மீண்டும் அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது இந்திய உச்ச நீதி மன்றம். உயர் கல்வியில் உடனடியாக இடஒதுக்கீட்டை விலக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளைச் சிந்திக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது.

supreme court 255கடந்த 27 ஆம் தேதி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கான வழக்கு ஒன்றில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி. பந்த் ஆகியோர் மேற்காணும் பரிந்துரையை முன் வைத்துள்ளனர். இந்தியா விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆன பின்னும், இட ஒதுக்கீடு வழங்குவது, தேச முன்னேற்றத்திற்கு நல்லதன்று என்னும் குறிப்பை அளித்துள்ளனர்.

1988 ஆம் ஆண்டு அளிக்கப்பட இரண்டு உச்ச நீதி மன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டியுள்ள அவர்கள், இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் ஏன் அந்தப் பரிந்துரைகள் ஏற்கப்பட வில்லை என்று கேட்டுள்ளனர். இட ஒதுக்கீடு என்பது கால காலத்திற்கும் ஆனதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது முதல் முறையன்று.  குறிப்பிட்ட சில ஆண்டுகளின் இடைவெளியில், நீதிமன்றங்கள் இப்படிக் கேள்வியை கேட்டுக்கொண்டேதான் உள்ளன.

எத்தனை நாளுக்குத்தான் இடஒதுக்கீடு கேட்பீர்கள் என்று கேட்டுச் சலித்துக் கொள்ளும் நீதிமன்றங்கள், ஒரு நாளும், இந்தச் சாம் ஊகத்தில் எத்தனை நாள்களுக்குத்தான் சாதி இருக்கும் என்று கேட்டு ஒருநாளும் சலித்துக் கொண்டதில்லை. 

இடஒதுக்கீட்டினால் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்னும் ‘பழைய’ பொய்யை மத்தியில் ஆளும் கட்சியும் இப்போது விதைக்கத் தொடங்கியுள்ளது.

இவைகள் மக்கள் மன்றத்தால் பலமுறை நிராகரிக்கப் பட்டுள்ளன. இன்றும் பீகாரில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு நிலையைத் தேர்தலில் இட ஒதுக்கீடு பற்றிய அக்கட்சியின் நிலைப்பாடு உருவாக்கியுள்ளது,

சாதிகள் இருக்கும் வரை, இந்நாட்டில் இடஒதுக்கீடும் இருந்தே தீர வேண்டும் என்பதுதான் சமூக நீதி.

 

Pin It