மாக்சிம் கார்க்கி என்னும் சோவியத் எழுத்தாளர் எழுதிய `மூவர்’ என்னும் புதினத்தை அண்மையில் படிக்க நேர்ந்தது.
அதில், அக்டோபர் புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில் நீதிமன்ற நடவடிக்கைகள் எப்படி இருந்தன என்பதை சமூக அவலங்களால் அலைக்கழிக்கப்பட்ட இருவர் பேசிக் கொள்கிறார்கள்.
“மொத்தத்தில் பெரும்பாலான வழக்குகளில் நீதி என்று சொல்லப்படுகிற எல்லாமே நாடகமாகத்தான் இருக்கு. எல்லாம் ஒரே மோசடி. நல்லா தின்னு கொழுத்தவங்க தங்களுடைய மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறதுக்காக வழக்குகளை எடுத்துக்கிறாங்க. நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் அது ஒரு நல்ல பொழுதுபோக்குத்தான். வழக்கறிஞர்களுக்காவது தொழில் முறையில் தாங்கள் எடுத்துக் கொண்ட வழக்கு வெற்றி பெற வேண்டுமே என்கிற ஆர்வம் இருக்கும். நீதிபதிகளுக்கோ, வழக்கில் யார் வென்றாலும் யார் தோற்றாலும் இரண்டுமே சலிப்பைப் போக்கிக் கொள்ள உதவும் தமாஷ்தான்.
சில நேரங்களில் வழக்கை விட நேற்றிரவு கேளிக்கை விடுதியில் நடந்த சம்பவங்களில் மூழ்கிவிடுவார்கள். பாதிரியாரின் வைப்பாட்டி நன்றாகத்தான் குலுக்கினாள்... என்று பல நினைவுகள். திடுமென விழித்துக் கொண்டு, வழக்குக்கு வந்து பசியோட கிடக்கிறவங்களுடைய தவறான போக்குகளைத் திருத்துகிறதுக்கு முயற்சி செய்வாங்க.
என்னுடைய பெரும்பகுதி நேரத்தை நீதிமன்றத்தில் செலவழித்திருக்கிறேன். ஆனால், தின்று கொழுத்தவங்களைப் பசித்துத் துடிப்பவர்கள் கண்டனம் செய்கிற வழக்கை நான் பார்த்ததே இல்லை. தின்று கொழுத்தவர்களுக்குள் ஒருவரைக் கண்டிக்கிற மாதிரி நடந்தால் அது அவர்களுக்குள் இருக்கிற பொறாமையால் செய்யப்பட்டதுதான்.
அவர்களில் ஒருவன் தண்டிக்கப்பட்டால் ``நீ ஒருவனே எல்லாவற்றையும் சுரண்டிடக் கூடாது; எங்களுக்கும் ஏதாவது விட்டு வைக்க வேண்டும் என்று அவனுக்குப் புரிய வைப்பதுதான் அந்தப் பாடத்தின் நோக்கம். ஆட்சி நடத்துறவங்களும், `டூமா’வில் (ரஷ்ய நாடாளுமன்றம்) பங்கேற்கிறவங்களும் மாத்திரமே கொள்ளையடித்தால் எப்படி? நீதிபதிகளாகிய நாங்கள் வெறுங்கையை நக்குவதா? எங்களுக்குள்ள பங்கை நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாமா? ஆட்சியாளர்களின் கொள்ளையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. நீதிபதிகளின் கொள்ளையில் ஆட்சியாளர்கள் தலையிடக் கூடாது. ஆனால், நீதிபதிகளுக்கு அந்த வாய்ப்பு இப்போது எனக்கு ஆட்சியாளர்களின் தலையில் குட்டுகிற நேரம் வந்திருக்கிறது. பாடம் புகட்டுகிறேன் என்றுதான் ஆட்சிக்கு எதிரான தீர்ப்பு வரும்.
தின்று கொழுத்தவனால் பசியோடிருப்பவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பது பழமொழி.
இல்லை; அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அவர்கள் அவ்வளவு கண்டிப்பாக இருக்கிறார்கள்.
அவர்கள் தின்று கொழுத்தவர்களாகவும் போக்கிரிகளாகவும் இருக்கும்போது மற்றவர்களுக்கு எப்படித் தீர்ப்புச் சொல்ல முடியும்?
போக்கிரிகளே எல்லோரிலும் மிகவும் கண்டிப்பான நீதிபதிகளாக இருக்கிறார்கள்...”
புத்தகத்தை மூடிவிட்டு வெகுநேரம் இந்தக் காட்சியை மனத்திரையில் ஓட விட்டேன். எனக்குத் தெரிந்த பல வழக்குகளும் மனத்திரையில் காட்சியாகின. காண்டேகர் எழுதிய புதினம் ஒன்றில் குற்றக் கூண்டில் நிற்கும் கைதியை விடுதலை செய்வதற்காக அவனுடைய மனைவியைத் தன் படுக்கைக்கு அழைக்கிறான் ஒரு நீதிபதி...
புதினங்களிலும் வாழ்க்கையிலும் இப்படி எத்தனையோ சம்பவங்கள். எல்லாம் சேர்ந்து என்னைப் பாடாய்ப்படுத்தியபோது, கவனத்தைத் திருப்புவதற்காகத் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்ந்தேன். ஏற்கனவே கனத்திருந்த இதயத்தின் மீது மறுபடியும் தாக்குதல்.
தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு ரத்து. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு!
சூத்திரராய், பஞ்சமராய், உரிமையற்றவராய், உதயத்தின் ஒளிக்கதிர்களே தென்படாத இருண்ட பள்ளத்தாக்குகளில் வாழ்க்கை என்பதையே ஆயுள் தண்டனையாகச் சுமந்தழியும் கோடிக்கணக்கான மண்ணின் மைந்தர்களில் வாழ்வில் ஒரு சிறு நம்பிக்கை தீபமாய்த் திராவிட இயக்கம் ஏற்றுவித்த சுடரை மாக்சிம் கார்க்கி சித்திரித்த `கண்டிப்பான நீதிபதிகள்’ எவ்வளவு இழிவான முறையில் ஊதி அணைக்கிறார்கள்!
இடஒதுக்கீடு என்பது எளியோரின் விடுதலைக்கான பாதை மாத்திரமல்ல; `மனுதர்ம’வாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க திராவிட இயக்கம் வார்த்தெடுத்த போராயுதமும்கூட. வியர்வைக் குலத்தின் பகைவர் சதியை முறியடிக்கக் கிடைத்த வாய்ப்பு. தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் போராடிப் பெற்ற உரிமை! அதனால் அரசியல் சாசனம் ஏற்றுக் கொண்ட முதல் `கவசம்’. அதைத் தகர்ப்பதென்றால்...?
`ஆதிக்க சக்திகளின்’ போக்கிரித்தனம் சமூக நீதியைச் சாய்க்கும் சூறாவளியாக வீசுகிறதே... முடியரசுக்கும் குடியரசுக்கும் - மன்னராட்சி முறைக்கும் மக்களாட்சி முறைக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம், முன்னது ஒரு தனி நபரின் விருப்பத்தை நிறைவு செய்வது; பின்னது சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது. ஜனநாயக நடைமுறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்ற மக்கள் பிரதிநிதித்துவப் பேரவைகளுக்கும், சட்ட விதிமுறைகளைப் பராமரிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவப் பேரவை தனக்குள்ள உரிமையின்படி சட்டமியற்றினாலும், அது சமூக நலன் சார்ந்த நீதிக்கு எதிராக இருந்தால் அந்த சட்டத்தையும் நீதித்துறை நிராகரிக்க முடியும். ஜனநாயகத்தில், நீதித் துறையே மக்களின் இறுதி நம்பிக்கையாகக் கருதப்படுகிறது.
சட்டமியற்றும் அதிகாரம் பெற்றவர்கள் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை என்றால் அவர்களைத் `தண்டிக்கும்’ உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. (வேறென்ன; தேர்தலில் தோற்கடிப்பதுதான்) ஆனால் நீதித்துறை நம்பகத் தன்மையை இழக்கும்போது அதைத் தண்டிக்கும் உரிமையும் அதிகாரமும் யாருக்கும் இல்லை.
மாவட்ட நீதிமன்றத்தில் மறுக்கப்படும் நீதி கேட்டு உயர்நீதி மன்றம் செல்லலாம்; உயர்நீதிமன்றத்தில் கிடைக்காததை உச்சநீதிமன்றத்தில் பெறலாம். உச்ச நீதிமன்றமே நீதிக்கு எதிராக நின்றால்?
கீழ்க்கோர்ட்டுகளில் தவறான தீர்ப்புரைத்ததற்காக உச்சநீதிமன்றம் எந்த நீதிபதிக்கும் தண்டனை வழங்கியதில்லை. உச்ச நீதிமன்றமே கடைசிப்படி என்பதால் அதற்குமேல் யாரும் செல்ல முடிவதில்லை.
நமது சமூக அமைப்பில் உயர்ந்த பீடத்தில் உள்ள பிரதமரை ஒருவர் விமர்சிக்க முடியும்; கேள்வி கேட்க முடியும். ஆனால் நீதிபதியை - அவர் கடைநிலையில் உள்ளவராக இருந்தாலும் - யாரும் விமர்சிக்க முடியாது. காரணம்?
நீதித்துறை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்; அதை விமர்சிப்பது தாயை அல்லது கடவுளைச் சந்தேகிப்பதற்குச் சமம் என்று மக்கள் கொண்டுள்ள பாமரத்தனமான நம்பிக்கைதான். நீதி என்பது அறம் சார்ந்தது என்று நம்புவது ஒருவர் அல்லது ஒரு சமூகம் தன்னைத் தேற்றிக் கொள்வதற்கான உபாயமே தவிர, அது உண்மையல்ல.
உண்மையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்றெல்லாம் கதைக்கப்படும் இந்த உச்சாடனங்களுக்குப் பின்னே உயர்ந்து நிற்பது தனிச் சொத்துரிமையின் ஆங்கார வடிவம்தான். இங்கே ஜனநாயகம் என்பது ஆதிக்க சக்திகளின் ஒப்பனைப் பாத்திரமே! ஒப்பனை கலைந்தால் மூலதனத்தின் கோர வடிவமே காட்சி தரும்.
பணம் இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியும். விலைக்கு வாங்கிய உறுப்பினர்களைக் கொண்டு, சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் செய்யலாம், ஆட்சியையே கவிழ்க்கலாம். நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் நாடாளுமன்றத்தில் முக்கியமான சட்டம் கொண்டு வரப்பட்டபோது, கழிவறைக்குச் சென்று விட்டதால் ஆட்சியே திணறிப் போனதில்லையா? நடிகருக்கு அந்த நேரம் பார்த்து வயிறு தொந்தரவு செய்தது ஏன்? நாட்டுக்கே தெரியும்.
எம்.ஜி.ஆர். இறந்ததும் தமிழக அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் பலரை யாரும் `வாங்கி’விடக் கூடாது என்பதற்காக மாதக் கணக்கில் `பாதுகாத்து’ ஜானகி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் ஜெயலலிதா அணியைக் கட்டுக் கோப்பாக உருவாக்குவதிலும் திருநாவுக்கரசர் எவ்வளவு செலவழித்தார்! திருநாவுக்கரசர் செலவு செய்யாமல் இருந்திருந்தால், ஜானகி அணியே அதிமுக என்று நிலைப்பட்டிருக்கும். ஜெயலலிதாவின் அரசியல் தலைமை உறுதிப்பட்டிருக்க முடியாது.
பணம் செலவு செய்ய முடிந்ததால்தான் கலைக்கப்பட்ட என்.டி.ஆர். ஆட்சி ஆந்திரத்தில் மீட்டெடுக்கப்பட்டது. கட்சிதாவல் தடைச் சட்டம் இருப்பதே நமது `ஜன நாயகத்தின் யோக்கியதையை வெளிப்படுத்தவில்லையா? மக்களின் தேர்வு, அரசியலமைப்பு விதி என்கிற பிரமைகளையெல்லாம் `மூலதனம்’ அம்மணமாக்கிக் காட்ட வில்லையா?
பணம் கொடுத்தால் எந்த நீதியையும், நீதிமன்ற உத்தரவையும் வாங்க முடியும், வளைக்க முடியும். சான்றுக்கு ஆயிரம் சொல்ல முடியும். குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே கைது செய்யும் உத்தரவை ஒருவர் நீதிபதிக்குப் பணம் கொடுத்து வாங்கிக் காட்டினாரே!
பல வழக்குகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கேட்கப்படுவதற்கும், உச்சநீதிமன்றம் தலையசைப்பதற்கும் என்ன காரணம்? மாநில நீதிமன்றங்கள் விலைபோகின்றன; அச்சுறுத்தப்படுகின்றன; அல்லது பேரம் பேச வாய்ப்பு வேண்டும் என்பது ஏற்கப்படுவதால்தான்!
தொழிலாளர்கள் - அரசு ஊழியர்கள் ரத்தம் சிந்திப் போராடிப் பெற்றதே - வேலை நிறுத்தம் செய்யும் உரிமை. சர்வதேசத் தொழிற் சங்கங்களும், அரசுகளும் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தம். அந்த உரிமையைத் தமிழக அரசு முறிக்கிறது. தமிழக ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் உரிமைப் போராட்டம் வெடிக்கிறது. மாலை 6 மணிக்கு அவர்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வருகிறது. ஆனால், இரண்டே மணி நேரத்தில் அந்தத் தீர்ப்பு மாற்றி எழுதப்படுகிறது. எப்படி?
அந்த நீதிபதி நேர்மையற்றவர்; கோடிக்கணக்கில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு அநீதி வழங்கினார் என்று பகிரங்கமாகவே அரசு ஊழியர்களால் விமர்சிக்கப்பட்டார்.
தமிழ் வழிக்கல்விக்காகத் தமிழ்ச் சான்றோர் பேரவை தொடுத்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் வலம்புரி ஜான், அந்த வழக்கில் `மெட்ரிகுலேஷன்’ பள்ளிகளின் கூட்டமைப்பு நடத்தும் பின்னணிக் கதைகளைத் தெரிந்து கொண்டு, நீதிபதிகளின் முகத்துக்கு நேரேயே ``இது புல் பெஞ்ச் இல்லை; பூல்ஸ் பெஞ்ச்’’ என்று காரித்துப்பினார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், தொடரவில்லை. ஏன் என்றால், நீதிபதிகள் வலம்புரி ஜானின் சொற்களைப் பெரிதுபடுத்தவில்லை.
நீதிபதி என்பவர் பணத் தேவை இல்லாதவராக, பந்த பாசம் அற்றவராக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருந்தால் அந்த ஆசனம் எப்போதும் காலியாகவே கிடக்கும். தனிச் சொத்துரிமை ஏற்கப்பட்டு, அது புனிதமானதாகப் போற்றப்படும் ஒரு சமூக அமைப்பில் நீதியும், நீதிபதியும்கூட விற்பனைச் சரக்குதான்.
தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கூடாது; அந்தக் கல்லூரிகள் விரும்பிய விலைக்குக் கல்வியை விற்றுக் கொள்ளலாம்; அதில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் தனிச் சொத்துரிமை ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக அமைப்பின் நடைமுறைக்கு அப்பாற்பட்டதல்ல.
நீதிக்கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டு, தந்தை பெரியாரின் - திராவிட இயக்கத்தின் - தீவிரமான போராட்டங்களால் அரசியல் சாசனத்தில் அங்கிகரிக்கப்பட்டஒரு சமூக நீதியை, சட்ட பூர்வமான கொள்கையை, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்ய முடிகிற தனியார் கல்லூரிகளால் மாற்ற முடியும்; தகர்க்க முடியும் என்றால், அப்பாவிகள் அதிர்ச்சியடையலாம்!
சுய(!) நிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை ரத்து செய்து, சுயநிதிக்குச் சுதந்திரம் வழங்கிய உச்சநீதி மன்றத் தீர்ப்பை நாடே காரி உமிழ்ந்தது. நாடாளுமன்றமும் கொந்தளித்தது(!) உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டனம் செய்யாத ஒரு கட்சியும் இல்லை.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது - `மண்டல் கமிஷன்’ அறிக்கை வெளியான போது - இடஒதுக்கீட்டுக் கொள்கையும், தந்தை பெரியாரின் போராட்டங்களும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டபோது, இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக மாணவர்களைத் தூண்டி விட்டு, தீயில் கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய சங்கப் பரிவாரங்களின் அரசியல் பிரிவுகூட இம்முறை இடஒதுக்கீட்டை வரவேற்று, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டியிருக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியதும், ``இந்தத் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் நீதிமன்றங்களை இழுத்து மூடிவிட்டு, உங்கள் (நாடாளுமன்ற) விருப்பப்படி ஆட்சி நடத்திக் கொள்ளுங்கள்’’ என்று தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி ஆவேசமாகக் கத்தினார்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாக்க சட்டத் திருத்தம், அல்லது புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போதும் கூட தலைமை நீதிபதியின் ஆத்திரம் அடங்கவில்லை. அது நீதியைக் காக்க - சட்டத்தின் ஆட்சியைக் காக்க - கறை படாத ஒரு நீதிபதியின் சத்திய ஆவேசம் என்று யாரும் நம்பவில்லை.
நீதிபதிகள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. இது மிகுந்த கவனத்துக்குரியது.
`சுயநிதி’க் கல்லூரிகளிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கை பாதுகாக்கப்படும் விதத்தில் சட்டத் திருத்தம் அல்லது புதிய சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் சிறிதும் சஞ்சலப்பட வில்லை.
ஏனென்றால் - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்பிய எல்லாக் கட்சிகளின் ஆதரவோடும், அல்லது கட்சிக்காரர்களின் `மூலதனத்தோடும்’தான் சுயநிதிக் கல்லூரிகள் இயங்குகின்றன.
அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து - இடஒதுக்கீட்டுக்கு - சமூக நீதிக்கு எதிரான பாரதீய ஜனதா கட்சிகூட ஒரே குரலில் நீதிமன்றத்தைக் கண்டிப்பதும் ஒரு நாடகம்தான் என்கிறார்கள் `விவரம்’ அறிந்தவர்கள். மக்களை ஏமாற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தைக் `கண்டிக்கிறார்கள்.’ எப்படி? பண்பட்ட முறையில் புண்படுத்தாத சொற்களால்.
ஏனென்றால் நீதிபதிகளைக் குற்றம் சாற்றும் அளவுக்கு இவர்களும் யோக்கியர்கள் அல்ல. பணம்தான் - தனிச் சொத்துரிமையின் வல்லமைதான் - கல்லூரிகளை நடத்துகின்றன. பணம்தான் அரசியல் கட்சிகளின் மூலபலம். பணம் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களை நிச்சயிக்கிறது. பணம்தான் நீதிமன்றங்களை வழிநடத்துகிறது; பணம் தான் அனைவரும் தொழுதேற்றும் தெய்வமாகப் பூசனை செய்யப்படுகிறது.
இந்தப் பணத்தை நேர்மையான முறையில்தான் சம்பாதிக்க வேண்டும் என்று எந்த நாட்டுச் சட்டமும் சொல்லவில்லை. முன்பு சாராயக்கடை, கேளிக்கை விடுதி நடத்தியவர்களில் பலர்தான் இப்போது சுய நிதிக் கல்லூரிகளின் வேந்தர்கள். சங்கரமடமே கல்லூரி நடத்தும்போது, நேர்மை தான் நிலைக்குமா? கல்வி தான் உருப்படுமா?
இந்த வேந்தர்களைப் பகைத்துக் கொள்ள பல அரசியல் கட்சிகள் விரும்புவதில்லை. இதிலே நீதிமன்றம் முறைப்பதும், நாடாளுமன்றம் குரைப்பதும் `ஜனநாயகத்தின்’ தவிர்க்க முடியாத சோம்பல் முறிப்புத்தான்! நாங்கள் இவ்வாறு தீர்ப்புரைக்காவிட்டால் நீதிமன்றம் அரசின் ஊதுகுழலாகச் செயல்படுகிறது என்கிற கருத்து பரவக்கூடும். அதனால்தான் அப்படி என்று ஒரு தரப்பும், நாங்கள் நாடாளுமன்றத்தில் அப்படி முழங்காவிட்டால் மக்கள் எங்களைத் தோற்கடித்து விடுவார்கள் என்ன செய்வது என்று மறு தரப்பாரும் பேசிச் சிரித்துக் கொள்ளலாம் என்று சில பத்திரிகையாளர்கள் கிண்டலடிக்கிறார்கள்.
அறம் சார்ந்த நீதி வேண்டும் என்றால், புதியதொரு ஆட்சி முறை மலர வேண்டும்.
- ஆனாரூனா