சிலிர்ப்பூட்டும் பிரம்மபுத்திரா, சலசலக்கும் ஓடைகள், வனப்புமிக்கக் காடுகள், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், அரிய பறவை இனங்கள் முதலான இயற்கை வளங்களும், பறந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களும் நிறைந்த எழில்மிக்க தேசம் அசாம்.

ஆனால் அழகான இந்த அசாம் தேசம் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமைதியிழந்த தேசமாக காட்சியளிக்கிறது. கொந்தளிப்பும், கலவரமும், போராட்ட மும், உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இனமோதலே இந்த அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணமாகும். அயலார் ஆக்கிரமிப்பு – வெளியார் சிக்கல் தான் இந்த இனக் கொந்தளிப்புக்குக் காரணமாகும்.

இந்தமுறை அசாமின் போரோலாந்துப் பகுதியில் சூலை (2012) மாதத்தில் மிகப்பெரும் இனக்கலவரம் மூண்டுள்ளது. (Bodo)என்று ஆங்கிலத்தில் குறிப்பதை அதே உச்சரிப்பில் போடோ என்றே நாமும் அழைத்துவந்தோம். ஆனால் அம்மக்கள் தங்கள் மொழியில் தங்களைப் ‘போரோ’ என்று அழைப்பதைப் போலவே பிறரும் உச்சரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இனி அவ்வாறே நாமும் குறிப்பிடுவோம்.)

கோக்ராஜ்கர் நகரத்தில் வங்காளி இசுலாமிய அமைப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடந்த 2012 சூலை 19 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்கள். போரோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் இக்கொலையில் ஈடுபட்டார்கள் என ஐயப்பட்ட வங்காளி முஸ்லீம்கள் பெரும் திரளாகக் கூடி அடுத்த நாள் சூலை 20 அன்று போரோ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் இளைஞர்கள் 4 பேரை நடுவீதியில் குண்டுவீசியும் பாராங்கல்லால் தலையை நசுக்கியும் கொன்றனர்.

இது ஒரே இரவில் மிகப்பெரிய இனக்கலவரமாக மாறியது. வங்காளிகள் வாழும் கிராமங்களும், போரோக்களின் கிராமங்களும் மாறி மாறி கொளுத்தப்பட்டன. கண்மண் தெரியாத படுகொலைகள் அரங்கேறின. கோக்ராஜ்கர், சிராங், பாஸ்கா, உதய்புரி, தூப்ரி பொங்கைகான் ஆகிய மாவட்டங்கள் 10 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்தன. வங்காளிகள், போரோக்கள் ஆகிய இரண்டு இனங்களையும் சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேறி வேறு வேறு மாவட்டங்களில் உயிர்க்காப்புக்காகத் தஞ்சம் புகுந்தனர். அங்கு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அம்மக்கள் போதிய உணவின்றியும், கழிப்பிடமின்றியும், மருத்துவ வசதி இல்லாமலும் துயரத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இக்கலவரத்தில் மொத்தம் 73 பேர் கொல்லப்பட்டதாகவும், 400 பேர் படுகாயம் அடைந்து ஊனமுற்றுள்ளதாகவும் அசாம் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

போரோ பகுதியில் இதுபோன்ற கலவரங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் வருகின்றன. ஆனால் இப்போது ஏற்பட்ட இனமோதல் மிகவும் தீவிரமானது. ஆழமாக வேரூன்றியுள்ள இனப்பகையின் வெடிப்பு இது.

எனவே இச்சிக்கலின் பின்னணி குறித்து தெரிந்து கொள்வதும் இதனால் தமிழர்கள் பெற வேண்டிய படிப்பினையைப் புரிந்து கொள்வதும் அவசியமாகும்.

அசாமில் அசாமியர்களும், 300க்கும் மேற்பட்ட பழங்குடியினரும் பரந்து வாழ்கிறார்கள். வரலாற்றுக்காலம் தொட்டு அசாம் தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டு வந்த தேசமாகும். வரலாற்று ஓட்டத்தில் பர்மாவைக் (மியான்மரை) கைப்பற்றிய பிரித்தானிய அரசு அவர்களிடமிருந்து அசாம் பகுதியைப் பிடித்துக் கொண்டது. அதுமுதல் பிரித்தானிய இந்தியாவின் பகுதியாக அசாம் மாறிப்போனது.

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப்பகுதியாக கிழக்கு வங்காளமும், அசாமும் மாறிய திலிருந்தே போரோலாந்துக்குள் அணியணியான வங்காளிகளின் குடியேற்றம் தொடங்கிவிட்டது.

இதுகுறித்து 1931இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பொறுப்பாக இருந்த கண்காணிப்பாளர் சி.எஸ்.முல்லான் பிரித்தானிய அரசுக்கு அளித்த அறிக்கை கீழ்வருமாறு எச்சரித்தது.

“இந்த மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளில் நடந்துள்ள மிகமுகாமையான நிகழ்வு என்னவென்றால் அசாமிற்குள் நிகழ்ந்த வங்காளிகளின் குடியேற்றம்தான். என்பதை அழுத்திக் கூற விரும்புகிறேன். இது அசாமின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை மாற்றிவிடும்; அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என அஞ்சுகிறேன். கிழக்கு வங்காளத்தில் இருந்து எறும்புகளின் அணி வகுப்பு போல் வங்காளிகள் குறிப்பாக வங்காளி முஸ்லீம்கள் நிலப்பசியோடு தொகை தொகையாகக் குடியேறி வரு கிறார்கள். போரோக்களிடமிருந்தும், அசாமியர்களிடமிருந்தும் நிலங்களை இந்த வங்காளிகள் கைப்பற்றுகிறார்கள். அசாமியர்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்வுமுறை ஆகிய அனைத்திலும் இவர்களின் ஆக்கிரமிப்பு பெரும் குலைவை ஏற்படுத்திவிடும். கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் இவ்வாறு அசாம் பள்ளத்தாக்கில் குடியேறியுள்ள வங்காளிகளின் எண்ணிக்கை 5 இலட்சம் ஆகும். பள்ளத்தாக்கில் நிலவும் இனச் சமநிலைக்கு இது அச்சுறுத்தலாக அமைந்துவிடும்” என்று சி.எஸ்.முல்லான் எச்சரித்தார்.

இவ்வாறு இவர் குறிப்பிடும் போது அசாமின் மொத்த மக்கள் தொகை 55.61 இலட்சம் ஆகும். 1931இல் சி.எஸ்.முல்லான் அச்சம் தெரிவித்தது போலவே அடுத்தடுத்த ஆண்டுகளில் அசாமில் நிகழ்வுகள் தொடர்ந்தன.

1947-இல் இந்தியா – பாகிஸ்தான் பிரிப்பை ஒட்டி மிகப்பெரும் மதக்கலவரம் மூண்டது. அப்போது பெருந்தொகையான வங்காளி இந்துக்கள் கிழக்கு வங்காளத்தி லிருந்து அலையலையாக அசாமுக்குள்ளும், திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளிலும் குடியேறினர். அசாமுக்குள் நுழைந்த வங்காளிகள் பெரும் எண்ணிக்கையில் போரோலாந்து பகுதியிலும் குடியேறினர்.

வங்காள தேச விடுதலைப் போரை ஒட்டி 1971இல் அகதிகளாக அசாமுக்குள் நுழைந்த வங்காளிகளில் பெருபகுதியினர் அசாமிலேயே தங்கிவிட்டனர். இந்தியாவின் துணையோடு வங்காளதேசம் விடுதலை அடைந்த பின்னும் வங்காளிகள் தங்கள் நாட்டுக்குத் திரும்பவில்லை. இந்தியாவும் அதற்குறிய முயற்சி செய்யவில்லை.

இதன்விளைவாகவே வங்காளிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக “வெளியாரை வெளியேற்றுவோம்” என்ற முழக்கம் அசாமில் எழுந்தது. அனைத்து அசாம் மாணவர் சங்கம் வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை முன்னின்று நடத்தியது.

வெளியார் ஆக்கிரமிப்புக்கு எதிராக உலக வரலாற்றில் நடைபெற்ற மிகமுக்கியமான தேசியத் தாயக பாதுகாப்புப் போராட்டமாக அசாம் போராட்டம் வரலாற்றில் குறிக்கப் பட்டது. 1985 இல் அனைத்து அசாம் மாணவர் சங்க தலைவர்களுக்கும் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்திக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு அசாம் போராட்டம் முடிவடைந்தது. 1971க்கு பிறகு அசாமில் நுழைந்த வங்காளிகளைக் கணக்கெடுத்து வெளியேற்றுவதாக அவ்வொப்பந்தம் உறுதி கூறியது.

இவ்வொப்பந்தம் பெருமளவு செயல்படவில்லை. வங்காளிகளில் சிறு எண்ணிக்கையினர் மட்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுவிக்கப் பட்டனர். யாரும் வெளியேற்றப்படவில்லை. அசாம் மாணவர் சங்க போராட்டத் தலைவர்கள் தேர்தல் அரசியலில் குதித்துச் சீரழிந்து போனதுதான் கண்ட பலன்.

இந்நிலையில் போரோலாந்து பகுதியில் 1987 ஆம் ஆண்டு ”அனைத்து போரோ மாணவர் சங்கம்” உருவானது. உபேந்திரனாத் பிரம்மா என்ற மாணவர் தலைமையில் இவ்வியக்கம் போரோலாந்து கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்தியது. போரோ மொழி பேசும் தனித் தேசிய இனத்தவரான போரோக்கள் வாழும் கோக்ராஜ்கர், சிராங், பாஸ்கா, உதய்புரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தனி போரோலாந்து அமைக்க வேண்டும் என்றும், போரோ மொழியை இந்திய மொழிகளில் ஒன்றாக அரசமைப்புச்சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் போரோ மாணவர் இயக்கம் கோரியது. மாபெரும் போரோ இன எழுச்சியாக அப்போராட்டம் நடைபெற்றது. 1000 மணி நேரம் கடை அடைப்பு, மக்கள் ஊரடங்கு என்ற பல எழுச்சியான வடிவங்களில் அப்போராட்டம் நடைபெற்றது. அசாம் அரசும், இந்திய அரசும் போரோ மக்கள் மீது கொடும் அடக்கமுறையை ஏவின.

போரோ மக்களின் இந்த இன உரிமைப் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சி தொடக்கத்தில் இருந்தே ஆதரித்தது. போரோ மொழியை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும், போரோ மக்கள் வாழும் தாயகப் பகுதியை போரோ மக்களே நிர்வாகம் செய்து கொள்ளும் வகையில் போரோ தன்னாட்சி அமைப்பு (Bodo Autonomous council ) நிறுவ வேண்டும் என்றும் த.தே.பொ.க (அன்றைக்கு எம்.சி.பி.ஐ) வலியுறுத்தியது. (காண்க : போடோ இனச்சிக்கல் ஒரு பார்வை, கி.வெங்கட்ராமன் – கண்ணோட்டம், செப்டம்பர் 1989 இதழ்)

ஆயினும் ஊராட்சி மன்ற அதிகாரம் போன்ற மிகக்குறைந்த அதிகாரம் உள்ள போரோ தன்னாட்சி மன்றம் அமைப்பது என்ற அடிப்படையில் 1993 ஆம் ஆண்டு அசாம் அரசோடு போரோ மாணவர் சங்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு அப்போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் மனம் நிறைவடையாத போரோ இன இளைஞர்கள் போரோ விடுதலைப் புலிகள் (Bodo Liberation Tigers –BLT ), போரோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Front for Bodo Land –NDFB) ஆகிய அமைப்புகளை நிறுவி ஆயுதப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் விளைவாக போரோ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இந்திய அரசும், அசாம் அரசும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கண்டன. 2003 பிப்ரவரி 10ஆம் நாள் இந்தியாவின் அன்றைய துணைப்பிரதமர் எல்.கே.அத்வானி, அசாமின் அன்றைய முதல்வர் தருண் கோகோய் ஆகியோர் முன்னிலையில் புதுதில்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. போரோ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஹக்கிரம்மா பசுமத்தாரி அசாம் மாநிலத் தலைமைச் செயலாளர் பி.கே.தத்தா இந்திய அரசின் உள்துறை செயலாளர் ஆர்.சி.ஏ.ஜெயின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதன்படி கோக்ராஜ்கர், சிராங், பாஸ்கா, உதய்புரி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய போரோ ஆட்சிமன்றம் உருவாக்கப்பட்டது. வனம், வேளாண்மை, பொதுப்பணித்துறை, சிறுதொழில், கல்வி, பண்பாடு, மண்வளம், நிலவருவாய், மீன் துறை உள்ளிட்ட 40 அதிகாரங்கள் இம்மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 6ஆவது அட்டவணைப்படி இந்தத் தன்னாட்சி மன்றம் உறுதி செய்யப்பட்டது. போரோ மொழி இந்திய அரசமைப்புச்சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் அறிவிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாக சேர்க்கப்படும் என ஏற்கப்பட்டது. போரோ நிர்வாகப் பகுதியில் போரோ மொழி ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் இருக்கும் என்றும் அசாமிய மொழியும் ஆங்கில மொழியும் இணை நிர்வாக மொழிகளாக இருக்கும் எனவும் இவ்வொப்பந்தம் கூறியது.

இவ்வொப்பந்தத்திற்குப் பிறகும் போராட்டத்தைத் தொடர்ந்த போரோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி பூட்டான் அரசின் காட்டிகொடுப்புகளுக்கு பிறகு 2004ஆம் ஆண்டில் பெரும் சேதமடைந்தது. இச்சூழலில் அவ்வமைப்பிற்கும் இந்திய அரசுக்கும் இடையில் 2005 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆண்டுதோறும் அது புதுபிக்கப்பட்டு வருகிறது.

போரோ தன்னாட்சி மன்றம் நிறுவப்பட்டதற்குப் பிறகு போரோ மக்களுக்கு கூடுதல் நிர்வாக உரிமை கிடைத்ததே தவிர வங்காளிகளின் ஆக்கிரமிப்பு குறைந்தபாடில்லை. போரோ மாவட்டங்களில் உள்ள வளமான நிலங்களைக் குறி வைத்து வசதியுள்ள வங்காளிகளும் அவர்கள் நிலங்களில் பணியாற்ற வங்காளித் தொழிலாளிகளும் என போரோலாந்து மிக வேகமாக வங்காளிமயமாகிவிட்டது. போரோ பகுதி மட்டுமின்றி ஒட்டுமொத்த அசாமின் நிலையும் இதுதான்.

வங்காளிகள் காங்கிரசுக் கட்சியின் வாக்கு வங்கியாக இருப்பதால் வங்காளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை பற்றி அக்கட்சி கவலைப்படுவதில்லை. அசாமிலுள்ள மொத்தம் 27 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் வங்காளிகள் பெரும்பான்மை யினராக உள்ளனர். போரோ தன்னாட்சிப் பகுதிகளில் போரோ மக்கள் சிறுபான்மை யினராக மாறுவது மிக வேகமாக நடக்கிறது. அவர்களுடைய நிலமும் கைமாறு வதால் போரோக்களின் தாயகமும் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருக் கிறது. மிகை எண்ணிக்கையில் வங்காளிகள் நுழைந்ததற்குப் பிறகு அவர்கள் தங்களை அரசியல் வழிகளிலும் நிலைப்படுத்திக் கொண்டனர். துப்பாக்கி முனையில் போரோக்களை அவர்களது நிலங்களைவிட்டு வங்களிகளை வெளிவெளியேற்று கின்றனர் இப்போக்கு அதிகரித்து வருகிறது.

இது ஒரு வெடிப்பு நிலையை எட்டிவிட்டது. சூலைக்கலவரம் இதன் வெளிப்பாடு ஆகும்.

தங்கு தடையற்ற வங்காளிகளின் படையெடுப்பு போராக்களையும், அசாமியர்க ளையும் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி வருகிறது. இந்த அயலார் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படுகிற வரை அங்கு இனப் பதட்டம் ஓயாது. வங்காளிகளின் தங்கு தடையற்ற நுழைவைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால் அசாம், அசாமிய இனத்திற்கான தாயகமாக நீடிக்காது, போரோலாந்து போரோ மக்களின் தாயகமாக நீடிக்காது. திட்டமிட்ட முறையில் இந்திய அரசு செய்கிற இன அழிப்பு இது.

இது தமிழர்களுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து வருவதை எடுத்துகாட்டுகிறது. தமிழ்நாட்டில் தமிழர்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிற போது, ஒட்டுமொத்த மக்கள் தொகைப் பெருக்கம் மட்டும் உயர்ந்து வருகிறது. 6வயதிற்குக் கீழுள்ள தமிழ்நாட்டுக் குழந்தைகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளமுடியும். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 6 வயதிற்குக் கீழிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 11.59 விழுக்காடாக இருந்தது. 2011-இல் இவ்வகை எண்ணிக்கை இன்றைய மக்கள் தொகையில் 9.56 விழுக்காடாக வீழ்ந்துள்ளது. அதாவது தமிழர்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதே நேரம் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 2001 க்கும் 2011க்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் 15.6 விழுக்காடு கூடியுள்ளது.

1991க்கும் 2001க்கும் இடைப்பட்ட முந்தைய 10 ஆண்டுகளில் 11.7 விழுக்காடு மக்கள் தொகை வளர்ச்சியே இருந்தது. அதன் பிறகு தமிழர்களின் பிறப்பு விகிதமோ குறைந்துள்ளது. அப்படியிருக்க ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 15.6 விழுக்காடு உயர்ந்தது எப்படி? வெளிமாநிலத்தவர்களின் மிகை நுழைவே இதற்குக் காரணம்.

தொழில் வளர்ச்சி பெற்று வரும் மாவட்டங்களை ஆய்வு செய்தால் இது இன்னும் தெளிவாக விளங்கும்.

சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் ஆகியவை தொழில் வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டங்கள் என்பதை அனைவரும் அறிவோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கமானது 38.69 விழுக்காடு – அதாவது தமிழ்நாட்டு சராசரி மக்கள் தொகை பெருக்கத்தை 15.6 விழுக்காட்டை இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்துள்ளது. விட இரண்டு மடங்கிற் கும் மேல் உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் மக்கள் தொகை இதே 10 ஆண்டுகளில் 35.25 விழுக்காடு உயர்ந்துள்ளது. தமிழக சராசரி மக்கள் தொகை பெருக்கமான 15.6 விழுக்காட்டை ஒப்பிட இதுவும் இரண்டு மடங்கிற்கு மேல் என்பது தெளிவாகும்.

அதே போல் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 28.69 விழுக்காடும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20.67 விழுக்காடும், கோவை மாவட்டத்தில் 19.06 விழுக்காடும் மக்கள் தொகை பெருகியுள்ளது.

தொழில் வளர்ச்சி அடைந்து வரும் இம்மாவட்டங்கள் தாம் வெளிமாநிலத்தவரின் படையெடுப்பு மையங்களாகத் திகழ்கின்றன.

தமிழ்நாடு மிகவிரைவாக வெளியார் மயமாகி வருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழர்கள் தாங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த இந்த தமிழ் மண்ணிலேயே சிறுபான்மையினராகிவிடுவர் என்று பொருள். ஏற்கெனவே கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மலையாளிகள் எண்ணிக்கை மிகப்பெருமளவிற்குக் கூடிவிட்டது. வங்காளிகள், ஜார்கண்டிகள், பீகாரிகள் போன்ற பிற மாநிலத்தவரையும் சேர்த்தால் இம்மாவட்டங்களில் தமிழர்களின் மக்கள் தொகைக்கு சமமாக அயலார் மக்கள் தொகை பெருகிவிட்டதைப் புரிந்து கொள்ள முடியும்.

இம்மாவட்டங்கள் விரைவாக தமிழர் தாயகம் என்ற தகுதியை இழந்து வருகின்றன என்று பொருள். இப்போதுள்ள வெளிமாநிலத்தவர் ஆக்கிரமிப்பு தொடருமேயானால் ஒட்டுமொத்தத் தமிழகமும் இந்த நிலைக்குத் தாழ்ந்துவிடும்.

எனவேதான் மொழிவழி மாநிலமாகத் தமிழகம் உருவாக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்குப் பிறகு தமிழகத்துக்குள் நுழைந்த அயலார் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறது. உடனடிப் பணியாக புதிதாக வரும் வெளிமாநிலத்தவர் யாருக்கும் வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ தமிழகத்தில் கொடுக்கக் கூடாது எனப்போராடுகிறோம்.

2010க்கு பிறகு பிரமோத் போரோ என்பவர் தலைமையில் போரோவில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள அனைத்து போரோ மாணவர் சங்கமும் த.தே.பொ.கவைப் போலவே கோரிக்கை வைத்துள்ளது. புதிதாக வந்துள்ள வங்காளிகள் மற்றும் அயல் இனத்தவர் யாருக்கும் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக்கூடாது என அம்மாணவர் இயக்கம் போராடி வருகிறது.

போரோ பகுதி உள்ளிட்ட ஒட்டுமொத்த அசாம் சந்தித்து வரும் வெளியார் சிக்கல் விரைவில் தமிழ்நாட்டையும் தாக்கி உலுக்குகிறது. ஆனால் நாம் சலனப்படாமல் இருக்கிறோம். அசாமியர்கள் மற்றும் போரோக்களின் வரலாற்றிலிருந்தும் அவர்களின் இன்றைய நிலைமைகளி லிருந்தும் தமிழர்கள் படிப்பினை பெற வேண்டும்.

தமிழர் தாயகம் பாதுகாக்கப்பட தமிழ்நாட்டிலிருந்து வெளியாரை வெளியேற்ற வேண்டும். இது பிரிவினை வாதக் கூச்சல் அல்ல. தாயகத் தற்காப்பு முழக்கம்.

தமிழர்களே, அசாமைப் பாருங்கள்; ஆர்த்து எழுங்கள்!

Pin It