panagalarasari 350பனங்கன்டி இராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் நீதிக்கட்சியின் புகழ்பூத்த தலைவர்களுள் ஒருவர். சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதன்மை அமைச்சர்.

குடும்பத்தினர் பண்பாடு

இராமராயநிங்கார் வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 9ஆம் நாள் பிறந்தார். ஜமீன் குடும்பத்தில் கல்வி கற்பதில் எவருக்கும் ஆர்வம் இருந்ததில்லை. செல்வமொன்றே வாழ்வாங்கு வாழ்வதற்குப் போதுமென்ற எண்ணத்தோடு வாழ்ந்துள்ளனர். கல்வியின் அருமை அறியாதாராய் இருந்துள்ளனர். ஆனால் பனகல் அரசர் குடும்பத்திலிருந்த அவரது முன்னோர்கள் கல்வியின் பயனறிந்து நன்கு கற்றறிந்த அறிவாளர்களாக இருந்துள்ளனர் என்பதோடு மக்களனை வரிடமும் அன்போடும் பண்போடும், ஒப்புரவோடும் பழகும் தன்மையுடையவர்களாயும் விளங்கினர்.

கல்வி

பனகல் அரசர், இளமையில் இல்லத்தில் இருந்தவாறே தெலுங்கு மொழியினையும், சமஸ்கிருத மொழியையும் பயின்று தேர்ந்தார்.பின் அகவை 18-இல் சென்னை போந்து, திருவல்லிக்கேணியில் இருந்த இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தபின்னர் மாநிலக்கல்லூரியில் சேர்ந்து பயின்று இளங்கலைப்பட்டம் பெற்றார்.1889ஆம் ஆண்டு முதுகலைப் பட்டமும்(எம்.ஏ) பெற்றார். முதுகலையில் சமஸ்கிருதத்தை விரும்பித் தேர்வுசெய்து பயின்று சம்ஸ்கிருத புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். சட்டப்படிப்பையும் படித்துப் பட்டம் பெற்றார். பனகல் அரசர் முது கலைப்பட்டம் பெற்றதற்காக இராம நாதபுரம் ராஜாவின் உயர்ந்த தங்கக் கடிகாரத்தைப் பரிசாகப் பெற்றார்.

மாநிலக்கல்லூரியில் பயிலுங்காலத்தே பொது நலத் தொண்டாற்றுவதில் விருப்பங்கொன்டு பல பொது நல அமைப்புகளில் சேர்ந்து தொண்டறம் புரிந்தார். கல்வி அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய பனகல் அரசர், ஏழை எளிய மக்கள் கல்வி அறிவின்றி அறியாமை இருளில் மூழ்கி அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீருடன் வாழ்ந்து வருதலைக் கண்டு அந்த ஏழை மக்களுக்கு அறிவொளி வழங்கிட உறுதி கொண்டார்.

அரசியல் பிரவேசம்

1912 ஆம் ஆண்டு இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத் திற்கான நில உரிமையாளர்கள், உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து தனதுஅரசியல் வாழ்வைத் தொடங்கினார். மூன்றாண்டுகள்-1915 ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்த பனகல் அரசர், தனது சொல் வன்மையால் ஆங்கிலேயரை வியக்கவைத்தார். இவருடைய சொல்லாற்றல் வைஸ்ராய் ஹார்டிங்கை வெகுவாகக் கவர்ந்தது.

1914 ஆம் ஆண்டு சி.நடேச முதலியார் தொடங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் இணைந்து தொண்டாற்றினார். கோல்காபூர் ஷாகு மகாராஜ் தொடங்கிய பிராமணரல்லாதார் இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டார்.

நீதிக் கட்சியில் பங்கேற்பு

1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாளன்று சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள உயர் நீதிமன்ற வழக்குறைஞர் டி.எத்திராஜ் இல்லத்தில், சி. நடேசனார், சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர்.டி.எம். நாயர் உட்பட ஏறத்தாழ   30 பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் நாடெங்கிலுமிருந்து வந்து கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.(விக்டோரியா பொது அரங்கில் கூடியதாக ஒரு கருத்து உள்ளது). இந்தக் கூட்டம் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்(நீதிக் கட்சி) தோற்றம் பெறுவதற்குக் காரணமாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டமாகும்இக்கூட்டத்தில் பனகல் அரசர் திவான்பகதூர் பி.இராமராய நிங்காரும் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தின் நீட்சியாக 1917 அக்டோபர் திங்களில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (S.I.L.F) என்ற  நீதிக்கட்சி பிட்டி.தியாகராயர், டி.எம். நாயர், சி,நடேசனார் ஆகியோரால் தோற்றம் கண்டது. கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் அதில், பனகல்அரசர் தன்னை இணைத்துக் கொண்டார்.

கோவையில் பனகல் அரசர் தலைமையில்  நீதிக்கட்சியின்  முதல் மாநாடு

முதல் பார்பபனரல்லாதார் மாநாடு நீதிக்கட்சியின் சார்பில் கோவையில் ஒப்பனக்கார வீதியிலிருந்த ஒரு திரையரங்கில் 1917 ஆம் ஆண்டு ஆகஸ்டு 19,20 ஆகியஇருநாள்கள், நடைபெற்றது. மாநாட்டின்  வரவேற்புக் குழுத்தலைவர் ஊத்துக்குளி ஜமீந்தார் ராவ்பகதூர். எம்.ஆர்.காளிங்கராயர் எழுச்சிமிகு வரவேற்புரை நிகழ்த்தினார். பனகல் அரசர் மாநாட்டின் தலைவர். தலைவர் பனகல் அரசரின் தலைமையுரை சிறப்பாகவும்,விரிவாகவும் கொள்கை விளக்கப் பேருரையாகவும் அமைந்திருந்தது.அவரது உரையிலிருந்து சிலபகுதிகள் கீழே:

இந்திய நாட்டின் சார்பாகப் பேசும் உரிமை தமக்கே உண்டெனப்பேசும்  நமது எதிரிகள் (பிராமணர்கள்) நம்மை வகுப்புவாதிக ளென்றும். பிரிவினைவாதிகளென்றும் புறம் பேசுகின்றனர். தாங்களே இந்திய நாடென்றும், தங்கள் நலன்களே இந்தியாவின் நலன்கள் என்றும் கருதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால் இந்த மாகாண மக்கள் பெரும்பாலானோரின்,சார்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதைக் காண முடியாத குருடர்களாக அவர்கள் (பிராமணர்கள்) உள்ளனர்.

தாமே இந்திய மக்களனைவருக்குமான பிரதிநிதிகள் என்று நம்மை ஏமாற்றிவந்துள்ளனர். அவர்களின் இத்தகைய ஏமாற்று வேலைகள் பற்றி நம்மில் எவரும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருந்தகாலம் மாறிவிட்டது. அவ்வாறு அமைதியாக இருந்ததற்காக நாமெல்லாம் துன்பப்பட நேர்ந்தது. பார்ப்பன ரல்லாத சமூகத்தினர் எந்த ஒரு சமூக ஒழுங்கு முறைஅமைப்பின் கீழும் இருந்ததில்லை. எந்தவித ரகசிய அரசியல் நோக்கம் கொண்ட உறவுகளும் இருந்ததில்லை. அதன் விளைவால் அவர்களது நிலைக்கும் நலங்களுக்கும் பேரழிவு நேர்ந்தது.

வழிவழி வந்த புரோகிதக் கூட்டத்தின் இரும்புப் பிடியின் கீழ் மூட நம்பிக்கை, பழக்கவழக்கங்களில் நம்மவர் மூழ்கிக்கிடந் தனர். பெரும்பாலோர்க்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

பிராமணரல்லாதோருக்குக் கல்வி அறிவினைப் பெறுவதற் கான உரிமையும், வாய்ப்பும் வாய்த்திருக்கவில்லை.  பிராம ணரல்லாத மக்கள், தங்களுக்கு (பிராமணர்க்கு) நிரந்தர அடிமைகளாக இருக்கும் வண்ணம் பழைய வேத, சாஸ்திர, புராணங்களுக்கான விளக்கம் அளித்து வந்துள்ளனர்,

கல்வி நிதி அமைக்க வற்புறுத்தல்

பிராமணர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் பிராமணரல்லாத மாணவர்களுக்கும் கிடைத்திருக்குமானால், அவர்களும் கல்வியறிவில் சிறந்திருப்பர். அவர்களோடு (பிராமணர்களோடு) போட்டியிடும் அளவிற்கு அறிவு வளம் பெற்றவர்களாக பிராம ணரல்லாத மாணவர்கள் வளர்ந்திருப்பர். ஆகவே அந்த மாணவர்கள் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருதல் நமது முதற் கடமையாகும். இதற்காக  நமது சமூகத் தலைவர்கள்,பொருள் வசதியற்ற மாணவர்கள் கற்பதற்கு உதவுவதற் கென்றே ஒரு கல்வி நிதியம் ஏற்படுத்திடவேண்டும்.

பிராமணரல்லாதார்  ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்க் கின்றனர். ஏன்?:-இப்போதே ஹோம்ரூல் அளிக்கப்பட்டால் ஆங்கிலேயர் இந்நாட்டுக்கு வருமுன்னர் பிராமணரல்லாதார் எத்தகைய கீழ் நிலையில் இருந்தார்களோ அதே பின்தங்கிய நிலையில் சுதந்திரமாகச் செயல்பட முடியாதவர்களாக அடிமை நிலைக்கே மீண்டும் தள்ளப்படுவார்கள். வருணாசிரம தர்ம இயக்கமும் அத்துடன் இணைந்த மனுதர்மத்தின் அடிப்படை யிலான தேசியக் கல்வி இயக்கமும் முன்னிலைப் படுத்தப்படும் (இன்றும் அதே நிலைதான் உள்ளது.) இந்த ஆட்சியில் பிராமணர்களே உயர்அதிகார நிலை பெற்றவராக இருப்பர் என்பதாலேயே எல்லாச் சமூகங்களும் சமநிலை எய்தியபின்னரே ஹோம்ரூல் பற்றிச் சிந்தித்தல் கூடும். என்றும் பனகல் அரசர் அம்மாநாட்டில் உரையாற்றினார்.

தொடர்ந்து பல மாவட்டங்களிலும் பார்ப்பனர்ல்லாதார் மாநாடுகளை  நீதிக்கட்சியினர் நடத்திவந்தனர். முதல் சென்னை மாகாண ஜஸ்டிஸ்கட்சி மா நாடு 1917 டிசம்பர் 28, 29 தேதிகளில் சென்னையில், வெலிங்டன் திரையரங்கில் கூடியது.

இந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவில் பலபகுதிகளில் பிரிட்டிஷாருக்கு எதிரான கிளர்ச்சிகள் நடைபெற்றன. இதன் விளைவாக பிரிட்டிஷ் இந்தியாவின் நிருவாகத்தில் சங்கடங்கள் அதிகரித்து வந்தன. இதனைப் பிரிட்டிஷ் அரசு புதியபோக்கில் எதிர்கொள்ளத் தலைப்பட்டது. அதன் விளைவாக இந்திய மந்திரி எட்வின் மாண்டேகு 1917ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் நாள் ஒரு அறிக்கையை வெளியிட்டார், “இங்கிலாந்து நாடாளுமன்றத் தில்.  நிர்வாகத்தில் பெருமளவில் இந்தியர்களை இணைத்துக் கொண்டு சுய ஆட்சி அமைப்புகளை வலுப்படுத்தி இந்திய மக்களைப் பொறுப்பாட்சிக்குத் தயார்படுத்துவதே மேன்மை தங்கிய மன்னர்பிரான் ஆட்சியின் நோக்கம்.

அவ்வாறு பொறுப்பாட்சி பெற்ற இந்தியா ஆங்கில சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே இயங்கும்” இந்த அறிவிப்பு இந்திய அரசின் விசேஷ கெஜட்டில் வெளியாயிற்று. இந்த அறிக்கையைக் குறித்து மக்களின் எண்ணங்களை அறிய, இந்தியத் துணைக் கண்டம் முழுதும் சுற்றிய மாண்டேகுவும், செம்ஸ்போர்டும் சென்னை வந்தனர், 1917, டிசம்பர் 14 அன்று. அரசமைப்புச் சட்டச் சீர்திருத்தங்கள் குறித்த தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கப் பல குழுக்கள் அவர்களைச் சந்திக்கக் காத்திருந்தனர். அவர்களைச் சந்தித்தக் குழுக்களில் 4 குழுக்கள் பார்ப்பனரல்லாதார் குழுக்களாகும். அவை: 1. சென்னை மாகாணச் சங்கம். 2.தென்னிந்திய நல உரிமைச் சங்கம்,3.சென்னைதிராவிடர் சங்கம்,4.சென்னை பார்ப்பனரல்லாதார் சங்கம் ஆகியவையாகும்.

விரிவான விளக்கமான அறிக்கை ஒன்றைத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அளித்தது. அரசின் நிர்வாகத் துறைகள் அனைத்திலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அடிப்படையில் பதவி ஒதுக்கீடுகள் முறைப்படிச் செய்யப்படவேண்டும். சட்டமன்றத்தில் எல்லாச் சமூகத்தினரின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப் படத்தக்க வகையில் உறுப்பினர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அவ்வறிக் கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திராவிடர் சங்கத்தின் சார்பில் பி.இராமராய நிங்கார் (பனகல் அரசர்) அறிக்கையைப் படித்தார். அவ்வறிக் கையின் சில பகுதிகள்

பார்ப்பனரல்லாத சமூகத்தினர் பெரும்பான்மையினர்; பொருளீட்டி அரசுக்கு வரி கட்டுபவர்களாக, இருந்தும் அவர்கள் அரசின் நிர்வாகக் கொள்கைகளை வடிவமைப்பதில் தங்களுக் குரிய பங்கினைப் பெற்றிருக்கவில்லை. அரசு அளித்த கல்வி கற்கும் வாய்ப்புகள் அவர்களுக்குக் கிட்டவில்லை பார்ப்பனரல் லாதார் கல்வி கற்பதற்கு உள்ள தடைகள்-பல பள்ளிகளில் பார்ப்பனரல்லாத சமூகத்தினரின் பிள்ளைகளை அனுமதிப்ப தில்லை. மேலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நியமிக்கப்படும் இந்திய ஆசிரியர்கள் பல்வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்தவர் களாகவும், ஒரே சமூகத்தைச் சேராதவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக மற்ற பிரிவு மாணவர்களைத் தங்களின் குழந்தைகளை விட மேலாகப் பார்க்கும் ஆசிரியர்களாக இருக்கவேண்டும்.

தற்போது மற்ற சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் மிகுந்த பாகுபாடு காட்டுபவர்களாக உயர் ஜாதி ஆசிரியர்கள் உள்ளனர். ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதைத் தடை செய்துள்ள பள்ளிகள் சில இருக்கின்றன. இந்த சமத்துவமின்மைக்கு முற்றுப் புள்ளி  வைக்கவேண்டும். அத்தகைய பள்ளிகளுக்கு அரசு நிதி எதுவும் வழங்கப்படக்கூடாது. சமூகத்தில் இதைவிட மிக மோசமான சமூக அநீதி என்ன வென்றால், பொது நிதியிலிருந்து உருவாக்கப்பட்ட கிணறுகள், குளங்கள், சாலைகள் ஆகியவற்றை ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்துவதைத் தடை செய்திருப்பதுதான். இந்த மாகாணத்திலுள்ள பார்ப்பன அமைப்பான  தர்ம ரட்சக சபா என்ற அமைப்பில் இது போன்று, சமூக விதிகள் திரித்துக் கூறப்படு கின்றன. என்று குறிப்பிட்டார்.

இங்கிலாந்து சென்ற தூதுக் குழு, 1919 இல் பிராமணரல் லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் கோரி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் பி.இராமராய நிங்கார் (பனகல் அரசர்) அங்கம் வகித்தார்.

முதல் பொதுத் தேர்தல்

மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியல் சீர்திருத்தம் “மாண்டேகு-செம்ஸ் போர்டு சீர்திருத்தம்” என அழைக்கப்பட்டது. அச்சீர்திருத்தத்தின் மூலம்  இந்திய மாகாணங்களில் 1920இல் இரட்டையாட்சி முறை (Diarchy) e நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

மாண்ட்போர்டு சீர்திருத்தத்தின்படி முதல் பொதுத் தேர்தல், 1920 நவம்பர் திங்கள் 30 ஆம் நாள் நடைபெற்றது.

புதிய அரசமைப்பு முறை ஏற்பாட்டில் நீதிக்கட்சியினருக்கு முழுமையான மன நிறைவு ஏற்படவில்லை என்ற போதிலும், கிடைத்த வாய்ப்பினைப்பயன்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது என்ற எண்ணத்துடன் தேர்தல் களத்தில் முழுமனதுடன் முனைந்து ஈடுபடுவது என்று நீதிக்கட்சியினர் முடிவு செய்தனர். நீதிக்கட்சியினர்,  மிகுந்த உணர்ச்சியோடும் ஊக்கத்தோடும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். அதன் விளைவாக மொத்த மிருந்த 98 தொகுதிகளில் 63 தொகுதிகளைக் கைப்பற்றினர். ஆளுநரால் நியமிக்கப்பட்ட 18 உறுப்பினர்கள் நீதிக்கட்சியின் ஆதரவாளராக அமைந்திருந்தனர்..ஆக 127 உறுப்பினர்களைக் கொண்டிருந்த சட்டமன்றத்தில்,81 பேர் நீதிக்கட்சியினராக அமர்ந்திருந்தனர்.

நீதிக்கட்சியின் மகத்தான வெற்றிக்கான காரணங்கள்

1) முதல் தேர்தலில் காங்கிரஸ் இயக்கத்தினர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதால் தேர்தலைப் புறக்கணித்தனர். ஆனால் காங்கிரஸார் பிராமண வேட்பாளர்களையே ஆதரித்தனர். 

தேர்தலைச் சந்தித்தவர்கள், நீதிக்கட்சியினரும், மிதவாதக் கட்சி ஹோம்ரூல் இயக்கத்தைச் சேர்ந்த பிராமணர்களும், சென்னை மாகாணச் சங்கத்தினரும், முஸ்லிம் லீக்கினரும் ஆவர். கட்சியின் பெயர்கள் சொல்லப்பட்டனவே தவிர, தேர்தலில் பார்ப்பனரல்லாதர்-பார்ப்பனர் என்ற இருபிரிவின ராகவே களம் ஆடினர். அங்கே கட்சிகளின் பெயர்கள் எடுபடவில்லை.

2) பார்ப்பனரல்லாதத் தலைவர்கள், சிறப்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு மக்கள் ஆதரவைத் திரட்டினர். தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக, பனகல் அரசர் இராமராய நிங்கார், கே.வி.ரெட்டி நாயுடு, ஏ.இராமசாமி முதலியார், டாக்டர். சி. நடேசனார், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆகியோர் விளங்கினர்.

3) நீதிக்கட்சியின் பெருந்தலைவரான திரு.பிட்டி. தியாகராயர், நீதிக்கட்சியை மிகக் கட்டுக்கோப்போடு மிகத் திறமையாக வழிநடத்திச் சென்றதால் ஏற்பட்ட செல்வாக்கு தேர்தலில் ஆதரவாக மாறியது..

4) வாக்களர்களில், பெரும்பான்மையினராகப் பார்ப்பனரல்லாதார் இருந்தனர். அதுவும் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாய் அமைந்திருந்தது.

5) பார்ப்பனரல்லாதார்க்கு 98 தொகுதிகள் தனித் தொகுதிகளாக அமைக்கப்பட்டிருந்ததும் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாகும்.

6) நீதிக்கட்சியினர் தந்த தேர்தல் வாக்குறுதிகளும், வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தன.

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை

வெற்றிபெற்ற நீதிக்கட்சியின் தலைவர் திரு.பிட்டி.தியாகரா யரை அமைச்சரவை அமைக்க சென்னை ஆளுநர் வெல்லிங்டன் பிரபு அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த தலைவர் தியாகராயர், தனக்குப் பதிலாகக் கடலூர் வழக்குறைஞர் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல் அமைச்சராகப் பதவியேற்றுக் கொள்வார், என்று அறிவித்தார். அதனைக் கடிதம் மூலமாகவும் ஆளுநருக்குத் தெரிவித்தார்.

1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் நாள் ஏ. சுப்பராயலு செட்டியார் முதல் அமைச்சராகவும்,.பனகல் அரசர் இராமராய நிங்கார் இரண்டாவது அமைச்சராகவும், கே.வேங்கட்டரெட்டி நாயுடு மூன்றாவது அமைச்சராகவும் பதவியேற்றனர். முதலமைச்சருக்குக் கல்வி, பொதுப்பணி,ஆயத்தீர்வு, பதிவு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன இரண்டாம் அமைச்சரான பனகல் அரசரிடம் உள்ளாட்சித் துறையும், மக்கள் நல்வாழ்வுத் துறையும்,  ஒதுக்கப்பட்டன.

மூன்றாம் அமைச்சர் கே.வி.ரெட்டி நாயுடுவிடம் தொழில் துறை ஒப்படைக்கப்பட்டது.

மாகாண சட்டமன்றத் தலைவராக பி.ராஜகோபாலாச்சாரியை ஆளுநர் வெல்லிங்டன் பிரபு நியமித்தார். சட்டமன்றத் துணைத் தலைவராக கேசவப்பிள்ளையையும், அட்வகேட் ஜெனரலாக சர்.சி.பி.இராமசாமி ஐயரையும் ஆளுநர் நியமனம் செய்தார். ஆர்.கே சண்முகம் செட்டியார், சர்.ஏ.இராமசாமி முதலியார், பாரிஸ்டர். தங்கவேலு ஆகிய மூவரும் அமைச்சரவைக் குழுவின் செயலாளர்களாக ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். .

சென்னை மாகாணத்தில் 17-12-1920 முதல் இரட்டை ஆட்சிமுறை தொடங்கி வைக்கப்பட்டது. முதல் சட்டமன்றக் கூட்டத்தை 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள் கன்னாட் பிரபு தொடங்கிவைத்துப் பேசினார். அவர் பேசும்போது, நல்ல நிர்வாகத்திறனும் நல்ல வழிவழித் தலைமைச் சிறப்பும் கொண்ட இந்த நாட்டிற்கு உரியவர்கள் கையில் அதிகாரத்தை ஒப்புவிப்பதில் பெருமையும் பூரிப்பும் அடைகின்றேன். இது இந்த நாட்டின் சனநாயக வரலாற்றின் தொடக்கக் கூட்டம் என்றாலும் எதிர்காலத்தில் முக்கியத் திருப்பங்களுக்கு வழிகோலும் என்று உறுதி கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இரண்டாவது கூட்டம் 1921, பிப்ரவ்ரி 14 இல் கூடிற்று. அடுத்து மார்ச் திங்களில் கூடிய கூட்டத்தில் 1921-1922 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் சுப்பராயலு ரெட்டியார் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதால் 1921 ஜூலை 11 இல் பதவியிலிருந்து விலகினார். டிசம்பர் இறுதியில் அவர் இயற்கை எய்தினார்.

முதல்வராக பனகல் அரசர்

உடல் நிலை பாதிப்புக் காரணமாக முதல்வர் சுப்பராயலு ரெட்டியார் பதவி விலகிய பின்னர், பனகல் அரசர்  இராமராய நிங்கார் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இரண்டாவது அமைச்சராக கே.வி.ரெட்டி நாயுடுவும், மூன்றாவது அமைச்சராக ஏ.பி.பாத்ரோவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

முதல் சமூகநீதி ஆணை

நீதிக்கட்சியின் உயிர்  நாடிக் கொள்கை பிராமணர் அல்லாத மக்களுக்குக் கல்வித்துறையிலும் வேலை வாய்ப்புகளிலும் ஆட்சி அதிகாரத்திலும் வகுப்பு வாரிப் பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே. ஆதலால் 1921 ஆகஸ்டு 16 ஆம் நாள் எல்லாச் சமூகத்தினர்க்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனும் ஆணையைப் பிறப்பித்தார் முதல்வர் பனகல் அரசர்.

இதற்காக ஒரு மசோதாவையும் ஆகஸ்டு 5-,1921 இல் ஓ.தணிகாசலம் செட்டியார்(நீதிக்கட்சி)சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

உத்தியோகத் துறையில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலையிருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில்,மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு உத்தியோகங்களை வழங்க வேண்டும் என்று அம்மசோதாவில் குறிப்பிட்டு இருந்தார்.

வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பார்ப்பனரல்லாத மக்களுக்கு என்றதும்-பிராமண உறுப்பினர்கள் உடனடி எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மசோதாவை நிறைவேற்றக் கூடாதென்று  கூச்சலும் குழப்பமும் ஏற்படுத்தினர். எதிர்ப்புகளைத் துச்சமென தூக்கி  மூலையில் ஒதுக்கிவிட்டு பனகல் அரசர் சமூக நீதி ஆணையை ஆகஸ்டு 16, 1921 இல் பிறப்பித்தார். ஆனால் அந்தச் சட்டம் செய லற்று இருந்தது-அதிகார நந்திகளின் ஒத்துழைப்பின்மையால்.

கல்லூரிக் கல்வி

அரசுப் பணிகளில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பார்ப்பன ரல்லாத  இளைஞர்களுக்கு  இடஒதுக்கீட்டிற்கு ஆணை பிறப்பித்த முதல்வர் பனகல் அரசர் சிந்தனையில்  அரசுப் பணியில் நுழைவதற்கான தகுதியை உருவாக்கும் கல்வித்துறையிலும் சமவாய்ப்பளிக்க வேண்டும் என்றஎண்ணம் தோன்றியது..

அந்த நாள்களில் கல்லூரிகளின் தலைவர்களாகப் பெரும் பாலும் பிராமணப் பேராசிரியர்களே இருந்துள்ளனர். அவர்கள் சுயஜாதி அபிமானத்தில் பிராமண மாணவர்களையே தேர்வு செய்து கல்லூரியில் படிக்க அனுமதித்தனர். கல்லூரிக் கனவோடு திரிந்த பிராமணரல்லாத மாணர்கள் கல்லூரியில் சேர்வது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. இதனை அறிந்திருந்த முதல்வர் பனகல் அரசர் இந்தச் சூழலை மாற்றிட எண்ணினார். அத்தகு கசப்பான சூழலில், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கென்றே ஒவ்வொரு கல்லூரியிலும் குழு ஒன்றை அமைத்து அவர்கள் மாணவர்களைச் சேர்க்க வழிவகை செய்து பார்ப்பனரல்லாதார் கல்விக்கு வழிவகை செய்தார் பனகல் அரசர். அதன் பின் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பார்ப்பனரல்லாத மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

பெண்களுக்கு வாக்குரிமை

1920 தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டுமா வேண்டாமா என்பதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று பிரிட்டிஷ் அரசு கூறியது. அதனைக் கருத்தில் கொண்டு,1921-ஆம் ஆண்டு ஏப்ரலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று மசோதா கொண்டுவரப்பட்டு. வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 44 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைக்கப்பெற்று, மசோதா நிறை வேறியது. அதன்படி ஆணையும் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

தாழ்த்தப்பட்டோரை “ஆதிதிராவிடர்” என அழைக்கச் சட்டம்

1921 இல் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோரைப் பஞ்சமர், பறையர் என்ற சொற்களால் அழைப்பதற்குப் பதிலாக, நீதிக்கட்சியின் வேண்டுகோளின்படி “ஆதித் திராவிடர்” என்றே அழைக்கவும், ஆவணங்களில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதையொட்டி ஆதித் திராவிடர் என்னும் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மாகாண சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 1922 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25 ஆம் நாள் ஆதித் திராவிடர் எனப் பெயர் மாற்றத்திற்கான ஆணையை பனகல்அரசர் வெளியிட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கென்று தனி அலுவலர்கள் பணியில் அமர்த்தப் பட்டனர். தனி அலுவலரின் ஆலோசனைப்படி  பனகல் அரசர் அரசு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டுமனை வழங்கல், கடனுதவி செய்தல், குடியிருப்புகளுக்குச் சாலைகள் அமைத்தல், குடி நீர் வசதிகள் ஏற்படுத்துதல், பள்ளிகள் நிர்மானித்தல், நிலவரி நீர்வரி ரத்து, உள்ளாட்சி மன்றங்களில் பிரதி நிதித்துவம் வழங்கல் என தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வு மேம்பட அக்கறையோடு செயலாற்றியது.

இந்து அற நிலையப் பாதுகாப்பு மசோதா

இந்து கோயில்களும்மடங்களும் பிராமணர்களின் வேட்டைக் காடாக இருந்ததைத் தடுத்திடவும், இந்நிறுவனங்களில் இருந்த செலவுபோக மிஞ்சிய நிதியை மக்கள் நல்வாழ்வு கருதி பொது நலக்காரியங்களுக்குச் செலவிட வகை செய்யும் நோக்கத்துடனும் “இந்து அறநிலையப்பாதுகாப்பு சட்ட வரைவு ” 1922 டிசம்பர் 6-இல் கொண்டுவரப்பட்டது. 1923 ஏப்ரல் திங்களில் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்டு இம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை நிறைவேற்ற பலத்த எதிர்ப்புகள் இருந்தன. எனவே இதனைச் சட்டமாக்குவதற்கு வைசிராயின் ரீடிங் ஒப்புதல் கிடைக்கவில்லை. காலம் கடத்தினார். வைசிராய். சென்னை மாகாண ஆளுநர் வெல்லிங்டன் பிரபு, வைசிராயிடம் இந்த மசோதாவின்   நியாயங்களை விளக்கி இதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தினார்.

எனினும் மிகப் பெரிய முயற்சியை மேற்கொண்டு 1924 ஏப்ரலில் உரிய அனுமதியுடன், சட்டமன்றத்தில் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது.1925 சனவரி யிலிருந்து வைஸ்ராய் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்தது.

இத்தகைய சாதனைகளோடு நீதிக்கட்சியின்(பனகல் அரசரின்) முதல் அமைச்சரவையின் (1920-1923) செயல் பாடுகள் முடிவுற்றன.

இரண்டாவது பொதுத் தேர்தல்

சென்னை மாகாண சட்டமன்றத்திற்கான இரண்டாவது பொதுத் தேர்தல், 1923 செப்டம்பர் 11 அன்று  நடைபெற்றது. நீதிக்கட்சியின் உட்கட்சிப் பூசலினால் முதல் பொதுத் தேர்தலைக் காட்டிலும் குறைவான இடங்களே நீதிக்கட்சிக்குக் கிடைத்தன. எனினும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை நீதிக்கட்சிக்கு அமைந்திருந்தது.

நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை

நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை 1923 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் பதவியேற்றது. முதல் அமைச்சராகப் பனகல் அரசர் பொறுப்பேற்றார். சர்.ஏ.பி. பாத்ரோ இரண்டாவது அமைச்சராகவும், மூன்றாவது அமைச்சராக டி.என்.சிவஞானம் பிள்ளையும் பொறுப்பேற்றார்கள். நீதிக் கட்சியிலிருந்த அதிருப்தியாளர்கள் 1923 நவம்பர் 23-இல் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதனை அஞ்சாமையுடன் முதல்வர் பனகல்அரசர் எதிர்கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தோற்கடித்து வெற்றிபெற்றார்.

சமஸ்கிருத மாநாட்டில் பங்கேற்பு

சமஸ்கிருதம் அறிந்த பண்டிதர்கள் முயற்சியில் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அன்றைய முதல்வர் பனகல் அரசரை விருந்தினராக அழைத்திருந்தனர். அவர்களின் அழைப்பையேற்று மாநாட்டில் சிறப்பு விருந்தி னராகப் பனகல் அரசர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகள்   அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே நடைபெற்றன. தமிழில் பேசுவதை எல்லோரும் திட்டமிட்டே தவிர்த்தனர், அமைச்சருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்று கருதினர் சொற்பொழிவாளர்களில் சிலர் பனகல் அரசரையும் அவரது ஆட்சியையும் விமர்சித்துப் பேசினர்.

நிறைவாக முதல்வர் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. பனகல் அரசர் பேசத்தொடங்கினார் தெளிவான சமஸ்கிருததில். அதுவரைப் பேசியவர்களைவிடச் சிறப்பாக இலக்கியச் செறிவோடு பேசினார். மாநாட்டு அமைப்பாளர்களுக்கு அவர் எம்.ஏ பட்டம் பயிலுங்கால் சமஸ்கிருதம் பயின்றவர் என்பதை உணராமல் பிழை புரிந்துவிட்டோமே என்று வருந்தினர். அவரை அவமானப்படுத்த எண்ணியவர்கள் அவமானப்பட்டு நின்றனர்.

மருத்துவம் பயில சமஸ்கிருதம் தேவையா?

அந்த மாநாடு முடிந்த  சில நாள்களில் ஓராணையைப் பிறப் பித்தார் முதல்வர்-பனகல் அரசர். அதுவரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில  சமஸ்கிருதமொழி தெரிந்திருத்தல் அவசியம் என்றிருந்த விதியை நீக்கி ஆணை பிறப்பித்தார்,.

ஆங்கிலத்தில் படிக்கும் மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் எவ்வகையில் துணைபுரியும்? இலத்தீன் அல்லது கிரேக்க மொழிகளில் கலைச்சொற்கள் மிகுதியாக உள்ளன. அந்த மொழிகள் அறிந்திருந்தால் பயனுண்டு ஆனால் மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயம் தேவை என்று கூறுவதேன்,என்று முதல்வர் சிந்திக்கலானார்

சமஸ்கிருதம் அறிந்ததவர்கள் மட்டும்தான் மருத்துவக் கல்வி படிக்கவேண்டும், மற்றவர்கள் படிக்கக்கூடாது என்ற வன்ம உணர்வே அதற்குக் காரணம் என்பதை அறிந்து கொண்டார் முதல்வர். அதனால் மருத்துவக் கல்லூரியில் பயில மாணவர்க்கு சமஸ்கிருதம் மொழி அறிந்திருக்க வேண்டியதில்லை என்ற முடிவினை எடுத்தார். முதல்வரின் இந்த முடிவிற்கு அவாள் சார்பில் எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவத் துறையில் தகுதி திறமை குறைந்து மருத்துவத்துறை பாழ்பட்டுப் போய்விடும் என்று கூப்பாடு போட்டனர். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாது சமஸ்கிருதமொழி பாடத்தினை மருத்துவக்கல்வியிலிருந்து விலக்கும் ஆணையைப் பிறப்பித்தார். அதன் விளைவாக, பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் என அனைவரும் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பினைப் பெற்றனர்.

இந்திய மருத்துவப் பள்ளி

1-7-1924 இல் கான்பகதூர் முகமது உஸ்மான் சாயபு  அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தார் பனகல் அரசர். அக் குழு உஸ்மான் கமிட்டி என்றே அறியப்பட்டது. அதில் அன்னிபெசண்டு அம்மையாருக்கு உதவியாளராகவும் உற்றவராகவும் இருந்த சிறந்த மருத்துவர் கேப்டன் ஸ்ரீனிவாசமூர்த்தி (கன்னடர்) செயலாளராக இருக்க, வேறு சிலரும்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் குழு இந்தியா முழுதும் சுற்றி இந்தியமருத்துவ முறைகளைக் குறித்து ஆய்ந்தனர், கும்பகோணம் சிகாமணிப்பண்டிதர் வி.பொன்னு சாமிப்பிள்ளை, பண்டிதர் வேலுசாமிப் பிள்ளை, பண்டிதர் ஆனந்தம் ஆகியோர் சித்தமருத்துவம் குறித்து விளக்கம் தந்தனர், எழும்பூர் பாந்தியன் சாலையில் இந்திய மருத்துவப்பள்ளி தொடங்கப்பட்டது. சித்தமருத்துவ ஆசிரியராக  சி.எஸ். முருகேச முதலியாரும், ஆயுர்வேதத் துறைக்கு .சங்குண்ணிமேனனும்(சமஸ்கிருதம், தெலுங்கில் வல்லவர்), மாதவமேனனும் ஆசிரியராக நியமிக்கப்பெற்றனர். கேப்டன் சீனிவாசமூர்த்தியே பள்ளியின் தலைவராக இருந்தார். இவ்வாறு1924 இல் இந்திய மருத்துவப் பள்ளி பனகல் அரசர் முயற்சியால் எழும்பூர் பாந்தியன் சாலையில் தொடங்கப்பெற்றது. பின் 1926இல் பனகல் அரசர்இந்திய மருத்துவப் பள்ளியை எழும்பூரிலிருந்து சென்னை, கீழ்பாக்கம், பூந்தமல்லிச் சாலையி லிருந்த அவரது சொந்த இடத்திற்கு மாற்றினார்.   இந்தப் பள்ளி, 1947 இல் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டு இந்திய மருத்துவக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது, 1949 இல் இந்திய மருத்துவக் கல்லூரி என்ற பெயர், இணைப்பு மருத்துவக் கல்லூரி என்று பெயர் மாற்றபபட்டது.

முதன்முதலாக சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தி, அதற்காகக் கீழ்ப்பாக்கத்தில் இருந்த தனது சொந்த நிலமான ஹைட்பார்க் தோட்டத் தை இலவசமாகத் தந்தார் பனகல் அரசர். இன்று நாம் காணும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி அமைந்துள்ள வளாகம் முழுவதும், பனகல் அரசர் இலவசமாக தந்ததுதான்.

மருத்துவத் துறையில் மறுமலர்ச்சி

சென்னை மாகாண மருத்துவத் துறை ஆங்கிலேயர் ஆளுமையின் கீழ் இருந்தது. இந்தியர்கள் எவரும் நுழைந்திட வாய்ப்பில்லை என்ற நிலையில் பனகல் அரசர் ஒரு சட்டத்தை இயற்றி ஆங்கிலேயர் ஆதிக்கத்தை அகற்றி, இந்தியர்களை மருத்துவத்துறையில் பங்குபெறச் செய்தார். இதற்கான மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது ஐரோப்பியர்களும் மற்ற எதிர்க்கட்சியினரும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

“எதிர்ப்பு எங்கிருந்து வந்தாலும் அது இந்த நாட்டிற்கு நன்மை பயக்குமானால் எதிர்ப்பை வரவேற்கத் தயாராயுள் ளேன், தீமை விளைவிக்குமானால் அந்த எதிர்ப்பினை எதிர்த்து முறியடிப்பேன்”, என்று பனகல் அரசர் மசோதாவின் மீது பேசினார். மருத்துவத் துறைக்கான மறுமலர்ச்சி மசோதா சட்டமாகியது.

சென்னை பல்கலைக் கழகச் சட்டம்

சென்னைப் பல்கலைக் கழகம் 1857 ஆம் ஆண்டில் உருவாக்கப்படது. அப்பல்கலைக் கழகம் 1904 முதல் 1920 வரை பார்ப்பனிய ஆதிக்கத்தில் இருந்துள்ளது சமஸ்கிருதமொழி செம்மொழி அந்தஸ்தோடு மாணவர்க்குக் கற்பிக்க வழி செய்யப்பட்டிருந்தது. மற்ற இந்திய மொழிகள் கற்பிக்கவும்-திராவிட மொழிகளில் தமிழ் மொழி தவிர மற்ற மொழிகளைக் கற்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தமிழ் மொழி கற்பிக்க வழியில்லை. தமிழ் மொழி, பல்கலைக்கழகத்தால் புறக்கணிக்கப்பட்டிருந்தது. டாக்டர் உ.வே.சாமி நாத ஐயர், தாய்மொழிக்குச் சிறப்பிடம் பெறுவதற்காக அதிக விலை கொடுக்க வேண்டிய அளவு முறைகேடு நடந்து இருக்கிறது,என்று வருத்தம் தோய்ந்த குரலில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயப் பாடமாக வைக்க மறுத்தது. இதனை எதிர்த்து நீதிக்கட்சி உறுப்பினர் இராஜரத்தின முதலியார் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டனம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, செனட் உறுப்பினர்களை அதிகப் படுத்தியும், எல்லா வகுப்பினருக்கும்,பொது நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும்படியும், சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம் 1923 ஆம் ஆண்டு பனகல் அரசரால் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிராமணர் ஆதிக்கத்திற்கு கடிவாளம் போடப்பட்டது.

ஆர்.வேங்கட ரத்தினம் நாயுடு, டி.என். சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர். இலட்சுமணசாமி முதலியார் போன்ற பார்ப்பனரல்லாத அறிஞர்கள் செனட் உறுப்பினர் களாகிப் போராடித்தான் தமிழ் மொழி கற்பிப்பதற்கு வழிவகுத்தார்கள். 1927-1928 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் தமிழ் மாணவர் வித்வான் பட்டம் பெற முடிந்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோற்றம் பெற்றது

1924-ஆம் ஆண்டில் ஆந்திரப் பல்கலைக் கழகச் சட்டம் நிறைவேறியது. அதனடிப்படையில் ஆந்திராவில் பல்கலைக் கழகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்ப் பகுதிகளுக்கும் ஒரு பல்கலைக் கழகம் தேவை என்று உணரப்பட்டது. இதைப் பற்றி ஆராய்வதற்கு இராமநாதபுரம் ராஜாவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் பனகல் அரசர். பி.டி.இராசன் இக்குழுவின் செயலாளராகச் செயல்பட்டார்.இக்குழுவின் பரிந்துரைப்படி அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாயிற்று. இப்பணி பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் தொடங்கி, பி.சுப்பராயன் ஆட்சிக்காலத்தில் 1929-1930 கல்வியாண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோற்றம் பெற்றது.

அற நிலையப் பாதுகாப்புச் சட்டம்

பனகல் அரசர் மிகத் துணிவுடன் செய்த செயல் அற நிலையப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது ஆகும். இந்து மதத்திற்குச் சொந்தமான கோயில்களுக்கு நிலையான சொத்துக்களும் தினசரி பல கோடி வருமானமும் இருந்து கொண்டிருந்தன. இந்த வருமானங்கள் முழுக்க கோயிலில் உள்ள கோயில் பெருச்சாளி களுக்கு ஏகபோகச் சொத்தாக இருந்துள்ளன. அவர்களின் சுகபோக, ஆடம்பரங்களுக்கு இச்சொத்துகள் பயன்பட்டன. ஆக இவ்வண்ணம் கோயில் சொத்துக்கள் விரயமாவதைத் தடுத்திட பனகல் அரசர், அறநிலையப்பாதுகாப்பு சட்ட வரைவு 1922 டிசம்பரில் வெளியிடப்பட்டு, 1923 ஏப்ரலில் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது எனினும்  சட்டமன்றத் தில் கடும் எதிர்ப்பு இருந்ததால் வைசிராயின் ஒப்புதல் கிட்ட வில்லை; சட்டம் இயற்றினாலும் செயல்படுத்த இயலவில்லை.  ஆகவே மீண்டும் 1924 ஏப்ரலில் அறநிலையப் பாதுகாப்புச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டபோது, சட்டமன்றத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பிராமணத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு மதத்தில் தலையிடுவதாகக் கூக்குரலிட்டனர். இந்து, சுதேசமித்திரன் ஏடுகள் இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தலையங்கங்கள் எழுதின.

சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி ஐயர் ஆவேசத்தோடு பேசினார். “நீதிக்கட்சியினர் பிராமணர்களை மட்டும் எதிர்க்கவில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்துவிட்டார்கள். ஆண்ட வனையே சட்டம்  போட்டுக் கட்டுப்படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும்  இம்மசோதாவை சாதி, மத வித்தியாசமின்றி - கட்சிப் பாகுபாடு இன்றி ஒரு மனதாக எதிர்க்க வேண்டும்”. சத்திய மூர்த்தியின் பேச்சிற்கு வரவேற்பு இருந்ததாகச் சொல்லமுடியாது. பனகல் அரசர் எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை. மசோதாவை நிறைவேற்றுவதிலேயே கருத்தாக இருந்தார்.

சட்டமன்றத்தில் இம்மசோதாவை நிறைவேற்றத் தமக்குத் துணையாக என்.கோபாலசாமி ஐயங்காரைச் சிறப்பு உறுப்பினராக நியமித்துக் கொண்டார். பனகல் அரசர் வைசிராய் இர்வினுடன் வாதாடவும் செய்தார். அற நிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுத் துறை அமைக்கப்பட்டவுடன் அதன் முதல் தலைவராக ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த சர்.டி.சதாசிவ ஐயரை நியமித்தார். இரு ஐயர்கள் துறையை நிர்வகிக்க நியமித்ததும் மதத்திற்கு ஆபத்து என்ற அபவாதத்தைப் போக்கியது. 1925 சனவரி 27 இல் வைஸ்ராய் ஒப்புதல் பெற்று, சட்டம் செயலுருப் பெற்றது.

அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், இந்து மதவாதிகளின் கடும் எதிர்ப்புகளுடன் நிறைவேறியபின்னர், 1926 நவம்பர் 8ஆம்  நாள் மூன்றாவாது தேர்தலை சந்தித்தார் பனகல் அரசர்.        

ஜஸ்டிஸ் மந்திரிகள் வந்த பிறகு, நமது மாகாணத்தில் இலவசக் கல்வியும், கட்டாயக் கல்வியும் ஏற்பாடு செய்து அநேக இடங்களில் அமலில் கொண்டு வந்திருக்கிறார்கள். 5 வயது முதல் 12 வயது வரை ஒவ்வொரு குழந்தையையும் கண்டிப்பாய்ப் படிக்கவைக்கவேண்டும். இல்லாவிட்டால் பெற்றோர்களுக்குத் தண்டனை என்று சட்டமும் செய்திருக்கிறார்கள். அதன் மூலம் படிக்கும் இலட்சக்கணக்கான பிள்ளைகளில் 100 க்கு 99 பேர் பார்ப்பனரல்லாதார் என்று பனகல் அரசரின்-(நீதிக்கட்சியின்) சாதனைகளைப் பெரியார் வெளியிட்டுப் பரப்புரை ஆற்றிய போதும் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற இயலவில்லை.

41 இடங்களைப் பெற்றது சுயராஜ்யக் கட்சி. சுயேச்சைகள் 36 இடங்களையும், நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் பெற்றனர். அரசு அலுவலர்களும், நியமன உறுப்பினர்களுமாக 30 பேர்களும் அவையை அலங்கரித்தனர். தனிப் பெரும்பான்மை எவருக்கும் இல்லை. ஆளுநர் சுயராஜியக் கட்சியினரை ஆட்சியமைக்க அழைத்தார். அவர்கள் மறுத்துவிட்டனர். பின் பனகல் அரசரை அழைத்தார் ஆளுநர்.  பெரும்பான்மையில்லாமல் ஆட்சியமைக்கத் தாம் விரும்பவில்லை என்றார். பனகல் அரசர். அதன் பின் சுயராஜியக் கட்சியினர், நீதிக்கட்சி யிலிருந்து  பி. சுப்பராயனை விலகச்செய்து, அவர் தலைமையில் சுயேச்சைகள் அமைச்சரவை அமைத்தனர். இந்த அமைச்சரவை  சுயராஜியக் கட்சியினரின் எதிர்பார்ப்புக்கு எதிராக நீதிக்கட்சி சார்பாகவே, பனகல் அரசரின் ஆலோசனைகளைப் பெற்று இயங்கியது.

இவ்வண்ணம் நாளும் பார்ப்பனரல்லாதார், பிற்படுத்தப் பட்டோர். ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நலனையே கருத்தில் கொண்டு எந்நாளும் உழைத்துவந்த பெருமகன் பண்பாளர் பனகல் அரசர் 1928 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 16 ஆம் நாள் மண்ணுலக வாழ்வை நீத்தார்.

பெரியார் இரங்கல்

தந்தை பெரியார், தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர் மறைந்தார்! எனினும் மனமுடைந்து போகாதீர் என்று, பனகல் ஆற்றிய பெரும்பணிகளை நினைவு கூர்ந்தார். போர்க்களத்தில் வெற்றியை  நெருங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று படைத்தளபதி இறந்தால் எப்படியிருக்குமோ அதுபோல, பார்ப்பனரல்லாத மக்களுக்கு சிறப்பான முன்னேற்றப் பணிகள் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் பனகல் அரசரின் இறப்பு நடந்துவிட்டது என்றும், பனகல் அரசர் தனது தனிப்பட்ட திறமையாலும் ராஜதந்திரத்தாலும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு உழைத்து வந்தார். இனி அவரைப்போல ஒரு தலைவர் கிடைப்பாரா என்பது  சந்தேகம் தான். இருப்பினும் நாமெல்லாம் அவர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றத் தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அவர் விட்ட பணியைத் தொடர்வோம் நாம்!

வாழ்க பனகல் அரசர் புகழ்!

Pin It