கேள்வி: தமிழின் பின்நவீனத்துவ எழுத்தாளர்களாகிய நீங்கள், உலக அளவிலுள்ள தத்துவார்ந்த விசயங்களையும் நுட்பங்களையும் கற்றுணர்ந்து வந்துள்ளீர்கள். தமிழின் சிந்தனைத் தளத்திலும் புத்தர், அம்பேத்கர், பெரியார் குறித்தெல்லாம் விவாதித்தும் எழுதியும் வருகிறீர்கள். சமீபகாலமாக பெரியார் குறித்த கடும் விவாதங்கள் புயலைக் கிளப்புகின்றன. பெரியார் குறித்த உங்களது விமர்சனப் பார்வையை இந்தத் தருணத்தில் முன்வைப்பதுதானே சரியானது?

ரமேஷ் - பிரேம் பதில்: பெரியார் ஈ.வெ.ராமசாமியை விமர்சித்து ஒதுக்கும் அளவுக்கு எங்களுக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவியோ அரசியல் தலைவரோ இதுவரை உருவாகவில்லை. தமிழ் அறிவுச்சூழலும் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வேறு தளத்திற்குச் சென்றுவிடவில்லை.

Periyarபெரியார் தமிழரல்ல. தமிழகத்திலுள்ள யாதொரு சாதியையும் சேர்ந்தவருமல்ல. அவருடைய குரல் வந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒலித்ததே இல்லை. இந்தவிதத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இவருக்கு உதாரணமாகச் சொல்ல வேறு ஆள் இல்லை.

பெரியார் பேசியது ஒட்டுமொத்தத் தமிழருக்கு ஒட்டுமொத்தத் திராவிடருக்கு. அவர் தலித்துகளுக்கு எதிரானவராகவும் பெண்களுக்கு எதிரானவராகவும் ஒரு சிலரால் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அபத்தமானவை. இதை பெண்களே எதிர்க்கிறார்கள். சமீபத்தில் கவிஞர் மாலதி மைத்ரி தனது ‘விடுதலையை எழுதுதல்’ கட்டுரைத் தொகுப்பை பெரியாருக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.

இன்று பெரியாருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் யாவும் பெரியாருடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளே. பெரியாருடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளே. இந்தக் கருத்துக்கள் அவருடைய வெளிப்படையான ஒளிவு மறைவற்ற எழுத்துக்களிலிருந்தே தொகுத்தும் திரித்தும் எடுக்கப்படுகின்றன. பெரியாரே வெளிப்படையாகத் தன்னைத் திறந்து காட்டிய பிறகு அவருடைய கூற்றிலிருந்தே எடுத்து அவரை பாலியல் ஒழுக்கமற்றவர் எனக் கூறுவது அபத்தமானது.

பெரியார், தமிழ் பின்நவீனவாதி. கடல் போல பேசியும் எழுதியும் செயல்பட்டுமிருக்கிறார். அவரது மிகப்பெரும் சிந்தனா வாழ்வின் ஒவ்வொரு வாக்கியத்தையும் காலவரிசைப்படி பொருள் கொள்ளவேண்டும். அதைத் தவிர்த்து வரலாற்றுப் புரட்டலில் ஈடுபடும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளால் ஒரு சமூகக் குற்றத்தைத்தான் செயல்படுத்த முடியும். ‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ இப்படி யாரும் உலக அளவில் தன்னை நிராகரித்தவரில்லை.

பெரியார் கோட்பாட்டளவில் மட்டுமே செயல்பட்ட ஒரு மனிதர். அவர் ஆசைப்பட்டிருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராகியிருப்பார். ஆனால் அவரோ ஒரு நாடோடிச் சிந்தனாவதி. பார்ப்பனீயத்தைக் கட்டுடைத்ததில் அண்ணல் அம்பேத்கருக்கு இணையானவர். பார்ப்பனீயமே இந்தியப் பாசிசம் எனப் பரந்துபட்ட மக்களைப் பேச வைத்தவர் பெரியார். அவருக்கு நிகரான வேறொரு ஆளுமை இன்றுவரை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. பெரியாருக்கு மட்டுமே சாதியழிந்த தமிழ்த் தேசியம் முதல் கனவாகவும் அதுவே எல்லாருடைய இறுதிக் கனவாகவும் இருந்தது. இருக்கிறது. தலித்துகளை ஆட்கொண்டது பெரியார். தலித்துக்கள் ஆட்கொண்டது எம்.ஜி.ஆரை. இன்றுவரை தலித் அறிவுஜீவிகளை எம்.ஜி.ஆருக்கு எதிரான சொல்லாடல்களை ஏன் உருவாக்கவில்லை? எம்.ஜி.ஆரிடமிருந்து தலித்துக்களை எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள்?

பெரியாரைக் குறித்துக் கடும்புயல் ஏதும் வீசவில்லை. பெரியார், தலித்துகளுக்கு எதிரானவர் என்றும், அவர் பெண்களை மதிக்காத ஒழுங்கினர் என்றும் பேசப்படுகின்றன. இரண்டொருவர் இப்படி பெரியார் மீது அவதூறுகளைச் சுமத்தி தங்களை பரபரப்பான ஒரு வியாபாரப் பொருளாக மாற்ற முனைகிறார்கள். 

(நன்றி - உன்னதம்)

-ரமேஷ் - பிரேம்

Pin It