ஒன்றியத்தின் தலைநகர் தில்லியில் 15 மாதங்களாக வீரத்துடனும், நெஞ்சுறுதியுடனும் போராடி வந்த வேளாண் பெருங்குடி மக்கள், 11-12-21 அன்று தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

வேளாண் திருத்தச் சட்டம் என்று கூறி ஒன்றிய அரசு மூன்று சட்டங்களை நிறைவேற்றியது.

இச்சட்டத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால் வேளாண் விளைபொருள்களின் ஆதார விலையை நீர்த்துப் போகச் செய்து, சந்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, “கார்ப்பரேட் “ பெருநிறுவனங்களிடம் வேளாண் மக்களைக் கையேந்தும் நிலைக்குத் தள்ளிவிடும் நிலையை ஏற்படுத்தும் சட்டமாக இருந்தது.

இதனால் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வேளாண் மக்கள், 40 வேளாண் சங்கங்களைச் “ சம்யுக்தா கிஷான் மோர்ச்சா “ என்ற சங்கத்தின் கீழ் கொண்டு வந்து 26-11-2020 முதல் வலிமையான போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டம் தொடர்ந்த நிலையில் 11 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை.

இப்போராட்டத்தை அதிகாரத்தால் அடக்க முயன்றது மோடி அரசு. பிரதமர் என்ற முறையில் இதுவரையில் ஒரு தடவை கூட மோடி, வேளாண் போராட்டத் தலைவர்களை அழைத்துப் பேசவில்லை.

மக்களின் ஆதரவு இவ்வேளாண் போராட்டத்திற்குக் கூடுதல் வலிமையைச் சேர்த்தது.

வேளாண் மக்கள் உறுதியுடன் தூக்கிப் பிடித்த போராட்டத்தின் முன் நிற்க முடியாத மோடி அரசு, தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டு 19-11-2021 அன்று மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. வேளாண் மக்களின் கோரிக்கைகளை ஏற்பதாக எழுத்துப் பூர்வமாகக் கடிதம் கொடுத்துள்ளது ஒன்றிய அரசு. அதனால் போராட்டத் தலைமைச் சங்கம் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.

போராட்டத் தலைமைச் சங்கமான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சார்பில் பேசிய குர்னாம்சிங் சாதுனி “ஒன்றிய அரசு எங்களின் எல்லாக் கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 15 ம் தேதி நாங்கள் கூடிப் பேசி மீண்டும் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.

மக்கள் ஒன்றிணைந்தால் அதிகாரம் தூள்தூளாகும் என்பதைக் காட்டி விட்டார்கள் வேளாண் மக்கள்.

இதிலிருந்து மோடி அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

Pin It