தமிழகம் முழுதுமிருந்தும் தோழர்கள் திரளுகிறார்கள்

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் தலைவிரித்தாடும் சாதி தீண்டாமை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக 1000 குடங்களில் தண்ணீர்  பிடிக்கும் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் வரும் 27 ஆம் தேதி நடத்துகிறது. செய்தி விவரம்: 

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடு கிறது. அரசு பொதுக் குளங்களில் தண்ணீர் எடுக்க முடியாது; தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை; தலித் மக்கள் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய முடியாது; இப்படி பல்வேறு வடிவங்களில் நிலவி வரும் தீண்டாமையைக் கண்டித்து, கடந்த மாதம் 21.5.2004 அன்று அன்னூரில் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தீண்டாமை கொடுமை நிலவும் கிராமங்களின் பட்டியலையும், தீண்டாமை வடிவங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. குறுக்கிளையான் பாளையம் கிராமத்தில் பொதுக் குழாய்களில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க முடியாத நிலையும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து கடந்த 12.6.2011 அன்று மாலை 5 மணியளவில் குறுக்கிளையான் பாளையம் கிராமத்தில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க, நல்லிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற தலித் சிறுவன் சென்றபோது, அப்பகுதியைச் சார்ந்த ஆதிக்கசாதியைச் சார்ந்த மூன்று பெண்கள், தண்ணீர் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுக் குழாயில்தானே தண்ணீர் பிடிக்க வந்தேன் என்று அச்சிறுவன் கேட்டதற்கு, அப் பெண்களுடன் தாமோதரன் செட்டியார் என்பவரும் சேர்ந்து கொண்டு, தலித் சிறுவனைத் தாக்கியுள்ளனர். மாலை 5 மணிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்த கழகத் தோழர்கள் உடனடியாக அன்னூரில் குற்ற வாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அடுத்த இரண்டு மணி நேரத்தில் இரவு 7 மணியளவில் அன்னூரில் சாலை மறியலில் இறங்கினர். அன்னூர் ஒன்றிய செயலாளர் ஈசுவரன், ஒன்றிய அமைப்பாளர் ஜோதிராம், ஒன்றிய பொருளாளர் ராமன், வழக்கறிஞர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராசு, வழக்கறிஞர் அலெக்சு, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பல கழகத் தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர சாலை மறியலுக்குப் பிறகு காவல்துறை கழகத்தோழர்களை கைது செய்து வேன்களில் ஏற்றியது. கைது செய்த தோழர்களை காவல் நிலையம் கொண்டு போய் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறை யினர் சமாதானம் பேசினர். வழக்கு பதிவு செய்யாத வரை, போக மாட்டோம் என்று தோழர்கள் உறுதியாக தெரிவித்த நிலையில், நள்ளிரவு ஒன்றரை மணியளவில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரவில்லை. 

அடுத்த நாள் கழக மாவட்ட செயலாளர் நாகராசு தலைமையில் கழகத் தோழர்கள், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். புகார் மனுவில் நடந்த சம்பவங்களை விளக்கி, குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரியிருந்தனர். இந்த மனுவில் அடங்கியுள்ள செய்தியை நாளேடுகள் வெளியிட்டன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் செய்தியாளர் சுப்புராஜ் என்பவரை பாதிக்கப்பட்ட தலித் சிறுவன் வசந்த்குமாரை சந்திக்க வைத்து விரிவான பேட்டிக்கும் தோழர்கள் ஏற்பாடு செய்தனர். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு அந்த செய்தியை கடந்த 14 ஆம் தேதி விரிவாக வெளியிட்டது. செய்தியைப் பார்த்த தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன் வந்து - இதை புகாராக ஏற்றுக் கொண்டு, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது: 

“கோவை மாவட்டத்தில் குறுக்கிளையான் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீண்டாமை கொடுமைகள் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக் குறை நிலவுவதாகவும் தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் தலித் மக்கள் முடிவெட்டும் நிலையங்களில் முடிவெட்ட முடியாது என்றும், குடிசைகளுக்கு வெளியே செல்பேசிகளைப் பயன்படுத்தவும் தடை இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இது பற்றி தமிழக அரசு விசாரணை நடத்தி நான்கு வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பவேண்டும்” என்று ஆணையிட்டுள்ளது. 

இந்த நிலையில் குறுக்கிளையான் பாளையத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க தடைவிதிக்கும் தீண்டாமைக்கு எதிராக வரும் 27.6.2011 அன்று ஆயிரம் குடங்களில் தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை கழகம் அறிவித்துள்ளது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடக்கும் போராட்டத்தில் வழக்கறிஞர் பாப்பா மோகன், பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட மனித உரிமையாளர்களும் தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் பங்கேற்கிறார்கள்.