இந்திய அரசமைப்புச் சட்டம் அரைக்கூட்டாட்சி சட்டமாகத்தான் உருவானது. இந்த அரைக் கூட்டாட்சி முறைமையையும் கருவிலேயே சிதைக்கும் செயல்கள் கடந்த 66 ஆண்டுக்காலமாக அரங்கேறி வருகின்றன. 1950ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் கல்வி, பொதுச் சுகாதாரம், வேளாண்மை போன்ற மக்களுடன் நேரடியான தொடர்புடைய பல அதிகாரங்கள் மாநிலப் பட்டியலில் இணைக்கப்பட்டன. கல்வியும், பொதுச் சுகாதாரமும் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் பல அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. இட ஒதுக்கீடு கொள் கையும் பின்பற்றப்பட்ட காரணத்தினால் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அனைத்துப் பிரிவினரும் மருத்துவர் களாக உயர்ந்தனர். இன்றைக்கும் மருத்துவ வல்லுநர்களாகத் தமிழகத்திலும் இந்தியாவிலும் வலம் வருபவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரே என்பது குறிப்பிடத்தக்கது.
இடஒதுக்கீடு கொள்கை நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு 1927லிருந்து கல்வி, வேலை வாயப்புகளில் வழங்கப்பட்டு வந்ததன் காரணமாகத் தமிழ்நாடு மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் முதன் மூன்று இடங்களில் 1980 முதல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மருத்துவத் துறையில் பல அரிய சாதனைகளைத் தமிழ்நாடு படைத்துள்ளது. தொடக்க சுகாதார மையங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருந்து வருகிறது. தாய்மையடைந்தவர்கள் மகப்பேறுக்காக அரசு மருத்துவமனைகளில் தான் சேர்ந்து வெற்றிகரமாகச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று அகில இந்திய அளவில் பல வல்லுநர் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன. 98 விழுக்காடு குழந்தை பெறுவது அரசு மருத்துவமனை களில்தான் என்பதையும் இக்குழுக்கள் சுட்டி வருகின்றன.
ஊட்டச்சத்து அளித்து குழந்தைகளுக்குச் சத்துணவைப் பள்ளிகளில் வழங்கி குறைபாடுகள் இல்லாமல் குழந்தைகள் தமிழ்நாட்டில்தான் வளர்ந்து வருகிறார்கள் என்பதை அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார். மேலும் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாகவும் அதற்கு மேலாகவும் மருத்துவ வசதிகள் மக்களுக்குத் தமிழ்நாட்டில்தான் வழங்கப்படுகின்றன என்பதையும் சுட்டியுள்ளார். குஜராத் மாநில முதல்வராக பிரதமர் மோடி மூன்று முறை பதவி வகித்த போதும் குழந்தைகளுக்குத் தடுப்பு ஊசி முறையாக வழங்காத காரணத்தினால் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆங்கில வார ஏட்டிற்கு அண்மையில் அளித்த பேட்டியில், சென் குறிப்பிட் டுள்ளார். தமிழ்நாடு தடுப்பு ஊசி வழங்குவதில் ஏறக்குறைய 100 விழுக்காடு வெற்றியடைந்துள்ளது. குழந்தைகளுக்கு வரும் போலியோ என்கிற இளம் பிள்ளைவாத நோயை தமிழ்நாடு முற்றிலும் ஒழித்து விட்டதாக இந்திய அரசு அறிக்கையில் ஒப்புக்கொள் ளப்பட்டுள்ளது.
இதற்கு முதன்மையான காரணம் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதே ஆகும். 2007 ஆண்டிற்குப் பிறகு மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வைக் கலைஞர் ஆட்சியில் நீக்கிய பிறகு ஊர்ப்புறங்களில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் 30 விழுக்காட்டிற்கு மேல் இடம் பெற்று வருகின்றனர் என்பது சமூக நீதிக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் வழியாகச் சமூக நீதி வெற்றி பெறுவதைத் தடுப்பதற்கும் கடந்த 66 ஆண்டுகளாக பல சதிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவ நெறிக்கு இட ஒதுக்கீடு முறை எதிராக அமைந்துள்ளது என்று கூறி, 1950ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரி யில் இடம் பெறாத இரு பார்ப்பன மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தனர். `சண்பகம் துரைராசன் வழக்கு என்று இதனைக் குறிப்பிடுவார்கள். உயர் நீதிமன்றம் இடஒதுக்கீட்டைக் கடைபிடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. அன்றைய காங்கிரசு அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.தாஸ் என்பவர் மத, இன மற்றும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வது இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள பிரிவு 29(2)இல் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, வகுப்புவாரி அரசு ஆணை செல்லாது என்ற தீர்ப்பினை அறிவித்தார்.
தமிழர்களின் உரிமைப் பட்டயமான இந்த ஆணை செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், திராவிடர் இயக்கப் பெருந்தலைவர் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் போராட்டக் களத்தில் இறங்கினர். காங்கிரசுத் தலைவர் காமராசரும் திராவிட இயக்கத் தலைவர்களின் கோரிக் கைக்கு ஆதரவு தெரிவித்தார். முதலில் மறுப்பு தெரி வித்த பிரதமர் நேரு இந்திய அரசியல் சட்டத்தில் 1951ம் ஆண்டு முதலாவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். சமூகத்திலும் கல்வியிலும் பார்ப்பனரல்லதார்க்கு நீதிக் கட்சி வழங்கிய உரிமையும்; காங்கிரசு ஆட்சி முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோர்க்கு 1947இல் வழங்கிய இடஒதுக்கீடும் தமிழ்நாட்டில் நிலை நிறுத்தப்பட்டன. போராடிப் பெற்ற இந்த அரசியல் சட்டத்திருத்தத்தின் வழிதான் மருத்துவக் கல்லூரிகளில் 69 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை மாணவர்கள் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இடஒதுக்கீடு கொள்கை தகுதியைத் தகர்த்து வருகிறது என்று குறை கூறுபவர்கள் மருத்துவப் படிப்பிற்கான தகுதிகாண் தேர்வு மதிப்பெண்களைத் திட்டமிட்டே மறைத்து வருகின்றனர்.
மருத்துவச் சேர்க்கைக்கான பொதுப்பட்டியலில் 200-199 மதிப்பெண் பெறுகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் 199-198; மிகப்பிற்படுத்தப்பட்டோர் 198-197; தாழ்த்தப்பட்டோர் 196-194; பழங்குடியினர்; 190-188; மதிப்பெண்கள் என உச்ச மதிப்பெண்கள் பெற்றுத்தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் அரசியல் குறுக்கீடுகள் ஊழல் இல்லாமல் வெளிப்படையாக நடைபெற்று வருவது இந்த மருத்துவச் சேர்க்கைத்தான் என்பதை அனைவரும் அறிவர். படிப்படியாக ஒடுக்கப்பட்ட சமூகத் தினர் மருத்துவத்துறையில் உயர்ந்து வரும் நிலையைச் சிதைக்க முற்படுவது இந்திய ஒருமைப்பாட்டையே குலைக்கும் செயலாகும். பிற்படுத்தப்பட்டோர்; மிகப் பிற்படுத்தப்பட்டோர்; தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்கள் மீது பாராங்கல்லைத் தூக்கித் தலையில் போடுவதற்கு ஒப்பானதாகும்.
நடுவண்அரசு நடத்தி வரும் மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வு முழுக்க முழுக்க மாநிலங்களின் உரிமைகளையும் ஏழை எளிய மக்களின் கல்வி உரிமைகளையும் பறிக்கின்ற மிக பயங்கரமான பாதகச் செயலாகும். இந்த மருத்துவ நுழைவுத் தேர்வில் புதுதில்லியில் உள்ள (AIIMS) அகில இந்திய மருத்துவக் கழகப் பட்டப்படிப்பு முதுநிலைப் பட்டப்படிப்பு, சண்டிகரில் உள்ள நடுவண் அரசின் மருத்துவக் கல்லூரியின் முதுநிலைப் பட்டப்படிப்பு, பாண்டிச்சேரியில் உள்ள ஜவகர் லால் நேரு மருத்துவக் கல்லுரி நடத்தும் பட்டப்படிப்பு முதுநிலை பட்டப்படிப்பு ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மாநில அரசுகள் நடத்தும் மருத்துவக் கல்லுரிகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையென்றால், இத்தேர்விலும் நடுவண் அரசின் ஆணவப் போக்கும் மாநில அரசுகளைக் கீழ் நிலைகளில் நடத்தும் சர்வாதிகாரப் போக்கும் இணைந்துள்ளன என்பதே உண்மை. புது தில்லியில் ஆட்சி செய்யும் கெஜ்ரிவால் போன்றவர்கள்கூட தில்லி மாநிலத்திற்கு உரிமையைக் கோரி மாநிலத்திற்கான சட்டவரைவினை வெளியிடுகிறார்கள். ஆனால் புது தில்லியில் உள்ள நடுவண் அரசின் மருத்துவக் கல்லூரிக்கு ஏன் நுழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று அவர் கேட்கவில்லை. இதற்கு காரணம் கெஜ்ரிவாலும் ஆதிக்கச் சக்திகளின் கைக்கூலியாகச் செயல்பட்டு இடஒதுக்கீடு கொள்கையை எதிர்ப்பதே ஆகும்.
உச்ச நீதிமன்றம் 1996ஆம் ஆண்டு ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 24.8.2001 அன்று அளித்த தனது தீர்ப்பில்- அகில இந்திய மருத்துவக் கழகம் (AIIMS) முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வில் நடத்திய தில்லுமுல்லுகளைச் சுட்டிக் காட்டியுள்ளது. அதன்படி தில்லி உயர் வகுப்புப் பிரிவினைச் சார்ந்த உயர் அலுவலர்கள் தங்கள் பிள்ளைகளுக்கே அனைத்து இடங்களையும் ஒதுக்கிக் கொண்டார்கள். அந்தக் கல்வி நிறுவனத்தில் உயர் மருத்துவப் பட்டப்படிப்பில் 33 விழுக்காட்டு இடங்களை யும் தங்களுக்கே ஒதுக்கிக் கொண்டார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அகில இந்திய மருத்துவக் கழகம் 1956இல் குறிப்பிட்டுள்ள (AIIMS Act, 1956) உயர் குறிக்கோள்களுக்கு மாறாக, தகுதி திறமைகளை முழு மையாகப் புறக்கணித்தும் தொடர்ந்து பல ஆண்டுகள் இந்த உயர் பட்டப் படிப்புகளை உயர் வகுப்பினர் பெற்ற தையும் இந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி 33 விழுக்காட்டு அளவிற்கு AIIMSஇல், AIIMS படித்த மாணவர்களுக்கே ஒதுக்கிக் கொண்டு, மொத்தமுள்ள 120 இடங்களில் 40 இடங்களை AIIMS மாணவர்கள் பெற்றார்கள். அதாவது நுழைவுத் தேர்வு எழுதிய AIIMS மாணவர்கள் 40 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த உயர்வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தாழ்த் தப்பட்ட மாணவர்களைவிடக் குறைந்த மதிப்பெண் களைப் பெற்றாலும் தனி ஒதுக்கீட்டில் இவர்கள் 100 விழுக்காடு அளவில் இடம் பெற்றனர். இவர்களைவிட நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த் தப்பட்ட மாணவர்கள் உயர் மருத்துவப் படிப்பில் சேர இடம் தரப்படவில்லை என்பதைப் பல புள்ளி விவரங் களோடு தனது தீர்ப்பில் உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டி யுள்ளது (Supreme Court of India, Civil Appellate Jurisdiction, Civil Appeal No.736 of 1996). தகுதி திறமை என்ற பெயரில் எப்படியெல்லாம் தில்லுமுல்லுகளை 1978ஆம் ஆண்டு முதல் செய்து பல நூற்றுக்கணக்கான உயர் பட்டப் படிப்புகளைப் பெற்றுள்ளார்கள் என்பதையும் இத்தீர்ப்பின் மூலம் உணர முடிகிறது.
சமூக நீதிக் கொள்கையில் முழு நம்பிக்கையை வைத்திருக்கும் பாமகவின் மருத்துவர் அன்புமணி ராமதாசு 2009இல் நடுவண் அரசில் பொதுச் சுகா தாரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய போது, அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (AIIMS) 2009 ஆண்டிற்கான நுழைவுத் தேர்விற்காக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் இடஒதுக்கீடு கொள்கை முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டது. இந்த விளம்பரத்தைக் கண்ணுற்ற இக்கட்டுரையாசிரியர் “முரசொலி” நாளிதழில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு இடையூறா? என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதினார். இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற மருத்துவர் அன்புமணி விளம்பரத்தைத் திரும்பப் பெற்று மீண்டும் இடஒதுக்கீட்டுடன் கூடிய விளம்பரத்தை வெளியிடச் செய்தார். 2005இல் இதே துறையில் நடுவண் அரசு நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கான கேள்வித்தாள்கள் திட்டமிட்டே சிலரின் நன்மைக்காகச் சிலரால் வெளியிடப்பட்டன என்பதை மருத்துவர் நா.எழிலன் நடுவண் அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாசிடம் ஆதாரங்களை அளித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் ஆந்திர மாநிலத்தின் மூத்த மருத்துவப் பேராசிரியர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று 1999இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சுஷ்மா சுவராஜ் அமைச்சராகவும், திமுகவைச் சார்ந்த ஆ.ராசா இணை அமைச்சராகவும் இருந்தபோது பீகார் மாநிலத்தில் நடுவண் அரசு நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் கேள்வித்தாள்கள் தேர்வுக்கு முன்பாகவே வசதி படைத்த மாணவர்களுக்குக் கிடைத்தன. அப்போதும் சிபிஐ விசாரணை நடைபெற்று மீண்டும் பீகார் மாநிலத்திற்கு மட்டும் மறுதேர்வு நடைபெற்றது.
இது போன்று அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அமைப்பு, பொது நுழைவுத் தேர்வை நடத்தும் அதிகாரக் குவிப்பால் பல மோசடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு நடந்த போதும் 2007க்குப் பிறகு நுழைவுத் தேர்வுகள் இல்லாமல் 12ஆம் வகுப்பு மதிப் பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றபோதும் ஒரு சிறிய தவறு கூட நடைபெறவில்லை என்பதுதான் உண்மையாகும். இதற்கு முதன்மைக் காரணமாக அமைவது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைத் தமிழ்நாட்டு அரசால் வெளியி டப்படும் சேர்க்கைப் பட்டியலோடு ஒப்பிட்டு, மாநில அரசிடமிருந்து தீர்வினைக் காண முடியும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்து வக் கல்லூரிகளில் நடுவண்அரசு 15 விழுக்காடு அளவில் இடங்களைப் பெற்று, தாங்கள் நடத்தும் தேர்வின் வழியாக அகில இந்திய அளவில் மாணவர்களை இடம் பெறச் செய்கிறது. இத் தகைய அகில இந்திய ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த ஆந்திர மாநில அரசும் மகாராட்டிர அரசும் ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் மாநில மாணவர் களையே மருத்துவப் படிப்பில் சேர்க்கின்றன.
நடுவண் அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் அகில இந்திய மருத்துவ வாரியம் மாநில அரசுகள் நடத்தும் கல்லூரிகளுக்கும் தனியார் நடத்தும் கல்லூரி களுக்கும் அங்கீகாரம் செய்வதற்கு உரிமையைப் பெற்றுள்ளது. மாநில அரசு நடத்தும் கல்லூரி களுக்குக் கடுமையான விதிமுறைகளைப் பின் பற்றிப் புது மருத்துவக் கல்லூரிகளைத் தொடங் குகிற போது பல விதிகளைக் காட்டி அனுமதியை மறுக்கும் அல்லது தள்ளிப்போடும் அணுகு முறையைப் பின்பற்றி வருகிறது. ஆனால் தனியார் கல்லூரிகளுக்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த வாரியம் அனுமதியை அளித்து வருகிறது. இவ்வாரியத்தின் தலைவராக இருந்த கேத்தன் தேசாய் வீட்டில் 1500 கோடி ரூபாய் பணமும் ஒன்றரை டன் தங்கமும் பிடிபட்டது. இன்றுவரை அவர் சிறைக்குச் செல்லாமல் உலக அளவில் உள்ள மருத்துவக் குழுவில் போட்டியிடுவதற்கு முயன்று வருகிறார் என்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட கொடுஞ் செயல்களைக் கடும் தண்டனை வழியாகத் தடுக்காமல், வெளிப்படையான, கேவலமான ஊழலை உயர்த்தி பிடிக்கும் நடுவண் அரசு, மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுவது வெட்கம் கெட்டச் செயலாகும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நடுவண் அரசின் நுழைவுத் தேர்வின் வழியாக மாணவர்களைச் சேர்க்க முற்பட்டால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் 46 விழுக்காட்டு அளவு இடங்களை விட்டுக் கொடுக்க நேரிடும் என்று குறிப்பிடப்படுகிறது.
ஏழை எளியோர் நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பதும் நோய்களின் சுமையோடும் பொருளாதார நலிவோடும் வாழ்வதையும் சுட்டிக்காட்டி இந்திய மக்களின் நல வாழ்விற்காகப் புதிய பொதுச் சுகாதாரக் கொள்கையை நடுவண் அரசு வெளியிட வேண்டும் என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கே.எஸ். ஜேக்கப் என்ற ஆய்வாளர் (மார்ச் 19-2016 EPW) இதழில் இந்தியாவில் மருத்துவக் கல்வி அரசியல் என்ற கட்டுரையைத் தீட்டியுள்ளார். இக்கட்டுரையில் இந்தியா வினுடைய மருத்துவக் கல்வி முறை திறமையையும் தேவையானவர்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை வழங்குவதில் முழுஅளவில் தோற்றுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். தரமான ஆசிரியர்கள், தரமான கற்றல் முறை, ஆய்வை ஊக்குவித்தல் மாநில அளவில் உள்ள உண்மைகளை அறிந்து கொள்ளாமல் இருத்தல் போன்ற காரணங்களையும் சுட்டியுள்ளார். அகில இந்திய மருத்துவ வாரியம் (All India Medical Council) ஊழல் காரணங்களுக்காகக் கலைக்கப்பட்டு தற்காலிக அமைப் பாக இயங்குவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவிக்கும் போக்கும் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார். புரையோடிப்போன அரசியல் ஊழ லோடு மருத்துவ ஊழலும் இணைந்து மருத்துவக் கல்வியைத் தரைமட்டமாக ஆக்கிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். மோடி அரசால் 2015இல் வெளியிடப் பட்ட புது மருத்துவக் கொள்கை புதிதாக முற்போக்கான அணுகுமுறைகளை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியா, பொது மருத்துவத் துறைக்காக மொத்த நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காட்டு அளவிற்குக்கூட பொதுச்செலவினை மேற்கொள்ளாத நிலையில் திறன்படச் செயல்படும் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவ அமைப்பு முறைகளையும் இந்தத் தேசிய நுழைவுத் தேர்வுமுறை சிதைத்துவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் சிறந்த நெறி என்று இந்தியாவின் முதலாவது பிரதமர் நேரு குறிப்பிட்டார். நடைமுறையில் வேற்றுமை என்பது பல மொழிகள் பல இனங்கள் பல பண்பாட்டு முறைகள் பல மருத்துவ முறைகள் என் பதைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சான்றாக தமிழ் சித்த மருத்துவம் தமிழ்நாட்டில் அரசின் சார்பில் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. ஆங்கில மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை முறைபோன்றே சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கும் மேனிலைப் பள்ளி மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தாம்பரத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் தேசிய சித்த மருத்துவக் கல்லூரியும் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் சித்த மருத்துவ முறையைப் பின்பற்றி நோய்களுக்கான மருந்துகளும் வழங்கப்படுகின்றன. மறைந்த மருத்துவ மேதை தெய்வநாயகம் ஆங்கில மருத்துவமுறையில் சிறந்த வல்லுநராக இருந்த போதும், சித்த மருத்துவ முறையைப் போற்றினார். சித்த மருத்துவத்தின் வழியாகக் கொடிய உயிர்க் கொல்லி நோயான எய்ட்சு நோயைக் கட்டுப்படுத்துவதில் பல சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வெற்றி காணப்பட்டது.
கொடிய காய்ச்சல்களான சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல், டெங்கு நோய்களுக்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச் சாறு போன்ற சித்த மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டுத் தமிழ்நாடு வெற்றியும் கண்டு வருகிறது. ஆங்கில மருத்துவ உற்பத்திக் குழுமங்கள் நிலவேம்பு மாத்திரைகளையும் பப்பாளி இலைச் சாற்றினையும் உற்பத்தி செய்து பல கோடி இலாபத்தை ஈட்டியுள்ளன. எதிர்காலத்தில் ஆங்கில-சித்த மருத்துவ முறைகளை உயர் ஆய்வின் வழியாக இணைத்து ஆங்கில மருத்துவப் பட்டப்படிப்பில் ஒரு பாடத்திட்டமாக இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்குத் தமிழ் மொழியை அறிந் திருப்பதும் கற்றிருப்பதும் அவசியமாகிறது. இவ்வாறு பன்முகத் தன்மையை உள்ளடக்கிய மருத்துவக் கல்வி முறையை அகில இந்தியஅளவில் தேர்வு நடத்தி, மருத்துவ அறிவைச் சிதைக்கும் செயல் இந்திய ஒற்று மையைக் குலைக்கும் ஒரு பயங்கரவாதச் செயல் என்றே இதைக் குறிப்பிடலாம்.