“தீண்டாமை என்பது இருவேறுபட்ட வகுப்பி னருக்கு இடையிலான போராட்டம். அது சாதி இந்துக் களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் இடையிலான போராட்டம். அது ஒரு தனிமனிதன் மீது இழைக்கப் படும் அநீதி அல்ல. ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பின் மீது நிகழ்த்தும் அநீதி. இப்போராட்டம் ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரோடு எப்படிப்பட்ட உறவைப் பேண வேண்டும் என்று வரையறுக்கிறது. எங்களை யும் மற்றவர்களைப் போல சமமாக நடத்துங்கள் என்று நீங்கள் குரலெழுப்பும் அடுத்த நொடியே இந்தப் போராட்டம் தொடங்கிவிடுகிறது.

சாதி இந்துக்களின் கோபத்திற்கான காரணம் மிக எளிமையானது. நீங்கள் அவர்களுக்குச் சமமாக நடந்து கொள்வது அவர்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அவர்களுடைய பார்வையில் உங்களுடைய நிலை என்பது கீழானது. நீங்கள் தூய்மையற்ற வர்கள். அடித்தட்டிலேயே இருக்க வேண்டியவர்கள். அப்படியே இருந்தீர்களானால் அவர்கள் உங்களை நிம்மதியாக வாழவிடுவார்கள். முடியாது என்று நீங்கள் அந்தக் கோட்டைத் தாண்டினால் போராட்டம் தொடங்கி விடும்.”

(- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “ஜனதா” இதழ், 27.06.1936)

மேதை அம்பேத்கர் எண்பது ஆண்டுகளுக்குமுன் கூறிய நிலையே இன்றும் இந்தியா முழுவதும் நீடிக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளுக் காகவும் சமத்துவத்துக்காகவும் குரல் எழுப்பும் போதெல்லாம்-அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் போதெல்லாம் சாதி இந்துக்கள் அவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கின்றனர்.

thirumavalavan at kachanatham28.05.2018 அன்று சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது சாதி இந்துக்கள் நடத்திய கொடிய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அய்ந்துபேர் படுகாயமடைந்தனர். அவர்களில் அய்ம்பது அகவையான ஒருவரின் உடம்பில் அறுபது இடங்களில் வெட்டப்பட்டிருந்தது என்பதிலிருந்தே இத்தாக்குதல் எவ்வளவு கொடூரமாக இருந்தது என் பதை அறியலாம்.

மதுரையிலிருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ள கச்சநத்தத்தில் 79 பள்ளர் குடும்பங்களும் 6 அக முடையர் குடும்பங்களும் உள்ளன. இவர்களின் கிட்டத்தட்ட 30 குடும்பத்தினர் வேலையின் பொருட்டு வெளியூர்களில் இருக்கின்றனர். பள்ளர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். தமிழ்நாட்டில் பறையர், பள்ளர், அருந்த தியர் என்கிற மூன்று பெரும் தாழ்த்தப்பட்ட சாதிகள் உள்ளன. இந்தியாவில் 400க்கு மேற்பட்ட தாழ்த் தப்பட்ட சாதிகள் இருக்கின்றன. அகமுடையர் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர். முக்குலத்தோரில் ஒரு பிரிவினர். முக்குலத்தோரில் மறவர், கள்ளர், அகமுடையர் என்ற உட்பிரிவுகள் உள்ளன.

கச்சநத்தத்தில் பள்ளர் பெரும் எண்ணிக்கையி னராக இருந்த போதிலும் கச்சநத்தத்தைச் சுற்றியுள்ள மறநாடு, ஆலடிநத்தம், அரவங்காடு, திருப்பாச்சேத்தி ஆகிய ஊர்களில் அகமுடையரும், கள்ளரும் பெரும் எண்ணிக்கையினராக இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் எந்த வொரு “சேரி”யைச் சுற்றிலும் சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையினராக வாழும் நிலையே இருக் கிறது. இந்துமத சாத்திரங்களின் பெயரால் தாழ்த்தப் பட்டவர்களுக்குக் காலங்காலமாக சமூக உரிமை களும், உடைமை உரிமையும் மறுக்கப்பட்டு, சாதி இந்துக் களையே சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட் டிருந்த காரணத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு அடங்கி ஒடுங்கி வாழ்ந்தனர்.

ஆனால் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் கல்வி கற்று வெளி யூர்களில் வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிக மாகி வருகிறது. கிராமங்களில் வேளாண் தொழில் நலிவுற்றதாலும், இயந்திரமயமாக்கப்பட்டதாலும், தாழ்த் தப்பட்ட இளைஞர்கள் நகரங்களில் கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நாள் கூலி, வாரக் கூலி வேலைகளுக்குச் செல்கின்றனர்.

1991இல் அம்பேத்கரின் நூற்றாண்டு நிகழ்வு தாழ்த்தப்பட்ட இளைஞர்களிடம் உரிமை வேட்கையை, சமத்துவ உணர்ச்சியைத் தட்டி எழுப்பியது. இம்மாற் றங்களைச் சாதி இந்துக்களால் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே தாழ்த்தப்பட்டவர் மீதான வெறுப்பு, சாதி இந்துக்களிடம் நீறுபூத்த நெருப் பாக இருந்து கொண்டேயிருக்கிறது. எங்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடை யிலான முரண்பாடு கூர்மையடைகிறதோ அங்கெல் லாம் அது தீப்பற்றி எரிகிறது. கச்சநத்தத்திலும் அவ் வாறுதான் நடந்தது.

கச்சநத்தத்தில் கருப்பண்ணசாமி கோயில் இருக் கிறது. அது முற்றிலும் தாழ்த்தப்பட்டவர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருப்பண்ணசாமி கோயில் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மே 25 அன்று இத்திருவிழா நடந்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் திருவிழா வரியாக ரூ.1700 வசூலிக்கப்பட்டது. வெளியூர்களில் வாழும் கச்சநத்தம் பள்ளர் குடும்பத்தினரும் இந்த வரியைக் கொடுத்தனர்; திருவிழாவிலும் கலந்து கொண்டனர். இத்திருவிழாவிற்காக வெளியூர்களிலிருந்து உறவினர் களும் நண்பர்களும் வந்து தங்கியிருந்தனர்.

மே 26 அன்று இராணுவத்தில் பணிபுரியும் தேவேந்திரனும், மதுரை தல்லாக்குளம் காவல் நிலை யத்தில் பணியாற்றும் பிரபாகரனும் கருப்பண்ணசாமி கோயில் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அகமுடையர் சாதியைச் சார்ந்த 48 அகவையினரான சந்திரகுமார், மேல்சாதி யினரான தன்னைக் கண்டபிறகும் தேவேந்திரனும் பிரபாகரனும் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப் பதைக் கண்டு வெகுண்டார். அதுகுறித்து அவர்களிடம் வாக்குவாதம் செய்தார். இழிசொற்களால் திட்டினார். அப்போது தேவேந்திரன் “உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்” என்று கூறினார். உடனே சந்திரகுமாரின் மகன் சுமன், “எதிர்த்துப் பேசுகிறாயா?” என்று கூறியவாறு கத்தியைக் காட்டி மிரட்டினார்.

இராணுவத்தில் பணிபுரியும் தேவேந்திரனும் காவல் துறையில் பணியாற்றும் பிரபாகரனும் திருப் பாச்சேத்தி காவல் நிலையத்தில் பணியாற்றும் சந்திர குமாரும் அவருடைய மகன் சுமனும் கத்தியைக் காட்டித் தங்களை மிரட்டியதாகப் புகார் அளித்தனர். காவல் துறையினர் சந்திரகுமார் வீட்டிற்குச் சென்றனர். சுமன் வீட்டில் இல்லாததால் அவருடைய தந்தை சந்திரகுமாரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இழிவுபடுத்திப் பேசியதற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294(b)-யின் கீழ்வழக்குப் பதிவு செய்து, அன்று மாலையே சந்திர குமாரை வீட்டுக்கு அனுப்பினர். கச்சநத்தம், பழைய னூர் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், இந்த வழக்கு பழையனூர் காவல் நிலையத்திற்கு மாற்றப் பட்டது.

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராகப் புகார் கொடுத்தது, சந்திரகுமாரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தது, வழக்குப் பதிவு செய்தது ஆகியவை தங்கள் குடும்பத்தை அவமானப் படுத்திவிட்டதாக மனக் கொதிப்படைந்தனர். தங்கள் மேல்சாதிப் பெருமைக்கு இழுக்கு நேர்ந்துவிட்டதாகக் குமுறினர்.

சுமனும் அவர் தம்பி அருணும் பக்கத்து ஊர்களி லிருந்து இருபது பேரைத் திரட்டினர். மே 28 அன்று இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுவாகப் பிரிந்து கொடிய ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். கச்சநத் தத்திற்கான மின்சாரத்தைத் துண்டித்தனர். முதலில் தேவேந்திரன் வீட்டிற்குள் ஒரு குழு நுழைந்தது. தப்பித்து வெளியே ஓடிவருபவரைத் தாக்குவதற்காக மற்றொரு குழுவினர் வெளியில் காத்திருந்தனர். தேவேந்திரன் வீட்டில் இல்லாததால் அவருடைய தந்தை 65 அகவையினரான ஆறுமுகத்தை வீட்டி லிருந்து வெளியில் இழுத்துவந்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

அடுத்ததாக சண்முகநாதன் வீட்டிற்குச் சென்றனர். சாதி இந்துக்களில் சிலர் கச்சநத்தத்திலும் சுற்றியுள்ள ஊர்களிலும் கஞ்சா விற்று வந்தனர். சண்முகநாதன் (அகவை 31) இதைக் கண்டித்தார். இதுகுறித்துக் காவல் நிலையத்தில் பல தடவை புகார் கொடுத்தார். சாதி இந்துக்களில் சிலர் தவறே செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் உரிமை தாழ்த்தப்பட்டவரான சண்முக நாதனுக்கு இல்லை என்று கருதினர். மேலும் திருவிழா ஏற்பாடுகள் குறித்து சண்முகநாதன் வீட்டில்தான் கூடிப் பேசினர். 2017 வரையில் திருவிழா நாளில் சாதி இந்துக்கள் கருப்பண்ணசாமி கோயிலுக்கு வந்து “பிரசாதம்” பெற்றுக் கொண்டனர். 2017இல் ஏற்பட்ட தகராறு காரணமாக 2018 மே 25 அன்று சாதி இந்துக் கள் திருவிழா நாளில் கோயிலுக்குச் செல்லவில்லை. இத்தகைய காரணங்களால் சண்முகநாதனை வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கினர். மருத்துவமனைக் குக் கொண்டுசெல்லும் வழியிலேயே சண்முகநாதன் இறந்து போனார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த 22 அகவையினரான சந்திரசேகர் மே 31 அன்று மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார்.

மூன்றாவதாக இச்சாதிவெறிக் கும்பல் தனசேகரன் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தது. தனசேகரனையும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த முதுகலைப் பட்டதாரியான அவருடைய மகன் சுகுமாறனையும் சரமாரியாக வெட்டினார்கள். படுகாயங்களுடன் இவர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனர். இச்சாதிவெறிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் 2017இல் கச்சநத்தத் தின் முன்னாள் ஊராட்சித் தலைவரான முருகனையும் வெட்டிக் கொன்றிருப்பார்கள் என்று கருதப்படுகிறது. வீடுகளில் இருந்த பொருள்களையும் அடித்து நொறுக் கினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக மே 22 அன்று மக்கள் நடத்திய 100ஆம் நாள் போராட்டத்தில் காவல் துறையினர் திட்டமிட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல் லப்பட்ட நிகழ்வால் தமிழகமே அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்தது. அந்தச் சூழலில் மே 28 அன்றிரவு கச்சநத்தத்தில் சாதி ஆதிக்க வெறிகொண்ட ஒரு கும்பல் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல் பற்றிய செய்தி ஊடகங்களில் வெளிவராமல் தமிழக அரசு தடுத்துவிட்டது. கைப்பேசிகளின் வாட்ஸ்-அப் மூலமே இச்செய்தி பரவியது.

மே 29, 30, 31 ஆகிய மூன்று நாள்கள் கச்சநத்தம் படுகொலையைக் கண்டித்துத் தாழ்த்தப்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரு வள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தாக்குதல் நடத்தியவர்களுக்குத் துணையாக இருந்த பழையனூர் காவல் நிலையத் துணை ஆய்வாள ரைப் பணியிடை நீக்கம் செய்யாத வரை கொல்லப் பட்டவர்களின் உடல்களைப் பெறமாட்டோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். இவர்களின் கோரிக்கை யின்படி, துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதேபோன்று பழையனூர் காவல் நிலைய எல்லைக்குள் இருந்த கச்சநத்தம் திருப்பாச் சேத்திக் காவல் நிலையத்தின்கீழ் மாற்றப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் தலைவர் கள், அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சாதி ஆதிக்கத் திற்குப் பலியான மூவரின் உடல்கள் சூன் 2 அன்று கச்சநத்தத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், தாழ்த்தப்பட் டோருக்கான தேசிய ஆணையமும் கச்சநத்தம் வன் கொடுமைத் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாகக் கூடிய ஊர் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி, தமிழ்நாட்டில் 347 ஊர்கள் வன்கொடுமைத் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளவை என்று வகைப்படுத் தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்தப்படும் ஊர் களில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சிறப்புக் காவல் துறையை அப்பகுதியில் அமர்த்த வேண்டும். சாதிய மோதல் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

கச்சநத்தம் தாழ்த்தப்பட்டோர் மீது கொடிய தாக்குதல் நடத்தியவர்களில் ஆறு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அய்ந்துபேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் 2015ஆம் ஆண்டின் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனை வரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அகமுடையரான சந்திரகுமாருக்கும் பள்ளரான தேவேந்திரனுக்கும் நடந்த வாய்ச்சண்டை மட்டுமே இக்கொடிய தாக்குதலுக்குக் காரணமல்ல; அது ஒரு தீப்பொறியாக மட்டுமே அமைந்தது. சிவகங்கை மாவட் டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட வர்களை இழிவாக நடத்தும் போக்கு சாதி இந்துக் களிடம் மேலோங்கி வந்தது. சாதி இந்துக்களை எதிர்ப்பது என்பது தங்கள் உயிருக்கும், உடைமைக் கும், வாழ்வாதாரத்திற்கும் ஆபத்தானதாக முடியும் என்று எண்ணி, தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் மீதான இழிவுகளுக்கு எதிர்வினையாற்றாமல் பொறுமை காத்து வருகின்றனர். ஆனால் புதிய தமிழகம் கட்சி யின் தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமி, தேவேந் திரகுல வேளாளர்களான பள்ளர்களைத் தாழ்த்தப் பட்டோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று பா.ச.க. தலைவர் அமித்ஷாவை அழைத்து மாநாடு நடத்தினார். அரசியல் ஆதாயத்துக்காக தன் சொந்த மக்களையே பலியிட முனைந்துள்ளார். பறையர் என்ற பிரிவினைரைவிட பள்ளர் பிரிவினர் எவ்வளவுதான் முன்னேறினாலும் இந்துமதம் என்று ஒன்று இருக்கும் வரை சாதி இந்துக்கள் அவர்களைத் தீண்டப்படாத வர்களையே பார்ப்பார்கள்.

கச்சநத்தத்தில் பள்ளர்களில் பெரும்பாலோர்க்குச் சொந்தமாக நிலம் இருக்கிறது. வைகை ஆற்று நீரைக் கொண்டு இவர்கள் நெல், கரும்பு, வாழை முதலான வற்றைப் பயிரிடுகின்றனர். சாதி இந்துக்களை எதிர்த் தால் வைகை ஆற்று நீர் தங்கள் நிலத்துக்கு வரவிடா மல் தடுத்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். வெளி யூர்களில் வேலை கிடைத்ததால் கச்சநத்தத்திலிருந்து கிட்டத்தட்ட முப்பது குடும்பங்கள் வெளியேறிவிட்டனர். வேளாண்மை, சட்டம், பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களின் பிள்ளைகள் படிக்கின்றனர்.

கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகிய வற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறிவருவதைச் சாதி இந்துக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி, இவர்கள் தங்களுக்கு அடங்கி ஒடுங்கி நடக்க மாட்டார்கள்; சமமாக நடக்க முயல்வார்கள; எனவே தங்கள் சாதி உயர்வை நிலைநிறுத்த தாழ்த்தப்பட்ட வர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம் சாதி இந்துக்களிடம் கனன்று கொண்டேயிருக்கிறது. இத்தகைய நிலை கச்சநத்தத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் நிலவுகிறது. காலங்காலமாகத் தாழ்த்தப் பட்டவர்கள் இருந்து வந்தது போன்ற கீழான-இழி வான நிலையிலேயே மட்டந்தட்டி வைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் மீதான தாக்குதல்கள் சாதி இந்துக்களால் நடத்தப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்ட சாதியினர்தாம் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று பார்ப்பனப் படிப்பாளிகள் கூறி வருகின்றனர். இது பார்ப்பனரின் பிரித்தாளும் சூழ்ச்சி. தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத் தப்பட்டவர்களும் உழைக்கும் சாதியினர் - உழைக்கும் வர்க்கத்தினர். அதனால் கிராமங்களில் வயல்களில் இருபிரிவினரும் ஒன்றாக வேலை செய்கின்றனர்; அருகருகில் குடியிருக்கின்றனர். சாதியப் படிநிலை யிலும் இவர்கள் அடுத்தடுத்த நிலைகளில் இருப்ப வர்கள். எனவே இவர்களிடையேதான் மோதல் ஏற்படுமே தவிர, சாதிப்படிநிலைகளில் உயரத்தில் இருக்கின்ற - நேரடியாக உடலுழைப்பில் ஈடுபடாத பார்ப்பனருக்கும் மற்ற மேல்சாதியினருக்கும் தாழ்த் தப்பட்டவர்களுக்கும் இடையே நேரடியான மோதல் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பிற்படுத்தப்பட்ட சாதியினர் மட்டும் கொடுமையான வர்களா? இல்லை! பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வு கற்பித்து, இச்சாதியக் கட்டமைப்பைக் கட்டிக்காத்து வரும் இந்து மதத் தத்துவமே கொடு மையானது. நால்வருணத்தையும் அவற்றிலிருந்து ஆறாயிரம் சாதிகளையும் உருவாக்கி அவற்றுக் கிடையே உயர்வு-தாழ்வுகளைக் கற்பிக்கும் இந்து மதத்தையும், அதன் சாத்திரங்களையும் இதிகாச -புராணங்களையும், இவற்றுக்குத் தலைமை தாங்கும் பார்ப்பனர்களையும் எதிர்ப்பதன் மூலமே இந்திய சமூகத்தின் அடித்தளமாக இருக்கின்ற சாதியக் கட்டமைப்பைத் தகர்க்க முடியும்.

இதை அம்பேத்கர் இவ்வாறு கூறுகிறார் : “இந்துக் கள் கொஞ்சமும் ஈவிரக்கமின்றியும் சட்ட விரோத மாகவும் தீண்டாமையைக் கடைபிடிப்பதற்குக் காரணம் இந்து மதம், மதக்கட்டுப்பாடு தெய்வீகமானது, புனித மானது என்று சொல்லுவதோடு மட்டுமின்றி, இந்தக் கட்டுப்பாட்டினை ஒல்லும் வகையெல்லாம் பேணிக் காப்பது கடமை என்றும் விதித்திருப்பதுதான். அவர் கள் மனிதாபிமானத்தின் குரலுக்குச் செவிசாய்ப்ப தில்லை என்றால், அதற்குக் காரணம், அவர்கள் தீண்டாதோரை மனிதர்களாகவே கருதக்கூடாது என்று இந்து மதம் கட்டளையிட்டிருப்பதுதான். தீண்டா தவர்களை அடிப்பது, அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, தீயிட்டுக் கொளுத்துவது மற்றும் பல்வேறு கொடுமைகளை அவர்களுக்கு இழைப்பது ஆகிய செயல்களை அவர்கள் மனசாட்சியின் உறுத் தல் கொஞ்சமுமின்றிச் செய்வதற்கான காரணம், இந்து மதம் அவர்களுக்கு இந்தச் சமூகக் கட்டுக் கோப்பினைக் கட்டிக்காக்க எத்தகைய பாவத்தையும் செய்வது தவறு அல்ல என்று கற்பிப்பதுதான்” (அம் பேத்கர் நூல் தொகுப்பு வரிசை (தமிழ்) 9, பக்கம் 136).

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆயினும் தீண்டாமை காரணமாக தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பலவகையான சமூக உரிமைகள் இன்றளவும் மறுக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்குமுன் குசராத்தில் தன் வயலுக்குச் சென்றுவரை தாழ்த்தப்பட்ட ஒருவர் குதிரையைப் பயன்படுத்தினார் என்பதற்காகக் கொல்லப்பட்டார். திருமணத்தின்போது தாழ்த்தப்பட்ட வகுப்பு மணமகன் குதிரைமீது அமர்ந்து வருவதற்குக் கடும் எதிர்ப்பு இருக்கிறது. சாதி இந்துக்கள் தெருவில் மிதியடி அணிந்து செல்லக்கூடாது; மிதிவண்டி அல்லது மோட்டர் சைக்கிளில் செல்லக்கூடாது; பிணத்தை எடுத்துச் செல்லக்கூடாது போன்ற பல தடைகள் உள்ளன.

10.6.2018 அன்று மகாராட்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டம் வகாதி கிராமத்தில் 15 அகவையினரான தாழ்த்தப்பட்ட சிறுவர் இருவர் ஈசுவர் ஜோஷி என்ப வரின் கிணற்றில் குளித்தனர் என்பதற்காக அச்சிறுவர் களை நிர்வாணமாக்கிக் கடுமையாக அடித்து, ஊர்வல மாக அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தப்பட்டனர். நாள்தோறும் இதுபோன்ற வன்கொடுமைகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

“இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆய்வு செய்யும் போது, மூன்று வினாக்கள் நம் நினைவுக்கு வருகின்றன. தீண்டாமை என்பது ஏன் மறைந்து ஒழியவில்லை? தீண்டப்படாதவர்களுக்கு எதிராக இந்துக்கள் பின்பற்றும் சட்டவிரோதமான செயல்களை ஏன் அவர்கள் சட்ட பூர்வமானவை என்று கருதுகிறார்கள்? தீண்டப்படாத வர்கள் தொடர்பான விவகாரங்களில் ஓர் இந்து எனப் படுவோர் மனச்சான்று இல்லாமல் நடந்து கொள்வது ஏன்?” என்று அண்ணல் அம்பேத்கர் முன்வைத் துள்ள மூன்று வினாக்கள் குறித்து சாதி இந்துக்கள் ஆழ்ந்த அக்கறையுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த வினாக்களுக்கு விடை காண்பதன் மூலமே கச்சநத்தம் தாக்குதல் போன்றவற்றை நிகழாமல் தடுக்க முடியும். உண்மையான சமூக சனநாயகத்தை நோக்கி நாம் நகர முடியும்.

Pin It