இந்தக் கட்டுரையாளனாகிய நான், அரசியல் இயக்கங்கள் எதையும் சார்ந்தவன் அல்ல. பெட்டிக் கடை, தெருவோரத் தேநீர்க்கடை, பஞ்சர் ஒட்டும் கடை, முடிதிருத்தும் கடை போன்ற வயிற்றுப் பிழைப்புக்காக அதிகாலையில் 5 மணியில் இருந்து இரவு 12 மணிவரை வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருந்து உடல் தேய்ந்து ஓயாது உழைக்கும் கடைநிலை சிறு வணிகர்களைச் சார்ந்து, அவர்களுக் காகப் பாடுபட, குரல் கொடுக்க அமைக்கப்பட்டிருக்கும் “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை” (த. வெள்ளையன்) அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர்களில் ஒருவன். நான் ஒரு தீவிரவாதி அல்ல. ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் போராட்டங்களில் மக்களோடு கைகோத்த ஒரு சாமானியன். அவ்வளவே.

sterlite protest 3972018, மே மாதம் 22ஆம் நாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடி பாளையங்கோட்டை நெடுஞ்சாலையில் குழந்தை குட்டிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாக வேப்பமரங்களின் நிழலில் குவிந்து ஸ்டெர்லைட் ஆலை யை விரட்டியே தீருவோம் என்று வெறும் கைகளுடன் சென்ற பல்லாயிரக்கணக்கான என் மக்களில், 13 பேரை சுட்டுக்கொன்று, நூற்றுக்கணக் கானவர்களைத் துப்பாக்கித் தோட்டாக்களால் சுட்டு படுகாயப்படுத்தி, லத்திகளால் ஆயிரக்கணக் கானவர்களை அடித்து எலும்புகளை நொறுக்கி கோரத் தாண்டவமாடிய காவல் துறையினர் ஒரு வரைக் கூட கொல்ல வேண்டும் என்று துளியும் நினையாமல், இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தவர்களை மருத்துவமனை நோக்கி அனுப்பி வைத்து விட்டு, கோழைகளைப் போல ஓடிச் செல்லாமல் “சுடுடா எங்களை” என்று நெஞ்சை நிமிர்த்தி நின்ற எங்கள் வீட்டுச் செல்வங்களை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் சிலிர்த்து நிற்கிறது.

30.10.1994இல், ஸ்டெர்லைட்டுக்கான அடிக்கல்லை நாட்டியவர் அப்போதைய முதல்வர் செல்வி. ஜெய லலிதா. 1996இல் அதன் உற்பத்தியைத் தொடங்கிய பொழுது அனுமதி அளித்தது கலைஞர் ஆட்சி. 1994இல் இருந்தே ஸ்டெர்லைட்டை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சட்டப் போராட் டங்களும் முன்னெடுக்கப்பட்டன. தூத்துக்குடி மக்களோடு வை. கோபால்சாமி, தோழர். நல்லக்கண்ணு, மார்க் சிஸ்ட் கட்சித் தோழர்கள் கனகராஜ், அர்ச்சுனன் மற்றும் மீனவர்கள், வணிகர்கள், பொது மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டங்களைத் தொடர்ந்து வழிநடத்தினர். அத்தனைப் போராட் டங்களும் அமைதி வழியிலேதான் நடத்தப்பட்டன.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணி நடை பெற்ற குமரெட்டியாபுரம் மக்கள், “தாங்கள் வாழ, இனி வழியே இல்லை... ஒழிந்தோம்!” என்ற நிலையில் குழந்தைகளைக் கூடப் பள்ளிகளுக்கு அனுப்பாமல், ஊரின் திறந்தவெளியில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கிய நிலையில், தூத்துக்குடி மாநகரமே விழித்துக் கொண்டு அவர்களோடு கைகோத்தது.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற வர்கள் தீவிரவாதிகள் என்று அரசால் சொல்லப் படுகிறது. உண்மை நிலை என்னவென்றால், 2017 மே மாதம் ஸ்டெர்லைட் விரிவாக்கச் செய்தி கசிந்த உடனே தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) பேராசிரியை பாத்திமாபாபு தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டும் பணியைத் தொடங்கியது. 18.06.2017-இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், தூத்துக்குடி தன்பாடு உப்பு வியாபாரிகள் திருமண மண்டபத்தில் உருவாக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி நகரில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தன்னார்வத்துடன் இணைந்து கொண்டனர். ஆட்டோ ஓட்டுநர்கள், வணிகர்கள் சங்கத்தினர், மீனவர் அமைப் பினர், விவசாய சங்கத்தினர் என இப்படித்தான் போராட்டக்குழு அமைந்தது. ஒரு நாள் கடை அடைத்தாலும் சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்கும் சிறு வணிகரும், ஆழ்கடலில் வலையில் மீன் சிக்கி னால்தான் சாப்பாடு என்ற நிலையில் உள்ள மீனவர்களும், ஸ்ரீவைகுண்டம் தாமிர பரணி ஆற்றுப்படுகை யில் ஒரு நாளைக்கு 1 கோடியே 40 இலட்சம் லிட்டர் தண்ணீரை ஸ்டெர்லைட் ஆலைக்குத் தாரை வார்த்த தால், காய்ந்த வயிற்றோடு ஓய்ந்து போன விவசாயி களும் அரசின் பார்வைக்குத் தீவிரவாதிகளாகத் தெரிந்திருந்தது.

ஆட்சிகள் மாறினாலும், அதிகாரத்தில் இருந்த வர்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு எதுவும் எடுக்காத காரணத் தினால், மக்கள் பிரதானக் கட்சிகளை நம்பி அவர்கள் பின்னால் நிற்கத் தயாராக இல்லை. அவர்களை மக்கள் வெறுத்தார்கள். “தலைமை என்று ஒன்று வேண்டாம். கூட்டுத் தலைமையாக நாம் இயங்கு வோம்” என்கிற அடிப்படையை வகுத்தார்கள்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் நடத்திய எந்தப் போராட்டமும் ஆயுதப் போராட்டமாக இருந்ததில்லை. காத்திருப்புப் போராட்டம், உள்ளிருப்புப் போராட்டம், பட்டினிப் போராட்டம், கடை அடைப்புப் போராட்டம், கடலுக்குப் படகுகள் ஓட்டாத போராட்டம் என்றுதான் இந்தப் போராட்டம் எடுத்துச் செல்லப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தை எந்தத் தீவிரவாதக் குழுவும் வழி நடத்தவில்லை. அப்படி ஒரு வதந்தி பரப்பப்பட்டது. இங்குள்ள போராட்டக் குழுவிற்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறது என்று சொன்னார்கள். எதற்காக அமெரிக்கப் பணம்? என்று கேட்டால் வேறு ஒரு தாமிர ஆலையின் வணிகத்திற்கு, ஸ்டெர்லைட் ஆலை ஒழிக்கப்படப் பணம் தரப்படுகிறது என்று சொல்லப்பட்டது. கூட்டத்திற்குக் கட்டப்பட்ட ஒலிப்பெருக் கிக்கு வாடகை கொடுக்க முடியாமல் மத்திய வியாபாரி கள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தியும், பொதுச் செயலாளர் பாஸ்கரும் தவித்த தவிப்பு இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது!

24.03.2018இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தத்தில் வி.வி.டி. சிக்னல் அருகே நடத்தப்பட்டது. பிஞ்சுக் குழந்தைகளுடன் ஒரு இலட்சம் பேர் திரண்டனர். தூத்துக்குடி நகரமே குலுங்கியது. கடைகள் அடைக் கப்பட்டன. படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. எங்கும் வேலை நிறுத்தம். கிராமங்கள் எல்லாம் தூத்துக் குடிக்குப் படை எடுத்தன. ஆர்ப்பாட்டக் குழுவினர் அரசுக்குத் தங்கள் கோரிக்கையை வைத்தனர். வருடத்திற்கு 1000 கேன்சர் சாவுகள். பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களில் ஸ்டெர்லைட் கழிவுகளைக் கொட்டியதால் விளைநிலங்கள் பாழ். உப்பாறு போன்ற மிகப்பெரிய ஆறுகளில் கூட கழிவுகளைக் கொட்டு வதை விட்டு வைக்கவில்லை. ஆலையின் வேதிக் கழிவுகளை ஆலையின் வளாகப் பள்ளங்களுக்குள் கொட்டியதால் நிலத்தடி நீர் பாழ். வானமெங்கும் பரவிய கொடிய மாசுவினால் பல வருடங்கள் மழை யை மறந்து மேகங்கள்.

ஒரு ஸ்டெர்லைட் முதலாளிக்காக, பத்து இலட்சப் மக்களைக் கொண்ட தூத்துக்குடியைக் காவு கொடுப் பதா? பல ஆயிரம் கிராமங்களுக்குச் சுவையான குடிநீர் வழங்கிய தாமிரபரணியைக் காவு கொடுப்பதா? மக்கள் தங்கள் வாழ்க்கை பறிபோய்விட்டதே என்று வேகத்தில் திரண்டார்கள். அன்று காவல்துறை கை கட்டி நின்றது. ஏதாவது ஒரு அசம்பாவிதம் அன்று நிகழ்ந்தது உண்டா?

அதன்பிறகுதான் அனைத்துத் தலைவர்களும், பிரபலங்களும் தூத்துக்குடி நோக்கி வந்தார்கள். அது வரை தூங்கி வழிந்த ஊடகங்களும் பொறுப்பை உணர்ந்து மக்களுக்கான நியாயமான கோரிக்கை களை உலகோர் முன் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனால் தமிழக அரசு, மக்கள் முன் வைத்த கோரிக் கைகள் எதையும் கண்டுகொள்ளத் தயாராக இருக்க வில்லை. ஸ்டெர்லைட் ஆலையைத் தடைசெய்ய அனைத்து முயற்சிகளும் செய்வோம் என்று மக்களைச் சந்தித்து ஆறுதல் படுத்தியிருந்தால், இத்தகைய சம்ப வங்கள் நடந்திருக்காது. அவர்களுக்கு அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரமில்லாமல் இருக்கும் பொழுது, மக்களைப் பற்றிச் சிந்திக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

2018 மே 22இல் இவ்வளவு மக்கள் திரள்வார்கள் என்பது அரசின் புலனாய்வுப் பிரிவிற்குத் தெரியும். தூத்துக்குடியின் அத்தனைச் சாலைகளிலும் திரண்டு வந்த மக்களைக் கைது செய்து, பேருந்துகளில் ஏற்றி மண்டபங்களில் அடைத்திருக்க வேண்டும். 144 தடை உத்தரவு என்று போட்டுவிட்டு, இன்னொரு அமைப் பிற்கு, எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தது எவ்வகையில் நியாயம்? எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்திற்கு வருவதற் காகக் கூட அவர்கள் திரளாக வந்திருக்கலாம் அல்லவா? 144 தடை என்பது எங்கும் எவரும் நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது என்று இருந்தால் எப்படி கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தரப்பட்டது? அங்கு வைத்துச், சுற்றி வளைத்து மக்களைப் போட்டுத் தள்ளவா?

2018 மே 22இல் காலை 10.15க்குள் நான் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் இருந்தேன். தலைவர் வெள்ளையன் தலைமையில் கண்டனப் பொதுக் கூட்டம். விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவில் கூட்டம். காவல்துறையினர் 500 பேர் எங்களுக்குக் காவல். பேசிப் பேசி எதைச் சாதித்தோம் என்று, மக்கள் கூட்டம் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் நோக்கி வரவில்லை. வந்தவர்கள்கூட மைதானம் காலியாகக் கிடந்ததைப் பார்த்து விட்டு, ஆட்சித் தலைவர் வளாகம் அமைந்திருந்த தூத்துக்குடி- பாளையங் கோட்டை நெடுஞ்சாலையில் அணி அணியாகச் செல்லத் தொடங்கியதை என் கண்களால் பார்த்தேன். இளம் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதி யோர், ஊனமுற்றோர் என அனைவரும் மேற்குத் திசை நோக்கிய பயணம்.

அனைத்து மக்களுக்கும் சொல்லப்பட்டது இதுதான். “மெரினா போராட்டம் மாதிரி, நாம் ஆட்சித் தலைவர் வளாக மரங்களின் நிழலில் அமர்ந்துவிடுவோம். அரசுக்கு நெருக்கடி கொடுத்தது போல் ஆகும். எப்படி யாவது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும். அரசாங்கத்தைத் தாயாகக் கருதித், தாயிடம் அடம் பிடித்துக் கேட்டதைப் பெறும் குழந்தைகளைப் போல எம் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் அமரவே சென்றார்கள். இப்படிப் பல்லாயிரம் பேர் அமர இங்கு வேறு இடம் இல்லை. வெட்ட வெளியில் அவர்களை அமர வைக்க முடியாது. ஆயுதம் இல் லாமல் தாயின் மடி தேடி வந்தவர்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்றீர்களே பாவிகளே! எப்படிடா மனம் வந்தது. அiதியாகச் சென்ற கூட்டத்தை அப்படியே அனுமதித்திருந்தால் போதும்! மாவட்ட ஆட்சித் தலைவர் ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லி, மக்களின் போராட்டத்தின் நியாயத்தை அரசுக்கு உணர்த்தி யிருந்தால் போதுமே. எம்மக்கள் கலைந்து சென்றிருப் பார்களே. அமைதியாகச் சென்ற மக்களை அடித்தார் கள். காவல்துறையினரே கல்கொண்டு தாக்கினார்கள். புழு பூச்சி கூட தாக்கப்பட்டால் வீறுகொண்டு எழுமே. அதைப் போன்று தான் பெண்கள் குழந்தைகள் மீது வீசப்பட்ட கற்கள் திரும்ப வந்தன.

தூத்துக்குடிக்கு வந்து, எம் மக்களைத் தீவிரவாதிகள் என்று சொல்லிவிட்டுச் சென்ற நடிகரின் படத்துக்கு பாலாபிசேகமாம்! என்ன கொடுமையப்பா!

தூத்துக்குடி மக்களை வேட்டையாடிய பின்னணியில் பெரும் சதி இருக்கிறது. அதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். நீதித்துறை மக்களை அரண்போல காத்தது. அவர்களுக்கு நன்றி சொல் வோம். துப்பாக்கிச் சூடு நடத்தி இத்தனை உயிர்ப்பலி வாங்கி, நூற்றுக்கணக்கான பேரைச் சுட்டுக் காயப் படுத்தி, ஒரு நபரை பல பேர் சூழ்ந்து நாயை அடிப்பது போல அடித்து வீழ்த்தி, அப்படி ஆயிரம் பேரைக் குற்றுயிரும் குலை உயிருமாக ஆக்கி, காவல்துறை இன்று வரை வீடு வீடாகச் சென்று ‘கைது செய்கிறோம்’ என்ற போர்வையில் மக்களைப் பிடித்துச் செல்கிறார் களே... இவர்களுக்கு இவ்வளவு அதிகாரத்தைக் கொடுத்தது தமிழக அரசா? மத்திய அரசா? அல்லது அமெரிக்க, இரஷ்ய அரசுகளா? என்ன நடக்கிறது இங்கே?

தூத்துக்குடியின் பிரதானக் கட்சிகள் இந்த அவலங்களுக்காகப் பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?

94 வயதில் அய்யா ஆனைமுத்து என்னை அழைத்துக் கேட்கிறார். உங்கள் ஊரில் படித்தவர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று என்னைக் கேட்கிறார். நான் என்னவென்று பதில் சொல்ல? தூத்துக்குடி நகரைக் காப்பாற்றும் பொறுப்பு சோற்றுக்கு வழி இல்லாதவர்களிடம் இருக்கிறது... அது தானே உண்மை!

தூத்துக்குடி மக்களுக்காகப் பதறித் துடித்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. எனக்குத் தெரிந்த அளவில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டங்கள் பல, அமைதி வழியில் நடைபெற்றதை அறிந்தவன் என்ற முறையில், அமைதிவழிப் போராட் டத்தை ஆதரித்தவன் என்ற முறையில் எம்மில் எவரும் தீவிரவாதி இல்லை... இல்லை என்று ஓராயிரம் முறை உரக்கச் சொல்லி இக்கட்டுரையை நிறைவு செய்யும் முன் ஒரு வார்த்தை.

ஸ்டெர்லைட் தரும் புற்றுநோயை விட, காசுக்கு விலை போன காவல்துறையை, இதன் பின்னால் இருந்த கொடுங்கோலர்களை, பெரும் முதலாளி களின் கையாட்களைத் (ஏஜெண்டுகளைத்) தோலுரிப் போம்! தமிழகத்தில் இப்படி ஒரு கேவலமான ஆட்சிய hளர்களா? காலம் பதில் சொல்லும். காவல்துறையின் மனித வேட்டை... இணையதளம் முடக்கம்... தூத்துக் குடி, ஆட்சியாளர்களை ஒரு போதும் மன்னிக்காது! மறக்கவும் செய்யாது!

Pin It