கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, நரேந்திர மோடி, “மன்மோகன் அரசு, சுவிட்சர் லாந்து வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருதற்குக் கையாலாகாத அரசாக இருந்தது. நான் பிரதமரானால் சுவிசு வங்கியில் உள்ள ஒரு இலட்சம் கோடி டாலர் (60 இலட்சம் கோடி உருவா) கருப்புப் பணத்தை 100 நாள்களில் மீட்டு வந்து ஏழை எளிய மக்களின் வளர்ச் சிக்காகப் பயன்படுத்துவேன்” என்று இமயமலையின் முகட்டில் நின்றுகொண்டு கன்னியாகுமரியில் கேட்கும் அளவுக்கு உரத்து முழங்கினார்.

“நரேந்திர மோடி மற்ற அரசியல்வாதிகளைப் போல வெறும் வாய்ச்சவடால் பேர்வழி அல்ல; எதற்கும் அஞ்சாத செயல் மறவர்” என்கிற படிமத்தை முதலாளிய ஊடகங்கள் மூலம் மோடியே உருவாக்கிக் கொண்டார். பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய சனதாக் கட்சி 2014 மே 26 அன்று ஆட்சியில் அமர்ந்தது. அடுத்த நாளே -மே 27 அன்றே மோடி கருப்புப் பணத்தை மீட்பதற்கான 13 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தார்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.பி. ஷா இக்குழுவின் தலைவர்; மற்றொரு முன்னாள் நீதிபதி யான அரிசித் பசாயத் இதன் துணைத்தலைவர்; வரு மான வரித்துறை, புலனாய்வுப் பிரிவு மற்றும் ‘ரா’ (RAW) ஆகியவற்றைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 11 பேர் இதன் உறுப்பினர்கள். இச்சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முதல் கூட்டம் அடுத்த அய்ந்து நாள்கள் கழித்து -2-6-2014 அன்று நடந்தது. மோடி ஆட்சி யில் சுவிசு வங்கியிலிருந்து பல இலட்சம் கோடி உருவா கருப்புப் பணம் உடனே இந்தியாவுக்கு வரப்போகிறது என்பது போன்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

2-11-2014 அன்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, “கருப்புப் பணத்தை மீட்கும் விஷயத்தில் என்மீது நம்பிக்கை வையுங்கள். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காசும் மீட்கப்படும். இந்த நாட்டின் ஏழைகளுக்குச் சென்று சேர வேண்டிய அப்பணத்தை மீட்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எத்தனை கோடியாக இருந் தாலும் சரி, அதைக் கண்டிப்பாக மீட்க நடவடிக்கை எடுப்பேன். உங்களின் முதன்மைச் சேவகனான என் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினார். (தி இந்து, தமிழ் 3-11-14)).

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் 15-11-14 அன்று நடைபெற்ற ஜி-20 நாடுகள் மாநாட்டில் மோடி, கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில் இந்தியாவுக் குச் சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்-கட்டுச் சோற்றில் பெருச் சாளியை வைத்துக் கொண்டிருப்பது போல! யார் அந்தப் பெருச்சாளி-பெரு முதலாளி? அவர்தான் மோடி யின் அன்புக்குரிய அதானி! அவரும் அங்கே இருந்தார்.

குசராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது, 2005ஆம் ஆண்டுக்குப்பின் அதானி குழுமத்திற்கு கட்ச் வளைகுடா பகுதியில் 7,350 எக்டர் நிலத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு மோடி கொடுத்தார். அந்த இடத்தில், ஒரு சதுர மீட்டர் பரப்பின் மதிப்பு 0.45 டாலர். ஆனால் அந்த நிலத்தின் ஒரு பகுதியை நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ஒரு சதுர மீட்டர் பரப்பை 11 டாலர் குத்தகைக்கு அதானி குழுமம் கொடுத்திருக்கிறது. அரசின் அரவணைப்பில் சட்டப்படியான வகைகளில் உருவாகும் கருப்புப் பணத்திற்கு இது ஒரு சான்று.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமருடன் மோடி உரையாடியபோது மோடிக்கு அடுத்து அதானி அமர்ந்திருந்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தின் ஒப்பந்தம் அதானிக்கு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் தோண்டி அதானிக்கு இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி ரூ.6200 கோடி கடன் தருகிறது. இந்த மோடி, வானொலியில் ‘நான் ஏழைகளின் சேவகன்’ என்று பேசுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

தலைமை அமைச்சர் பதவி ஏற்ற அடுத்த நாளே மோடி, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்ததன் பின்னணியைப் பார்ப்போம். புகழ்பெற்ற வழக்குரை ஞரும், வாஜ்பாய் ஆட்சியில் சில காலம் சட்ட அமைச் சராக இருந்தவருமான ராம்ஜெத் மலானி 2009ஆம் ஆண்டு கருப்புப் பணம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2011 சூலை மாதம் கருப்புப் பணம் குறித்து ஆராய நடுவண் அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. 2-ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த மன்மோகன் அரசு, “கிணறு வெட்டப் போய் புதிய பூதம் தோன்றுமோ” என அஞ்சி, உச்சநீதிமன்றத்தின் அறிவுரையைக் கிடப் பில் போட்டது.

இதற்கிடையில் யூனியன் வங்கியிலிருந்து திருடப் பட்ட கருப்புப்பண விவரம் பிரான்சு நாட்டின் அரசுக்குக் கிடைத்தது. இப்பட்டியலில் உள்ள 627 இந்தியர்களின் பட்டியலை இந்திய அரசு 2011ஆம் ஆண்டு பிரான்சிட மிருந்து பெற்றது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம், சுவிட்சர்லாந்தின் யூனியன் வங்கியில் கணக்கு வைத்துள்ள 627 பேரின் கருப்புப் பண விவரத்தைத் தெரிவிக்குமாறு சுவிசு அரசுக்கு மடல் எழுதினார். “சுவிசு யூனியன் வங்கியில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிய முன்னாள் ஊழியரான ஹெர்வே ஃபல்சியானி என்பவரால் திருடப்பட்ட விவரம் இது. சுவிட்சர்லாந்து நாட்டின் சட்டப்படி இது தண்டனைக்குரிய குற்றம். 627 இந்தியர்களின் கணக்கு விவரத்தைத் தரமுடியாது” என்று சுவிட்சர்லாந்து அரசு கூறிவிட்டது.

கணக்கு வைத்திருப்பவரின் விவரங்களை அவரு டைய ஒப்புதல் இல்லாமல் எவருக்கும் தெரிவிப்ப தில்லை என்கிற சட்டப்படியான ஒப்பந்த அடிப்படை யில்தான், உலகில் உள்ள பெரும் பணக்காரர்கள் சுவிசு வங்கியில் பணம் வைத்துள்ளனர். 2009ஆம் ஆண்டிற்குப்பின் இந்த விதி சிறிது தளர்த்தப்பட்டது. அதன்படி, வரி ஏய்ப்பின் மூலமாகத்தான் சுவிசு வங்கியில் பணத்தை வைத்திருக்கிறார் என்று அரசு உரிய ஆதாரங்களுடன் கேட்டால், அவர்கள் குறித்த தகவல் தரப்படும் என்று சுவிசு அரசு கூறுகிறது. மேலும் நீதிமன்றமும் இந்த வரி ஏய்ப்பை உண்மை என உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் இவ்வாறு அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பது அத் தைக்கு மீசை முளைத்த கதை போன்றதாகவே இருக்கும்.

பா.ச.க.வும் மற்ற எதிர்க்கட்சிகளும் மன்மோகன் அரசு கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாடாளு மன்றத்திலும் வெளியிலும் கடுமையாகக் குற்றம் சாட்டின. அதனால் மன்மோகன் அரசு 2012 மே மாதம் கருப்புப் பணம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது.

அந்த வெள்ளை அறிக்கையில், கள்ளத்தனமாகப் பொருள்களைக் கடத்துவது, ஹவாலா பணப்பரிமாற் றம், போதைப் பொருள் உற்பத்தி மற்றும் வணிகம், ஏற்றுமதியிலும் இறக்குமதியிலும் போலி ஆவணங்கள் தயார் செய்வது, சட்டவிரோத சுரங்கத் தொழில், காடு களில் மரங்களை வெட்டுவது, கள்ளச்சாராய வர்த்த கம், திருட்டு, ஆள்கடத்தல், பாலியல் தொழில், நிதி மோசடி, பொதுப் பணத்தைக் கையாடல் செய்தல், வங்கி மோசடிகள், சட்ட விரோத ஆயுத விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்கள் கருப்புப் பணம் உருவாக ஆதாரமாக இருக்கின்றன என்று விளக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் எல்லோருக்கும் தெரிந்தவைதாம். ஆனால் கருப்புப் பணம் உருவாவதையும் அது அயல்நாடுகளுக்குச் சென்று மீண்டும் இந்தியாவுக்கே திரும்புவதையும் தடுப்பதற்கான உறுதியான செயல் திட்டம் எதுவும் இந்த வெள்ளை அறிக்கையில் கூறப் படவில்லை.

2014 ஏப்பிரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கள் பல கட்டங்களாக நடைபெறத் தொடங்கி விட்டி ருந்த நிலையில் உச்சநீதிமன்றம், கருப்புப் பணம் குறித்து ஆராய சிறப்புப் புலனாய்வுக் குழுவை மூன் றாண்டுகள் கடந்த பின்னும் ஏன் அமைக்கவில்லை என்று நடுவண் அரசைக் கண்டனம் செய்தது. மோடிக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆயிற்று. எனவே மோடி, கருப்புப் பணத்தை மீட்பதே என் முதல் வேலை என்று தேர்தல் பரப்புரையில் மேடைதோறும் சூளுரைத்தார். அதனால்தான் ஆட்சி யில் அமர்ந்த அடுத்த நாளே சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தார். ஆனால் சுவிட்சர்லாந்திலோ மற்ற நாடுகளிலோ வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்திலிருந்து ஒரு உருவா கூட இந்தியாவுக்கு வராது என்பதே மாபெரும் உண் மையாகும். கருப்புப் பண மீட்பு என்பது ஒரு கபட நாடகம்.

கருப்புப் பணம் குறித்து விசாரிக்க 1947 முதல் 40க்கு மேற்பட்ட குழுக்களும் ஆணையங்களும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டன. இவை ஆயிரக் கணக்கான ஆலோசனைகளை அளித்தன. இவற்றுள் வாஞ்சி குழுவின் பரிந்துரைகள் மிகவும் குறிப்பிடத் தக்கன. அரசோ, நூற்றுக்கணக்கான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதாகக் கூறுகிறது. ஆனால் கருப்புப் பணத்தின் அளவும் ஆதிக்கமும் அதனால் நாட்டுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் கேடுகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.

கூலி தரப்படாத - சுரண்டப்படும் மனித உழைப்பே இலாபமாகிறது. இந்த இலாபத்தின் குவிப்பே மூலதனம். முதலாளிய உற்பத்தி முறையில் மூலதனத்தால் மூலையில் முக்காடிட்டுச் சும்மா இருக்க முடியாது. அது ஒரு இரத்தக் காட்டேரி என்பது போன்றது.

எனவேதான் மார்க்சு, “உயிருள்ள உழைப்பை உயிரற்ற உழைப்பு (மூலதனம்) உறிஞ்சிக் கொழுக் கிறது” என்று சொன்னார்.

எனவே சட்டப்படியான வழியில் வந்ததாகச் சொல்லப்படும் மூலதனமானாலும், கள்ளத்தனமான வழிமுறைகளில் உருவான கருப்புப் பணமானாலும் அதனால் ஒரே இடத்தில் தங்கி -சும்மா இருக்க முடியாது. எனவேதான் சுவிட்சர்லாந்து நாட்டிலோ, பிற நாடு களிலோ வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணமானாலும். இந்திய நாட்டிற்குள் அதைவிட அதிக அளவில் உள்ள கருப்புப் பணமானாலும் அதனால் இலாபவேட்டையில் ஈடுபடாமல் இருக்க முடியாது. ஆனால் கருப்புப் பணம் என்பது புதைத்து வைத் துள்ள புதையல் போல் இருப்பதாகவும், அதைச் சிறப்புப் புலனாய்வுக் குழு அப்படியே தோண்டி எடுத்து வந்துவிடும் என்பது போலவும் மோடி ‘மோடி மஸ்தான்’ கண்கட்டுவித்தை காட்டுகிறார்.

கடந்த 25 ஆண்டுகளில் துபாய், சிங்கப்பூர், வெர்ஜின் தீவுகள், லக்சம்பர்க் ஆகிய நாடுகளில்தான் 02-10-2011 அன்று பா.ச.க. இந்தூரில் வெளிநாட்டில் உள்ளகருப்புப் பணத்தை மீட்கக் கோரி மன்மோகன் அரசுக்குஎதிராக நடத்திய பேரணி அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் கருப்புப் பணம் வைத்துள்ள சுவிஸ் வங்கி இந்தியர்கள் அதிக அளவில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ளனர். இந்தக் கருப்புப் பணம் இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கை என்கிற மோசடிப் பெயரில் மொரீஷியஸ் நாட்டின் வழியாக மீண்டும் இந்தியாவுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தனிப்பட்ட பெயரில் அயல்நாட்டு வங்கியில் பணம் வைத்திருப்பதை விட, துபாயில் உள்ள தங்கம் மற்றும் வைர வணிகர்கள் மூலம் தங்கமாகவும் வைரமாக வும் மாற்றி, கருப்புப் பணம் இருக்கும் அடையாளமே தெரியாதவாறு ஆக்கிவிடுகின்றனர். துபாயிலும் சிங்கப் பூரிலும் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் இவ்வாறு கருப்புப் பணம் புரள்வது இந்திய அரசின் உளவுத் துறைக்குத் தெரியும். சூரத்திலும் மும்பையிலும் உள்ள தங்க-வைர வணிகர்கள்தாம் மோடியின் தேர்தலுக் குப் பெருந்தொகை கொடுத்தவர்கள்.

மேலும் ஹவாலா பணப் பரிமாற்றத்தின் தலைமை யிடமாக தற்போது துபாய் திகழ்கிறது. துபாயிலும் சிங்கப்பூரிலும் இந்தியரின் கருப்புப் பணம் அதிக அளவில் இருப்பதைத் திசைதிருப்புவதற்காகவே சுவிட்சர் லாந்து வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது.

‘உலக நிதிய ஒருமைப்பாடு’ (Global Financial Integrity) என்ற அமைப்பு, “1948 முதல் 2008 வரை யிலான காலத்தில் இந்தியாவில் கருப்புப் பணம்” என்ற தலைப்பில் வெளியிட்ட ஆவணத்தில், 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 50 விழுக்காடு அளவுக்குக் கருப்புப் பணம் புழங்கியது; 2008ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1,28,000 கோடி டாலர் (76,80,000 கோடி உருவா) எனவும், கருப்புப் பணத்தின் அளவு 64,000 கோடி டாலர் எனவும், இதில் அயல்நாடுகளில் 72.2 விழுக் காடும் இந்தியாவில் 27.8 விழுக்காடும், இருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது (ஃபிரண்ட்லைன், சூன் 27, 2014).

மேலும் அந்த ஆவணத்தில், இந்தியாவின் கருப்புப் பணத்தில் 68 விழுக்காடு, 1991இல் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கிற கொள்கையை அரசு நடைமுறைப்படுத்திய பிறகு உருவானதாகும் என்று கூறப்பட்டுள்ளது. தாராளமயம் என்ற பெயரால் அந்நிய மூலதன நுழைவு ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் பெருமளவில் நீக்கப்பட்டதால், அதிக அளவில் கருப்புப் பணம் உருவாகி, தங்குத்தடையின்றி உலவிக் கொண்டிருக் கிறது. 1991க்குமுன் அயல்நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட கருப்புப் பணத்தின் ஆண்டு வளர்ச்சி 9.1 விழுக்காடாக இருந்தது. இப்போது இது 16.4 விழுக் காடாக இருக்கிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்காமல் ஓயமாட்டேன் என்று பிரதமர் மோடி முழங்குவது வெட்டியான ஏமாற்று வீராப்புப் பேச்சல்லவா! இதை மக்கள் உணர வேண்டாமா?

‘தேசியப் பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பு’, அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கருப்புப் பணத்தின் அளவு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி யின் மதிப்பில் (GDP) 75 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துவிட்டது என்று கூறியுள்ளது. 2013இல் இந்தியா வின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GDP) இரண்டு இலட்சம் கோடி டாலர் - அதாவது 1,20,00,000 கோடி உருபா என அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் உலக வங்கி தெரிவித்திருக்கிறது (தி இந்து -தமிழ், 15-12-14) இதில் முக்கால் பங்கு கருப்புப் பணமாக இருக்கிறது என்றால் இது ஒரு நாடா? அரசா? வெட்கக்கேடு?

1971ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 7 விழுக்காடு அளவில் இருந்த கருப்புப் பணம் இப்போது 75 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. இந்திராகாந்தி காலம் முதல் இன்று வரை இந்தியப் பொருளாதாரம் பெருமுதலாளிகளின்-பெரும் பணக்கா ரர்களின் நலன்களைப் பேணுவதற்காகவே செயல் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே இது உறுதி செய்கிறது.

அதனால்தான் இந்தியாவில் தற்போது, மேல்தட்டில் 10 விழுக்காடாக உள்ளவர்களிடம் நாட்டின் செல்வத் தில் 74 விழுக்காடு இருக்கிறது. இன்னும் நுணுகிப் பார்த்தால் 5 விழுக்காட்டு பேரிடம் 65 விழுக்காட்டு செல்வமும் உச்சியில் உள்ள 1 விழுக்காடுப் பேரிடம் 49 விழுக்காட்டுச் செல்வமும் இருக்கிறது. இந்தப் பத்து விழுக்காட்டினர் தாம் இந்தியாவின் பொருளாதார, அரசியல் முடிவுகளைத் தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தான் இந்தியாவை உண்மையில் ஆள்கின்றனர். கீழ்த்தட்டில் உள்ள 10 விழுக்காட்டுப் பேரிடம் உள்ள சொத்து 0.2 விழுக்காடு மட்டுமே! (தி இந்து-ஆங்கிலம், 8-12-14).

2014 சூன் மாதத்தின் தொடக்கத்திலேயே நடுவண் அரசு சுவிசு வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரின் பட்டியலைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அளித்தது. அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத் தடிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கருதிய உச்சநீதி மன்றம், அப்பட்டியலைத் தன்னிடம் அளிக்குமாறு நடுவண் அரசைக் கோரியது. அதன்படி, 29-10-14 அன்று 628 பேரின் பெயர் பட்டியலை முத்திரையிட்டு மூடிய உறையில் நடுவண் அரசு, உச்சநீதிமன்றத் திடம் கொடுத்தது. அந்த உறையைப் பிரித்துக்கூடப் படிக்காமல், உச்சநீதிமன்றம் அப்படியே சிறப்புப் புல னாய்வுக் குழுவிடம் அளித்தது. இதை ஆராய்ந்து 2015 மார்ச்சு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியது.

அதன்படி, சிறப்புப் புலனாய்வுக்குழு 15-12-14 அன்று உச்சநீதிமன்றத்திடம் ஓர் அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையில், “சுவிசு வங்கியில் (HSBC) உள்ள 628 கணக்குகளில் 289 கணக்குகளில் பணமே இல்லை. மேலும் 628 பேரில் 201 பேர் இந்தியாவில் வசிக்காதவர்கள் அல்லது எங்கிருக்கிறார் கள் என்று கண்டறியப்பட முடியாதவர்கள். மீதி 427 பேரின் கணக்குகளில் ரூ.4,449 கோடி உள்ளது. இவர்களில் 79 இந்தியர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இவர்கள் சுவிசு வங்கியில் வைத்துள்ள பணம் ரூ.2,926 கோடி. இந்தியாவில் மட்டும் ரூ.14,958 கோடி அளவுக்குக் கருப்புப் பணம் இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையின் போது மோடி முழங்கிய ஒரு இலட்சம் கோடி டாலர் கருப்புப் பணம் (ரூ.60 இலட்சம் கோடி) இப்போது எங்கே இருக்கிறது? 2011இல் எல்.கே. அத்வானி வெளிநாட்டில் ரூ.28 இலட்சம் கோடி கருப்புப் பணம் இருப்பதாகச் சொன்னார்.

இந்தியாவில் வெறும் ரூ.14,958 கோடி கருப்புப் பணம் மட்டுமா இருக்கிறது? நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 75 விழுக்காடு அதாவது ரூ.90,00,000 கோடியாக உள்ள கருப்புப் பணம் எங்கே யார் யாரிடம் இருக்கிறது?

முன்பு குறிப்பிட்டுள்ளபடி, நாட்டின் செல்வத்தில் 75 விழுக்காடு வைத்துள்ள மேல்தட்டு வர்க்கத்தின ரான 10 விழுக்காட்டினரிடம்தான் மொத்தக் கருப்புப் பணமும் இருக்கிறது. இவர்கள் யார்? இந்நாட்டின் பெருமுதலாளிகள், உயர்சாதியினர், அரசியல் தலை வர்கள், உயர் அதிகாரிகள் என்கிற நாலு பக்கக் கூட்டுக்குள்தான் கருப்புப் பணம் சுழன்று கொண்டிருக்கிறது. இவர்களின் துணைக்கோள்களாக கல்வி வணிகர்கள், மருத்துவர்கள், திரைப்பட நடிகர்கள், வழக்குரைஞர் கள் முதலானவர்கள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் கல்வி வணிகத்தில் மட்டும் 50,000 கோடி கருப்புப் பணம் உருவாகிறது.

தான் சாவதற்கு யாரேனும் நஞ்சு அருந்துவார் களா? இந்திய சனநாயகம் என்பது கிரிமினல் பண நாயகமாக மாறிவிட்டிருப்பதைத் தேர்தல் காலத்தில் மட்டுமின்றி, அன்றாட நாட்டு நடப்புகளில் நாம் பார்க்கிறோம். கிரிமினல் பணநாயகம், கருப்புப் பணம் என்கிற அச்சாணியில் சுழல்கிறது. கிரிமினல் பண நாயக வண்டியில் அமர்ந்து கொண்டிருக்கிற முதலாளி களும், அரசியல் தலைவர்களும், உயர் அதிகாரி களும், தங்கள் வண்டியின் அச்சாணியைக் கழற்ற அனுமதிப்பார்களா? மக்களின் போர்க்குணம் மிக்கப் போராட்டங்களின் மூலமே கருப்புப் பண ஆதிக்கச் சக்திகளை வீழ்த்த முடியும்!

எனவே மோடியின் கருப்புப் பண மீட்பு முழக்கம் வெறும் கண்துடைப்பான, கபட நாடகமே ஆகும்.

Pin It