கடந்த நாற்பது ஆண்டுகளாகப் புயலைச் சந்திக்காமலிருந்த காவிரிப்படுகையின் கடற்கரையோர மாவட்டங்கள் நவம்பர் மாதம் தாக்கிய கஜா புயலால் பேரழிவுக் குள்ளாகி உள்ளன.

நவம்பர் 10 அன்று குறைந்தக் காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக உருவான கஜா புயல், வானிலை ஆய்வு மய்யத்திற்கே போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. முதலில் கஜா புயல் கடலூருக்கும் ஆந்திராவின் மசூலிப் பட்டினத்துக்கும் இடையில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் அறிவித்தது. பின்னர் கடலூருக்கும் பாம்பனுக் கும் இடையில் நாகப்பட்டினத்தில் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நவம்பர் 15 நள்ளிரவு 12 மணிமுதல், நவம்பர் 16 அதி காலை வரை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் கஜா புயல் வேதாரண்யம் அருகில் கரையைக் கடந்தது. 2011 திசம்பரில் கடலூர் மாவட்டத் தைத் தாக்கிய ‘தானே’ புயலைப் போல் பத்து மடங்கு பேரழிவை கஜா புயல் உண்டாக்கியிருக்கிறது.

kajaflood 2 600அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. தாழ்வான பகுதிகளிலிருந்து 22,849 குடும்பங்களைச் சேர்ந்த 81,948 பேர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு 471 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 7000 மின் கம்பங்களும் 216 நடமாடும் மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப் பட்டன. அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராட்டின. ஆனால் இந்த முன்னேற்பாடுகளை முறித்துப் போடும் வகையில் கஜா புயல் கோர தாண்டவமாடியது.

வேதாரண்யம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேது பாவாசத்திரம் உள்ளிட்ட கடற்கரையை யொட்டியிருந்த மீனவர்களின் குடிசை வீடுகள் சூறைக் காற்றால் தரைமட்ட மாயின. மீன்பிடி படகுகள் புயல் காற்றால் தூக்கி வீசப்பட்டும், ஒன்றோடொன்று மோதியும் நொறுங்கி உடைந்தன. மீன்பிடி வலைகளும் கருவி களும் சின்னாபின்னமாயின.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குடிசை வீடுகள் அதிகம். தமிழ்நாட்டில் காவிரிப் பாசனப் பகுதியில் பெருநிலவுடை மையாளர்களின் ஆதிக்கத்தின் காரணமாக அடிமனைக்கே உரிமையில்லாத குடிசை வீடுகள் அதிகம். புயல் காற்றால் குடிசைகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. ஓட்டு வீடு களின் ஓடுகள் காற்றில் பறந்தன. வீடுகளின் சுவர்களும் பெரும் சேதத்திற்குள்ளாயின. வீடுகள் மீதும் வீடுகளைச் சுற்றிலும் வீதிகளிலும் மரங்கள் வீழ்ந்தன. இதனால் பல ஊர்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே ஒரு நாளானது. மேல் கூரையே இல்லாத வீடு; எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் இருக்கும் சுவர்கள். அதனால் மக்கள் உடுத்தியிருந்த உடையோடு உயிருக்கு அஞ்சி தம் வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு பகுதியினர் அரசின் நிவாரண முகாம்களுக்குச் சென்றனர். பெரும்பா லோர் பள்ளிகளிலும் திறந்த வெளிகளிலும் தங்கினர்.

இவ்வாறு பல இலட்சம் மக்கள் தம் குழந்தை குட்டிகளுடன் குடிப்பதற்கு நீரும், உண்ண உணவும், மாற்றிக்கொள்ள உடையும், குளிரிலிருந்து காத்துக் கொள்ள போர்வையும் கிடைக்காமல் பெரும் துன்பத்திற்கு உள்ளாயினர். தங்கள் உடைமைகளையும், வீட்டையும் வாழ்வாதாரத்தையும் இழந்து எதிர்காலத்தைப் பற்றிய பெருங்கவலையில் உறைந்து கிடக்கின்றனர்.

அ.தி.மு.க. அரசு புயலால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு ஏற்ப திட்டமிட்டு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வில்லை. எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யானைக்குச் சோளப்பொரி என்பது போலாகிவிட்டதை அரசு உணரத் தவறிவிட்டது. இந்த ஆண்டு கேரள மழை வெள்ளப் பேரிடரின் போது முதலமைச்சர் பினராய் விசயன் முதல்நாள் முதலே களத்தில் நேரடியாக நின்றதுடன், அனைவரின் ஒத்துழைப்பையும் உதவியையும் கோரினார். இதேபோல் கடந்த ஆண்டு ஒடிசாவில் புயல் தாக்கிய போது முதல மைச்சர் நவீன் பட்நாயக் செயல்பட்டார். இந்தியாவில் முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டிலோ புயலால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நான்கைந்து நாள்களான பின்னும் முறையாகக் குடிநீரோ, உணவோ வழங்கப்படாத கொடிய நிலை இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் புயலால் பெருந்துன்பங் களுக்கும் இயலாமைகளுக்கும் உள்ளாகியிருந்த நிலையில் - குடிக்க ஒரு வாய்த் தண்ணீரும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த போது, நவம்பர் 17 அன்று முதலமைச்சர் பழனிசாமி தன் சொந்த மாவட்டமான சேலத்தில் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அத்துடன் தன் மாமனார் கட்டிய கோயிலின் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு விழாக்கோலம் பூண்டிருந்தார். இதைவிடக் கொடுமை என்னவென்றால், செய்தியாளர்களிடம் பேசிய போது, “351 முகாம்களில் ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 500 பேர் தற்போது இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை யான உணவு, மருத்துவ வசதி அனைத்தையும் அரசு செய்து கொண்டிருக்கிறது. உணவு இல்லை என்ற நிலை எங்கேயும் இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி முழங்கியதுதான்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை என்ற கண்டனங்கள் எழுந்தன. அதனால் புயலால் தாக்கியபின் அய்ந்துநாள் கழித்து முதல மைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத் துடன் ஹெலிக்காப்டரில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங் களின் பல பகுதிகளைப் பார்வையிட்டார். வானிலை சரியில்லை என்பதால், திருவாரூர், நாகை மாவட்டங்களை வான்வழி யாகக்கூட பார்க்கவில்லை. புதுக்கோட்டையிலும் பட்டுக்கோட் டையிலும் உயிரிழிந்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங் கினார். பாதிக்கப்பட்ட மக்கள் எவரும் முதல மைச்சரைச் சந்திக்க முடியாதவாறு காவல்துறையினர் தடுத்தனர்.

தமிழக அரசின் வருவாய்த் துறை 22-11-18 அன்று கஜா புயல் பாதிப்புகள் குறித்து வெளியிட்ட அறிக்கையின் விவரங்கள்:

உயிரிழந்தோர் -  63 பேர்

சேதமடைந்த வீடுகள் (குடிசைகள் 2,78,824 ஓட்டு வீடுகள் 62,996) - 3,41,820

சாய்ந்த மின்கம்பிகள் - 1,03,508

மின்மாற்றிகள் (Transformers) -  886

துணை மின்நிலையங்கள் -  181

தென்னந்தோப்புகள் - 30,000 எக்டர்

நெற்பயிர்  -   32,706 எக்டர்

வேளாண்மை மற்றும் தோட்டப் பயிர்கள் பாதிப்பு  -  88,102 எக்டர்

கால்நடைகள் - 12,298

பறவைகள்  -    92,507

விழுந்த மரங்கள்  -  11,32,686

இத்தகைய பெரிய பேரழிவுகளின் போது சிக்கித் தவிக்கும் மக்களை உடனடியாக மீட்பதற்கான தொலைநோக்குத் திட்டத்தைத் தமிழக அரசு தீட்டவில்லை. 2011 திசம்பர் 30 அன்று கடலூர் மாவட்டத்தைத் தாக்கிய ‘தானே’ புயல், 2016 திசம்பர் 11 அன்று சென்னையைத் தாக்கிய ‘வார்தா’ புயல், 2017 நவம்பர் 29-30இல் குமரி மாவட்டத்தைத் தாக்கிய ‘ஒக்கி’ புயல் ஆகியவற்றின் பேரழிவுகளிலிருந்து தமிழக அரசு பாடம் கற்கவில்லை என்பதையே கஜா புயலின் மீட்பு நடவடிக்கையின் போதாமைகள் புலப்படுத்துகின்றன. புயல் தாக்கிய பின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கு வதைச் சீர்செய்வது, மக்களுக்குக் குறைந்த அளவில் நிவாரணத் தொகை வழங்குவது என்பதுடன் தன் கடமையை அரசு கைகழுவிவிடுகிறது.

கஜா புயலால் 50 இலட்சம் தென்னை மரங்கள், மா, பலா, தேக்கு, சவுக்கு, தைலமரம் மற்றும் பிற மரங்கள் என 50 இலட்சம் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. குறிப்பாக வீடுகளிலும், தெருக்களிலும், போக்குவரத்துச் சாலைகளிலும் விழுந்துள்ள மரங்களை அகற்றுவதற்கான சிறப்பு ஏற்பாட்டைத் தமிழக அரசு செய்யவில்லை. அந்தந்த ஊர்களில் வாழும் இளைஞர்களும் மக்களும் மரங்களை வெட்டி அகற்றும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். உடனடியாக மரங்களை அகற்றாததால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்க முடியவில்லை. தமிழக அரசு இராணுவத்தின் உதவியைக் கேட்டுப் பெற்றிருந்தால் விரைவில் மரங்கள் அகற்றப்பட்டிருக்கும்.

தானே புயலின் போது முழுமையான அளவில் மின்சாரம் வழங்கிட ஒரு மாதமாயிற்று. ஜெனரேட்டர்களைத் தயார் நிலையில் வைத்திருந்து, கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் அவற்றைக் கொண்டு நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீரை ஏற்றி, குடிநீர் வழங்கியிருக்க வேண்டும். ஆடு, மாடுகள் செத்துக் கிடக்கும் சூழலில் குளம், குட்டைகளில் உள்ள நீரைப் பயன் படுத்துவதால் தொற்றுநோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

மின்துறை ஊழியர்கள் மற்ற மாவட்டங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்டு விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை நடும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் நெல் வயல்களில் வீழ்ந்துள்ள மின்கம்பங்களைத் தூக்கிச் சென்று நடும் பெருந்துன்பமான பணியைச் செய்கின்றனர். இவர்களின் பணியை மக்கள் பாராட்டுகின்றனர். இப்பணியில் அந்தந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களும் உறுதுணை யாக உள்ளனர். இப்பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி மின்துறை ஊழியர்கள் இரண்டு பேர் இறந்து போனது கொடுமையாகும். ஆயினும் ஒரு இலட்சம் மின்கம்பங்களை மீண்டும் நட்டு, மின் கம்பிகளை இணைத்து, முன்பு இருந்த நிலைக்கு மின்சாரம் வழங்கிட இரண்டு மாதங்களாகும் என்று கருதப்படுகிறது.

கஜா புயலின் சூறைக்காற்று நின்றவுடன் மீட்புப் பணி களையும் துயர்துடைப்புப் பணிகளையும் முன்னின்று மேற் கொள்வதற்கு ஊராட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர் களும் இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர்களை மட்டுமே சார்ந்திருக்கும் அவல நிலை இருந்தது. 2016 அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்திருக்க வேண்டும். உயர்நீதிமன்றம் பல தடவை அறிவுறுத்தியும் தோல்வி பயத்தின் காரணமாக அ.தி.மு.க. ஆட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. உள்ளாட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் அந்தந்த ஊர்களில் மக்களோடு வாழ்ப வர்கள். அதனால் இதுபோன்ற பேரிடர் காலங்களில் மரங் களை வெட்டி அகற்றுவது, சாலைகளில் போக்குவரத்துக்கான தடைகளை நீக்குவது, மக்களுக்கு உடனடித் தேவைகளான தண்ணீர், பால், உணவு, போர்வை, தார்ப்பாய் முதலான வை கிடைக்குமாறு செய்வது முதலான பணிகளில் முனைப் புடன் ஈடுபட்டிருப்பார்கள். கஜா புயலை ஒரு பாடமாக ஏற்று உள்ளாட்சித் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு மக்கள் திரள் போராட்டங்களைத் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும்.

உள்ளாட்சிகளில் மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளும் நிவாரணப் பொருள்கள் வழங்கலும் வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் செய்யப்படுகிறது. இதனால் மீட்புப் பணியில் பெரும் சுணக்கமும் நிவாரணப் பொருள்களை வழங்குவதில் பல குளறுபடிகளும் ஏற்பட்டுள்ளன. சேத மடைந்த வீடுகளுக்காகவும், அழிவுற்ற பயிர்களுக்காகவும் இழப்பீட்டுத் தொகை வழங்கும் போது, உள்ளாட்சியின் மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பு இல்லாததால் ஊழல் தலைவிரித்தாடப் போகிறது.

சாலைகளில் போக்குவரத்தையும், மின்வழங்கலையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவந்த பின் அரசு நிர்வாகம் கஜா புயல் பாதித்த பகுதிகளிலிருந்து காணாமல் போய்விடும். இம்மக்களின் வாழ்வாதாரம் பழைய நிலைக்குத் திரும்புமா? என்பது பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது.

காவிரிப்படுகையின் கடைமடைப் பகுதிகளுக்குக் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக நெற்பயிரிடும் அளவுக்கு நீர் கிடைக்காததால், மாற்றுப் பயிராகப் பெரும் பரப்பில் தென்னை மரங்களை நட்டனர். மா, பலா போன்ற பழ மரங்களும் நட்டனர். கஜா புயலில் 30,000 எக்டரில் 50 இலட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. ஒரு தென்னை மரத்தை நட்டபின் 7-8 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும்; மரம் நன்கு முதிர்ச்சியடைந்து முழு அளவில் காய்ப்பதற்கு 15 ஆண்டுகளாகும். ஒரு ஏக்கரில் உள்ள 75 மரங்களில் ஆண் டிற்கு 8 வெட்டு; ஒவ்வொரு வெட்டுக்கும் 3500 காய்கள் கிடைக்கும். ஓராண்டில் தோராயமாக ஒரு இலட்சம் உருவா வருவாய் கிடைக்கும். 15 ஆண்டுகள் செலவு செய்து, ஒரு தலைமுறையின் உழைப்பைத் தந்த பிறகே இந்த நிலையை எட்ட முடியும். குடும்பங்களில் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் முதலான செலவுகளுக்குத் தென்னையையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தென்னை மரங்களின் அழிவால் இக்குடும்பங்களின் பிள்ளைகளின் உயர்கல்விக் கனவு தொலைந்துவிட்டது. இவர்களின் வாழ்க்கை 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது.

kajafood 350தமிழக அரசு, சாய்ந்துவிட்ட ஒரு தென்னை மரத்துக்கு இழப்பீடாக ரூ.600/-ம், அதை அகற்றுவதற்காக ரூ.500/-ம் என ரூ.1,100/- வழங்கப்படும் என அறிவித்துள்ளது. புயல் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசின் வேளாண் துறைச் செயலாளர் ககன்தீப் சிங்பேடி ஒரு தென்னை மரத்தை வெட்டி அகற்றுவதற்கு ரூ.1,600/- செலவாகும் என்று கூறியுள்ளார்.

சென்னை-சேலம் எட்டு வழிச் சாலையில் அகற்றப்படும் தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஆனால் கஜா புயலால் வீழ்ந்த தென்னை மரத்துக்கு ரூ.1,100 மட்டுமே தரப்படும் என்று தமிழக அரசு கூறுவது எவ்வளவு பெரிய மோசடி!

ஒரு தென்னை மரத்துக்கு ரூ.20,000 வழங்கப்பட வேண்டும். இந்த ஆண்டு ரூ.10,000, அதற்கு அடுத்த ஆண்டில் ரூ.5,000 மூன்றாவது ஆண்டில் ரூ.5,000 என்று வழங்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் தென்னம் பிள்ளையை நட்டு வளர்க்க முடியும். உழவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும். இதே தன்மையில் பலா, மா, தேக்கு போன்ற மரங்களுக்கும் வாழை, நெல், கரும்பு, வெற்றிலை போன்ற பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். படகுகளையும் வலைகளையும் இழந்த மீனவர் களுக்கும் உரிய இழப்பீடு அளிக்க வேண்டும். குடிசை வீடுகளை அரசே கான்கிரீட் வீடகளாகக் கட்டித்தர வேண்டும்.

முதலமைச்சர், உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி அறிவித்துள்ளார். 22-11-18 அன்று பிரதமர் நரேந்திர மோடியைத் தில்லியில் சந்தித்து உடனடியாக ரூ.1,431 கோடி அளிக்க வேண்டும் என்றும், அடுத்து ரூ.14,910 கோடி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த ரூ.14,910 கோடியில் குடிசை வீடுகளுக்காக ரூ.6,000 கோடி, மின்துறைக் காக ரூ.7,077 கோடி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் வேளாண்மை மற்றும் தோட்டப் பயிர்களுக்காக வெறும் ரூ.625 கோடி மட்டுமே கோரப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உழவர் களின் வாழ்வை மீட்டெடுக்கும் எண்ணத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. காவிரிப்பாசனப் பகுதியை மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான மண்டலமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதோ என்று அய்யப்பட வேண்டியுள்ளது.

தமிழக அரசு கேட்டுள்ள ரூ.14,910 கோடியில் பத்து விழுக்காடு அளவில் மட்டுமே நடுவண் அரசு அளிக்கும் என்பதைக் கடந்த காலங்களில் நடந்தவை உணர்த்து கின்றன. 2015இல் சென்னை வெள்ளத்தின் போது ரூ.25,912 கோடி கேட்டதற்கு ரூ.1769 கோடியும் 2016-17இல் வறட்சிக் காக ரூ.35,565 கோடி கேட்டதற்கு ரூ,1793 கோடியும் நடுவண் அரசு அளித்தது. எனவே தமிழக அரசு கஜா புயலுக்காகக் கேட்டுள்ள ரூ.15,000 கோடி மிகவும் குறைவு என்பதால், உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகை யில் இத்தொகையை ரூ.50,000 கோடியாகக் கேட்க வேண்டும். நடுவண் அரசு இத்தொகையை வழங்க வேண்டும் என்று தமிழர்கள் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.

நமக்கு உணவளித்த காவிரிப்படுகை உழவர்கள் தம் வீடுகளை, உடைமைகளை, வாழ்வாதாரத்தை இழந்து - எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை இழந்து வீதியில் நிற் கிறார்கள். இவர்களின் துயர்களைத் துடைக்கவும், வாழ்வா தாரத்தை மீட்டெடுக்கவும் உரிய செயற்பாடுகளை மேற்கொள் வது தமிழர்கள் அனைவரின் கடமையாகும்.

Pin It