1986ஆம் ஆண்டு, அப்போதைய இந்திய பிரதமர் இராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் என்பவை. மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளிக்கூடம் அமைக்கப்படவேண்டும் என்பது தேசிய கல்விக்கொள்கையின் (1986) திட்டமாகும். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான கல்வி இந்த பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும்.

மத்திய அரசின் பாடத்திட்டமான சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தினை இந்தப் பள்ளிகள் பயிற்றுவிக்கும். இந்தப் பள்ளிக்கூடங்கள் முழுக்க உண்டு-உறைவிடப்பள்ளிகளாக மட்டுமே செயல்படும். பள்ளியின் 75 சத இடங்கள் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும், பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீடும் மாணவர் சேர்க்கையில் பின்பற்றப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுக்கின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இதுவரை எந்த இடஒதுக்கீடும் இல்லை.

இந்தத் திட்டம் துவங்கப்பட்டபோது, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டும் இதனை ஏற்கவில்லை. இந்தப் பள்ளிக்கூடங்களில் பொதுவாக மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. தவிர, 8 ஆம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கு வங்கம் இந்த பள்ளிக்கூடங்களை நடத்துவதற்கு அனுமதி அளித்தது. ஆனால், தமிழகத்தில் தற்போதுவரை இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ‘குமரி மகா சபா’ என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டிலும் நவோதயா பள்ளிக்கூடங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் செப்டம்பர் 12 ஆம் தேதி தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள், நவோதயா பள்ளிக்கூடங்களைத் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பது குறித்து 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டு பாஜகவினர் பல முறை, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்கிற கருத்தை வெளிப்படுத்தி வந்தனர். அவர்களின் அந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகதான், இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு இந்துத்துவ அமைப்பின் பெயரில் வழக்கு தொடர்ந்து இந்தத் தீர்ப்பினை பெற்றிருக்கின்றனர்.

1986 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே தமிழ்நாட்டில் அதற்குப் பெரும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது. திராவிடர் கழகம் இந்த திட்டத்தை எதிர்த்தது. மிகப்பெரிய அளவில், திருச்சியில் ஒரு மாநாட்டை (10.6.1986) நடத்தியது. கல்வி நெறிக்காவலர் என்று போற்றப்படுகிற நெ.து.சுந்தரவடிவேல் அம்மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். நெ.து.சு அந்த மாநாட்டில் பேசிய உரையினை ஒரு சிறு நூலாகவும் திராவிடர் கழகம் வெளியிட்டது. இப்போது மீண்டும் அந்த முக்கியமான சிறுநூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டிருக்கிறது திராவிடர் கழகம்.

நவோதயா பள்ளிகளை தமிழகம் ஏற்க மறுப்பதற்கான காரணங்கள் என்னென்ன?

தமிழகத்தின் தனிச்சிறப்பான இருமொழிக் கொள்கை என்பது, தாய் மொழி தமிழ், தொடர்பு மொழி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பள்ளிகளில் கற்பிக்கப்படும் என்பதாகும். இன்று வரையில் இந்த சட்டம் தொடர்கிறது. மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்குப் போனதும் தமிழே இல்லாமல் இந்தி, ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்படுகிற பள்ளிகளும் தமிழகத்தில் நுழைந்தன. மாநில அங்கீகாரம் அளிக்கும் பள்ளிகளில் மட்டும் இந்தி தடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் நவோதயா பள்ளிகள் தமிழகத்துக்குள் நுழையக்கூடாது என்ற ஒரு முடிவும் எடுக்கப்பட்டது. நவோதயா பள்ளி என்பது முழுக்க முழுக்க மத்திய அரசுப் பள்ளி அல்ல. மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுகிற பள்ளியாகும்.

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிக்கூடங்களைத் திறக்க அனுமதிக்கப்போவதில்லை யென கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சரவைத் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “அங்கு இந்தி வழியில் பாடங்கள் நடத்தப்படும் என்பது மட்டும் பிரச்சனையில்லை. இதற்கான கட்டமைப்பை மாநில அரசு உருவாக்கித்தர வேண்டியிருக்கிறது. இந்தப் பள்ளிக் கூடத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 ஏக்கர் நிலத்தை அரசு தர வேண்டியிருக்கிறது. நம்முடைய அரசுப் பள்ளிக்கூடங்களே அவ்வளவு பெரிய நிலத்தில் இல்லாத போது நாம் எதற்கு அவர்கள் வழியில் பாடம் நடத்துவதற்கு நிலம் தர வேண்டும்?" என்று கேள்வியெழுப்பினார்.

14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 45 ஆம் பிரிவு உத்தரவாதம் அளிக்கிறது. எத்தனையோ பத்தாண்டுகள் பறந்தும் அந்நிலை எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில் அரண்மனைக் கல்வித் திட்டம் என்பது ஓர் உயர்ஜாதி மேல்தட்டு மனப்பான்மையே!

கேந்திரிய வித்யாலயாவில் படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஆண்டு ஒன்றுக்குச் செலவழிக்கப்படும் தொகை 27,150 ரூபாய். நவோதயா பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் மத்திய அரசு செலவு செய்யும் தொகையோ ரூ.85,000. அரசு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு ஒன்றுமுதல் 8 ஆம் வகுப்புவரை ரூ.3,000; 9 முதல் 12 ஆம் வகுப்புவரை அரசு செலவழிக்கும் தொகை ரூ.4,000. தமிழக அரசு அனைத்து தரப்பினருக்கும் சமமான கல்வியினை வழங்கவேண்டும் என்ற கொள்கை முடிவுடன் தொடந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, நவோதயா பள்ளிகள் என்கிற பெயரில் பெரிய ஏற்றத்தாழ்வுகளை கல்வியில் புகுத்துவது சரியாகுமா?

நவோதயா பள்ளிகளை நாம் எதிர்ப்பதற்கு இன்னொரு, மிக முக்கியமான காரணம், பள்ளியின் மாணவர் சேர்க்கை முறையாகும். 6ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு, சிபிஎஸ்ஈ நிறுவனம் நுழைவுத் தேர்வினை நடத்தி, அதில் தேர்ச்சி பெறுகிறவர்களைதான் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். என்னதான், கிராமப்புற ஏழை மாணவர்களுக்காகவே இந்த பள்ளிகள் ஏற்படுத்தப்படுகின்றன என்று சொல்லப்பட்டாலும், 6ஆம் வகுப்பில் சேருவதற்கே நுழைவுத்தேர்வு என்பது மாணவர்கள் வடிகட்டி தரம்பிரிக்கும் வேலையல்லாமல் வேறு என்ன?

விண்ணப்பிக்கின்றவர்களில், 5 சதவீத மாணவர்கள்கூட இந்த பள்ளியில் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை என்பதுதான் மற்ற மாநிலங்களில் நாம் பார்க்கும் எதார்த்தமாக இருக்கிறது. ஒரு வகுப்பில் 80 மாணவர்கள் வீதம், 6 முதல் 12 வகுப்பு வரை மொத்தம் 560 மாணவர்கள் மட்டுமே ஒரு மாவட்டத்திற்கு படிப்பதற்காக உருவாக்கப்படுபவைதான் இந்த பள்ளிகள்.

தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சிக் காலத்தில் கல்வி நீரோடையை நாடெங்கும் பாயவிட்டு, தி.மு.க. ஆட்சியில், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இரண்டு முறை இருந்த, (ஏற்கெனவே மத்திய அரசின் கல்வி ஆலோசகராகவும் இருந்த) கல்வி நெறிக்காவலர் என்றழைக்கப்பட்ட திரு. நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் நவோதயா பள்ளிகள் குறித்து திராவிடர் கழக மாநாட்டில் பேசிய உரையின் ஒரு சிறு பகுதி இது:

“கட்டடம் இல்லாத பள்ளிகளுக்கு கட்டடங்கள் ஏற்பாடு செய்வதும், ஆசிரியர் போதாத பள்ளிகளுக்குப் போதிய ஆசிரியர்களைச் சேர்த்தும், ஆசிரியருக்கு 70- 80 பிள்ளைகள் ஏற்பு விழுக்காட்டை 30 - 40 என்று குறைத்தும், பிற பொருள் வசதிகளைச் செய்தும் முன்னுரிமை தர வேண்டும். குடிசை வாழ்வோர்களிடம் போய், ‘உங்களுக்கு எடுத்துக் காட்டாக உங்கள் பகுதியில் அரண்மனை கட்டுகிறோம். பெரிய மனிதர்களைக் குடியேற்றுகிறோம். அதற்கு ஒப்புதல் தாருங்கள் என்ற கேட்பது போல் இத்திட்டம் இருக்கிறது. மாடல் பள்ளிகள் (நவோதயா) அமைந்தால் யார் யார் பயன் பெறுவர்? மேட்டுக் குடியினர் நன்மை பெறுவார்கள்? உயர் ஜாதியினர் எனக் கருதப்படுவோர் செல்வந்தர், பெரிய அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உடையவர்கள் ஆகியோரின் பிள்ளைகள்தான் பயன்பெறுவார்கள்”

Pin It