வறட்சியால் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் குறித்த பொதுநல வழக்கில், 28.04.2017 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழ்நாடு அரசு, வறட்சியால் சாகுபடி அழிந்ததைப் பார்த்து உழவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் குடும்பச் சிக்கலால் ஒருசாரார் தற்கொலை செய்து கொண்டார்கள், மற்றவர்கள் பலவகை நோய்களால் உயிரிழந்தார்கள் என்றும் கூறியுள்ளது. இது முற்றிலும் மனித நேயமற்ற, உண்மைக்குப் புறம்பான, பொறுப்பற்ற பதில் மனுவாகும்!

காய்ந்து கருகிய பயிரைப் பார்த்து, மாரடைப்பு ஏற்பட்டு வயலில் இறந்தவர்கள் பலர்; பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டோர் பலர். இந்த உண்மையை தமிழ்நாடு அரசு மறைக்க வேண்டிய தேவை என்ன?

மராட்டியம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அல்லது மாரடைப்பால் இறந்து போன உழவர்களின் பட்டியலை அப்படியே பதிவு செய்து, நடுவண் அரசிடமிருந்து பெருமளவில் இழப்பீட்டுத் தொகை வாங்கியுள்ளார்கள். பொறுப்புள்ள அரசாக இருந்தால், தமிழ்நாடு அரசு அம்மாநிலங்கள் செய்ததைப் போல் நடுவண் அரசுக்குப் பட்டியல் அனுப்பி, சிறப்பு நிதி உதவி கோரியிருக்க வேண்டும்.

இறந்த உழவர்களின் எண்ணிக்கை சற்றொப்ப 300 இருக்கும்போது, வெறும் 82 பேர் என்று குறைத்துக் கணக்குக் காட்டியது ஏன்? 

கர்நாடகம் காவிரித் தண்ணீர் தரவில்லை என்று கூறிய தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துத் தமிழ்நாட்டைப் பழிவாங்கிய நடுவண் அரசை பதில் மனுவில் சுட்டிக் காட்டாதது ஏன்?

மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்ற மோடி அரசின் வாதத்தை உரியவாறு மறுத்து, உச்ச நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் உண்டு என்று 9.12.2016 தீர்ப்பில் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க புதிய ஆணை பிறப்பிக்காததும் தமிழ்நாட்டு வறட்சிக்கான காரணம் என்று பதில் மனுவில் தமிழ்நாடு அரசு கூறியிருக்க வேண்டும்.

வறட்சித் துயர் நீக்க நிதியாக 39,565 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேட்டதில், வெறும் 1748 கோடி ரூபாய் தான் இந்திய அரசு தந்தது. எனவே, தமிழ்நாட்டில் வறட்சித் துயர் துடைப்புப் பணிகளை உரியவாறு செய்ய முடியவில்லை எனத் தமிழ்நாடு அரசு பதில் மனுவில் சுட்டிக் காட்டியிருந்தால், தமிழ்நாடு அரசுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை வெளிப்பட்டிருக்கும்.

ஆனால், எல்லாம் சிறப்பாக நடப்பதுபோல் வறட்சி நிவாரணப் பணிச் சாதனைகளை அதில் கூறியிருப்பது, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.

எனவே தமிழ்நாட்டு மக்களும், உழவர்களும் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும், வாழ்வுரிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் சேர்த்தே எதிர்த்துப் போராட வேண்டிய தேவையுள்ளது.

Pin It