பயணிப்பது என்பது ஒரு வகையில் சுகானுபவம். நான் அவ்வப்போது ஏதாவது காரணத்திற்காகவோ - காரியத்திற்காகவோ பயணித்துக் கொண்டுள்ளேன். அப்படிப் பயணிக்கும்போது பல்வேறு செய்திகள் நல்லதும், கெட்டதுமாக எனது செவிப்பறையைத் தட்டி என்னை சிந்திக்கவும் - சில நேரங்களில் - சின மூட்ட வும் செய்கின்றன. அவற்றிலிருந்து சிலவற்றைப் பகிர்ந் திடவே எனது எழுதுகோல் உங்களிடம் வருகின்றது.
எனது கிராமத்திலிருந்து மதுரையை நோக்கிச் செல்லும் பேருந்தில் நான் பயணித்துக் கொண்டிருந் தேன்.
பேருந்து தேநீர் ஓய்வுக்காகவும், பயணிகளை ஏற்றவும், இறக்கவும் சிவகங்கையில் நிறுத்தப்பட்டது. ஒரு பெருங்கூட்டம் பேருந்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறியது. பத்து மணித்துளிகளுக்குப் பின் பேருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தது.
பல்வேறு உரையாடல் கலவைகளால் பேருந்து சந்தைக் கடை இரைச்சலை ஞாபக மூட்டியது. இதற் கிடையேயும், பேருந்தில் நோயாளியைப் போல் இருந்த ஒரு பயணியை அடையாளம் கண்டுகொண்ட இன் னொரு பெண் பயணி, ‘என்ன முத்துப்பாண்டி,,, ஆளே அரை ஆளா மாறி இப்படி உருக்குலைஞ்சு போயிருக் கியே...? என்னப்பா செய்யுது...?’ என்று மிக அக்கறை யோடு வினவினாள்.
அதைக் கேட்டவுடன், கூட இருந்த பெண் பயணி, ‘அதை ஏங்க கேட்கிறீங்க... ஆறு மாசமாச்சு... விட்டு விட்டுக் காய்ச்சல் வந்துக்கிட்டே இருக்கு... உள்ளூரி லேயும், வெளியூரிலேயும் பார்க்காத டாக்டரு இல்லை. எதுவும் சரிப்பட்டு வரலை. கோயிலு குளம்னு சுத்தாத ஊருமில்லை. காய்ச்சல் வந்தால் வாய் புலம்புறது தான் அதிகமாயிருக்கு. மதுரையிலே பெரியாஸ்பத்திரி யிலே காட்டலாம்னு கூட்டிட்டுப் போறோம்’ என்று புலம்பினாள்.
கவலையோடு புலம்பிய அந்தப் பெண் அவனது மனைவியாகத் தெரிந்தது.
நலம் விசாரித்த பெண்மணி எரிகின்ற கொள்ளி யில் எண்ணெய் ஊற்றுவது போல், ‘விட்டு விட்டுக் காய்ச்சல் வருது வாய்ப்புலப்பல் வேற... ஆளு வேற எலும்பும் தோலா இருக்கிறான்... இது ஏவல், பில்லி அல்லது பேய்க் கோளாறா தெரியுது... தேனிப் பக்கத் திலே ஒரு ஊருலே பெரிய கோடாங்கி இருக்கிறார். எப்படிப்பட்ட செய்வினையா இருந்தாலும் சரி செய்து விடுவார்... எவ்வளவு பெரிய பேயானாலும் மறிச்சுக் கட்டிப்புடுவார்... இது நோயாத் தெரியலை... பேயி...’ என்று உறுதியாகக் கூறினாள்.
பக்கத்திலே இருந்த மற்றவர்களும், ‘ஆமா... அப் படித்தான் தெரியது... டாக்டரு... டாக்டருன்னு அலை யாதீங்க... உங்க குலசாமி மேலே பாரத்தைப் போட் டுட்டு அந்த அம்மா சொல்றபடி கேளுங்க...’ என்றனர்.
கேட்டுக் கொண்டிருந்த நான் கோபமாக, ‘அந்த ஆளுக்கு என்ன நோய்னு மருத்துவப் பரிசோதனை செய்து கண்டறிந்து, மருத்துவம் பார்ப்பதை விட்டு விட்டு, இப்படி முட்டாள்தனமா ஆளு ஆளுக்குப் பேசுறீங்களே’ என்று சத்தம் போட்டேன்.
அந்தக் கூட்டத்திலே கடா மீசையும், சந்தனப் பொட்டுமாக இருந்த ஒரு முரட்டு ஆசாமி என்னை ஒருமுறை முறைத்துவிட்டு, ‘என்னய்யா முட்டாள் தனம்னு பெரிசா பேச வந்துட்டே... அதுதான் செய்வினை, பில்லி... சூன்யம்னு முகத்திலே எழுதியிருக்கில்லே... நாங்க எல்லாம் முட்டாள்கள்... குழாய் போட்டுக்கிட்டா மட்டும் புத்திசாலிகள்... நாத்திக நாதாரிப் பயலுக...’ என்று ஏக வசனத்தில் பேசவும் நான் கப்சிப்பென்று ஊமையாகி நமக்கென்னவென்று வாளாயிருந்து விட்டேன்.
இன்னொரு நாள் காளையார் கோவில் பேருந்து நிலையத்தில் எனது ஊருக்கான பேருந்துக்காகக் காத் துக் கொண்டிருந்தேன். ஆண்களும், பெண்களுமாக ஒரு கும்பல் எதையோ பறிகொடுத்ததைப் போலக் குழுமியிருந்தது.
நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணொருத்தி கண்ணீர் மல்க அரற்றிக் கொண்டிருந்தாள்.
‘இப்படிச் சாதி கெட்ட சண்டாளனோட ஓடிப்போ வாள்னு தெரிஞ்சிருந்தால் படிக்க அனுப்பியிருக்கமாட் டேன்... பாழாய் போன போனை வாங்கிக் கொடுத்து எப்பப் பார்த்தாலும் போனும் கையுமாத்தானே இருந்தா... போனு பேசுறேன்... போனு பேசுறேன்னு வைக்கப்போருப் பக்கந்தானே கெடையாக் கிடந்தாள்... நம்ம குலமென்ன...? கோத்திரமென்ன...? இப்படிப் பண்ணிட்டாளே...’
அவளின் அரற்றலுக்கு ஆறுதல் சொல்ல வந்த இளைஞன் ஒருவன், ‘அடச் சும்மா இருங்க அண்ணி... அந்தச் சனியங்க கையிலே கிடைச்சால் உண்டு இல்லைனு பாக்காம விட்டுடுவோமா... ரெண்டு பேருக் கும் எமன் நானாத்தான் இருப்பேன்... காதல்... கீதல்... எல்லாம் சினிமாவுக்குத்தான்... நிஜத்திலே இதையெல் லாம் பாத்துக்கிட்டுச் சும்மா இருந்துடுவோமா? இந்தச் சீமையை ஆண்ட சாதியா...? கொக்கா...?’ என்று வீரவசனம் பேசினான்.
நான் பாரதியையும், பாரதிதாசனையும் துணைக் கழைத்து, காதலுக்கு விளக்கம் கூற முற்பட்டிருந்தால் என் தலை என் கழுத்தில் இருந்திருக்காது.
காரைக்குடி புதுப்பேருந்து நிலையத்தில் ஒரு வடையும், தேநீரும் அருந்துவிட்டு, கோட்டையூர் பக்கம் போகும் பேருந்துக்காகக் காத்திருந்தேன்.
திரைப்பட நடிகனைப் போலக் கவர்ச்சியாக உடை உடுத்தியிருந்த ஒரு இளைஞனும், மஞ்சள் வேட்டி, சட்டையில் இருந்த இன்னொரு இளைஞனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘என்ன மச்சி... கையில காப்பும் மஞ்சள் மகிமை யுமா அமர்க்களமா இருக்கிறே’ என்று வினவினான் நம்ம கதாநாயகன், மஞ்சள் ஆசாமியைப் பார்த்து.
‘ஆமாடா துரை... முத்துமாரி அம்மனுக்கு பால்குடம் எடுக்க, காப்புக் கட்டியிருக்கேன்... பி.காம். முடிச்சு அஞ்சாறு வருசமாச்சு... வேலையுமில்லே... வெட்டியு மில்லே... ஆத்தாளை வேண்டிக்கிட்டா ஆத்தாள் கண் ணைத் திறக்கமாட்டாளான்னுதான் இந்த வருசம் பால்குடம் எடுக்கிறேன்’ என்றான் மஞ்சள் ஆசாமி.
‘நீ செய்யுறது உன் விருப்பம்... இந்த அஞ்சாறு வருசத்திலே நீ ஏதாவது பேங்க் எக்ஸாம், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன், ஸ்டாப் செலெக்சன்னு பரீட்சை எழுதியிருக்கியா...? வெறும் பி.காம். மட்டும் போதுமா...? சி.ஏ. பண்ணியிருக்கலாம். பி.எல். மாதிரி படிச்சிருக்க லாம்... வடக்கே எல்லாம் போயி வேலை தேடணும்னா இங்கிலீஷ் நாலெட்ஜ் வேணும்... நம்மக்கிட்டே பன் முகத் திறமை இருந்தாத்தானே வேலை கிடைக் கும்...?’ என்று துரை கேட்டான் அறிவுப்பூர்வமாக.
‘அப்ப... ஆத்தாளைக் கும்பிட்டா ஆத்தா வழிகாட்ட மாட்டாளா...?’ என்று மஞ்சள் வேட்டி சட்டை எதிர் வினா தொடுத்தது.
‘அய்யய்யோ... நான் அப்படிச் சொல்லலை... நம்ம முயற்சி வலிமையோடு இருந்தாத்தானே ஆத்தா சப்போர்ட்டா இருப்பா’ என்று பதில் சொன்னான் துரை.
‘நான் வெளிநாடு போக விசாவுக்கு முயற்சி செய்யு றேன்... இலட்சக்கணக்கிலே பணம் கேட்கிறாங்க... அதுதான் எல்லாம் சுமூகமா முடிய பால்குடம் எடுக் கிறேன்’ என்றான் மஞ்சள்.
‘என்ன வேலைக்குப் போகப் போற’ என்று துரை வினாவினான்.
‘கம்பி வளைக்கிற வேலைக்கு’ என்றது மஞ்சள்.
‘படிக்காதவன் செய்யுற வேலைல அது... உன் படிப்புக்குச் செய்யுற வேலையா...?’ என்று சிரித்தான் துரை.
‘இல்லைடா... அங்கே போய் திறமையைக் காட்டி, சூப்பர்வைசர் ஆயிட்லாம்ல...’ என்று அப்பாவியாகக் கேட்டான் மஞ்சள்.
இப்படித்தான் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ளாமல் நிறைய பேர் அய்யப்பன் அருள்பாலிப்பான் என்றும், திருப்பதி லட்டுக் கொடுக்குமென்றும், பழனி பஞ்சாமிர்தம் தருமென்றும், முத்துமாரி கருணை மழை பொழியுமென்றும் அல்லாடிக் கொண்டுள்ளார்கள்.
அன்றாடங்காய்ச்சிகள் கூட ஐயாயிரம் வரை கடன் வாங்கித்தான் பால்குடம் எடுக்கின்றனர். முத்துமாரி பால்குடத் திருவிழாவுக்குப் பின்னால் அந்தப் பகுதியே நாற்றத்தால் நாறிப் போவதாகக் கேள்விப்பட்டேன்.
மேலே நான் விவரித்த நிகழ்வுகளிலிருந்து அறியக் கண்டது என்னவென்றால், தமிழகம் பகுத்தறிவைக் கைவிட்டு அறியாமைச் சாக்கடையில் நீந்திக் கொண் டுள்ளது என்பதுதான்.
அறிவியல் கண்ணிமைக்கும் நேரத்தில் உலகத் தின் எந்த மூலைக்கும் இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என்கின்ற வகையில் விரிவாக வளர்ந் திருக்கிறது. மருத்துவ அறிவியலோ இறந்தவனையே பிழைக்க வைக்க முடியுமா என்று ஆய்வு செய்கிறது. இங்கே உள்ள மக்கள் இன்னும் பேய், செய்வினை, மாரியாத்தா என்று குருட்டு நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
‘காதல் படுவது இயற்கை’ என்பதை மறந்து சாதி யைக் காட்டி காதலுக்குத் தடைபோட்டு, கவுரவக் கொலை களை அரங்கேற்றிக் கொண்டுள்ளனர் ஒரு கூட்டத்தினர்.
படித்தவனே பால்குடம், அலகு குத்துதல் என்று இருட்டறை வவ்வாலாய் மூடநம்பிக்கை எனும் குட்டிச் சுவரில் முட்டிக் கொண்டுள்ளான்.
இவற்றை எல்லாம் அலசிச் சிந்தித்துப் பார்க்கும் போது மிகப்பெரிய கலாச்சாரப் பண்பாட்டுப் புரட்சிக்கு நாம் தயாராக வேண்டுமென்பதுதான் எனது அறிவு சார்ந்த இறுதி முடிவாகும்.