இந்து என்ற பெயரில் பிறர் மீது தலைமையும், புனிதம் கொண்டவனாகவும் தன்னை காண்பிப்பதற்கு ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்களல்லவா? அதைத் தான் நாம் மறுக்கின்றோம். வள்ளலார், அந்த பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கு வதற்காகவும், அதுமட்டுமில்லாமல் இந்த மூடத்தனங்கள் நிறைந்துள்ள சடங்குகளை தவிர்த்து ஒரு தெய்வ நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் ஒளி வழிபாட்டைக் கொண்டு வந்தார். ஒளி வழிபாடு என்றால் அறிவு வழிபாடு என்று பொருள். ஒளி அறிவைக் குறிக்கும். ஒளி உள்ள இடத்தில் இருள் விலகும். அறிவூட்டுவது ஒளி. இதைத்தான் வள்ளலார் கொண்டு வந்தார். அக்கினி வழிபாடு அல்ல. அது பிராமணர்க்கு உரியது, அழிவுக்குரியது. ஒளி வழிபாடு, அறிவு வழிபாடு; வள்ளலார் காட்டிய வழிபாடு. அப்படியென்றால் இந்த சிலை, கோவில் அனைத்தையும் கடந்து அவர் வருகிறாரல்லவா? அதனடிப்படியில் மனிதர் மீது கருணை, ஜீவகாருண்யம் என்கிறார். மதம் என்பது உன் கடவுளைப் பற்றி கவலைப்படுவதல்ல; உன் சக மனிதனைப் பற்றிக் கவலைப்படுவது என்று கூறினார் வள்ளலார். அந்த வள்ளலார் தான் வைதீகத்தின் எதிரி.
நாம் இன்று பல பெயர்களில் வைதீகத்திற்கு துணை போய் கொண்டு இருக்கிறோம். சடங்குகள் அனைத்துமே நம்மை மடமைக்கு கொண்டு செல்பவை. சடங்குகளிலிருந்து மீட்க வேண்டும். நம்பிக்கை அறிவு வழி பட்டதாக இருக்க வேண்டும். எந்த ஒரு நம்பிக்கையும், ஒரு தனி மனிதன் அல்லது ஒரு சமூகத்தின் சுயமரியாதையை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். வைதீகம் சுயமரியாதையை மறுக்கின்றது. நாம் பேசுகிற பகுத்தறிவு வாதம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும், சமூகத்திற்கும் சுயமரியாதையை, மாண்பை, அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. வைதீகத்தை எதிர்த்த வள்ளலாரும் மனிதனை மய்யப்படுத்தினார்; பெரியார் எதிர்க்கின்ற போதும் மனிதனை மய்யப் படுத்தினார். நாம் மனிதர் மீது அக்கறை கொண் டவர்கள். மனிதத்தின் மீது அக்கறை கொண்டவர்கள். வெறும் மொழிப் பற்றின் காரணமாக நாம் வள்ளலாரைப் போற்றவில்லை. தமிழால் நாம் அழிந்ததும் உண்டு. இதே தமிழை வைத்துக் கொண்டு நம்மை சிதைத்தவர்களும் உண்டு. மொழி உண்டு; ஆனால் மொழி சொல்வதையெல்லாம் நாம் ஏற்க வேண்டும் என்பது பொருந்தாது. ஆகவே தான் நாம் கூறுகிறோம், இந்த கோவில்கள் வந்தது பேரரசு காலத்தில்; ஆகமங்கள் உருவாக்கப்பட்டது பேரரசு காலத்தில்.
பேரரசுகள் காலத்திற்கு முன்பு, ‘செயல்முறைகள்’ வழிபாட்டிற்கு தடையாக இருந்தது இல்லை. கடவுளுக்கும், கடவுளை வேண்டி நிற்பவனுக்கும் மொழித் தடை கிடையாது, சடங்குத் தடை கிடையாது. சாதாரண நிலையில் இருந்தது. இவை நிறுவன மயப்படுத்தப்படும் போது, நிறுவனத்தின் மூலம் பயன் பெறுபவர்கள் இருக்கின்றார்கள். பேராசிரியர் அரசு பேசும் போது, 'கிறிஸ்துவ மெஷினரிகளின் ஜீவ காருண்யத்தைப் பற்றி' கூறினார். வள்ளலார், “கருணையில்லா அரசு கடுகி ஒழிக” என்றார். ஆனால் எந்த அரசர் காலத்திலாவது கருணை இருந்திருக்கிறதா?
பல்லவர் காலத்தில், இரண்டாம் நரசிம்மவர்மன். அவன் தான் இங்கே பெரும்பாலான கைலாசநாதர் கோவில்களைக் கட்டியதாக கூறுவார்கள். அவன் காலத்தில் பிரம்மதேயங்கள் நிறைய கொடுக்கப் பட்டது. நிறைய கோவில்கள் இருந்தன. அந்த கால கட்டத்தில் பெரிய பஞ்சம் ஏற்பட்டது, பஞ்சத்தில் உழன்று மக்கள் இறந்து மடிந்து கொண்டிருந்தார்கள். பஞ்சத்தில் மடிந்த மக்களுக்காக அந்த மன்னன் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. அப்போது மக்களுக்காக கஞ்சித் தொட்டி திறந்தவர்கள் பவுத்தத் துறவிகள். பவுத்த சங்கங்கள் அந்தப் பணியை செய்தன. இந்தியாவில் பெரும்பாலும் அப்போது அப்படித்தான் இருந்தன. நமது மக்களின் கல்விக்கு எந்த மானியமும் தராதது தமிழ் அரசுகள் தானே? இராஜ இராஜ சோழன் என்றாலும் இராஜேந்திர சோழன் என்றாலும் எங்க ஜாதிக்காரர் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். சரி இந்த மன்னர்கள் தமிழுக்காக, தமிழ் கல்விக் காக என்ன செய்தார்கள்? என்று கேட்டால் பதிலை கூற மறுக்கிறார்கள். “தமிழுக்கும் செய்தார்கள்” என்று பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள்.
மனுநீதியைப் பற்றி கவலைப்பட்ட பேரரசுகள் திருக்குறளை கண்டு கொள்ளவில்லை. இந்த மக்களாட்சியையாவது உறுதி செய்ய வேண்டுமானால், நம்மை எதிர்நோக்கியுள்ள இந்துத்துவ அச்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வைதீக எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கே புதியது கிடையாது. வைதீகம் என்றால் பிராமணீய தத்துவ மேலாண்மை, படிநிலை சமூகம் என்பவைகளாகும். முதலில் அந்த வைதீகத்தை எதிர்த்தவர்கள் சிரமணர்கள், புத்தர், மகாவீரர் போன்றவர்கள். என்று வைதீகம் தோன்றியதோ அன்றே வைதீகம் எதிர்க்கப்படுகின்றது. இது வரலாற்றில் மறைக்கப்படு கின்றது. ஆனால், அரசன், புரோகிதன் கூட்டு உறவு மூலமாக வைதீகம் தன்னை தக்கவைத்துக் கொண்டது. தமிழ்நாட்டில் வள்ளுவர் யாகங்களை புறம் தள்ளி எழுதியிருக்கிறார். யாக மறுப்பு சொல்ல வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. சில மன்னர்கள், வான வரம்பன், இராஜ சூயம்வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி இவர்களெல்லாம் யாகம் செய்தார்கள். ஆனால் அந்த யாகம் மக்களை ஈர்க்கவில்லை. அன்று நிலம் கொடுக்கப்படவில்லை. பொற்கிழிகள் கொடுக்கப்பட்டன. அப்பொழுது முதலே இந்த வைதீக மறுப்பு, எதிர்ப்பு என்பது இருக்கிறது. இளையான்குடி செப்பேட்டில், ‘பிரம்மதேயம் கொடுத்ததை எதிர்த்து, நிலத்தை இழந்த கம்பதேயன் என்பவன் போர்க்கொடி தூக்குகின்றான், அவனை பாண்டியன் படை அனுப்பி கைது செய்து தலையை வெட்டுகிறான்.’ மண்ணின் மைந்தன் இழந்த உரிமையை கேட்ட தற்காக கொல்லப்படுகிறான். பிரம்மதேயத்தை எதிர்த்ததற்காக.
வரலாறு நெடுகிலும், இந்த பிராமண கட்டமைப்பை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதில் இவர்கள் திடீரென்று கூடு விட்டு கூடு பாய்கிறார்கள். ‘யக்ஞம்’ பேசியவர்கள் இப்போது அர்ச்சகர்கள் ஆகிறார்கள். யாகம் செய்தவனுக்கு என்ன அர்ச்சகம் தேவைப்படுகிறது? இதன் மூலமாக கோவில் மீது பிடிப்பு, கோவில் சொத்துக்கள் மீது பிடிப்பு அதன் மூலமாக அரசன் மீது செல்வாக்கு செலுத்த முடியும் என்ற காரணத்தினால், அதுவரை அர்ச்சகம் செய்யாத பிராமணன் தென்னகத்தில் அர்ச்சகனாக மாறுகின்றான். இதற்காகத்தான் ஆகமங்கள் உருவாக்கப்படுகின்றன. இது தமிழ் ஆகமமா? சமஸ்கிருத ஆகமமா? என்பது முக்கியமில்லை. தமிழ் ஆகமம் இருந்திருக்கலாம். ஆனால் எந்தத் தமிழ் ஆகமும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்பது உண்மை. இவற்றை எதிர்த்து எத்தனையோ குரல்கள் வந்துள்ளன. அவைகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. ஆனால் யாரும் எடுத்துக் கூறுவதில்லை. திருமூலர், சிவவாக்கியர் இவர்கள் சைவ சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு புரட்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் பிற்காலத்தில் திருமூலர் போன்றவரை சமரசம் செய்ததாக காட்டுவார்கள். “வேர்த்திறைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ” இதை பெரியார் கூறினால் திட்டுவீர்கள்! திருமூலர், சிவவாக்கியர் சொன்னால் எதுவும் சொல்வதில்லை.
“கல்லினை, செம்பினை, கட்டையை கும்பிடல் புல்லறிவாகுமேடி, குதம்பாய் புல்லறிவாகுமேடி” கல், கட்டைகளையெல்லாம் கும்பிடுவது புல் அறிவாகும் என்கிறார் குதம்பைச் சித்தர். இன்றைக்கு இதே கருத்தைக் கூறினால் அவர்கள் மனம் புண்படும். மனம் புண்படுகிறதென்று நீதிமன்றம் செல்வார்கள், நீதிமன்றமும் “ஆமாம் புண்படுகிறது, நீங்கள் தவிர்த்திருக்கலாமே” என்பார்கள்.
“கோவில் பல தேடி கும்பிட்டதனால் உனக்கு ஏதும் பலன் பெறுமோ? குதம்பாய் பலன் பெறுமோ, மெய்த்தலத்தில் இல்லாத மெய்பொருளானவர் பொய்த்தலத்தில் ஏதும் உண்டோ” கடவுள் உன் உள்ளத்தில் இருக்கிறார் நீ ஏன் கோவிலுக்கு சென்று தேடிக் கொண்டிருக்கிறாய் என்கிறார் குதம்பைச் சித்தர். “கங்கை ஆடில் ஜென்மம் போகுமோ” என்கிறார். “ஓசை பெற்ற கல்லை நீர் உடைத்து உருக்கல் செய்கிறீர், பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாத்துவீர், வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர், ஈசனுக்குகந்த கல் இரண்டு கல்லும் அல்லவே” இந்த இரண்டு கல்லுமே கடவுள் இல்லை என்கிறார். இதைக் கூறியவர் தமிழர்.
உண்மையாகவே அறிவு இருந்தால் இதை கொண்டாடி இருக்க வேண்டாமா? கம்பனைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கம்பராமாயணத்தை எதிர்க்க திராவிடர் இயக்கம் மேற்கொண்ட முயற்சிகள் எவ்வளவு எவ்வளவு! கம்ப ராமாயணத்தை எதிர்ப்பது தமிழை எதிர்ப்பதல்ல. தமிழர்களை மடையர்களாக்கும் முயற்சியை எதிர்த்தது திராவிடர் இயக்கம். “சாத்திரத்தைச் சுட்டு, சதுர்மறையைப் பொய்யாக்கி, சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்” இதைப் பாடியவர் தமிழர் தானே? எதிர்ப்பது பார்ப்பனியத்தையும், வைதீகத்தையும். “தத்துவக் குப்பையைத் தள்ளுங்கடி, வேத சாத்திரப் பொத்தல்களை மூடுங்கடி” தமிழில் உள்ள இலக்கியங்களில் அறிவுக்கு பொருத்தமான எந்த இலக்கியங்களைப் படிக்க வேண்டுமோ அதைப் படிக்க மாட்டார்கள். அரசனைப் புகழ்வது, பெண்களை விபச்சாரிகளாக சித்தரிக்கும் ‘மூவர் உலா’ போன்றவற்றைகளை பெருமையாக கூறுவார்கள்.
நமது நாட்டில், இந்த வைதீகப் புரட்டுக்கு எதிராக ஏன் ஒரு ஆயுதப் புரட்சி கிளர்ந்து எழவில்லை யென்றால், நம் மக்களிலிலேய ஒரு பிரிவினரை சற்சூத்திரர்கள் என்று வேளாளர்களை கூறி விட்டனர். அவர்களுக்கு இந்த இரண்டாம் இடத்தில் இருப்பதில் பெரிய திருப்தி. ஒவ்வொரு ஆதீனமும் ஒரு ஜாதி நிறுவனமாக மாறியது. ஜாதி நிறுவனமாக மாறிய எவையுமே வைதீகத்திற்கு உடன்படுபவை, வைதீகத்தை வளர்ப்பவை. இந்த ஆதீனங்கள் எல்லாம் தமிழ் ஆதீனங்களாக இல்லையே என்பது தான் நமக்கு வருத்தம். பெரும்பாலான ஆதீனங்களில் கல்வி தரப்பட்டபோது முதலில் சமஸ்கிருதம் தான் பயிற்றுவிக்கப்பட்டது. சில ஆதீனங்களில் தமிழ்க் கல்வியை கொண்டு வருவதற்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.
மனிதம் என்பதே நமக்கு நோக்கம். மனிதத்தை சிதைக்கின்ற எதுவாக இருந்தாலும் அது சமயம் என்றாலும், அரசு தலைமை என்றாலும் நாம் இணங்க மறுக்கின்றோம் என்பது தான் பொருள். சைவம், வைணவம் என்ற பெயரில் பல மோதல்கள் நடந்தன. தமிழர்களை மோத விட்டு அழிப்பதற்காகவே சைவம், வைணவத்தை இங்கே வேரூன்ற செய்தார்கள்.
19 ஆம் நூற்றாண்டில் வள்ளலார் வாழ்ந்தார். 19ஆம் நூற்றாண்டில் தென்னகத்தில் தான் சமய விழிப்புணர்வு தலை தூக்கியது. இங்கே மூன்று பெரும் மக்கள் சமயத்திலே பெரும் பங்காற்றி னார்கள். வைகுந்தர், நாராயணகுரு, வள்ளலார். வைகுந்தரும், நாராயணகுருவும் சனாதன சாம்ராஜ்யமான திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தார்கள். வள்ளலார் மட்டும் தான் ஆங்கிலேயரால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட சென்னை இராஜதானியில் இருந்தார்.
வைகுந்தரும் வைதீக எதிர்ப்பாளர், சிலை மறுப்பாளர், ஜாதி எதிர்ப்பாளர். நாராயணகுருவும் ஜாதி மறுப்பாளர், சனாதன மறுப்பாளர். இங்கே நமது வள்ளலாரும். இதில் மூத்தவர் வைகுந்தர். மூவரில் இளையவர் நாராயணகுரு. இடையில் இருப்பவர் வள்ளலார். ஆனால் நாராயணகுரு தத்துவ விளக்கம் பெறுவதற்காக அவர் நாடிய நூல்,
“ஒழிவில் ஒடுக்கம்” இதை பதிப்பித்தவர் வள்ளலார். இதை மலையாள மொழியில் மொழி பெயர்த்தவர் நாராயணகுரு. “மேலோர்கள் ஒன்றாகவே சிந்திக்கின்றார்கள்”. இவர்களது பொது எதிரி என்பது வைதீகம். நாராயணகுரு, “ஆங்கிலேய ஆட்சியால் பல பயன்களைப் பெற்றிருக்கிறோம். அவர்கள் மட்டும் இல்லையென்றால் சூத்திரனாகிய நான் சன்னியாசம் மேற்கொண்டதற்காக என்னுடைய தலையை இழந்திருப்பேன். இன்று என்னால் துறவி என்று இருக்க முடிகிறதென்றால் ஆங்கிலேய ஆட்சி தான் காரணம். எனவே ஆங்கிலேயர்களை என் குருவைப் போன்று மதிக்கிறேன்” என்றார். அந்நியர்கள் நம்மை சுரண்டினார்கள் என்பது உண்மை. ஆனால் அந்த அந்நியர்கள் கொடுத்த உரிமைகளைக் கூட உள்ளூர் அரசர்களும், ஆட்சியாளர்களும் தரவில்லை என்பதும் உண்மை.
பொதுச் சட்டம், பொதுக் கல்வியை ஆங்கிலேயர்கள் கொடுத்தார்கள். ஆதீனங்கள் நடத்திய கல்விக் கூடங்களிலே கூட பஞ்சமர்கள் அனுமதிக்கப்பட வில்லையே ஏன்? இங்கே இருந்தது வேதக் கல்வி. ஆயிரமாண்டு அடிமை கல்வியை மாற்றி பொதுக் கல்வியை கொண்டு வந்தது ஆங்கிலேயர்கள் தான். எழுதுகிறார்கள், மெக்காலே கல்வி அடிமை முறையை கொண்டு வந்து விட்டது என்று. எனவே இந்த வைதீக எதிர்ப்புக்கு பல பரிமாணங்கள் உண்டு. இந்தியாவிலும் வைதீக எதிர்ப்பு இருந்துள்ளது, ஆனால், தமிழ்நாடு வைதீகத்திற்கு எதிராக மிகச் சிறப்பான ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளது. அதன் இறுதிகட்ட வடிவமாகத்தான் நாம் வள்ளலாரைப் பார்க்கின்றோம். அந்தப் பணி முடிவடையவில்லை, அந்தப் பணியை தொடர்ந்து நடத்தி அதன் இறுதி கட்டத்திற்கு கொண்டு வர ஒரு சமூக கட்டமைப்பை உறுதி படுத்துவதற்கு, போராட வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். போராடுவோம், வெற்றி பெறுவோம்.
(“வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்” என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் கருணானந்தன் ஆற்றிய உரை.)