பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் அதிகரித்துக் கொண்டேயிருக் கின்றன. இதில் பெண்கள் பலர் கொல்லப்படுகின்றனர். மூன்று அகவை, அய்ந்து அகவைச் சிறுமியரும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் கொ டுமையும் நிகழ்கிறது. இந்தச் சூழலில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக 11.10.2017 அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு, “15 அகவை யிலிருந்து 18 அகவைக்குள் உள்ள தன் மனைவியுடன் கணவன் உடலுறவு கொள்வது கற்பழிப்பே ஆகும். திருமணமான - 18 அகவைக்குட்பட்ட ஒரு பெண் இவ்வாறு பாதிக்கப்பட்டால் ஓராண்டிற்குள் புகார் அளிக்கலாம். அக்கணவன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 18 அகவைக்குட்பட்ட ஒரு பெண்ணைத் தன் உடல் மீது எந்த உரிமையும் இல்லாத ஒரு பண்டமாகவோ அல்லது தன் கணவனுடன் உடலுறவு கொள்ள மறுக்கும் உரிமையற்றவளாகவோ நடத்தக்கூடாது. ஒரு இளம்பெண்ணின் மனித உரிமைகள் - அவள் திருமணமானவராகவோ அல்லது ஆகாதவராகவோ இருந்தாலும் மதிக்கப்பட வேண்டும்; ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும்” என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியிருக்கிறது.

2006ஆம் ஆண்டின் குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டம், 2012ஆம் ஆண்டின் பாலியல் வன் புணர்ச்சியிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், சிறுவர் நீதிக்கான சட்டம் (Juvenile Justice Act) ஆகியவற்றில் சிறுவர் ((Child) என்ற சொல்லுக்கு 18 அகவைக்கு உட்பட்டவர் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375இன் 2ஆம் உட்பிரிவு 15 அகவை நிரம்பிய தன் மனைவியுடன் கணவன் உடலுறவு கொள்வது குற்றம் ஆகாது என்று கூறுகிறது. இந்த விதிவிலக்கு 1940இல் ஏற்படுத்தப்பட்டது. இதே 375ஆவது விதியில் 18 அகவைக்குக் கீழ்உள்ள-திருமணமாகாத ஒரு பெண்ணு டன் அவளுடைய ஒப்புதலுடனோ அல்லது ஒப்புதல் இல்லாமலோ உடல் உறவு கொள்வது கற்பழிப்புக் குற்ற மாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரே சட்டத்துக்குள் உள்ள முரண்பாடு இது.

இந்த முரண்பாட்டைக் களையுமாறு “சுதந்தரச் சிந்தனை” ((Independent Thought) என்கிற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத் தது. அதனுடைய விண்ணப்பத்தில், “இந்திய தண்டனைச் சட்டம் 375ஆவது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள விதி விலக்கு திருமணமான 18 அகவைக்குட்பட்ட சிறுமி யரின் வாழ்க்கை மற்றும் சமத்துவமான அடிப்படை உரிமைக்கு எதிராக இருக்கிறது. இது குழந்தைகள் திருமணத் தடைச் சட்டத்துக்கு எதிராக இருப்பது மட்டு மின்றி, குழந்தைகள் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே இந்திய தண் டனைச் சட்டம் பிரிவு 375இன் 2ஆவது பிரிவில், திருமணமானதைக் காரணம் காட்டி 15 அகவை முதல் 18 அகவைக்கு உட்பட்ட சிறுமியருடன் கணவன் மார்கள் உடலுறவு கொள்ள அனுமதிக்கும் சலுகையை இரத்துச் செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தது. குழந்தைகள் நலனுக்காக நோபல் பரிசு பெற்ற கயிலாஷ் சத்தியார்த்தியும் அவர் நடத்தும் தொண்டு நிறவனத்தின் சார்பில் இதேபோன்றதோர் பொதுநல வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார்.

இந்த வழக்கில் 11.10.2017 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375இன் 2ஆம் உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள சலுகை இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 14, 15 மற்றும் 21 ஆகியவற்றுக்கு எதிரானது. நடுவண் அரசும், மாநில அரசுகளும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்றுவரும் குழந்தைகள் திருமணங்களைத் தடை செய்யும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினர்.

இந்த வழக்கில் மன்மோகன் சிங் தலைமையி லிருந்த நடுவண் அரசு இந்திய தண்டனைச் சட்டம் 375இல் அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கை ஆதரித்தது. மோடி தலைமையிலான நடுவண் அரசும் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், “பெண்களின் திருமண அகவை 18 என்பது உண்மை தான். 2006ஆம் ஆண்டின் குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டத்தின்படி இதை மீறுவோர் தண்டிக்கப்படு வார்கள். அதேசமயம் கிராமப்புறங்களில்தான் பெரும் பான்மை மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மரபுகள், பழக்கவழக்கங்களின்படி குழந்தைத் திருமணங் களைச் செய்கின்றனர். தேசிய குடும்ப நலவாழ்வு அமைப்பு நடத்திய மூன்றாவது ஆய்வில், 18-29 அகவையில் உள்ள பெண்களில் 46 விழுக்காட்டினர் 18 அகவைக்கு முன்பே திருமணம் செய்துகொண்ட வர்கள் என்றும், தற்போது திருமணமாகி 18 வயதுக் குள் உள்ள சிறுமியர் எண்ணிக்கை 230 இலட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே 15-18 அகவையில் உள்ள இளம் பெண்களைத் திருமணம் செய்து கொண்டி ருக்கும் கணவர்கள் மீது கற்பழிப்புக் குற்ற நடவடிக்கை எடுப்பது நடைமுறையில் இயலாத ஒன்றாகும்” என்று கருத்துரைத்தது (The Hindu, 12.10.2017).

நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் - அதாவது இந்த 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நடைபெற்ற திருமணங்களில் மணப்பெண்களில் பாதிப்பேர் 18 அகவைக்கு உட்பட்டவர்களாக இருந்துள்ளனர்.

பெண்களின் உரிமையைப் பறிக்கும் இக்கொடிய நிலை 21ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவில் நீடிப்பது ஏன்? இந்துமத சாத்திரங்களிலேயே தலையாயதாகக் கருதப்படும் மனுஸ்மிருதியில், ஒரு பெண் தன் குழந் தைப் பருவத்தில் தந்தைக்கும், திருமணம் ஆனபின் கணவனுக்கும், முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது இன்றளவும் ஆண்களின் சிந்தனையில் குடிகொண்டிருப்பதே இதற்குக் காரணமாகும். பெண் என்பவள் எந்த அகவையிலும், எந்த நிலையிலும் சுதந்தரமாகச் சிந்திக்கவோ, செயல் படவோ கூடாது; ஆணுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று இந்துமத சாத்திரங்களும், இதிகாசங் களும், புராணக் கதைகளும் வலியுறுத்துகின்றன. இந்து மதம் மட்டுமின்றி, கிறித்துவ, இசுலாமிய மதங் களும் பெண்ணுரிமையை மறுப்பதுடன், பெண் என் பவள் ஆண்களை மயக்கித் தன் காமப்பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தணியாத தீய வேட்கை கொண்டவள்; பெண் நம்பத்தக்கவள் அல்லள் என்று கூறுகின்றன.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அவர்களுக்கு கல்வியும் அதிகாரமும் மறுக்கப் பட்டமையே ஆகும் என்று அம்பேத்கர் சொல்லுவார். பெண்களுக்கு வரலாறு நெடுகிலும் கல்வியும் அதிகாரமும் மறுக்கப்பட்டதுடன் சொத்துரிமை முற்றிலுமாக மறுக்கப் பட்டதே அவர்களின் அடிமைத்தனத்தின் ஆணிவேராகும். இதுகுறித்து பெரியார், “திருமண முறை வந்தது எப் போது? உடைமை எல்லாம் ஆணுக்குத்தான் என்கிற நிலை ஏற்பட்ட பிறகுதான் இத்திருமண முறை வந் திருக்க வேண்டும். ஆணுக்குத்தான் சுதந்தரம்; ஆணுக் குத்தான் சொத்து; ஆணுக்குத்தான் வீடும் வாழ்க்கையும் என்ற சம்பிரதாயம் ஏற்பட்ட பிறகு இதற்கேற்பத்தான் சமுதாயத்தையும் அமைக்க வேண்டியதாயிற்று” என்று சென்னை விக்டோரியா மண்டபத்தில் 30.9.1948இல் நடந்த திருமண நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் (விடுதலை 11.10.1948). பொதுவுடைமைத் தத்துவ ஆசான்களில் ஒருவரான பிரெடரிக் எங்கெல்சு எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் சொத்துரிமை ஆணுக்குத்தான் என்று ஏற்பட்ட பிறகுதான் திருமண முறையும், பெண்ணடிமைத் தனமும் ஏற்பட்டன என்று விரிவாக விளக்கி இருக்கிறார்.

எனவே பெண்கள் கல்வி அறிவு பெற்று, சுதந்தர மாகச் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே திருமணம் செய்துவிட்டால்தான் ஆணுக்கு அடங்கியவளாக நடப் பார்கள் என்ற எண்ணத்தால்தான் குழந்தைத் திரு மணங்கள் செய்யப்படுகின்றன.

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் 1929 செப்டம்பர் 28 அன்று பெண்களுக்கு 14 அகவை நிரம்பிய பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற சட்டம் இயற்றப்பட்டது. பார்ப்பனர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். பெரியார், சாரதாச் சட்டம் எனப்படும் இதை வரவேற்றும், எதிர்க்கின்ற பார்ப்பனர்களைக் கண்டித்தும் 23.9.1929 நாளிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் தலையங்கம் எழுதினார்.

அதில் பெரியார், “இது விஷயமாய் இந்தியச் சட்ட சபையில் நடந்த முழு விவரத்தையும் எழுத நமக்குப் போதிய இடமில்லாவிட்டாலும், அம்மசோதாவிற்கு விரோத மாய்ப் பேசிய தமிழ்நாட்டுப் பிரதிநிதியும், இந்துமத வருணாசிரமப் பிரதிநிதியும் ஆகிய எம்.கே.ஆச்சாரியார் அவர்களின் போக்கைச் சற்றுக் கவனிப்போம். திரு. ஆச்சாரியார் அவர்கள் இச்சட்டத்தை எதிர்த்துப் பேசுகை யில், “பாலிய விவாகமில்லாவிட்டால் உண்மையான கற்பு என்பது சாத்தியமில்லை” என்றும் “பெண்களின் வாழ்க்கை நாசமாகிவிடும்” என்றும் “குடும்ப வாழ்க்கை துக்கமயமாகிச் சதா ஆபத்திற்குள்ளாகி இருக்கும்” என்றும் “புருஷர்களுக்குச் சிறைத் தண்டனை அளித்து விடுவதால் பெண்கள் நடத்தையும் அதிகக் கேவலமாக மாறிவிடும்” என்றும் “பாலிய விவாகம் இருந்தாலொழிய உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்” என்றும் பேசி இருக்கின்றதாகத் தெரிய வருகிறது. இவைகள் ‘சுதேசமித்திரன்’, ‘தமிழ்நாடு’ பத்திரிகை களில் காணப்படுவதுடன், ‘சுதேசமித்திரன்’ நிருபர் திரு. ஆச்சாரியாரை ஆதரித்தும் புகழ்ந்தும் எழுதி யிருக்கிறார்” என்று எழுதியுள்ளார்.

பெரியார் குறிப்பிட்டுள்ள எம்.கே. ஆச்சாரியாரின் மனநிலையிலிருந்து மாற முடியாதவர்களே இன்னும் குழந்தைத் திருமணங்களை நடத்துகின்றனர். குழந்தைத் திருமணங்கள் இந்தி மொழி பேசுகின்ற - இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கின்ற வடஇந்திய மாநிலங்களிலேயே அதிக அளவில் நடக்கின்றன. இதில் இராஜஸ்தான் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. எனவே இம்மாநிலங்களில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் விழுக்காடு இந்திய அளவிலான சராசரி யைவிட மிகவும் குறைவாக இருக்கிறது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பெண்களில் 100க்கு 40 பேருக்குக் கையெழுத்துக்கூடப் போடத் தெரியாது என்பது, சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டு களுக்குப் பிறகும் பெண்களை எந்த அளவுக்கு அடிமை யாக வைத்திருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.

ஒரு பெண் தான் விரும்புகின்ற உயர்கல்வியைப் பெறவும் தொழில்களைப் பயிலவும், அதன்மூலம் தனக்கான வருவாய் ஈட்டவும், தான் விரும்புகின்ற ஆணை வாழ்க்கைத் துணையாகப் பெறவும் உரிமை பெற்றவராக இருக்கும் போதுதான் உண்மையான பெண்ணுரிமை மலரும். அத்துடன் ஆணுக்கு நிகராகச் சொத்துரிமை பெறும் போதுதான் பெண்ணுரிமை வலிமையுடன் வளரும். இந்த நிலைகளைப் பெண்கள் அடைவதற்குக் குழந்தைத் திருமணம் என்பது பெருந் தடையாக இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன்றம் 15-18 அகவையில் உள்ள மனைவி யுடன் கணவன் உடலுறவு கொள்வது கற்பழிப்புக் குற்ற மாகும் என்கிற அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

சாரதாச் சட்டம் பிரித்தானிய ஆட்சியில் ஏட்டள விலேயே நின்றுவிட்டது. சுதந்தர இந்தியாவில் எழுபது ஆண்டுகளில் குழந்தைத் திருமணம் தொடர்பாக மிகக் குறைந்த அளவிலேயே வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றில் தண்டனை விதிக்கப்பட்டவையோ மிக மிகக் குறைவு. ஆனால் குழந்தைத் திருமணங்கள் பெரும் எண்ணிக்கையில் நடந்து வருகின்றன.

15-18 வயதில் திருமணமான பெண்கள் தற்போது 230 இலட்சம் பேர் இருப்பதாக நடுவண் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 230 இலட்சம் பெண்களின் கணவன்கள் உடனே கைது செய்யப்படப் போவதில்லை. அப்பெண் களும் வழக்குத் தொடுக்கப் போவதில்லை. 18 அகவைக்கு உட்பட்ட பெண்களுக்குத் திருமணம் செய்வதை இனி வரும் காலங்களில் தடுப்பதற்கான எச்சரிக்கையாக வும் பெண்களின் உரிமையை மீட்டெடுப்பதற்குமான ஒரு ஆயுதமாகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு விளங்கும்.

Pin It