அண்ணாவின் 50 ஆம் நினைவுநாளில் தமிழ் நாட்டின் தன்னாட்சிக்கான இயக்கத்தைத் தொடங்கியது தன்னாட்சித் தமிழகம் 3, 2019 நவீன தமிழகத்தின் சிற்பி அறிஞர் அண்ணாவின் 50 ஆம் நினைவு நாளில் தன்னாட்சித் தமிழகம் இயக்கம், தமிழ்நாட்டுக்கான தன்னாட்சி உரிமை கோரி தன்னாட்சி மாநாட்டை சென்னையில் நடத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தனிநபர்களின் கூட்டியக்கமான தன்னாட்சித் தமிழகம் தமிழ்நாட்டுக்கு அரசியல்சாசன ரீதியில் தன்னாட்சி வழங்க வேண்டும் என்று கோரியும் இந்திய அரசியல்சாசனத்தை கூட்டாட்சிக்கான சாசனமாக மாற்ற புதிய அரசியல் சாசன நிர்ணய அவையை அமைக்க வேண்டும் என்று கோரி தீர்மானங்களை நிறைவேற்றி யிருக்கிறது.

இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை ஆக்கவேண்டும், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு வேலைகளில் 80 சதவீதத்தை தமிழ்நாட்டு மக்களுக்கே அளிக்க வேண்டும், தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை பன்னாட்டு, அனைத்திந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், பேரறிவாளன் உள்பட எழுவரை உடனே விடுதலை செய்ய வேண்டும், இலங்கை தொடர்பான மத்திய அரசின் கொள்கைகள் வகுக்கப்படும்போது மத்திய அரசு தமிழ்நாட்டை கலந்தாலோசிக்கும் நெறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

tamildesam manadhu 600அண்ணாவின் கனவான மாநில சுயாட்சியின் நவீன வடிவமாக தமிழ்நாட்டு தன்னாட்சிக் கோரிக்கைக்காக புதிய இயக்கம் தொடங்கப்படும் என்று தன்னாட்சித் தமிழகம் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் கூறினார்.

எல்லா அதிகாரங்களையும் மத்தியில் மோடி அரசு குவித்துக்கொண்டு வருவதை மாநாட்டில் பேசிய தலைவர்கள் கடுமையாக கண்டித்தார்கள். திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலர் ஆ ராசா, சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், பெரியாரிய தலைவர் வே ஆனைமுத்து, விசிக தலைவர் தொல் திருமாவளவன், தவாக தலைவர் தி வேல்முருகன், மதிமுக முன்னாள் எம்பி அ கணேசமூர்த்தி, திராவிடர் கழகம் அ, அருள்மொழி, மமக தலைவர் பேரா. எம் எச் ஜவாஹிருல்லா, பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சுப உதயகுமாரன். தபெதிக தலைவர் கோவை ராம கிருஷ்ணன், தமஜக தலைவர் கே எம் ஷரீப், தமிழ்த் தேசம் ஆசிரியர் தியாகு உள்ளிட்ட பல கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பேசினார்கள்.

கூட்டாட்சி அரங்கத்தில் வெளிமாநிலங்களிலிருந்து வருகை தந்த பிரதிநிதிகள் பேசினார்கள். பஞ்சாபிலிருந்து பாட்டியாலா தொகுதி எம்பி தரம்வீர காந்தி, மொழியுரிமை இயக்கமான கிளியர் அமைப்பின் தலைவர் பேரா. ஜோகா சிங், வங்காளத்திலிருந்து முனைவர் கோர்கோ சாட்டர்ஜி, மகாராஷ்டிரத்திலிருந்து முனைவர் தீபக் பவார், கர்நாடகத்திலிருந்து ஆனந்த் ஆகியோர் இந்தியாவை உண்மையான கூட்டரசாக ஆக்கவேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.

1956 தமிழ்நாடு எல்லைக் காப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கொடிக்கால் ஷேக் அப்துல்லா, 1965 இல் தமிழ்நாட்டில் மொழிப்போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களும் தளபதிகளுமான திருவாளர்கள் எல் கணேசன், இரா. இராமசாமி, தயானேஸ்வரன், மறவர்கோ, ஜெயராமன், ரகுமான்கான், இராஜா முகமது, நந்திவர்மன் உள்ளிட்டோருக்கும் இளைய தலைமுறை யினரால் கௌரவம் செய்யப்பட்டது. இரட்டைமலை சீனிவானார் பெயர்த்தி ரேவதி நாகராஜன், அண்ணாவின் பெயர்த்தி இளவரசி முத்துக்குமார், ம.பொ.சி.யின் பெயர்த்தி பரமேஸ்வரி, வே ஆனைமுத்துவின் பெயர்த்தி ஆசுபள் ஆகியோர் அவர்களுக்கு கௌரவம் செலுத்தினார்கள்.

அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாடகம் நடத்தப்பட்டதுடன் அது நூலாகவும் வெளியிடப்பட்டது. அண்ணாவின் மாநிலங்களவை பேச்சுகள் என்ற தலைப்பில் ஆங்கில நூலாகவும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் தொழில்துறையாளர்கள் சுரேஷ் சம்பந்தம், சிவராஜா இராமநாதன், உலகத் தமிழர் சார்பில் விஜய் அசோகன், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு பேசினார்கள்.

தொடர்புக்கு : ஆழி செந்தில்நாதன் 9884155289

Pin It