"நுண்மாண் நுழைபுலம்" என்று தமிழில் ஒரு சொற்றொடர் உண்டு. பல துறைகளிலும் வேர் வரை ஊடுருவி அதன் நுண்ணிய இழைகளையும் ஆழமாக ஆராய்வது என்பது இதன் பொருள். அப்படியான நுண்மாண் நுழைபுலம் மிக்கவராக தமிழினத்திற்கு கிடைத்தவர் தான் அண்ணா என்னும் பேராளுமை.

தந்தை பெரியாரின் மாணவராக சமூக, அரசியல் களங்களில் பயிற்சி பெற்று மக்களுக்கான முதல்வராக தமிழ் நாட்டில் ஆட்சி புரிந்தவர் அண்ணா. அவரிடமிருந்து அருவியாய் கொட்டும் பேச்சாற்றலும், கணீரென்று ஒலிக்கும் குரலும் தமிழர்களைக் கட்டிப் போட்டது. அண்ணா முன்னெடுத்த தன்னாட்சி முழக்கம் என்பது மிகவும் கூர்மையானது. இந்திய ஒன்றியத்தின் ஆதிக்கத்தை நோக்கி கேட்ட கேள்விகள் ஆழமானது. தமிழர்களின் நலனுக்காக இந்திய ஒன்றிய அரசுடன் அவர் நடத்திய சொற்போரை அறியும் வாய்ப்பு கிடைத்த மற்ற மாநில ஆளுமைகளும், அண்ணாவையே தன்னாட்சி உரிமைகளின் கலங்கரை விளக்கமாகப் பார்த்து வியந்தனர்.

anna 602"மத்திய அரசின் வலிவு என்பது மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தனி வலிவையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவு தான். மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால் மாநிலங்கள் பலகீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவு ஏதும் ஏற்பட்டுவிடாது." என்று அன்றைய இந்திய ஒன்றிய அரசு ஆணவத்துடன் ஆதிக்கம் செலுத்திய போது, அதனிடம் வலிமை குறித்தான பாடம் நடத்தினார் பேராசிரியர் அண்ணா.

இந்திய ஒன்றியம் 75-வது சுதந்திர தினம் கொண்டாடி முடித்த பின்னும், அண்ணா கூறியபடி குவித்து வைத்துக் கொண்ட அதிகாரத்தினால் ஒன்றிய அரசு ஏதாவது வலிமையைப் பெற்றிருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறியே! மாநிலத்திடமிருந்த அதிகாரங்களைப் பறித்து, ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பின் கீழ் வாழ்வதைத் தான் சுதந்திரமென்று நம்ப வைத்து வீட்டுக்கு வீடு கொடி ஏற்ற வைத்தார் இந்திய பிரதமர் மோடி.

இந்திய அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையின் கீழ், ஒன்றிய அரசின் அதிகாரத்தில் இருக்கும் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை, வங்கி நிர்வாகம், இரயில்வே, அஞ்சலகம் போன்ற முக்கிய துறைகளின் பட்டியல் 97-லிருந்து இப்போது 100-ஆக அதிகரித்து விட்டது. மாநில அரசுக்கென இருந்த அதிகாரங்கள் 66-லிருந்து 61-ஆக குறைக்கப்பட்டு விட்டது. இரண்டிற்கும் பொதுவான பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்களும் 47-லிருந்து 52-ஆக மாநிலப் பட்டியலில் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது வெறும் எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல. இந்திய ஒன்றிய அரசு என்பது மாநிலங்களின் இணைப்புச் சங்கிலி மட்டும் தான். ஆனால் துருப்பிடித்த இணைப்புச் சங்கிலிகளை வலுப்படுத்த நம் விரல்களை வெட்டிக் கொண்டு போவதைப் போல மாநிலங்களின் உரிமைகளை எடுத்துக் கொண்டு போகிறது இந்திய ஒன்றிய அரசு.

"மத்திய அரசின் வலிவு அசாமிற்கு அச்சத்தைத் தர, தமிழ்நாடு தத்தளிக்க, கேரளத்திற்குக் கலக்கம் தருவதற்குத்தான் என்றால், நமது சிந்தனையைச் சிறுகச் சிறுக அழித்து, சிந்திக்கும் திறனே இல்லாமல் ஆக்குவதற்குத் தான் என்றால், நமது கூட்டுச் சக்தியின் மூலம் நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு, அந்த அக்கிரம வலிவை சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்" என்று மற்ற தேசிய இனங்களோடு கூட்டான உறவை ஏற்படுத்திக் கொண்டு மேலாதிக்கவாதிகளாக செயல்படும் ஒன்றிய அரசை அகற்றும் வேலையை அனைத்து மாநிலங்களும் சேர்ந்து செய்வோம் என்பது அன்றைக்கே அண்ணாவின் அறைகூவலாக அமைந்தது.

அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கையைக் கண்டு அலறிய இந்திய ஒன்றிய அரசு பிரிவினைவாத தடை சட்டத்தைக் கொண்டு வந்தது. அதனைத் திரும்பப் பெறக் கூறி நடைபெற்ற விவாதத்தில் அண்ணா, "திராவிட நாடு கேட்டவுடனே இறையாண்மையின் வேர் வெட்டப்படுகிறது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? இறையாண்மை முழுவதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குவிந்து இருக்கவில்லையே? கூட்டாட்சி முறை அல்லவா கொண்டிருக்கிறோம்? இங்கு இரும்புக் கூண்டு போன்ற ஓரரசு முறை இருக்க முடியாது என்பதால் தான், அரசியல் சட்ட திட்டத்தை வகுத்தவர்கள் ஓரரசு முறை அமைக்காமல் கூட்டாட்சி முறை அமைத்தனர. கூட்டாட்சி முறையை ஒற்றை ஆட்சி முறையாக்கும் முயற்சிக்கு கிளம்பி உள்ள எதிர்ப்பின் ஈட்டி முனை தான் நாங்கள்." என கூட்டாட்சி குறித்த விளக்கங்களை ஒற்றையாட்சி செலுத்த நினைத்த ஒன்றிய ஆதிக்கவாதிகளை நோக்கி கடிந்துரைத்தார் அண்ணா.

இந்திய ஒன்றிய அரசின் நிதிப் பங்கீட்டுக் கொள்கை என்பது கொள்ளையின் மறுவடிவமாக உள்ளதை கோடிட்டுக் காட்டியவர் அறிஞர் அண்ணா. "திட்டங்கள் டில்லியிலே தீட்டப்படுவது நிறுத்தப்பட்டு, மாநிலங்களில் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். டில்லி சர்க்கார் ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் தொடர்பு ஏற்படுத்துகின்ற வகையில் இயங்க வேண்டுமே தவிர, திட்டங்களைப் போடுவதற்கும் நிதியைப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும் அதிகாரங்கள் இருக்கக்கூடாது." என்றார் அண்ணா. ஆனால் இன்று மாநில அரசுகளின் நிதி ஆதாரமாக விளங்கிய சரக்கு மற்றும் சேவை (GST) வரியையும் பறித்துக் கொண்டு, மாநிலங்கள் நிதிக்கு அல்லாடும் நிலைமையை உருவாக்கி இருக்கிறது பாஜக அரசு.

அண்ணா வேதனையுடன் கூறிய "வடக்கு வாழ்கிறது- தெற்கு தேய்கிறது" என்னும் நிலையிலிருந்து இன்று "தெற்கு வளர்கிறது - வடக்கு சுரண்டுகிறது" என்று சொல்லும்படியாக அண்ணா வித்திட்ட அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் போக்கினால் வளர்ந்திருக்கிறது தமிழ் நாடு. நம்மிடமிருந்து பெறும் வரி வருவாய் 1 ரூபாய் என்றால் அதில் வெறும் 35 பைசாவை திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு தமிழ் நாட்டின் நிதியை சுருட்டிக் கொண்டு நிதிப் பங்கீட்டில் தமிழ் நாட்டிற்கு அநீதியை இழைக்கிறது இந்திய ஒன்றிய பாஜக அரசு.

பார்ப்பனிய சார்பு நிலையிலிருந்து பர்ப்பனியத் தன்மைக்கேற்றபடி வடிவமைக்கும் கல்விக் கொள்கைத் திணிப்புகளை அப்போதே இடித்துரைத்திருக்கிறார் அண்ணா. "மத்திய கல்வி அமைச்சர் அண்மையில் கல்விக்கொள்கை என்றும், கல்வித் திட்டம் என்றும் ஏதோ வகுத்து, மாநிலங்கள் இப்படி, இப்படி நடக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றார். மாநில அரசுக்குரியது கல்விப் பொறுப்பு என்று வரையறுத்த பிறகும், மத்திய அமைச்சர் என்று ஒருவர் இருந்து கொண்டு மேலதிகாரம் செய்கிறார். மாமியாருக்கு மருமகள் அடங்கி நடக்க வேண்டியதுதான். அதற்காக அந்தத் தெருவிலுள்ள எல்லா மாமியார்களுக்கும் அடங்கி நடக்கவேண்டும் என்பது என்ன நியாயம்?" என்று கேட்டவர் அண்ணா.

ஆனால், கல்வி உரிமையைப் பறிக்க காலம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், 1975 நெருக்கடி நிலை காலகட்டத்தை வாய்ப்பாக பயன்படுத்தி மாநில அதிகாரத்திலிருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி விட்டார்கள். அதனால் தான் இப்போது நவீன குலக்கல்வியான புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள். மருத்துவப் படிப்புக்கு தகுதியுடைய மாணவர்களின் உயிர் பறிக்கும் நீட் தேர்வு உள்ளிட்டவற்றை திணிக்கிறார்கள். மாநில அரசின் கல்விக் கொள்கையை மதிக்காத போக்கு அப்போதைய ஒன்றியத்தை ஆட்சி செய்த காங்கிரசிலிருந்து இன்றைய பாஜக ஆட்சி வரை தொடர்ந்து நீடிக்கிறது.

இந்திய ஒன்றியம் மாநிலங்களின் அதிகாரப் பறிப்பிலேயே கவனம் கொண்டிருந்தால் அண்டை நாடுகளிடம் இருந்து பாதுகாக்கும் தன்மையில் கோட்டை விடுவார்கள் என அன்றே கணித்தார் அண்ணா. "மாநில சுயாட்சி தரத் தயக்கம் காட்டுவார்களானால் அளவுக்கு மீறிய அதிகாரங்களைத் தாங்கித் தாங்கி, பாதுகாப்பு போன்ற பெரிய விஷயங்களில் சோடை போய்விடுவார்களோ என்பது தான் எங்கள் சந்தேகம்.." என்று சொன்ன அண்ணாவின் சந்தேகப்படியே இந்தியா பாதுகாப்பு விடயத்தில் சோடை போனது.

தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள இலங்கையுடனான உறவு பற்றி முடிவெடுக்கும் எந்த உரிமையும் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு தரவில்லை. இந்தியப் பார்ப்பனர்கள் முடிவெடுத்த வெளியுறவுக் கொள்கையினால் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு ஆயுத உதவியிலிருந்து அனைத்து உதவிகளும் செய்து, தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பாதுகாப்பு அரணாக இருந்த விடுதலைப் புலிகளையும் அழித்ததனால் இன்று எல்லைப் பாதுகாப்பில் கோட்டை விட்டது இந்தியா. அமெரிக்க - சீனா இடையே இலங்கையில் நடக்கும் ஆதிக்க சண்டையில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இந்தியா இரு தலைக் கொள்ளி எறும்பாக தவித்துக் கொண்டிருக்கிறது.

"தொழில் அமைப்பு மாநில அரசுக்குரியது. தொழிலுக்கு லைசென்ஸ் தருவது மத்திய அரசுக்கு உரியது என்று தந்திரமாக பிரித்து வைத்திருக்கிறார்கள்! போக்குவரத்து மாநில அரசுக்குரியது, எனினும் எந்தப் போக்குவரத்து? பஸ் போக்குவரத்து, லாரி போக்குவரத்துதான். ஆனால், கப்பல் போக்குவரத்தும், ஆகாய விமானப் போக்குவரத்தும் துறைமுகப் பராமரிப்பும் மத்திய அரசினுடையது!" என்று சீற்றமடைந்தவர் அண்ணா.

ஆனால், இன்று ஒன்றிய அரசிடம் கூட அந்தப் போக்குவரத்துகள் இல்லை. பனியா, குஜராத்தி, மார்வாடி முதலாளிகளிடம் ஒப்படைத்து விட்டார் மோடி. "திராவிடத்தின் செல்வத்தைச் சுரண்டும் வடநாட்டு வணிக வேந்தர்களின் பணபலம், தொழில் பலம் இவற்றினுக்கு அரணாக அவர்களுக்கு அமைந்துள்ள அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கண்டால், எவ்வளவு வேகமாக புதியதோர் பொருளாதார ஏகாதிபத்தியம் உருவாகிக் கொண்டு வருகிறது என்பது விளங்கும்" என்று அண்ணா கூறிய வடநாட்டுப் பெருமுதலாளிகளின் பொருளாதார ஏகாதிபத்தியம் மோடி அரசினால் உருவாகி விட்டது.

"சங்க காலத்தில் கடலை ஆண்ட தமிழன், கிரேக்கம் வரை சென்று வணிகம் செய்த தமிழன், சுதந்திர காலக்கட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழனிடம் இப்போது எந்த கடல் சார் நிறுவனங்களும் இல்லை. கட்டற்ற முதலீடு வடக்கில் உள்ள முதலாளிகளிடம் இருக்கிறது. அதனால் அவர்களால் வங்கி தொடங்க முடிகிறது, காப்பீடு நிறுவனங்கள் தொடங்க முடிகிறது, பெரும் பெரும் ஆலைகள் எல்லாம் தொடங்க முடிகிறது. ஆனால், காலம் காலமாக தொழிலில் சிறந்து விளங்கிய தமிழ் சமூகம் மற்றும் அந்த சமூகத்தின் நிலப்பரப்பு வெறும் சந்தையாக மட்டும் சுருங்கிவிட்டது… வளங்களை சுரண்ட, பொருட்களை விற்க மட்டும்தான் இந்த திராவிட நிலப்பரப்பு அவர்களுக்குத் தேவை. நம்மை கொண்டு பணத்தை விளைவித்து பத்து மடங்காக அறுவடை செய்கிறார்கள். தேசப் பற்றின் பெயரால் உணர்வுகளை தூண்டி, நம்மை சுரண்டி அவர்கள் கொழுக்கிறார்கள்." என தனது பணத்தோட்டம் புத்தகத்தில், கடல் கடந்து வணிகம் செய்த தங்களினத்தின் சிறப்புகளை மறந்து போன தமிழர்களின் நெஞ்சம் உறைக்கும் வண்ணம் எடுத்துரைக்கிறார். வடநாட்டு முதலாளிகளின் சுரண்டல் தன்மைகளைப் பட்டியலிடுகிறார்.

"மக்களின் சுக துக்கங்களோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசு தானே தவிர, மத்திய அரசு இல்லை. குடிசைப் பகுதியில் தீப்பற்றியதும் மூன்றாவது மாடியிலுள்ள சீமான் "ஏதோ கரும்புகை தெரிகிறதே, தீ விபத்துப் போலிருக்கிறதே!” என்று கூறுவானே, அதைப் போன்ற அக்கறை தான் மத்திய அரசின் அக்கறை. ஆனால் குடிசைப் பகுதியில் தீப்பற்றியதும் பதறித் துடிப்பது யார்? அந்தக் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள குடிசைவாசிதான். அதைப்போல் மாநில அரசு தான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியது." - பேரிடர் காலங்களில் கூட நம்மிடமிருந்து சுருட்டுவதிலும், மாநில உரிமைகளைப் பறிப்பதிலும், ஒரே, ஒரே மொழி, ஒரே தேர்தல் என நீளும் ஒற்றையாட்சிகளில் செலுத்தும் கவனத்தில் ஒரு துளி கூட மாநில மக்களின் மேல் அக்கறை காட்டியதில்லை ஒன்றிய அரசு. பேரிடர் காலத்தில் கேட்கும் இழப்பீட்டுத் தொகைகளிலும் கைவிரிக்கிறது. மாநில அரசின் வரி வருவாயைக் கேட்டால் கூட கைவிரிக்கிறது.

இவ்விதம் தொடர்பு அதிகாரங்களின் மேலதிகாரம் அனைத்தும் டில்லியில் இருப்பதை மாற்றிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்தது! “மாநில சுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையைத் தவிர, அரசியல் கட்சிக் கோரிக்கை அல்ல" - இந்த தன்னாட்சித் தத்துவத்தை செதுக்கியவர் தான் அண்ணா.

ஒரு தனி மனிதனுக்கு சுயமரியாதை எந்த அளவுக்கு முக்கியமானதோ, அந்த அளவிற்கு ஒரு இனத்திற்கு சுயநிர்ணய உரிமை என்பதும் முக்கியமானது என நினைத்தவர் அண்ணா. அரசியல், சமூக, பொருளாதாரம், பண்பாடு போன்ற அனைத்திலும் அதிகாரமும், ஆதிக்கமும் எழும்பிய திசை வழிகளை நோக்கி தனது கருத்துக்களை அம்புகளாக எய்து கொண்டேயிருந்தவர் அண்ணா. மாநில உரிமைகள் பறிக்கப்படும் பொழுதெல்லாம் தமிழ் நாட்டிலிருந்து முதலில் எழும்பும் ஜனநாயக் குரல்களைப் பற்றியே மற்ற மாநிலங்களும் குரல் எழுப்பும் அளவுக்கு தன்னாட்சி தத்துவத்தை வலுவான கருத்தியல்களால் வடிவமைத்த பேரறிஞரே அண்ணா.

- மே பதினேழு இயக்கம்

Pin It