kuthoosi gurusamy 268யார் யாரோ என்னென்ன பெயரோ வைத்துக் கொள்கிறார்கள்! பெரும்பாலோர் தங்கள் இளமையில் தங்கள் வீட்டுப் பெரியவர்கள் வைத்த பெயர்களைச் சுமந்து திரிகிறார்கள்.

ஒரு சிலர் இச்சுமையை இறக்கி விடுகிறார்கள். மற்றவர்கள் இறக்க முடியாது தவிக்கிறார்கள். எப்படியானாலும் சரி, பெயர் வைப்பதற்கும் அந்தப் பெயரைத் தாங்குகிறவர் களுக்கும் பொருத்தமேயில்லை.

ஒரே ஒரு உதாரணம் போதும், ராமன் என்ற பெயருடையவரே ராமன் கதையைத் தீ வைத்துப் பொசுக்கு, என்கிறார்!

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பெயரில் ஆசை! காங்கிரசுக்காரருக்கு நேரு, காந்தி, போஸ், என்ற பெயர்களில் ஆசை! சு. ம. காரர்களுக்கு இங்கர்சால், கௌதம், லெனின், காரல் மார்க்ஸ், வள்ளுவர், ரஷ்யா, ஸ்டாலின், இராவணன் என்ற பெயர்களில் ஆசை!

சொற்களில் கூட ஒருவருக்குப் பிடிப்பது மற்றொருவருக்குப் பிடிப்பதில்லை. பார்ப்பான் வாயில் ‘தண்ணீர்’ என்றே வராது. ஜலம் என்று தான் சொல்வான். சோறு என்றே சொல்லமாட்டார்கள்! சாதம் என்று தான் கூறுவான். முழுக்கு என்றே கூறமாட்டான். ‘ஸ்நானம்’ என்று தான் சொல்வான்.

காங்கிரஸ்காரர் வாயில், ‘வணக்கம்’ என்பது நுழைவதேயில்லை. அப்பள உலக்கை நுழைவதைவிடக் கடினமாயிருக்கிறது! ‘திரு’ என்று கூறமாட்டார்கள்! ‘தோழன்’ என்று சொல்லமாட்டார்கள்! நாக்கு வெந்த போய்விடும்! ஸ்ரீ அல்லது ஸ்ரீமான் தான் நுழையும்! நமஸ்காரம் அல்லது நாமஸ்தே தான் வரும்!

பள்ளிச் சிறுவர்களிற் பலர், ஆசிரியர் பெயர் கூப்பிடும்போது, “உள்ளேன் அய்யா” என்கிறார்கள்! உண்மையான தமிழ்ப்பிள்ளைகள் இப்படித்தான் சொல்கிறார்கள். உண்மையான தமிழர் ஆசிரியர்கள் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

ஆனால் ஒரு பார்ப்பன ஆசிரியர் முன்பு மாணவர்கள் இப்படிக் கூறிவிட்டால் அவர்கள் காதுக்குள் ஒரு படிக்கட்டெறும்புகளைக் கொட்டியது மாதிரியே இருக்கிறது! துடித்துப் போகிறார்கள்! ‘ப்ரசண்ட் சார்’ என்பதுதான் ஒழுங்காம்! அதையே தமிழில் சொன்னால் பையன்களை முட்டுகிறார்கள்!

ஒரு சில சுடுகாடு நோக்கிகள் தவிர, இன்றைக்கு எல்லாத் தமிழர்களும் தங்கள் திருமண அழைப்புக்களை தூய தமிழிலேயே எழுதுகிறார்கள். சு. ம. காரன் வருவதற்கு முன்பு? அடாடா!

25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த திருமண அழைப்புக்கள். இருந்தால் எடுத்துப் பாருங்கள்! அவ்வளவு தொல்லை எதற்கு? அக்கிரகாரத்துத் திருமண அழைப்பு ஒன்றை இன்றைக்குத்தான் எடுத்துப் பாருங்களேன்! (“ஆரியராவது? திராவிடராவதா?” என்று கேட்பவர், தலையில் இதை அர்ச்சனை செய்கிறேன்!)

என்னைப் பொறுத்த மட்டில் பெயர் வைப்பதிலும், பெயர் மாற்றுவதிலும், கூடுமான வரையில் அதே உச்சரிப்பில் சொல்வதுதான் அழகு-நியாயம் என்று கூறுவேன்!

‘ஆங்கிலம்’ என்ற மொழி உலகிலேயே கிடையாது. அதன் பெயர் இங்கிலீஷ்! ஆம்! இங்கிலீஷ் தான்! தமிழ்ப் பேராசிரியர்களே எதிர்த்தாலும் அதன் பெயர் இங்கிலீஷ் தான்! ஆங்கிலமல்ல!

‘டமில்’ (Tamil) என்ற மொழியே கிடையாது! அதன் பெயர் தமிழ்! ‘டமில்’ என்று கூறுவதைக் கேட்கும்போது நமக்கெல்லாம் மகா எரிச்சலாயிருக்கிறதல்லவா?
எதையும் சுத்தத் தமிழாக்கி அதன் சுவையைக் கெடுக்கத் தேவையில்லை, ‘ஹல்வா’ வை சுத்தத் தமிழாக்கி வெல்லக் கோதுமை கூழ்’ என்று கூறவேண்டிய அவசிய மென்ன? மாஞ்செஸ்டர் என்ற ஊரை மாரியம்மன் புரம் என்று தமிழாக்கினால் எப்படியிருக்கும்?

நான் ‘திருவாடி’ க்குப் போயிருந்தேன் என்று ஒரு இங்கிலீஷ்காரன் கூறினால்! “சீ! சீ! திருவையாறு என்று அழகாகச் சொல்லடா! பொருள் பொதிந்த பெயரடா, அது!” என்று கூறமாட்டோமா? ‘கிராப்’ என்பதைத் தமிழாக்குவதற்காக, முன்குடுமி என்று கற்பனை செய்வானேன்?

மேலும் விரிக்கிற் பெருகுமென அஞ்சி இத்துடன் விடுத்தனம். விளக்குமாறு விரம்பின் மறுவாய்ப்பில் முயல்வாம்!

திருத்துறைப்பூண்டி என்ற ஊர்ப்பெயரை வில்வாரண்யம் என்று மாற்றுவதற்கு மகாதேவ அய்யர் முயல்கிறாராம்!

திருப்பழணம் என்ற ஊரைத் திருப்பயணம் என்று திருத்திக் கூறி, அதற்கு நேரான சமஸ்கிருத மொழி பெயர்ப்பாக லட்சுமியாத்திராபுரி என்றாக்கி, ஒரு ஸ்தல புராணமே எழுதியுள்ளாராம், வெங்கட்ராம அய்யர் என்பர்!

இதிலென்ன, ஆச்சரியமய்யா!

தமிழர் என்ற பெயர்களை ராட்சதர்களாக்கி, அதன் பிறகு சூத்திரன்களாக ஆக்கியிருக்கிறார்களே! இந்த இரண்டுக்கும் நாமென்ன தூக்கா போட்டுக்கொண்டு விட்டோம்?

தீபாவளி கொண்டாடுகிற தமிழனை என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தானே? மானம் என்பதுதான் தமிழனை விட்டுப் போய்ப் பல நூற்றாண்டுகளாகி விட்டதே! நெற்றியிலே ஒவ்வொரு தமிழனும் அவனவன் பெயரை ஹிந்தியில் அழியாதபடி ‘ஆயில்பெண்ட்’டினால் எழுதிக் கொள்ள வேண்டும் என்று நாளைக்கு நேரு சர்க்கார் ஒரு உத்தரவு போடட்டும்! கிட்டதட்ட எல்லாத் தமிழர்களும் உடனே மூன்று வர்ணத்தில் எழுதிக் கொள்வார்களே!

- குத்தூசி குருசாமி (20-6-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It