ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம் பற்றி, ஆகத்து 2016 இதழ் வரையில் 12 கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன்.

இது, நவம்பர் 2016 இதழில் 13வது கட்டுரையாக வெளிவருகிறது. இனி இடையீடு இல்லாமல், தொடர்ந்து இது குறித்த கட்டுரைகள் வெளியிடப் பெறும்.

ஜம்மு-காஷ்மீருக்கான தனி அரசமைப்புச் சட்டம் 26-1-1957இல் நடப்புக்கு வந்தது.

ஆனால் 13-10-1959இல் தொடங்கி, 24-10-1970 க் குள் அச்சட்டத்தில் பதினோரு திருத்தங்கள் செய்யப்பட்டன.

அத்திருத்தங்களின் விவரம் பின்வருமாறு உள்ளது.

13-10-1959இல் செய்யப்பட்ட முதலாவது திருத்தம் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி பதவி வகிப்பவரின் வயது 60 என வரையறுத்தது.

22-3-1960இல் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம், ஜம்மு-காஷ்மீர் குடிஅரசுத் தலைவரின் மாத ஊதியம் எவ் வளவு, அவர் குடியிருக்கும் மாளிகைக்கு ஆண்டு வாடகை எவ்வளவு என்பது பற்றியது.

14-3-1961இல் செய்யப்பட்ட மூன்றாவது திருத்தம், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான விகிதாசார இடஒதுக்கீடு, 26-1-1957 முதல் 23 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அளிக்கப்பட வழி செய்தது.

27-3-1963இல் செய்யப்பட்ட நான்காவது திருத்தம், ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியின் ஓய்வூதியம் மற்றும் விடுமுறை பற்றிய வரையறைகளைச் செய்தது.

1-10-1963இல் நிறைவேற்றப்பட்ட 5வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற மேலவைக்கு, உரிய 36 இடங்களுக்கு-சமுதாயத்திலும், பொருளாதாரத் திலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, மூன்று இடங்களும்; அறிஞர்கள், கலை இலக்கிய நிபுணர்கள் என்போருக்கு 5 இடங்களும்; ஊராட்சிகளின் பிரதிநிதிகளுக்கு 2 இடங்களும் ஆளுநரால் அமர்த்தம் மூலம் (Nomination) நிரப்பப்படும் என்று கூறுகிறது.

10-4-1965இல் நிறைவேற்றப்பட்ட ஆறாவது திருத்தம், ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் தனித்தன்மையை, இந்திய அரசு, வேண்டுமென்றே சிதைத்தது.

அதாவது ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற மேலவை உறுப்பினர்களும் சேர்ந்து தேர்தல் நடத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான “குடிஅரசுத் தலைவரை”த் தேர்ந்தெடுப்பர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் கூடி, ஜம்மு-காஷ்மீருக்கான “பிரதமரை”த் தேர்ந்தெடுப்பர். இவைதான் ஜம்மு-காஷ்மீர் பெற்றிருந்த சிறப்பு உரிமைகள். இவை 1965இல் பறிக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீர் அரசமைப்பின் விதிகள் 26 முதல் 34 வரை உள்ளவை, “குடிஅரசுத் தலைவர்” பற்றியவை. இந்த விதிகளின் மூலம் “குடி அரசுத் தலைவர்” என்ற சிறப்பு நிலை மூலச்சட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது. அந்தச் சிறப்பு நிலை பறிக்கப்பட்டு, “ஆளுநர்” என்று மாற்றித் திருத்தம் செய்யப்பட்டது.

விதிகள் 35, 36இன் படி, மூலச்சட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுபவர், ஜம்மு-காஷ்மீர் “பிரதமர்” என்ற சிறப்புத் தகுதியுடையவராக விளங்கினார்.

அந்தச் சிறப்பு உரிமை பறிக்கப்பட்டு, “முதலமைச்சர்” என மாற்றித் திருத்தம் செய்யப்பட்டது.

இந்தியப் பிரதமர் பண்டித நேரு, 1959இல் தொடங்கி வைத்த உரிமைப் பறிப்பை, அவருக்குப் பின்னர் பிரதமர் களாக வந்த லால் பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் 1970க்குள் முழுமையாக நிறைவேற்றினர்.

மேலே சொல்லப்பட்ட ஆறாம் திருத்தம் 10.4.1965 இல் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 13.4.1965இல், ஏழாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அது ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில், அரசமைப்பு விதி 30 இன் கீழே கண்டுள்ளபடி, “ஆளுநர்” என்பவரின் ஊதியம், பயணப்படி, நிர்வாக அலு வலகம் மற்றும் செலவுகளுக்குரிய தொகையின் அளவுகளை மாற்றி அமைத்தது. அவ்வளவே

25.8.1967இல் நிறைவேற்றப்பட்ட எட்டாவது சட்டத் திருத்தம்-ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் 138ஆம் விதியின் கீழ், தேர்தல் ஆணையம் அமைப்பு, மற்றும் தேர்தல் நடைமுறை பற்றிய அய்யங்களைத் தீர்ப்பது குறித்த நடைமுறை பற்றியது.

15.10.1967இல் நிறைவேற்றப்பட்ட ஒன்பதாம் சட்டத்திருத்தம், இரண்டு செய்திகளை உள்ளடக்கியது.

1.            ஜம்மு-காஷ்மீர் அரசமைப்பின் 109ஆம் விதியை அடுத்து, 109அ (109-A) என்னும் புதிய விதியைச் சேர்த்தது.

2.            அந்த விதியின் கீழ் மாவட்ட நீதிபதிகள் அமர்த்தம், இடமாறுதல் செய்வது, தீர்ப்புகள் வழங்குவது பற்றிய விவரங்களைச் சேர்த்தது.

10.10.1968இல் நிறைவேற்றப்பட்ட பத்தாவது திருத்தம், இரண்டாவது அட்டவணையில் கண்டபடி, ஜம்மு-காஷ்மீர் அரசமைப்பின் விதி 30இல் உள்ள, ‘ஆளுநர்’ குறித்த, உள்பிரிவு 2, 3 இவற்றில் சில திருத்தங்களைச் செய்தது.

24.10.1970இல் நிறைவேற்றப்பட்ட பதினோராவது திருத்தம், ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தில், விதி 49இல் கண்டுள்ள, “ஜம்மு-காஷ்மீர் சட்ட மன்றத்துக்கான தேர்தலில் பட்டியல் வகுப்பினர்-பழங்குடி யினருக்கான விகிதாசார இடஒதுக்கீடு, “இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும்” என்பதை உறுதி செய்தது. நிற்க.

நான் பெற்றுள்ள ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது பகுதி (Part I), 1970இல் பதிக்கப்பட்டது.

அதன் பின்னர் உயர்நீதிபதி ஆனந்த் அவர்கள் ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் மிக விரிவான ஒரு பதிப்பை வெளியிட்டுள்ளார். ஆர்வம் உள்ளவர்கள் அந்நூலைப் படிக்கலாம்.

இந்த 1970 வரையிலான ஜம்மு-காஷ்மீர் அரசமைப் பைக் கொண்டு, நாம் ஒன்றைத் தெளிவாக உணருகிறோம்.

அதாவது, 26.1.1957இல் நடப்புக்கு வந்த ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்- “இந்தியா என்கிற தனிச் சுதந்தர நாட்டுக்குள்”- (Sovereign Independent

India)-இன்னொரு தன்னுரிமை பெற்ற நாடாக, ஜம்மு-காஷ்மீர் என்கிற பகுதி இருந்தது.

ஆனால் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக-ஆனாலும் (1) தனித் தேசியக் கொடி; (2) “ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள்” (Citizens of Jammu-Kashmir) என்னும் தனித்த அடையாளம் பெற்றிருந்தது; (3) “குடி அரசுத் தலைவர்”, (4) “பிரதமர்” என்கிற தன்னுரிமைக்குரிய அதிகாரம் வாய்ந்த பதவிகளையும் பெற்றிருந்தது.

இன்று தனிக்கொடி மட்டும் உள்ள, தனிக் குடியுரிமை மட்டும் உள்ள-இந்தியாவிலுள்ள மாநிலங்களுள் ஒன்றாக, ஆனால், வேண்டுமென்றே-உரிமை சிதைக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட நாடாக ஜம்மு-காஷ்மீர் ஆக்கப்பட்டுள்ளது.

அந்த, உரிமையை மீட்கும் வரையில் ஜம்மு-காஷ்மீர் கொதித்துக் கொண்டே இருக்கும்.

இந்த வெளிச்சத்தில், இனியும் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரைப் பற்றி நாம் அறிவோம்.

தொடர்ந்து படியுங்கள்.

(தொடரும்)

Pin It