2017 மே 26 அன்றுடன் நரேந்திர மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் முடிந்தன. மூன்று ஆண்டுக்கால ஆட்சியின் நிறைவு விழாவில் - அசாம் மாநிலத் தலை நகரான கவுகாத்தியில் உரையாற்றிய நரேந்திர மோடி, “நான் கனவு காணும் புதிய இந்தியாவில் எந்தத் துறையும் வளர்ச்சியடையாமல் இருக்காது” என்று கூறினார். ஆனால் நரேந்திர மோடியின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் வெற்று ஆரவார முழக்கங்கள் ஒங்கி ஒலித்தனவே தவிர, வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
1) 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் உருவா 15 இலட்சம் போடுவேன் என்று மோடி முழங்கினார். வெளிநாட்டு வங்கிகளிலிருந்து ஒரு காசும் கொண்டுவரப்படவில்லை.
2) இந்தியாவில் உள்ள கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக என்று கூறி கடந்த 2016 நவம்பர் 8 அன்று திடீரென ஒரே நாளில் ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித் தார். இந்நடவடிக்கையால் பணப்புழக்கம் முடங்கியது. மக்கள் பலவகையான துன்பங்களுக்கு உள்ளாயி னர். தொழில்களும் வணிகமும் முடங்கின. வேலை யிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் இன்றுவரை பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எவ்வளவு கருப்புப் பணம் வெளிக்கொண்டு வரப்பட்டது என்று கூறாமல் மோடி ஆட்சி வாய்மூடிக் கிடக்கிறது.
3 வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்ற மோடியின் ஆட்சியில், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு (GDP) குறைந்து வருகிறது. 2015-16இல் 8 விழுக்காடாக இருந்த ஜி.டி.பி., 2016-2017ஆம் ஆண்டில் 7.1 விழுக்காடாக வீழ்ச்சி யடைந்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக் குப்பின் 2017 சனவரி - ஏப்பரல் வரையிலான காலாண்டில் ஜி.டி.பி. 6.1 விழுக்காடாகக் குறைந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை உற்பத்தியை எந்த அளவுக்குச் சீர்குலைத்திருக்கிறது என்பதற்கு இதுவே சரியான சான்றாகும்.
4) மன்மோகன் சிங் ஆட்சியின் இறுதி ஆண்டில் (2013-14) வேளாண்மைத் துறையின் வளர்ச்சி 3.6 விழுக்காடாக இருந்தது. மோடியின் மூன்று ஆண்டுகள் ஆட்சியில் இது 1.7 விழுக்காடாகச் சரிந்துவிட்டது.
சென்னை ஐ.ஐ.டி-யில் மாட்டுக்கறி விருந்தில் கலந்து கொண்ட தற்காகத்
தாக்கப்பட்ட முதுநிலை ஆய்வு மாணவர் ஆர்.சுராஜ்
5) மோடி ஆட்சியில் ஆண்டுதோறும் 12,000க்கு மேற் பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
6) பல மாநிலங்களில் உழவர்கள் தங்கள் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி விளைபொருள்களை நெடுஞ்சாலை களில் கொட்டிப் போராடி வருகின்றனர். ஊழலற்ற ஆட்சியை அளிப்போம் என்று வாக்குறுதி அளித்த மோடி, நடுவண் அரசிலும், மாநில அரசு களிலும் உயர் மட்டத்தில் நடைபெறும் ஊழல் களை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் செயல்பாட்டுக்கு வரவிடாமல் முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக் கிறார். லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் 2013இல் மன்மோகன் சிங் ஆட்சியில் இயற்றப்பட்டது.
7) லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும், அதை ஏன் நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என்று நடுவண் அரசை நோக்கி உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வழக்கம்போல் மோடி அரசு, இவ்வாறு கேள்வி கேட்பதற்கு உச்சநீதிமன்றத்துக்கு அதி காரம் இல்லை என்று கூறியது.
8) ஆண்டிற்கு ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று 2014 பா.ச.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் எல்லாத் துறைகளிலும் வேலை இழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக் கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய அளவில் 40 இலட்சம் பேர் பணிபுரிகின்றனர். 2017 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டிற்கு இரண்டு இலட்சம் பேர் இத்துறையில் வேலை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது (The Hindu, 15.5.2017).
மூன்று ஆண்டுக்கால ஆட்சியின் தோல்விகளை மூடி மறைக்கவும் திசைதிருப்பவும் நரேந்திர மோடி பதவி ஏற்ற நாளான மே 26 அன்று “விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு (கால்நடைச் சந்தைகளை முறைப் படுத்தல்) விதிகளை” அறிவித்தது நடுவண் அரசு.
சந்தையில் மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற் கும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் 23.5.17 நாளிட்ட அறிவிக்கையை சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் 26.5.2017 அன்று வெளியிட்டது. 1960ஆம் ஆண்டின் விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இப்புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்புதிய விதிகளின்படி, இறைச்சிக்காகவோ அல்லது மதச்சடங்குகளில் பலியிடுவதற்காகவோ சந்தையில் மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது. இதில் பசு மட்டுமின்றி எருது, எருமை, கன்றுகள், ஒட்டகம் ஆகியவையும் அடங்கும். இதன்மூலம் மாட்டு வணிகத்தை ஒரு குற்ற நடவடிக்கை என்று மோடி அரசு அறிவிக்கிறது.
வேளாண்மைக்குத் தேவையான கால்நடைகளைப் பராமரிப்பது, மாட்டிறைச்சி உண்போருக்குத் தரமான இறைச்சியைக் கிடைக்கச் செய்வது ஆகியவையே இந்த விதிகளின் நோக்கம் என்று மோடி அரசு கூறு கிறது. இதைவிட பித்தலாட்டமான கூற்று வேறு இருக்க முடியுமா? இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என்கிற இந்த ஆணையின் உண்மையான நோக்கம் மாட்டு வணிகத்திலும், மாட்டி றைச்சி விற்பனையிலும், தோல் தொழில்களிலும் பெரும் எண்ணிக்கையினராக இருக்கும் இசுலாமி யரின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதே ஆகும். இக்குறுகிய நோக்கத்திற்காகக் கோடிக்கணக்கான வேளாண் மக் களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடை வளர்ப் புத் தொழிலையே அடியோடு குலைத்திட முனைந் துள்ளது மோடி அரசு. அத்துடன் பசு புனிதமானது என்கிற இந்துத்துவ உணர்ச்சியை வளர்த்தெடுத்து அதைத் தன்னுடைய அரசியல் மூலதனமாக மாற்று வதும் மோடி அரசின் மற்றொரு நோக்கமாகும்.
நோயுற்ற மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படாமல் தடுப்பது இப்புதிய விதியின் நோக்கம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. 2015-16ஆம் ஆண்டில் கோழி, ஆடு, மாடு, பன்றி ஆகியவற்றின் இறைச்சி மதிப்பும், மொத்த இறைச்சி மதிப்பில் அவற்றின் விழுக்காடும் கீழே தரப்பட்டுள்ளது :
(ஆதாரம் : “ஃபிரண்ட்லைன்”, சூலை 7, 2017)
15.4 விழுக்காடு மதிப்புள்ள மாட்டிறைச்சி நோய் தாக்காததாக - தரமானதாக இருக்க வேண்டும் என் பதற்காகப் புதிய விதிகளைக் கொண்டுவந்துள்ள மோடி அரசு 84.6 விழுக்காடாக உள்ள மற்ற விலங்குகளின் இறைச்சியின் தரம் குறித்துக் கவலைப்படவில்லை. இதிலிருந்தே மோடி அரசின் இந்துத்துவத் திணிப்பைப் புரிந்து கொள்ளலாம்.
கோழி, ஆடு, பன்றி ஆகியவை இறைச்சிக்காக என்று மட்டுமே வளர்க்கப்படுகின்றன. ஆனால் மாடுகள் இந்தியாவில் இறைச்சிக்காக என்று வளர்க்கப்படு வதில்லை. அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இறைச்சிக்காக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள கால்நடைகள் விவரம் - அவற்றின் விழுக்காட்டில் :
1. மாடு - 37.28 %
2. எருமை - 21.23 %
3. வெள்ளாடு - 26.40 %
4. செம்மறி ஆடு - 12.71 %
5. பன்றி - 2.01 %
6. மற்றவை - 0.37 %
உலகில் உள்ள எருமைகளின் எண்ணிக்கையில் 58 விழுக்காடு இந்தியாவில் இருக்கின்றன. எருமை இறைச்சி குறிப்பாக நீர்வாழ் எருமைகளின் இறைச்சி அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. 2016ஆம் ஆண்டில் 11 மாதங்களில் 12.2 இலட்சம் டன் நீர்வாழ் எருமை இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் வியத்நாம் நாட்டிற்கு மட்டும் 46 விழுக்காடு ஏற்றுமதியானது.
கிராமப்புறங்களில் வேளாண்மைத் தொழில் நலிவுற்ற பின், குடும்பங்களின் வருவாய்க்கான ஆதாரமாகக் கறவை மாடுகள் இருந்து வருகின்றன. அதனால் கடந்த இருபது ஆண்டுகளில் பால் உற்பத்தி இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. அதிக பால் தரும் கலப்பின மாடுகளின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது. மாடு ஒரு செல்வம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத் தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. நாட்டிலேயே அதிக மாடுகள் உள்ள உ.பி.யில் கடந்த 15 ஆண்டு களில் மாட்டிறைச்சி உற்பத்தி 253 விழுக்காடு வளர்ந் திருக்கிறது. ஆனால் பால் உற்பத்தி வெறும் 25 விழுக் காடு மட்டுமே உயர்ந்திருக்கிறது (தி இந்து 5.6.2017).
சிறு, குறு உழவர்களாக, வேளாண் கூலித் தொழிலாளர்களாக, உதிரிப் பாட்டாளிகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மக்களே கறவை மாடு களைப் பெருமளவில் வளர்க்கின்றனர். சிறிய நகரங் கள் முதல் சென்னை போன்ற மாநகரங்களிலும் ஏழை, எளிய மக்கள் தங்கள் வருவாய்க்காகக் கறவை மாடுகளை வளர்க்கின்றனர். நடுவண் அரசின் புள்ளி யியல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி 2015-16ஆம் ஆண்டில் உற்பத்தியான பாலின் மதிப்பு 5,50,171 கோடி உருபா ஆகும். இவ்வாறு கோடிக் கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் பால் உற்பத்திக்கே உலை வைக்கும் தன்மையில் மாட்டுச் சந்தை மீதான புதிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
உழவர் நலனுக்கு எதிரான புதிய விதிகள்
சந்தையில் விற்பதற்காக மாட்டைக் கொண்டுவரும் விவசாயி, தன் பெயர், முகவரி, புகைப்படம், மாட்டின் அடையாளம், (நல்ல வேளையாக மாட்டின் புகை ப்படம் கேட்கப்படவில்லை), தான் விவசாயி என்பதற் கான நிலப்பட்டா ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். மாட்டை இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்து வடிவில் உறுதிகூற வேண்டும். மாட்டைச் சந்தைக்குள் அனுமதிப்பதற்குமுன், கால்நடை ஆய்வாளர் அம்மாடு நோய் இல்லாமல் நல்ல நிலையில் இருக்கிறதா என்று ஆய்வு செய்வார்.
அதேபோல, மாட்டை வாங்குவதற்காகச் சந்தைக்கு வருபவரும் தான் ஒரு விவசாயி என்பதற்கான ஆதாரம், முகவரிக்கான சான்று, புகைப்படம் முதலானவற்றை வைத்திருக்க வேண்டும். வாங்கிய மாட்டை வேளாண்மைப் பணிக்குப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் அம்மாட்டை இறைச்சிக்காகவோ, பலியிடுவதற்காகவோ விற்கமாட்டேன் என்றும் ஆறு மாத காலத்திற்குள் மற்றவர்களுக்கு விற்கமாட்டேன் என்றும் எழுதித்தர வேண்டும். மாட்டை வாங்கியவர் சந்தையிலிருந்து அந்த மாட்டை வெளியில் கொண்டு செல்வதற்குமுன் விற்றவர்-வாங்கியவர் ஆகியோரின் முகவரிகள், உறுதிமொழிகள் அடங்கிய ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். அந்த ஆவணத்தை அய்ந்து படிகள் எடுத்து விற்றவர், வாங்கியவர், வருவாய்த்துறை அலுவலர், கால்நடைத்துறை அலுவலர், மாவட்ட விலங்குகள் சந்தைக் கண்காணிப்புக்குழு ஆகியோரிடம் அளிக்க வேண்டும்.
தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கொள் கைகளை இந்திய அரசு 1991 முதல் செயல்படுத்தத் தொடங்கிய பிறகு, நாடுகளுக்கிடையில் பொருள்கள், தொழில்நுட்பச் சேவைகள் ஆகியவை எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் ஏற்றுமதி-இறக்குமதி செய்யப் படுகின்றன. ஆனால் மோடி ஆட்சியில் கிராமப்புறச் சந்தையில் ஒரு மாட்டை விற்கவும் வாங்கவும் இத்தனைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஏன்? இந்துத்துவ அதிகார வெறியின் கோரதாண்டவமே இதற்குக் காரண மாகும்.
இப்புதிய விதிகளின்படி மாட்டுச் சந்தை செயல்படு கிறதா என்பதைக் கண்காணிக்க மாவட்ட விலங்குகள் சந்தைக் கண்காணிப்புக்குழு அமைக்கப்படும். மாவட் டத்தில் உள்ள எல்லாச் சந்தைகளும் இதில் பதிவு செய்து கொண்டு, அந்த விதிகளின்படி செயல்படவேண்டும்.
இந்த அறிவிக்கையில், மாடுகளின் கொம்புகளைச் சீவக்கூடாது, வண்ணம் பூசக்கூடாது, மூக்கணாங்கயிறு போடக்கூடாது, அலங்கரிக்கக் கூடாது, கன்றுகளுக்கு வாய்க்கூடை போடக்கூடாது என்கிற விதிகளைப் பற்றி அறிய நேரிடும் உழவர்கள் இந்நாட்டின் ஆட்சியாளர்களின் அடிமுட்டாள்தனத்தை எள்ளிநகையாடுவார்கள் அல்லவா?
பயன்படாத மாடு உழவன் கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறு
இறைச்சிக்காக மாடுகளைச் சந்தையில் விற்கக் கூடாது என்றால், பால் மடி வற்றிய மாடுகளையும், உழைப்புக்குப் பயன்படாத எருதுகளையும் என்ன செய்வது? அவற்றை விலைகொடுத்து வாங்கிச் சென்று கோசாலைகளில் மோடி அரசு பராமரிக்கத் தயாரா? 2012 கணக்கெடுப்பின்படி, பசுவதைத் தடைசெய்யப் பட்ட மாநிலங்களில் 52 இலட்சம் மாடுகள் அநாதை யாக அலைகின்றன. இவை அனைத்தும் விவசாயி களால் பராமரிக்க முடியாமல் கைவிடப்பட்டவை. “பசுக்காவலர்கள்” என்கிற குண்டர்கள் நிறைந்த இராஜஸ் தான் மாநிலத்தின் கோசாலைகளில் நூற்றுக்கணக்கில் மாடுகள் மடிகின்றன என்கிற செய்தி, புகைப்படங் களுடன் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எனவே பயன்படாத மாடுகளை இறைச்சிக்காக விற்பது என்று இதுவரையில் இருந்த நடைமுறையே இச்சிக்கலுக்கான சரியான தீர்வாகும். பயன்படாத ஒரு மாட்டைப் பராமரிக்க ஒரு நாளைக்குக் குறைந்தது நூறு உருபா செலவிட வேண்டும். ஒரு மாதத்திற்கு 3000 உருபா செலவாகும். நடுவண் அரசின் தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி (NSSO) ஒரு விவ சாயியின் மாத வருவாய் உருவா 6500 ஆகும். தன் குழந்தைகளுக்கே ஊட்டமான உணவு அளிக்க முடியாத நிலையில் உழவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் இந்தியாவில் அய்ந்து அகவைக்கு உட்பட்ட சிறுவர் களில் 40 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து குறைபாடு களுடன் இருக்கின்றனர். இந்நிலையில் பயன்படாத மாட்டை ஒரு உழவனால் எப்படிப் பராமரிக்க முடியும்?
பயன்படாத மாடுகளை மட்டுமல்லாது, காளைக் கன்றுகளையும் இறைச்சிக்காக விற்கும் நடைமுறையே விவசாயியின் வீட்டுப் பொருளாதாரத்திற்கும், கிராமப் பொருளாதாரத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. மாட்டின் சராசரி வாழ்நாள் இருபது ஆண்டுகளாகும். ஒரு பசு அல்லது எருமை தன் வாழ்நாளில் எட்டு அல்லது பத்து கன்றுகளை ஈன்று தருகிறது. இவற்றில் நான்கைந்து கன்றுகள் காளைக் கன்றுகளாக இருக்கின்றன. வேளாண்மையில் கடந்த இருபது ஆண்டுகளில் உழவு முதல் அறுவடை வரை எல்லாம் இயந்திரமயமாகி விட்டதால் எருதுகளின் பயன்பாடு 90 விழுக்காடு குறைந்துவிட்டது. அதனால் கன்றுக் காளைகளை ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் வளர்த்த பின், இறைச்சிக்காகச் சந்தையில் விற்று வருகின்றனர். கன்றுகளை இறைச்சிக்காக விற்க முடியாவிட்டால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவற்றை எப்படிப் பராமரிக்க முடியும்?
மாட்டிறைச்சிக்கான மாடுகள் 90 விழுக்காடு மாட்டுச் சந்தையில்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்போது மோடி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி பயனற்ற மாடுகளையும் காளைக் கன்று களையும் சந்தையில் இறைச்சிக்காகக் கொள்முதல் செய்ய முடியாத நிலையில் 22 இலட்சம் பேர் சார்ந்துள்ள மாட்டிறைச் சித் தொழில் சிதைந்து சீரழியும். தோல் தொழில் பெரிதும் பாதிக்கப்படும். இதற்குமுன் எருமை களை இறைச்சிக்காக விற்பதற்கு எந்த மாநிலத்திலும் தடை இல்லை. இப்போது இறைச்சிக்காக எருமை களையும் விற்கக்கூடாது என்கிற நிலையால் இப்புதிய விதிகளுக்கான எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. எருமை இறைச்சிதான் அதிக அளவில் உண்ணப்படுகிறது; ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பயன்படாத மாட்டைப் பராமரித்தால் பால்தரும் மாட்டுக்கும் போதிய தீனி கிடைக்காது; அதனால் பால் உற்பத்தி குறையும். விவசாயிகளின் வருவாயும் பாதிக் கப்படும்.
புதிய விதிகள் சட்டத்துக்கு எதிரானவை
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இறைச்சிக்காகக் கால்நடைகளை வெட்டுவதை அனுமதிப்பதோ, தடுப்பதோ மாநிலத்தின் அதிகாரமாகும். இதனை முறைப் படுத்தவோ, தடுக்கவோ நடுவண் அரசுக்கு அதிகாரம் இல்லை. அதனால்தான் ஒவ்வொரு மாநிலமும் அதன் சூழ்நிலைக்கு ஏற்ப மாடுகளை இறைச்சிக்காக வெட்டு தல் குறித்துச் சட்டங்களை இயற்றி உள்ளன. கேரளம், திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பசு உள்ளிட்ட மாடுகளை இறைச்சிக் காக வெட்டுவதற்குத் தடை இல்லை. தமிழ்நாட்டில் வெட்டுவதற்குத் தகுதியானவை என்று சான்றிதழ் பெற்று மாடுகளை இறைச்சிக்காகப் பயன்படுத்தலாம்.
எனவே நடுவண் அரசு, கொல்லைப்புற வழியாக நுழைவதுபோல், 1960ஆம் ஆண்டின் விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் (Prevention of Cruelty to Animal Act 1960) கீழ், 23.5.17 அன்று புதிய விதி களை அறிவித்துள்ளது. ஆனால் 1960ஆம் ஆண்டின் சட்டத்தில் பிரிவு 11(3)( e) விதியில், “உணவுக்காக எந்தவொரு விலங்கையும் வெட்டுவதற்குத் தடை இல்லை; ஆனால் விலங்குகளுக்குப் பெருந்துன்பம் ஏற்படாத வகையில் வெட்ட வேண்டும்” என்று கூறப் பட்டுள்ளது. மூலச் சட்டத்திலேயே இறைச்சிக்காக மாடு களை வெட்டலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மோடி அரசு நிருவாக ஆணை மூலம் இறைச்சிக்காக மாடுகளைச் சந்தையில் விற்கக்கூடாது என்று அறிவித்திருப்பது சட்டத்துக்கு எதிரானதாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் விதி 19(1)( g)-யின்படி எந்தவொரு குடிமகனும் இந்தியாவின் எந்தப்பகுதியிலும் தான் விரும்பும் தொழிலைச் செய்யலாம். ஆனால் அத்தொழில் சட்டத்தால் தடைசெய்யப்ப்டடதாக இருக்கக்கூடாது. விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் அதிகாரம் உடையதாகும். இச்சட்டம் திருத்தப்படாத நிலையில் இறைச்சிக்கான மாட்டு வணிகம் செய்யவும், இறைச்சிக்காக மாடுகளை வெட்டவும் எந்தவொரு குடிமகனும் உரிமை உண்டு. எனவே இந்துத்துவ வெறிகொண்ட பாசிச அதிகாரத்தால் கோடிக் கணக்கான மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுவ தைப் பற்றிக் கவலைப்படாமல் மோடி அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளமை குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும்.
இப்புதிய விதிகளைக் காட்டி அரசு அலுவலர்களும், காவல்துறையும், பசுக்காவலர்கள் எனும் குண்டர்களும் மாடுகளை விற்கின்ற - வாங்குகின்ற உழவர்களையும், மாட்டு வணிகர்களையும் பலவகை யிலும் துன்புறுத்துவார்கள்; கையூட்டு பெறுவார்கள்; தாக்குவார்கள். சிவகங்கை மாவட்டத்தின் அரசு கால்நடைப் பண்ணைக்காக மாடுகளை வாங்கிக் கொண்டு திரும்பிய தமிழக அரசு ஊழியர் 11.6.17 இரவு இராஜஸ்தானில் தாக்கப்பட்டனர். 1-4-2017 அன்று இராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் அரியானாவைச் சேர்ந்த பெகலுகான் என்கிற மாட்டு வணிகர் கொல்லப்பட்டார். இதுபோன்ற தாக்குதல்கள் மாட்டு வணிகத்தை மட்டுமின்றி மாடு வளர்ப்போரின் வாழ்க்கையையும் சிதைக்கும்.
கேரளம், புதுச்சேரி, மேகாலயா மாநிலச் சட்ட மன்றங்கள் மோடி அரசின் புதிய அறிவிக்கைக்கு எதிராகத் தீர்மானம் இயற்றியுள்ளன. மேற்குவங்கம், பீகார், பா.ச.க. ஆட்சி செய்யும் கோவா முதலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மோடி அரசின் நிர்வாக ஆணைக்கு இடைக்காலத் தடை விதித் துள்ளது. உச்சநீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. அரசு, மோடி அரசின் ஆணைகளுக்கு அடிபணிந்து ஒரு அடிமை போல் இருக்கிறது.
உழைக்கும் மக்களாக இருக்கின்ற தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இசுலாமி யர் ஆகியோரின் வாழ்வாதாரத்தைப் பறிக்கவும், இந்துத்துவ ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கவும் மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய விதிகள் திரும்பப் பெறப்படும் வரையில் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்.