500 ஏரிகளில் தூர்வாரி விட்டதாக அரசு உளறுகிறது!
ஓர் ஏரியில் 6 (அ) 7 மாதம் தண்ணீர் அசைந் தாடிக் கொண்டு நிற்கும். அப்படி நிற்கும் போது, அடியில் படியும் கக்கம் (அ) அழுக்குத்தான் வண்டல் என்பது.
கடந்த பல ஆண்டுகளாக ஏரிகளில் நீர் தேங்க வில்லை. எனவே எந்த ஏரியிலும் வண்டல் இல்லை. பழைய வண்டல் தூளாக நொறுங்கிப் போயிருக்கும். அதை வெட்டி அள்ள வண்டி மாடு வைத்திருக்கிற விவசாயிகள் இப்போது இல்லை.
தூர் வாருவது என்றால் என்ன?
ஏரியிலிருந்து 10 மைல் தொலைவில் ஆற்று வாய்க்கால் தலைப்பு இருக்கும். அந்த ஆற்றின் குறுக்கே மணலால் ஒரு பெரிய தடுப்பு கட்டுவார்கள். தென் மேற்குப் பருவமழை நீர் வர, 10 மைல் நீளமுள்ள வாய்க்காலை ஊர்கூடித் தூர் வாருவார்கள். பெரம்பலூர் மாவட்டம், சின்னாற்றில் இப்படிப்பட்ட வழக்கம் இருந்தது. அந்த வாய்க்கால் சில தனியார் நிலங்களின் ஊடே ஓடும். அந்த ஏற்பாட்டுக்கு அரசு அனுமதி உண்டு.
இப்போது பல ஆண்டுகளாக, அந்த வரத்துவாய்க்கால் இல்லாத வடக்கலூர் அகரம் ஏரி வறண்டு கிடக்கிறது.
வெள்ளாற்றின் தென்கரையில் இருந்து ஒகளூர், அத்தியூர்காரர்கள் தங்கள் ஊர் ஏரிகளுக்கு நீர்வரும் வாய்க்காலைத் தூர்வாருவார்கள். வடகிழக்குப் பருவ மழை, தென்மேற்குப் பருவ மழைக்காலங்களில் அத்தியூர், ஒகளூர், வடக்கலூர் ஏரிகள் நிரம்பி, வடக்கலூர் ஏரி கலங்கு வழியாக அகரம் ஏரிக்கும் நீர் வரும். இதுதான் குடிமராமத்து முறை.
ஏரிகளை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அரசுப் பொதுப் பணித்துறை ஆழப்படுத்தியது.
ஏரி தரைப் பரப்பு முழுவதிலும், 3 அடிதொலைவுக்கு இடைவெளிவிட்டு மண்ணை வாரச் சொல்வார்கள். நீண்ட சதுர வடிவில் தனித் தனிப் பள்ளங்களை அமைப் பார்கள். எத்தனை கன அடி மண் ஒரு குழியிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை நாடா வைத்து அளக்க வசதியாக, ஒவ்வொரு நீண்ட சதுரக் குழியிலும் 2 அடி ஒ 1.5 அடி அளவிலும் மண் முட்டுவிட்டிருப்பார்கள்.
பொதுப் பணித்துறைக் கண்காணிப்பாளர் ஒவ்வொரு ஏரியையும் இப்படியே அளந்து, எத்தனை கன அடி மண் தோண்டப்பட்டுள்ளது - எவ்வளவு ஊதியம் என்பதை, ஒப்பந்தக்காரர்கள் மூலம் அரசு உறுதி செய்து, தரும்.
இதில் வெட்டப்பட்ட மண் முழுவதும் ஏரியின் கரையில் நெடுகக் கொட்டியிருக் கிறார்களப எனவும்; மரத்தடிகளில்-மா, புளி, இலுப்பை, பனை மரங்களின் அடி பாகத்தில் கொட்டியிருக்கிறார்களா என்றும், மணியம், நாட்டாண்மை முன்னி லையில் அதிகாரிகள் பார்வையிடுவார்கள்.
இப்படியே, 41,000 ஏரிகளிலும் சுழற்சி முறையில் ஏரிகளைத் தூர் எடுத்து ஆழப்படுத்தினார்கள்.
86 ஆண்டுக்காலத்திய மேட்டூர் அணையை 5, 6 ஆண்டுகளுக்கு முன் நானும் என் சேலம் கட்சித் தோழர்களும், அரசு அதிகாரிகள் துணையுடன் வருந்தி முயன்று ஒருநாள் முழுதும் பார்வையிட்டு, அப்போதைய தமிழக அரசினர்க்கு, “மேட்டூர் அணையை உடனே இயந்திரம் மூலம் தூர்வாருங்கள்” என உருக்கமாக எழுதினோம்.
இப்போதைய முதலமைச்சர், ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான இயந்திரங்களை வைத்து, மேட்டூர் அணையில் தகடு தகடாகப் படித்திருக்கிற வண்டலை வாரி இருக்கிறார். அது தூர் வாரல் அல்ல.
மேட்டூர் அணையைத் தூர் வார 4 மாதங்கள் - பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி நான்கு மாதங்கள் வேண்டும்.
ஒரு சிறிய ஏரியைத் தூர் வாரி ஆழப்படுத்த குறைந்தது ஒரு மாத காலம் வேண்டும்.
இப்போதும், எல்லா ஏரிகளிலும் தண்ணீர் இல்லை. ஓர் ஆண்டுக்கு 5,000 வீதம் பெரிய, சிறிய ஏரிகளை 31 மாவட்டங்களிலும் தேர்வு செய்து, 2017 முதற்கொண்டு அவற்றை ஆழப் படுத்துவது, அவற்றுக்கான வரத்து வாய்க்கால், போக்குவாய்க்கால் இவற்றைத் தூர் வாருவது இவற்றைச் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசினரை வேண்டிக் கொள்கிறோம்.
நீர் பற்றாக்குறையை வளரவிடுவது, மானிடர் நலனுக்கு எதிரானது.
எந்தக் கட்சியும் இதுபற்றிக் கரிசனத்தோடு சிந்திக்கவில்லை; செயல்படவில்லை.
வேளாண்குடி மக்கள் ஒன்றுசேர்ந்து இதற்குத் தீர்வு காண்போம்.