மகளிர் ஆயம் பரப்புரை - கையெழுத்து இயக்கம் 

            முதன்மை “மது மாநிலமாக” தமிழ்நாடு திகழ்கின்றது. தமிழ்நாட்டு மக்களிடையே நாளுக்கு நாள் மதுப்பழக்கம் அதி கரித்து வருகிறது. உடல் நலமும், உள்ள உரமும் குன்றிய சமூகமாகத் தமிழ்ச் சமூகம் உருக் குலைகிறது.

            பெருகிவரும் சாலை விபத்துகள், கொலைக் குற்றங்கள், வன்முறைகள் ஆகிய வற்றில் மதுப்பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைக் காவல்துறைப் புள்ளிவிவரமே ஒத்துக் கொள்கிறது. அன்றாடம் கூலி பெறும் உழைப்பாளிகள் உணவுக்குச் செலவிடுவதை விட மது குடிப்பதற்குக் கூடுதலாகச் செலவு செய்கிறார்கள். எனவே உடல் உழைப்புத் தொழிலாளர் களின் உண்மை ஊதியம் உயர்ந்திருந்தாலும் வாழ்க்கைத் தரம் மேம்படவில்லை. வறுமையில் உழல்கிறார்கள்.

            இளைஞர்கள், மாணவர்களிடையே குடிப் பழக்கம் கூடுதலாகி வருகிறது. பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் கூட மதுக்குடிக்கிறார்கள். தடையேதுமின்றி, தாராளமாக மது கிடைப்பதே இவ்வளவு அதிகமாக இந்தப் போதைப் பழக்கம் பரவி வருவதற்குக் காரணமாகும். ஊற்றிக் கொடுக்கும் சாராய விற்பனை யாளராகத் தமிழக அரசே விளங்குகிறது.

            தமிழக அரசின் தலையாய வருமானம் சாராய விற்பனை மூலமே வருகிறது. மக்கள் நலத்திட்டங் களுக்குக் கூடுதல் நிதி திரட்டவே தமிழக அரசு “டாஸ்மாக்” கடைகளைத் திறந்து மது விற்பதாகக் கூறிக் கொள்வது கடைந்தெடுத்த பொய்யாகும்.

            எடுத்துக்காட்டாக 2009 ஆம் ஆண்டு “டாஸ்மாக்” கடைகளில் மது விற்பனை 12,492 கோடி ரூபாய். காலி புட்டிகள், அட்டைப் பெட்டிகள் விற்றுக் கிடைத்தது 500 கோடி ரூபாய். ஆக மொத்தம் “டாஸ்மாக்” கடைகளின் 2009 ஆம் ஆண்டு வருமானம் 12,992 கோடி ரூபாய். அதாவது ஏறத்தாழ 13000 கோடி ரூபாய். ஊழியர் சம்பளம், நிர்வாகச் செலவு, எதிர்கால நிதி ஒதுக்கீடு, இறக்குமதி வரி போன்ற செலவுகள் போக தமிழக அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் 2009 ஆம் ஆண்டு மட்டும் 8,980 கோடி ரூபாய். அதாவது ஏறத்தாழ 9000 கோடி ரூபாய்.

            ஆனால் தமிழக அரசு “ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு” இதே ஆண் டில் செலவு செய்தது ரூ. 4000 கோடி ரூபாய் மட்டு மே. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் இணைப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கியது சுமார் 600 கோடி ரூபாய்.

            அதாவது ஏழை, எளிய, நடுத்தர உழைப்பாளி மக்களிடம் ஒன்பதாயிரம் கோடி ரூபாயை “டாஸ்மாக்” கடைகள் மூலம் “பிக் பாக்கெட்” அடித்துவிட்டு அதில் பாதியை மக்களுக்கு இலவசங்கள் பெயரால் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறது தமிழக அரசு.

            தமிழகத்திலிருந்து இந்திய அரசு கொள்ளை யாகக் கொண்டு செல்லும் பல்வேறு வரி வசூலிலிருந்து தமிழகத்திற்குரிய பங்கை - அதாவது குறைந்தது 50 விழுக்காடு வரி வருவாயையாவது வலியுறுத்திப் பெறுவதே தமிழக அரசு தனது நிதியைப் பெருக்க உள்ள நேர்மையான வழி ஆகும். அதை விடுத்து தமிழர்களிடமே “டாஸ்மாக்” கொள்ளை நடத்துவது மக்கள் விரோதப் போக்காகும்.

            மேலை நாடுகளில் மதுப் பழக்கம் பரவலாக இருப்பது அவர்கள் முன்னேற்றத்தைத் தடுத்துவிட வில்லை என்ற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. உண்மையில் மேலை நாடுகளைப் போல் நிம்மதி இழந்த, குற்றமயமான சமூகம் வேறு எதுவும் இல்லை. அச்சமூகம் நாம் பின்பற்றத் தகுந்ததல்ல. அச்சமூகங் களில் ஒரு சிலர் சாதனையாளர்களாக வளர்கிறார்கள். அவ்வளவே. அச்சாதனையாளர்களிலும் பெரும் பாலோர் குடிப்பழக்கத்திற்கு அடிமைப்படாதவர்களே ஆவர். மது போதைக்கு அடிமைப்பட்ட மனிதன் தனக்கோ தன் குடும்பத்திற்கோ தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கோ நிம்மதியைத் தரமுடியாது.

            மது போதையினால் ஒட்டு மொத்தக் குடும்பமும் பாதிக்கப்பட்டாலும் அதன் வலியைச் சுமக்கவேண்டிய நிலை பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. தமிழகத்தில் கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெரும் பான்மையான பெண்களின் இழிநிலைக்கு மதுப்பழக்கம் முக்கியமான காரணி யாகும். குடிப் பழக்கம் உள்ள கணவனால் குடும்ப வன் முறைக்கு உட்படும் பெண் கள் ஏராளம்.

            எல்லா வகையிலும் வஞ்சிக்கப் பட்டுள்ள தமிழினம் தலை நிமிர வேண்டுமானால் தமிழி னத்தின் இருபால் இளைஞர் கள் மதுப் பழக்கத் திலிருந்து விடுபட வேண் டியது கட்டாயத் தேவை ஆகும். போதைக்கு அடிமைப்படாத இளம் தமிழர் பட்டாளம்தான் எதிர்காலத் தமிழ்நாட்டை ஒளிமிக்கதாக உருவாக்கும்.   

            தமிழக அரசே முதன்மையான போதை வணிகராக இருப்பதைப் பொறுப்புள்ள தமிழர்கள் எதிர்க்க வேண்டும். எனவே, “டாஸ்மாக் மதுக் கடைகளை மூடு” என்ற கோரிக்கையை முன்வைத்து மகளிர் ஆயம் பரப்புரை இயக்கம் நடத்தி மக்களிடம் கையெழுத்துகளை வாங்கியது.

தஞ்சை

            தஞ்சை நகரத்தில் மகளிர் ஆயம் சார்பில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 20.07.2010 அன்று பரப்புரை - கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

            மகளிர் ஆயம் தோழர் காந்திமதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தோழர்கள் மீனா, அமுதா, ச.பரிமளா, கா.சங்கீதா, மோ.பாக்கியம், மு.ரஷ்யா, அனார்கலி, ஜான்சி ராணி (மருதம் ட்ரஸ்ட்), வெ.காஞ் சனா உள்ளிட்ட திரளான மகளிர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் சென்று, மதுக்கடைகளுக்கு எதிராகப் பரப்புரை செய்து கையெழுத்துகள் பெற்றனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் இக்கோரிக்கையை ஆதரித்துக் கையெழுத்து அளித்தனர்.

மதுரை

           சூலை 13, 14, 15, 18, 24, 25 ஆகிய நாட்களில் மதுரை மாநகரத்தில் கரிமேடு, மணிநகரம், செல்லூர், அண்ணா நகர், பரவை, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் மகளிர் ஆயத்தின் பரப்புரை இயக்கம் விரிவாக நடத்தப்பட்டது. மகளிர் ஆய செயல் வீராங்கனைகளும், அவர்களுக்குத் துணையாக த.தே.பொ.க. தோழர்களும் வீடுவீடாகச் சென்று விளக்கமளித்து கையெ ழுத்து இயக்கம் நடத் தினர். சென்ற இடமெல்லாம், பொது மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் இதற்கு சிறப் பான வரவேற்பு இருந்தது. டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரி தமிழக முதல மைச்சருக்கு அனுப்ப வேண் டிய விண் ணப்ப மனுவில் ஏராளமான பெண்கள் ஆர் வத்தோடு கையெழுத் திட்டனர்.

            இப்பரப்புரை - கையெழுத்து இயக்கத்தில் மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா மற்றும் தோழர்கள் இளமதி, பொன்னி, அசன் சியா, ஜெசிந்தா, சித்ரா, லைடா, பரசினா, ஜான்சி, காயத்ரி, கண்ணம்மா உள்ளிட்டோரும், மதுரை பகுதி த.தே.பொ.க. தோழர்களும் பங்கு பெற்றனர். பரப்புரை இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முருகன்குடி

            கடலூர் மாவட்டம், பெண்ணாடம் - முருகன் குடியில் 2010 சூலை 17, 18, 20 ஆகிய நாட்களில் டாஸ்மாக் எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் நடைபெற்றது. முருகன்குடி, துறையூர் ஆகிய கிராமங்களில் மகளிர் ஆயத் தோழர்கள் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை அளித்து விளக்கம் கொடுத்து பரப்புரை செய்தனர். உழைக்கும் உழவர் குடும்பப் பெண்கள் தாங்கள் படும் துன்பத்திற்கு மகளிர் ஆயம் வழியாகவாவது விடிவு வராதா என்ற ஏக்கத்தோடு, பெரும் எண்ணிக்கையில் மனுக்களில் கையெழுத் திட்டனர். பெண்ணாடம் - திட்டக்குடி பகுதிகளில் இப்பரப்புரை இயக்கம் தொடர்ந்து நடக்கவுள்ளது.

            பரப்புரையில் மகளிர் ஆயம் தோழர்கள் ப.எழிலரசி, இரா.அலமேலு, வி.சங்கரிதேவி, இர.கலா, கு.நீலாவதி, இரா.அமராவதி, மு.மலர்க்கொடி ஆகியோர், அப்பகுதி அமைப்பாளர் தோழர் மு.வித்யா தலைமை யில் பங்கேற்றனர்.

பூதலூர் ஒன்றியம்

            26.07.2010 அன்று பூதலூர் ஒன்றியம் புதுக்குடியில் நடந்த பரப்புரை - கையெழுத்து இயக்கத்தில், தோழர்கள் மீனா, சுமதி, மகமூத், செல்வி, இந்திராகாந்தி, அஞ்சலை, சீதா, ஜோதி, வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பகுதிப் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் மனுவில் கையெழுத் திட்டனர்.

            தமிழகத்தின் வேறு பல பகுதிகளிலும், இப்பரப்புரை - கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடந்து வருகிறது. (இவை பற்றிய செய்தி அடுத்த இதழில்). கையெழுத்து பெறப்படும் மனு தொகுக்கப் பட்டு, தமிழக முதலமைச்சருக்கு அளிக்கப் படும்.

Pin It