உலக வரலாற்றில் 1848ஆம் ஆண்டில் பொது வுடைமைக் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டதானது மிக முக்கிய நிகழ்வாகும். இவ்வறிக்கை உலக முழுமையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியாவில் ஒரு சிறு சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. அதன்பின் 1917ஆம் ஆண்டில் சோவியத் புரட்சி வெற்றி பெற்றதானது, உலகில்உள்ள சுரண்டும் வர்க்கத்தினரைக் கதிகலங்க அடித்தது. அதன் வீச்சு பிரிட்டிஷ் அடக்குமுறையையும் மீறி இந்தியாவிலும் ஊடுருவியது. ஆனால் இந்தியாவில் உயர்சாதிக் கும்பலினரே அன்று படிப்பறிவு பெற்றி ருந்த காரணத்தால், பொதுவுடைமைத் தத்துவம் அவர்களுடைய பிடியில் சிக்கிக் கொண்டது. உயர் சாதிக் கும்பலினர் இந்தியச் சமூகச் சூழ்நிலைக்கு ஏற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுக்க மறுத்து, இயந்திரத் தனமாக, மக்களிடையே பரப்பி, வருணாசிரம முறைக் குப் பங்கம் வராதவாறு எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர்.

“சாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது; அதை மீறிப் புரட்சியை நடத்தினால், மறுகணமே விழுந்துவிடும்” என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் புறக்கணித்தனர்.

அதுமட்டும் அல்ல; பொதுவுடைமைக் கொள்கை யை நாடு முழுவதும் சீராகக் கொண்டு செல்லவேண் டும் என்று நினைக்காமல், சின்னஞ்சிறு பகுதிகளில் வலுப்படுத்திவிட்டு, நாட்டின் பெரும்பாலான பகுதி களில் அதைப் பற்றிய உணர்வே இல்லாத நிலையில், அரசுக்கு எதிராகப் போரிட முற்பட்டனர். இதைத் தங்கள் வெற்றி என்றும் அறிவித்துக் கொண்டனர்.

இதுபோன்ற ஒரு போராட்டம் தான் தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம். தெலுங்கானா விவசாயிகள் புரட்சியில் சிலிர்த்து எழுந்த போது நாட்டின் பிற பகுதிகளில், இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது என்றே தெரியாமல் இருந்தது (இன்னும் இருக்கிறது). ஹைதராபாத் நிஜாமின் படை களை விரட்டி அடித்த தெலுங்கானா விவசாயிகள், வலுவான இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்தனர். இந்நிலையில் தங்களுக்குப் போதிய ஆயுதங்கள் கிடைத்தால் இந்திய இராணு வத்தைத் தடுத்து விடலாம் என்று நினைத்த இந்திய பொதுவுடைமைக் கட்சியினர், சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆயுதங்களைத் தருமாறு கேட்டனர். ஜோசப் ஸ்டாலின் இவர்கள் அவசரக் குடுக்கைத்தனமாக ஒரு பரந்த நாட்டில் ஒரு மூலையில் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்ததைச் சுட்டிக்காட்டினார். தெலுங்கானா பகுதியில் இப்படி ஒரு எழுச்சி ஏற்பட்டு இருக்கும் போது, அவ்வுணர்வு பிற பகுதிகளிலும் இருந்திருந்தால், தொடர்வண்டித் தொழி லாளர்கள், இராணுவத்தினரை தொடர் வண்டிகளில் ஏற்றித் தெலுங்கானா பகுதிக்குக் கொண்டு செல்வ தைத் தடுத்து இருக்க முடியுமே என்று கேட்டார்.

ஜோசப் ஸ்டாலின் இவ்வினாவை எழுப்பிய நிலை யில், அவர் ஆயுதம் தருவதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று தான் இவர்கள் புரிந்து கொண்டார்களே ஒழிய, நாடு முழுமைக்கும் புரட்சி உணர்வை ஊட்ட முடியாத தங்கள் இயலாமையை எண்ணி வருந்தவும் இல்லை; அதைப் பற்றி ஆராயவும் இல்லை.

இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. தனியார் மயம், உலகமயம், தாராளமயம் எனும் கூப்பாடுகளை இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் இருந்தே அமெரிக்கா எழுப்பிக் கொண்டுதான் இருக் கிறது. இந்தியப் பார்ப்பன அதிகார வர்க்கம் இதைக் கண்டு கொள்ளாமலேயே இருந்தது.

வி.பி. சிங் அரசு மண்டல் குழு பரிந்துரைகளில் சிறுபகுதியை அமலாக்க முடிவு செய்து, அரசு வேலை களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் 27 விழுக் காடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்க ஆணை பிறப்பித்தவுடன், அது தங்கள் ஆதிக்கத்தை நொறுக்கி விடும் அபாயமாக உணர்ந்தனர். உடனே அரசு வேலை என்று இருந்தால் தானே ஒதுக்கீடு என்ற பேச்சு வரும்? அரசு வேலையை இல்லாமல் செய்து விட்டால்... என்று நினைத்த பார்ப்பனர்கள், இது வரைக்கும் தாங்கள் கண்டுகொள்ளாமல் இருந்த ‘தனியார் மயம்’, ‘தாராள மயம்’, ‘உலக மயம்’ கூப் பாடுகளை ஆரத்தி எடுத்து வரவேற்று, கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இதன் காரணமாக இந்தியா வில் மெதுவாகப் போய்க் கொண்டு இருந்த முதலாளித் துவப் பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றது.

முதலாளித்துவப் பொருளாதாரத்தின்படி மக்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு பண்டங்களை உற்பத்தி செய்ய முடியாது. இலாபகரமாக விற்க முடிகின்ற பண்டங்களைத்தான் உற்பத்தி செய்யமுடியும். இப்படிச் செய்யும் போது, மக்கள் வாழ்வா தாரங்களை இழக் கும்படி நேர்ந்தாலும், அதைப்பற்றி முதலாளிகளோ, முதலாளித்துவ அரசோ கவலைப்படாது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக, தனியார்மயக் கொள்கையை ஏற்றுக் கொண்டபின், முதலாளித்துவப் பாதையில் ஏற்பட்ட வளர்ச்சிகள், காடு மலைகளில் உள்ள கனிமங்களை வெட்டி எடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தின. இதனால் அங்கு வாழும் பழங்குடி மக்கள், அவர்களு டைய வாழிடங்களில் இருந்து, மறுவாழ்வு அளிக்கப் படாமலேயே துரத்தப்பட்டனர்/படுகின்றனர். இதனால் வேறு வழி இல்லாத பழங்குடி மக்கள் அரசுக்கு எதிராக அணிதிரள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப் பட்டனர். இந்நிலையில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யினர், பழங்குடி மக்களின் சார்பில் அரசுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர்.

இந்த மாவோயிஸ்டுகளும் தெலுங்கானா விவசாயி களின் போராட்டத்தின் போது இந்திய பொதுவுடைமைக் கட்சியினர் செய்த அதே தவறைச் செய்கின்றனர். நாட்டு மக்களில் பெரும்பாலானோர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமைகளைப் பற்றியும், பொது வுடைமை மட்டுமே அதற்குத் தீர்வு என்பதையும் உண ராத நிலையில், காட்டுப் பகுதிகளில் வாழும் சின்னஞ் சிறு எண்ணிக்கையிலான மக்களைக் களத்தில் நிற்க விடுகின்றனர்.

விளைவு! அரசு இனிமையாகப் பேசுதல், பிரித்து ஆளுதல், சிறு சலுகைகள் அளித்தல், ஒறுத்து ஒடுக்கு தல் (சாம, பேத, தான, தண்ட) ஆகிய அனைத்து வழிகளையும் கையாள்கையில், அவற்றிற்கு ஈடுகொடுக்க முடியாமல், பழங்குடி மக்கள் மட்டும் அல்லாமல் மாவோயிஸ்டுகளும் திணறுகின்றனர்.

மாவோயிஸ்டுகள் யாருடைய நலனுக்காகப் போராடு கிறார்களோ, அப்பழங்குடி மக்களே அவர்களுக்கு எதிராகத் திரும்புகின்றனர். ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினம் மாவட்டம், பலப்பம் (Balapam) கிராமக் காட்டுப் பகுதியில் பழங்குடி மக்களுக்கும், மாவோயிஸ்டுகளுக் கும் நேர்ந்த புரிதல் மாறுபாட்டில் 20.10.2014 அன்று மூன்று மாவோயிஸ்டுகளைப் பழங்குடி மக்கள் கல்லால் அடித்துக் கொன்று உள்ளனர். இந்நிகழ்வை அடிப்படை யாகக் கொண்டு, மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்களின் ஆதரவை இழந்து வருவதாகவும், கூடிய விரைவில் மாவோயிஸ்டுகளை ஒழித்துக் கட்டிவிடலாம் என்றும் ஆந்திர மாநிலக் காவல்துறைத் தலைவர் 25.10.2014 அன்று கூறினார்.

அன்று தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் ஒடுக்கப்பட்டதைப் போல், இன்று பழங்குடி மக்களுக்கு ஆதரவான மாவோயிஸ்டுகளின் போராட்டத்தையும் வலிமைமிக்க இந்திய அரசு ஒடுக்கிவிடும்.

அன்றும் சரி! இன்றும் சரி! இந்தியாவில் பொது வுடைமைக் கொள்கைக்காரர்கள் என்று கூறிக் கொள்ப வர்கள் - நாடு முழுமைக்கும் சீராக இக்கொள்கையைக் கொண்டு செல்ல முயல்வதே இல்லை. குறைந்தபட்சம், துடைத்து எறிய முடியாத அளவிற்குப் பெரும்பாலான பகுதிகளில் கால்பதிக்க வேண்டும் என்றும் நினைப்பதே இல்லை.

ஏன் இப்படி? குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், பெரும்பாலான மக்களை அடைய வேண்டும் என்றால் சாதி/வருணக் கொடுமைகளைப் பற்றிப் பேச வேண்டி வரும். அப்படிப் பேசினால் வருண அமைப்பில் உச்ச பட்ச சுகத்தை அனுபவிக்கும் பார்ப்பனர்களை மற்ற அனைத்து மக்களின் எதிரியாக அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதை இந்தியாவில் உள்ள பொதுவுடைமைக் கட்சிகளை வழிநடத்தும் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களின் சூதுக்குப் பலியான மற்றவர்களும் விரும்புவதில்லை. ஆகவே சாதி/வருணப் பிரச்சினை பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் மிகவும் பாதுகாப்பாக இயக்கத்தை நடத்திச் செல்கின்றனர்.

பெரியார்-அம்பேத்கர் கொள்கையினர் பொதுவு டைமைக் கட்சிகளின் இக்குறையைச் சுட்டிக்காட்டினால் அதற்கு மவுனம் சாதிப்பதையே அவர்கள் உத்தியாகக் கொள்கின்றனர். மீறி அதைப் பற்றிப் பேசியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தினால், பிற் படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாட்டைக் கூர் மைப்படுத்தி இருவகுப்பினரிடையே மோதல்களைப் பெரிதாக்குகிறார்களே ஒழிய, இரு வகுப்பு மக்களை யும் ஒற்றுமைப்படுத்தி, நாட்டின் வளங்களை எல்லாம் சுரண்டிக் கொழுத்துக் கொண்டு இருக்கும் பார்ப்பனர் களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று முயல் வதே இல்லை.

அதிகார மையங்களில் இன்றும் பார்ப்பன ஆதிக்கமே வலுவாக இருக்கையில், அதைப் பலவீனப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சிறு பகுதி மக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவது அவர்களைக் காவு கொடுப்பது போல் ஆகாதா? மக்களிடையே புரட்சிகர எண்ணங்கள் வளரும்போது அரசாங்கத்திலும், சமூக, பொருளாதார நடவடிக்கைகளில் உள்ளவர்களிடமும் பிளவு ஏற்பட்டால் அல்லவா புரட்சியை வெற்றிப்பாதை யில் கொண்டு செல்ல முடியும்?

பார்ப்பனர்களைப் பொறுத்தமட்டில் இப்பொழுது உள்ள அமைப்பு அவர்களுக்கு மிகவும் சௌகரிய மாகத்தானே உள்ளது? இப்படி இருக்கையில் அதிகார மையங்களில் மக்களிடம் வளரும் புரட்சி எண்ணங் களுக்கு ஏற்ப, பிளவு ஏற்பட வேண்டிய அவசியமே இல்லையே? இன்று இருப்பது போல் அல்லாமல் அதிகார மையங்களில் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் மட்டுமே நிரம்பி வழிவதை மாற்றி, அனைத்து வகுப்பு மக்களும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ற விதித்தில் இருந்தால், மக்களிடம் புரட்சி உணர்வு ஓங்கும் பொழுது, அது அதிகார மையங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா?

ஆகவே, மக்களிடையே புரட்சிகர எண்ணம் வளர்க் கும் அதே வேளையில், அரசு வேலை, தனியார் வேலை மற்றும் அரசியல், சமூக, பொருளாதார நட வடிக்கைகள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட வகுப்பி னர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மதச்சிறுபான்மையினர், முற்பட்ட வகுப்பினர் அனை வருக்கும் மக்கள் தொகையில் அவரவர் விகிதத்திற்கு ஏற்பப் பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்று தோன்றவே இல்லையா? இவ்வாறு செய்யாவிடில் இந்தியாவில் புரட்சிகரத் தத்துவம் தப்படி கூட எடுத்து வைக்க முடியாது என்ற பாடத்தை இந்தியப் பொதுவு டைமைக் கட்சியினர் என்றுதான் கற்றுக்கொள்ளப் போகிறார்களோ?

Pin It