‘இலவசங்கள்’ குறித்து திரு புகழ் காந்தி ஓர் அருமையான கட்டுரையை ஆங்கில ‘இந்து’ (ஆக.20, 2022) வில் எழுதியிருக்கிறார். அதில் வரும் சில முக்கியமான விவரங்கள்:

இந்தியாவின் மொத்த சொத்தில் 22ரூஐ மேல் தட்டில் இருக்கும் 1ரூவைத்திருக்கிறார்கள். அதே போல் 57% சொத்துக்களை மேலடுக்கில் இருக்கும் 10% பேர் வைத்திருக்கின்றனர். உயர் ஜாதிக் குடும்பங்கள் தேசிய வருமானத்தின் சராசரியை விட 47% அதிகம் ஈட்டுகிறார்கள். பெரும் தொழில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களில் (Board Members) 93% உயர் ஜாதியினர். நடுத்தர, சிறு, குறு தொழில் நிறுவனங்களில் 63% நிர்வாகிகள் உயர் ஜாதியினர்.

தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் வரிச் சலுகைகள் 5 லட்சம் கோடி. இதனால் அரசுக்கு சென்ற வருடம் இழப்பு 1.84 லட்சம் கோடி. அடுத்த வருடம் இது ஒரு லட்சம் கோடியாக இருக்கும். இதன் பலன் பெரும்பாலும் உயர் ஜாதியினருக்குத்தான் (பார்ப்பனருக்குத்தான்). சரி, தமிழகத்தில் வழங்கப் படும் மூன்று இலவசங்களுக்கான செலவு என்ன?

கலர் டிவி 750 கோடி; பெண்களுக்கான இலவச பஸ் பயணம் 1250 கோடி; மதிய உணவுத் திட்டம் 1823 கோடி; மொத்தம்: 3823 கோடி. ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பலன்கள் பெரும்பாலும் ஜாதி, வர்க்க அடுக்கில் கீழ் நிலையில் இருப்பவர்களுக்குத்தான்.

இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையினால் அதிகம் பலனடைந்தவர்கள் (பார்ப்பனர்) உயர் ஜாதியினர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே சாதியா, வர்க்கமா என்று மயிர் பிளக்கும் வாதங்களை நடத்துபவர்கள் வெறும் கையால் முழம் போடாமல் இத்தகைய உண்மைகளை வைத்துப் பேசினால் தெளிவு கிடைக்கும். மேற்கோள்களை ஃபார்முலா போல் ஒப்பித்துக் கொண்டே இருந்தால் மக்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஸ்தூலமான நிலைகளை ஸ்தூலமாக ஆய்வு செய்யுங்கள் என்று லெனின் சொன்னது இதைத்தான்.

வடநாட்டு ஊடகத்தை வறுத்தெடுத்தார், தமிழக நிதி அமைச்சர்

வடநாட்டு ஊடகத்தை வறுத்து எடுத்திருக்கிறார், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாட்டில் “இலவசங்கள்” என்ற பெயரில் மக்கள் நலத் திட்டங்கள் வழங்கப்படுவதை இப்போது விவாதப் பொருளாக்கியுள்ளனர். பிரதமர் மோடி இலவசங்கள் வழங்கப்படக் கூடாது என்ற கருத்தை அறிவித்திருக்கிறார்.

இது குறித்து நிதி அமைச்சரிடம் கேட்ட போது, “எங்களுக்கு அறிவுரை கூறுவதற்கு இவர்கள் என்ன பொருளாதார நிபுணர்களா ? பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றவர்களா ? பி.எச்.டி பெற்றவர்களா ? எங்கள் பொருளாதாரத்தை நிர்ணயித்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு அறிவுரை கூற உலகத்தரம் வாய்ந்த பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய ஆட்சி ஒன்றிய அரசிற்கு ஒரு ரூபாய் தருகிறது என்றால், ஒன்றிய ஆட்சி எங்களுக்கு 35 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. அதை வைத்துக் கொண்டுதான் நாங்கள் எங்களது நிதி நிலமை கட்டமைப்புகளை நாங்கள் சரி செய்து, மக்களுக்குத் தேவையான இலவசங்களை வழங்கி, பண வீக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். நான் கடவுள் நம்பிக்கையாளன் தான். அதற்காக மோடி எனக்கு கடவுள் அல்ல. ஜெயலலிதா தொடங்கி வைத்த இலவச இரு சக்கர வாகனம் விநியோகத்திற்கு மோடி வந்து அதை வழங்கியது ஏன் ? அப்போது அது இலவசமாகத் தெரியவில்லையா ?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு அசர வைத்திருக்கிறார் தமிழ்நாட்டினுடைய நிதி அமைச்சர். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதே நேரத்தில் இந்த இந்து ஆங்கில நாளேட்டில், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த புகழ் காந்தியினுடைய கட்டுரை ஒன்றும் விரிவாக வந்திருக்கிறது. அந்தக் கட்டுரை ஏராளமான தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. பெரும் தொழிலதிபர்களுக்கு வரிச் சலுகை, கடன் தள்ளுபடி இவைகளை வழங்குவதன் மூலம் கீழ் மட்டத்தில் இருக்கிற மக்களுக்கு பெரும் பயன்கள் கிடைக்கும், வேலை வாய்ப்புகள் பெருகும் என்ற கருத்து கூறப்பட்டு வருகிறது. இதை வன்மை யாக மறுக்கிறது இந்தக் கட்டுரை.

தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும் இந்த பதிலடிகளை வடநாட்டுக்காரர்கள், வடநாட்டு மோடிகள், வடநாட்டு பார்ப்பனர்கள், வடநாட்டு ஊடகங்கள் சந்தித்தாக வேண்டும். தமிழ்நாடு சுயமரி யாதையுடன் தலை நிமிர்ந்திருக்கிறது என்பதை வடநாட்டுக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It