட நாடு என்பது நமக்குத் தெரியும்.ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் மொழி, பண்பாடு,பொருளாதாரம், நிலத் தொடர் உள்ளது. எல்லா தேசிய இனங்களும் ஒடுக்கப்படுகிறது. எந்த தேசிய இனம் விழிப்புணர்வு கொள்கிறதோ அந்த தேசிய இனம் விடுதலைக்குப் போராடுகிறது. இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று எல்லோராலும் ஏற்றுகொண்ட பிறகு தத்தமது இனவிடுதலைக்கு போராடுவது என்பது முதன்மை வேலைத்திட்டமாக மாறுகிறது.
இந்த சூழல் இல்லாத நிலையில் தமிழ் தேசிய இனம் ஏன் தன் விடுதலையை கோரமுடியாது? இந்த கேள்வி எழுவது இயல்பானது தானே ஒட்டு மொத்த புரட்சி, நாடு தழுவிய புரட்சி என்றெல்லாம் பேசி காலம் கடத்துவதும் ஒடுக்குமுறையை சகித்துக் கொள்வதும் என்ன நீதி இருக்க முடியும்.
உதாரணமாக ரசிய தேசிய இனம் தமது பாட்டாளிவர்க்க புரட்சிகர விடுதலையை தானே தன் ஆளும் வர்க்கத்தினை எதிர் கொண்டது புரட்சி வெற்றி அடையும் தருவாயிலும் அதன் பிறகும் பல தேசிய இனங்கள் லெனின் அறைகூவலை ஏற்று சோவியத் யூனியன் என்ற பெயரில் இணைந்து கொண்டன அங்கு பிரிந்துபோகும் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து தேசிய இனங்களின் உரிமையைப் பாதுகாத்தது இளம் பாட்டாளி வர்க்க அரசு.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற தேசிய இனங்கள் தங்களுடைய விடுதலைக்காகப் போராடி வருகின்றன இந்திய ஏகாதிபத்தியம் அந்த தேசிய இன விடுதலை இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இத்தகைய பேச்சுவார்த்தைகளையும், அதன் போராட்டங்களையும் பிற மாநில மக்களுக்கு அறியா வண்ணம் பத்திரிக்கைகளும், அரசும் பார்த்துக் கொள்கின்றன.
தேசிய இன விடுதலையை ஒரு தேசிய இனம் தன் விடுதலையை எப்போது முன்னெடுக்கிறது சமூகப் பொருளாதார சுரண்டல் அரசியல் உரிமை மறுப்பு அதன் வளங்கள் அழிக்கப்படுவது அதன் மொழி அழிக்கப்படுவது என்பதிலிருந்து தான் அதன் இனவிடுதலை தொடங்குகிறது.
அகில இந்திய புரட்சி பேசும் கட்சிகள் தேசிய இனங்களின் விடுதலை பற்றி பேசுவதில்லை. இந்திய தேசிய பெருமிதத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள் அகில இந்தியப் புரட்சிவாதிகள். எனவே தான் தனி நாடு கொடு எனக் கோரினால் பார்ப்பன இந்து மதவெறி கும்பலைப் போல அகில இந்தியப் புரட்சிக்காரர்கள் பதறுகிறார்கள்.
இந்தியாவின் இனச் சிக்கலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமானால் இந்தியா தேசிய இனங்களின் சிறைகூடம் என்ற சிறைகூடத்தை உடைத்தெறிய வேண்டும் என்று சொல்பவர்களை இனவெறியர்கள், பிரிவினைவாதிகள், மொழிவெறியர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
ஒவ்வொரு தேசிய இனமும் தன் விடுதலையைத் தானே முன்னெடுப்பதன் மூலமாக பிற தேசிய இனங்களின் ஐக்கியத்தைக் கோர முடியும் அப்படி எல்லா தேசிய இனங்களின் ஜனநாயக சக்திகளுடன் ஒன்றுபட்டு ஓர் ஒன்றிய அரசை அமைக்க முயற்சிக்க முடியும். ஒட்டுமொத்தப் புரட்சி என்று சொன்னவர்கள் இந்த எழுபது ஆண்டுகளில் தேசிய இனச்சிக்கலை எப்படி அனுகினார்கள் என்பதை நாம் பார்த்தோம். அகில இந்திய புரட்சிகர இயக்கங்களின் நிலைப்பாடு ”கானல் நீராகவே” உள்ளது.
முதலில் இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் விடுதலை அடையட்டும் அந்த தேசிய இனங்கள் இணைந்து இருப்பதா அல்லது தனித்தனியே இருப்பதா என்பதை அந்தந்த தேசிய இனங்கள் முடிவு செய்யும். நாம் எந்த தேசிய இனத்தையும் ஒடுக்கவோ, சுரண்டவோ, விடுதலை கேட்கவில்லை எமது பிரதேசத்தையும், எமது மக்களையும், எமது மொழியையும், பண்பாட்டையும் பாதுகாத்துக் கொள்ளவே இந்திய ஏகாதிபத்தியத்திடம் விடுதலை கோருகிறோம்.
பிற தேசிய இனங்களின் விடுதலைக்குத் தோள் கொடுப்பதும், ஊக்கமளிப்பதும்,அதன் உரிமைகளை ஜனநாயகபூர்வமாக மதிப்பதும் ஒரு தேசிய இனத்தின் கடமையாகிறது.
இன்றுள்ள உலக அரசியல் சூழலில் தனிதேசிய இன விடுதலை என்பது எளிதான காரியம் இல்லை என்பது புரிகிறது.ஈழ விடுதலைப் போராட்டமே அதற்கு உதாரணம். எனினும் பூனைக்கு மணி கட்டித்தான் ஆகவேண்டும் மண்ணில் விதைகள் முட்டி மோதி முளை விடுவதைப் போல இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள நாடுகளின் அரசியலில் ஏகாதிபத்தியங்கள் தலை இடுகின்றன என்பது உண்மை தான் ஆனாலும் இந்திய ஏகாதிபத்தியத்தை ஒரு உலுக்கு உலுக்கினால் மட்டும் தான் மற்ற தேசிய இனங்கள் அவற்றின் விடுதலைக்கு சிந்திக்க வைக்க முடியும் அறிவார்ந்த தமிழ் சமூகம் அதை செய்ய முன்வரும் என்பதில் ஐயமில்லை.
எனவே தான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் அதனை முன்மொழிவதால் என்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டேன்.
தோழமையுடன்
- வே.செல்வமுருகன், புதுவை