மணிப்பூர் மாநிலத்தில், ‘ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ (Armed Forces (Special Powers) Act - AFPSA) உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி இளம்பெண் இரோம் ஷர்மிளா கடந்த 15 ஆண்டு களாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வரு கிறார். அமைதியான-வன்முறை அற்ற வழியில் போராடி னாலும், ஆயுதமேந்திப் போராடினாலும் மக்களின் உணர்வுகளுக்கும் நியாயமான சனநாயக உரிமை களுக்கும் மதிப்பளித்துத் தீர்வு காண முயலாமல், அப்போராட்டங்களை ஒடுக்குகின்ற ஆதிக்க அரசாகவே இந்திய அரசு இருக்கிறது.

manorama manipurஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம், எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமல் எவரையும் கைது செய்யலாம்; சித்தரவதை செய்யலாம்; சுட்டுக் கொல்ல லாம் என்கிற காட்டுமிராண்டித்தனமான அதிகாரத்தை அளிக்கிறது. நடுவண் அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநிலக் காவல்துறை, குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஆயுதப்படையினர் எவர் மீதும் வழக்குத் தொடர முடியாது. நீதிமன்றம் எதற்கும் தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை. இராணுவ நீதிமன்றத் திற்கு மட்டுமே தன் படை வீரர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கவும், தண்டிக்கவும் உரிமை உண்டு.

ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரில் ஈடுபட்டி ருக்கும் போதுதான், இத்தகைய இராணுவ சிறப்பு அதிகாரம் என்பது நடப்பில் இருக்கும். ஆனால் பெரிய சனநாயக நாடு என்று பீற்றிக் கொள்கின்ற இந்தியா வில் வடகிழக்கு மாநிலங்களிலும். ஜம்மு-காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதிகளிலும், சொந்த நாட்டு மக்கள் மீதே போர் நடத்துவது போன்று இச் சட்டம் நடப்பில் இருப்பது மாபெரும் வெட்கக்கேடு அல்லவா!

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான குழு, ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; எனவே இதை உடனடியாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று 2013இல் நடுவண் அரசுக்கு வலியுறுத்தியது. அதற்குமுன் ஜீவன் ரெட்டிக்குழு, இச்சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கு முன் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசு, ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கிட இராணுவ உயர் நிலைத் தளபதிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்று மானவெட்கமின்றிக் கூறியது. கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்ளும் மோடியின் ஆட்சியில் ‘தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து’ என்ற பெயரால் இச்சட்டம் இன்னும் கொடிய முறையில் மக்கள் மீது ஏவிவிடப்படுவதற்கான ஆபத்து இருக்கிறது.

ஆயினும் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் அப்பாவி மக்கள் மீது எந்த அளவுக்குக் கொடிய முறை யில் ஏவப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணச் சான்று களும், தீர்ப்புகளும் நவம்பர் மாதத்தில் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இவை, இக்கொடிய சட்டத்தை உடனே நீக்க வேண்டும் என்பதற்கான போராட்டக் கருவிகளாக அமைந்துள்ளன.

சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு ஆயுதப் படையினர் மணிப்பூரிலும், ஜம்மு-காஷ்மீரிலும் நடத்திய அட்டூழியங்கள், படுகொலைகள் குறித்து இரண்டு முதன்மையான சான்றுகள் 14-11-14 அன்று நாளேடுகளில் வெளியாயின.

மணிப்பூரில் பத்து ஆண்டுகளுக்குமுன், தங்கஜம் மனோரமா என்ற இளம் பெண் சிறப்பு அதிகார ஆயுதப் படையினரால் அவருடைய வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, கொடிய முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்துத் தலைநகர் இம்பாலில் உள்ள ஆயுதப் படை யின் தலைமையலுவலகம் முன், மணிப்பூர் பெண்கள் ‘எங்களைக் கற்பழி’ என்று நிர்வாணமாக நின்று ஆவேச மாகப் போராடிய நிகழ்ச்சி உலகையே உலுக்கியது. இக்கொடிய சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரிலிருந்து நீக்கிடக் கோரியே இரோம் ஷர்மிளா 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கிடையே போராடி வருகிறார்.

தங்கஜம் மனோரமா படுகொலை குறித்து விசாரிக்க மாவட்ட நீதிபதி உபேந்திர சிங் தலைமையில் அமைக் கப்பட்ட குழு தன் ஆய்வறிக்கையை 2004 திசம்பர் மாதம் மணிப்பூர் அரசிடம் அளித்தது. ஆனால் அது வெளியிடப்படாமல், கமுக்கமாக வைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் காவல் நிலைய இறப்புகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கையொட்டி, உச்சநீதிமன்றம் 2004இல் நீதிபதி உபேந்திரசிங் குழு அளித்த அறிக்கையை அனுப்புமாறு மணிப்பூர் அரசைக் கேட்டது. எனவே வேறு வழியில் லாமல் அந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்திற்கு மணிப்பூர் அரசு அனுப்பியது. அதனால் அதில் உள்ள விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

நீதிபதி உபேந்திரசிங் அறிக்கையில், “அசாம் 17ஆவது ரைஃபிள் படைப்பிரிவைச் சேர்ந்த சிலர் 2004 சூலை 10 அன்று நள்ளிரவுக்குப்பின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள தங்கஜம் மனோரமா வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மனோரமா ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறினார். அவருடைய தாய், தம்பி முன்னிலையிலேயே அவரு டைய பால் உறுப்புகளைத் தாக்கினர்.

தன் தாயைக் கெட்டியாகக் கட்டிப்பிடித்துக் கொண்ட மனோரமாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அடுத்த நாள் காலை இம்பால் காவல் நிலையத்தி லிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் மனோரமா பிண மாகக் கிடந்தார். அவருடைய பிறப்பு உறுப்பிலும் தொடை களிலும் 16 குண்டுகள் பாய்ந்திருந்தன. விசாரணைக் காக அழைத்துச் சென்ற போது தப்பியோட முயன்ற தால் - காலில் சுட்டதால் - அதிக அளவில் இரத்தம் வெளி யேறியதால் இறந்தார் என்று ஆயுதப் படையினர் முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது முழுப்பொய். ஏனெனில் அவரது காலில் ஒரு குண்டடிக் கூட இல்லை. இது அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு கொடிய காவல் நிலையப் படுகொலை (Custodial Death)” என்று கூறப்பட் டுள்ளது (தி இந்து (ஆங்கிலம்) 14-11-14). நீதிபதி உபேந்திரா குழுவின் அறிக்கையின் மீது இனியேனும் நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக் கப்படுவார்களா?

2010 ஏப்பிரல் 30 அன்று வடக்குக் காஷ்மீரில் மாச்சில் பகுதியில், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற மூன்று இளைஞர்களைச் சுட்டுக்கொன்றதாக இராணுவம் தெரிவித்தது. அவர்கள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி யவர்கள் அல்ல; காஷ்மீர் இளைஞர்களே என்று மக்கள் போராட்டம் நடத்தினர். காஷ்மீர் அரசு 28.5.2014 அன்று அம்மூவரின் உடல்களைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்தது. மாநில அரசு மேற்கொண்ட விசாரணையில், கொல்லப்பட்ட அம்மூவரும் காஷ்மீர் மாநிலம் பாராமுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சஃபி, ஷெசாத் அகமது, ரியாஸ் அகமது என்பது தெரிய வந்தது. மேலும் நல்ல ஊதியத்துடனான வேலை வாங்கித் தருவதாக வேறு ஆட்கள் மூலம் ஆசைகாட்டி இம்மூன்று இளைஞர் களையும் சூழ்ச்சியாக இராணுவம்தான் அழைத்துச் சென்றது என்பதும் அம்பலமாகியுள்ளது. பதவி உயர்வும், பணமும் பரிசாகக் கிடைக்கும் என்பதற்காகவே அந்த மூன்று இளைஞர்களைப் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி யவர்கள் என்று முத்திரை குத்தி இராணுவத்தினர் கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மேற்கொண்ட விசாரணையை ஏற்க முடியாது என்று இராணுவம் கூறியது. நான்கு மாதங்கள் இளைஞர்களும் மக்களும் இப்படுகொலையைக் கண்டித்துக் கடுமையான போராட்டங்களை நடத்தினர். பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் சுட்டதில் 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும் பாலோர் இளைஞர்களேயாவர். மூன்று இளைஞர் களின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற போராட்டத்தில் 120 இளைஞர்கள் பலியாயினர். அதன் பின் மேற்கொள்ளப்பட்ட இராணுவ விசாரணையில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் விசாரணை உண் மையே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

13-11-14 அன்று இராணுவ நீதிமன்றம் 2010 ஏப்பிரல் 30 அன்று இளைஞர்களைக் கொன்ற குற்றத்திற்காகக் கர்னல் பதானியா, கேப்டன் உபேந்தர், இராணுவ வீரர்கள் தேவிந்தர், லக்மி, அருண்குமார் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஜம்மு-காஷ் மீரில் திசம்பர் மாதம் தேர்தல் நடக்க விருப்பதால் இராணுவம் நடுநிலையுடனும், நியாயமான முறை யிலும் நடந்து கொள்கிறது என்று காட்டிக் கொள்வதற் காகவே இராணுவ நீதிமன்றத்தால் அய்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தும் எழுந்துள்ளது.

ஏனெனில் காஷ்மீரில் பத்ரிபால் என்ற இடத்தில் நடந்த போலி மோதல் துப்பாக்கிச் சூட்டுக்கு ‘இராஷ்டிரிய ரைஃபிள்’ படைப்பிரிவைச் சேர்ந்த அய்ந்து பேரே குற்றவாளிகள் என்று மத்தியப் புலனாய்வுத் துறை குற்றப்பதிவு செய்தது. ஆனால் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டப்படி, மத்தியப் புலனாய்வுத் துறைக்கு விசாரிக்க அதிகாரமில்லை என்று இராணுவம் நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்தது. பல்வேறு இடர்ப்பாடுகளைக் கடந்து இறுதியாக இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றம், “இராணுவம் இதை உடனடியாக விசாரிக்க வேண்டும்; இல்லாவிடில் உச்சநீதிமன்றமே விசாரித்துத் தீர்ப்பளிக்கும்” என்று எச்சரித்தது. அதன்பிறகு தான், இராணுவ நீதிமன்றம் பத்ரிபால் படுகொலை வழக்கை விசாரித்தது. குற்றச் சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை 2014 சனவரி மாதம் முடித்துவிட்டது. இதற்காக 13 ஆண்டுகள் காஷ்மீர் மக்களும் மனித உரிமைப் போராளிகளும் நியாயம் கோரி நடத்திய போராட்டங் களும், முயற்சிகளும் இராணுவ நீதிமன்றத்தினால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு விட்டன.

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மட்டும் பாகிஸ்தானியர் ஊடுருவல் என்ற பெயரில் காஷ்மீர் மக்கள் படுகொலை செய்யப்படுவதில்லை. மக்கள் வாழும் எல்லா இடங்களிலும் இப்படுகொலைகள் அரங் கேறுகின்றன. 3-11-14 அன்று மொகரம் பண்டிகை ஊர்வலத்தைக்காண மகிழுந்தில் சென்ற பள்ளி மாண வர்கள் மீது இராணுவம் சுட்டதில் இரண்டு மாணவர் கள் கொல்லப்பட்டனர். இராணுவத்தினர் மகிழுந்தை நிறுத்துமாறு கூறியதைப் பொருட்படுத் தாமல் ஓட்டிச் சென்றதற்காகக் கண்மூடித்தனமாகச் சுட்டனர். மகி ழுந்தை நிறுத்த வேண்டுமெனில் அதன் சக்கரங் களைச் சுட்டாலே நின்றுவிட்டிருக்கும். ‘ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம்’ என்ற கேடயத்தைப் பயன் படுத்தி இந்திய இராணுவம் இப்படிப் பலமுறை நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு இராணுவத்தால் படுகொலை செய்யப் பட்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ‘காணாமல் போனவர்கள் பட்டியலில்’ இடம்பெற்றுள்ள னர். எனவே இனியும் காலந்தாழ்த்தாமல் ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அடியோடு நீக்கிட நடுவண் அரசை வலியுறுத்தி மக்கள் உரிமைப் போராட்டத்தை முடுக்கிவிட வேண்டும்.

Pin It