1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டன.

தமிழ்நாடு தமிழருக்கே! - V

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் தலைப்பில் இதற்கு முன் 4 தலையங்கம் எழுதியிருக்கிறோம். இது 5வது தலையங்கமாகும். இதில் `ஆரியர் சமயம்’ என்பது பற்றி எழுதுவதாக முன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி அதைப்பற்றிச் சிறிது எழுதுவோம்.

ஏன் எனில் ஆரியர்கள் இன்று `இந்திய’ நாட்டை எடுத்துக் கொண்டாலும் அல்லது திராவிட நாட்டை எடுத்துக் கொண்டாலும் 100க்கு மூன்று பேர்களாக ஜனத்தொகையில் இருக்கும் ஒரு வெகு சிறுபான்மைக் கூட்டத்தாராகிய அவர்கள் (ஆரியர்) எப்படி மற்ற உண்மையான 100க்கு 97 பேரான பெரும்பான்மை சமூகத் தாரையும் பெரும்பழம் வீரம் பொருந்திய அவர்களது நாட்டையும் சிறுபான்மையாக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால், ஆரியர்களது சமயமும் சமயத்தின் மூலம் ஒற்றுமையும் தான் அவர்களுக்கு அதற்கு வேண்டிய சௌகரியத் தைக் கொடுக்க ஆதாரமாய் இருந்து வந்திருக்கிறது என்பதுடன் இன்றும் இருந்து வருகிறது. ஆதலால் அதை விளக்க ஆசைப்படுகிறோம்.

ஆரியருடைய சமயம் என்ன?

ஆரியருக்கு சமயம் என்பதாக ஒரு குறிப்பிட்ட கொள்கை கொண்ட சாதனம் ஒன்றுமில்லை யென்பது யாவரும் அறிந்ததேயாகும் என்பது புறமிருக்க, “ஆரிய சமயம் இந்துமதம்” என்று சொல்லப்படு மானாலும், இந்து மதம் என்பதற்கும் ஒரு குறிப்பிட்ட கிளிப்த்தமான கொள்கையோ ஆதாரமோ கிடையாது என்பதும் ஆராய்ச்சியாளர் கண்ட முடிவாகும். ஆரியத் தந்திரசாலிகளும் ஆரியரல்லாதார் மீது துவேஷம் கொண்டவர்களும் அநாரியர்களை இழிவுபடுத்தியும், அடக்கியும் ஏமாற்றியும் கீழ்மைப்படுத்துவதற்கு ஆதார மாக அவ்வப்போது சொல்லி வந்ததையும், எழுதி வந்ததையும், தொகுத்து கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடி திருத்தியும், சில விஷயங்களை எடுத்தும், சில விசயங்களைப் புகுத்தியும் அமைத்துக் கொண்டிருக்கும்  ஆதாரங்கள் தான் இன்று ஆரியர் களின் சமய ஆதாரங்களாய் இருக்கின்றன. அவை பெரிதும் வேதம், சாஸ்திரம், சுருதி, ஸ்மிருதி, புராணம் இதிகாசம் முதலிய பெயர்களோடு இருந்தாலும், அவைகளில் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமலும், ஒன்றுக் கொன்று முரண்பட்டதாயும் ஆபாசங்களும் அசம்பா விதங்களும் அசாத்தியங்களும் நிறைந்ததாயும், புத் திக்கும் ஆராய்ச்சிக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாத தாயுமே பெரிதும் இருந்து வருவதைக் காணலாம்.

இந்தக் காரணத்தாலேயேதான் ஆரியர்கள் தவிர மற்றவர்கள் அவைகளைப் படிக்கக்கூடாது என்றும், படித்தால் கொடிய தண்டனைகள் விதிக்க வேண்டும் என்றும், அவ்வாதாரங்களை எவனாவது படித்துவிட்டோ, கேட்டுவிட்டோ விவகாரம் தர்க்கம் செய்வானானாலும், நம்பாவிட்டாலும் அவனை ‘நாஸ்திகன்’ என்று சொல்லி அரசன் தண்டித்து சமுதாயத்தை விட்டும், நாட்டை விட்டும் விரட்டி அடிக்கவேண்டும் என்றும் எழுதி வைத்துக்கொண்டார்கள். இப்படிப்பட்ட நிபந்தனை களும், தண்டனைகளும் அதை நிறைவேற்றத்தக்க அரசர்களும் வெகு காலம்வரை இருந்து வந்ததா லேயே அப்படிப்பட்ட ஆபாச அக்கிரம அதி விவேகமான அவர்களது சமய ஆதாரங்கள் திராவிட மக்களுக்குள் பரப்பப்படவும், அதனால் ஆரியர்களுக்கு மேன்மையும், செல்வாக்கும் பெருகி நிலைத்து வரவும் இடமேற்பட்ட துடன், ஆரியரல்லாத மக்கள் எவ்வளவு பண்டிதர்களா னாலும் அந்த ஆரியர் சமய ஆதாரங்களைப் பிரசாரம் செய்வதனால் மாத்திரமே வாழ முடியும் படியாகவும் இருந்து வந்திருக்கிறது.

ஆரிய சமய ஆதாரம்

உண்மையில் ஆரியர்களின் சமய ஆதாரங்களில் பெரும்பாலும் எதைப்பார்த்தாலும் ஒரு மனிதனால் சொல்லப்பட்டதாகவோ, உற்பத்தி செய்யப்பட்டதாகவோ காண்பது முடியாததாயிருந்தும், ஒவ்வொரு ஆதாரத் துக்கும் அதன் கர்த்தா தெய்வத் தன்மை பொருந்திய வனாகவும், அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமில்லாத அற்புத சக்தி பெற்றவனாகவும் கற்பிக்கப்பட்டு இருப்பான்.

ஏனெனில் அப்படிக் கற்பிக்கப்பட்டதால்தான் அந்த ஆபாசப் புளுகுக் களஞ்சியங்கள் நிலை நிற்க முடியும். அப்படிக்கில்லாமல் சாதாரண மனிதனால் செய்யப்பட்ட தென்றால் “அது அவனுக்கு எப்படித் தெரியும், அது எப்படி முடியும்?” “அத்தனை நாட்களாய் அவன் எப்படி இருந்திருக்க முடியும்?” என்பன போன்ற கேள்விகள் பிறக்குமே என்கின்ற எண்ணத்தினால், “எழுதியவனும் சொன்னவனும் தெய்வத்தன்மை பொருந்தியவனானதால் அவனால் எழுதமுடிந்தது. ஆதலால் அதைப்பற்றி யாரும் தர்க்கிக்கப்படாது” என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளச் சொல்லலாம். அதிலும் திருப்திப்படுவதற்கு முடியாத கஷ்டம் ஏற்படு கிற விஷயங்களாய் இருந்தால் “கடவுளே சொன்னார், அசரீரியாய்ப் பேசினார்” என்று தப்பித்துக் கொள்ள வசதியாயிருக்கும். ஆதலால்தான் ஆரிய சமய ஆதாரங் கள் முழுவதும் மனித சக்திக்கு மேம்பட்டவர்களால் சொல்லப்பட்டதாகவே அவற்றில் சொல்லப்பட்டு இருக்கும்.

புத்த மதமோ, கிறிஸ்துவ மதமோ, இஸ்லாம் மதமோ சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அந்தப்படி இருக் காது என்பதோடு, கூடுமானவரை மானுஷீகத்திற்கு உட்பட்டதாகவே இருக்கும். ஒன்று இரண்டு விஷயங் களுக்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டிருந்தாலும் அவை விவரிக்கக்கூடாது என்கின்ற நிர்ப்பந்தமிருக்காது.

குறிப்பாக இஸ்லாத்தில் முகமது நபி அவர்கள் சம்பந்தப்பட்ட மட்டில் அவர் சொன்னவற்றிலோ, அவரது செய்கையிலோ மனிதத் தன்மைக்கு மீறிய காரியம் ஒன்றும் இருந்ததாகக் காணமுடியாது. குரான் வாக்கை கடவுள் உத்திரவால் தான் வெளியிடுவதாகச் சொல்லி இருக்கிறார். அது ஒரு சாதாரண விசயம். ஏனெனில், ஒரு மனிதன்தான் செய்கிற, பேசுகிற, நினைக்கிற காரியம் எல்லாம் கடவுள் செயலால்தான் என்று கருதுவது ஆஸ்திகர்களுக்கு சர்வ சாதாரண மான காரியமேயாகும். ஆதலால் நபி பெருமான் தான் சொல்லும் விஷயங்களைக் கடவுள் அருளால் சொல்லுகிறேன் என்று சொன்னதில் அற்புதம் ஒன்றும் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. மற்றபடியும் அவர் எப்போதும் தன்னை மனுஷத்தன்மைக்கு மேம்பட்டவர் என்று சொல்லிக் கொண்டதாகவும் தெரியவில்லை. ஆரிய சமய ஆதாரம் பூராவுமே மனுஷத்தன்மைக்கு மேம்பட்டதாகவே காணப்படும்.

புராண இதிகாசங்கள்

இவை தவிர ஆரியர்களுக்கு அவர்களது வாழ்வுக்கு வேத சாஸ்திர, ஸ்மிருதி சமய ஆதாரமென்று சொல்லிக் கொண்டாலும் அவர்களது புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவைகளும் இருந்து வருகின்றன. இப்புராணங் களைத் தான் தங்களது சமய ஆதாரங்களாகக் கருதி ஆரியர்கள் நடந்து வருகிறார்கள்.

ஆரியப் புராண இதிகாசங்கள் ஒரு பெரும் சமூகத் தாரை சிறு சமூகத்தார் எப்படி ஏமாற்றிப் பிரித்து, சிறுபான்மையோராக்கித் தாங்கள் ஆதிக்கம் செலுத்துவது என்பதற்கு ஏற்ற வழிகளேயாகும். அதைப் பின்பற்றி நடந்தே தான் இன்று ஆரியர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

எப்படி எனில் அப்புராண இதிகாசங்களில் ஒழுக்கம் இருக்காது. மானாபிமானம் இருக்காது. நாணயம் இருக்காது. எவ்வளவு இழிவான காரியத்தையும் செய்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் மார்க்கங்கள் இருக் கும், “பத்தியமே” கிடையாது. ஆனால் அவைகள் மகா நீதியாகவும் நேர்மையாகவும் உத்தமோத்தம ஒழுக்கமாகவும் பாசாங்கு செய்துகொள்ளும்.

உதாரணமாக ஆரியர்களின் காப்புக் கடவுளான அல்லது தலைவரான இந்திரனை எடுத்துக் கொள்வோம். அவனிடத்தில் எங்காவது, எப்பொழுதாவது, ஏதாவது ஒரு ஒழுக்கமோ, நாணயமோ இருந்ததாகச் சொல்ல முடியுமா? மற்றும் அந்தப் பதவிக்கு வர முயற்சித்தவர் களை எவ்வளவு அக்கிரமமான இழிவான காரியங்கள் செய்து தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது! வெளிப்படை யாய்ச் சொல்லவேண்டுமானால் பெண்டுகளைவிட்டுக் காமமூட்டி ஏமாற்றச் செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் எந்த ஆரியராவது வெட்கப்படுகிறார் களா? அதற்குப் பதிலாகப் பண்டிகை அல்லவா கொண்டாடுகிறார்கள்.

ஆகவே, ஆரியர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ள இப்பேர்ப்பட்ட மற்றும் எப்படிப் பட்டவுமான காரியங்களைக் கையாடலாம் என்பதற்கு அவர்களது கடவுள்களும், அக்கடவுள்களின் கீழ்ப்பட்ட கீழ்த்தர வேலை உத்தியோகம் 49995-ல் ஆரியர் களுக்கு 1513 போக, பாக்கி, 48482 அடிமை சேவக உத்தியோகங்களுக்கு திராவிடர்கள் ஆளாக இருக்கவும், மேல்தர உத்தியோகம் அதாவது மாதம் 1000, 5000 சம்பளம் பெறும் அதிகார நிர்வாக உத்தியோகம் 1000-ல் 600 உத்தியோகம் ஆரியருக்குக் கிடைத்திருக்கவும் முடியுமா? இவ்வுத்தியோகங்களைக் கொண்டு ஆரியர் வகுப்புக்கு ஆதரவு காட்டி ஆரியர்கள் அத்தனை பேரும் கீழ் நிலையிலும் ஆரியருக்கு அடிமையாகவும் இருந்திருக்க முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்கும் படி வேண்டிக் கொண்டு முடிக்கிறோம்.

விடுதலை : 25-11-1939

(தொடரும்)

Pin It