தொழிலாளர் இயக்கமும் சோசலிசமும் இல்லாமற் போயிருப்பதே தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எல்லாம் காரணம் -மேதினக் கூட்டத்தில் தோழர் ஆனந்தன் உரை
சி.டபிள்யு.பி., உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசேன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆண்டின் மேதினம் திருத்தங்கல் ஐயப்பன் அரங்கத்தில் 22.05.2011 மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு கூட்டம் மூலமாகச் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமையேற்றார்.
உழைக்கும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளான தோழர்கள் தங்கராஜ் (பட்டாசு), செல்வராஜ் (அச்சகம்), சத்தியமூர்த்தி (அரசு ஊழியர்), பாரதி (அரசு ஊழியர்), ஆனந்த் ஜெயக்குமார் (பொதுத்துறை), த.சிவக்குமார் (மாற்றுக் கருத்து இதழ் ஆசிரியர்) ஆகியோரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சி.டபிள்யு.பி-ன் தென் இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் அ.ஆனந்தன் அதில் சிறப்புரை ஆற்றினார்.
தோழர்களின் உரைகள்
தோழர் வரதராஜ் தனது தலைமை உரையில் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றாகத் தற்போது ஆகியுள்ளது.
சிவகாசி போன்ற நகரங்களில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பீஸ் ரேட் முறை அமுலில் உள்ளது. அங்கு மறைமுகமான விதத்தில் 8 மணிநேர வேலைநாள் என்ற விதி புறக்கணிக்கப் படுகிறது. ஓரளவு கட்டுபடியான ஊதியம் கிட்ட வேண்டுமென்றால் பீஸ்ரேட் முறையில் 10 மணி நேரம் என்ற அளவிற்குக் கூட வேலை செய்ய வேண்டிய கட்டாயநிலை நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.
தோழர் தங்கராஜ் தனது உரையில் அரசு நிர்வாகம் எவ்வாறு தொழிலாளருக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை எடுத்துரைத்தார்.
குறைந்த கூலி கொடுத்துத் தொழிலாளரைச் சுரண்டும் பெரிய முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர். சந்தையின் தேவை அதிகரிப்பை மனதில் கொண்டு கூடுதல் கூலி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளான நிலையில் சிறு முதலாளிகள் சில காலம் பெரும் முதலாளிகளைக் காட்டிலும் பட்டாசுத் தொழிலாளருக்குக் கூடுதல் ஊதியம் வழங்கினர்.
அதைத் தடுப்பதற்காகப் பட்டாசு உற்பத்தி செய்வதற்கு உரிய அனுமதி பெற்றவராக சிறு முதலாளிகள் உள்ளனரா? அவர்களது ஆலைகளில் பட்டாசுத் தொழில் குறித்த தொழிற்சாலை விதிகள் அமலாகின்றனவா என்று பார்க்கும் சாக்கில் அங்கு சென்று பட்டாசுச் சோதனையில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கைப்பற்றப்பட்ட பட்டாசுகளைக் கொழுத்தி அழிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இரு அரசு அதிகாரிகள் உயிரிழந்தனர். அவர்களுக்குப் பல லட்சங்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி அரசு ஊழியர் போராடினர்.
ஆனால் எத்தனையோ விபத்துக்களில் ஆண்டுதோறும் தொழிலாளர் உயிர் இழக்கும் சூழ்நிலை பீஸ்ரேட் முறையினால் சிவகாசியில் உருவாகிறது. அரசு அதிகார வர்க்கம் அதையயல்லாம் கண்டு கொள்வதில்லை.
பட்டாசுத் தொழிலாளர் விபத்துக்கள் குறித்துக் கலந்தாய்வு செய்வதற்கென்று நடத்தும் கூட்டங்கள் ஒப்புக்கு நடத்தப்படுபவையாகவே உள்ளன என்பதை எடுத்துரைத்தார்.
தோழர் செல்வராஜ் தனது உரையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் தொழிலாளரின் 8 மணி நேர வேலை நாள் உரிமை உட்பட எந்த உரிமையும் அமலாகாதிருக்கும் அவலத்தை எடுத்துரைத்தார்.
கூடுதல் ஊதியம் என்று வெளியில் பகட்டாகத் தெரியும் அத்துறையில் நிலவும் உரிமையற்ற நிலை மற்றும் கடுமையான வேலைச் சூழ்நிலை ஆகியவை அவர்களில் சிலரைத் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட கொண்டு செல்கிறது என்று கூறினார்.
தோழர் சத்தியமூர்த்தி தனது உரையில் தொழிலாளி வர்க்க மற்றும் மேதினப் போராட்டங்களில் மார்க்சிய ஆசான்களான எங்கெல்ஸ் போன்றவர்கள் ஆற்றிய பங்கினை நினைவு கூர்ந்தார்.
தோழர் பாரதி தனது உரையில் மேதினப் போராட்டம் மிருகங்களிலிருந்து மனிதன் வேறுபட்டு வாழ விரும்பிய போக்கையே வலியுறுத்துகிறது. இருத்தல், இனவிருத்தி செய்தல் என்ற அடிப்படையில் வாழப் பிறந்தவனல்ல மனிதன். அவன் சிந்திக்கத் தெரிந்தவன். சதாசர்வ காலமும் சாப்பாட்டிற்காகவே மிருகங்களைப் போல் அலையும் போக்கிலிருந்தான ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து சிந்திக்கவும் சமூக வியங்களில் ஈடுபடவும் அவனுக்கும் நேரம் வேண்டும் என்பதை வலியுறுத்தியே 8 மணிநேர வேலைநாள் கோரிக்கையை அவன் முன் வைத்தான் என்று கூறினார்.
தோழர் ஆனந்த ஜெயக்குமார் பொருளாதார வாதம் எவ்வாறு பொதுத்துறை ஊழியர் அமைப்புகளை ஆட்டிப் படைக்கிறது என்பதை விளக்கினார். ஒரு துறையின் நிதி ஆதாரமே ஆட்டம் காணும் அளவிற்கு நடைபெற்ற 2ஜி அலைக்கற்றை வரிசை ஊழல் குறித்த உணர்வு பொது மக்களிடம் இருக்கும் அளவிற்குக் கூட பி.எஸ்.என்.எல். அமைப்பின் ஊழியரிடம் இருக்கவில்லை.
அந்த ஊழல் குறித்த ஒரு புரிதலைக் கொண்டு வரவோ அதனை அம்பலப்படுத்தவோ அங்கீகாரம் பெற்ற சி.பி.ஐ(எம்). கட்சியின் வழிகாட்டுதலில் செயல்படும் பி.எஸ்.என்.எல்.இ.யு. சங்கம் ஒரு வேலையையும் செய்யவில்லை.
எப்படியாவது அங்கீகாரத்திற்கான தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அந்த அமைப்பு ஊழலைச் செய்த ஸ்பெக்ட்ரம் ராஜாவின் தி.மு.க. தொழிற்சங்கத்தோடு கூட்டு வைத்திருந்தது.
அதைப்போல் சி.பி.ஐ. கட்சியின் வழிகாட்டுதலில் செயல்படும் சங்கம் பி.ஜே.பி. கட்சியின் தொழிற் சங்கத்தோடு தேர்தல் ஆதாயத்திற்காகக் கூடா நட்புக் கொண்டிருந்தது.
இன்றைய தேவை இதுபோன்ற சந்தர்ப்பவாதப் போக்குகளிலிருந்து விடுபட்ட ஒரு சரியான மத்திய தொழிற்சங்க அமைப்பைக் கொண்டு வருவதே என்று குறிப்பட்டார்.
அதன்பின் உரையாற்றிய தோழர் சிவக்குமார் தொழிலாளர் சட்டங்கள் குறித்த முற்போக்கான பல தீர்ப்புகள் தற்போது பல நீதிபதிகளால் முடக்கப்பட்டுள்ளன.
பல தொழிலாளருக்குச் சாதகமான தீர்ப்புகள் வருவதற்கு முன்னோடியாக இருந்தது பெங்களூர் குடிநீர் விநியோக வாரிய வழக்கின் தீர்ப்பு. அத்தீர்ப்பின் சாரம்சத்தைச் சீர்குலைக்கும் விதத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலக் கிருஷ்ணன் உட்பட பல நீதிபதிகளின் போக்குகள் உள்ளன.
நீதி அமைப்பும், தொழிலாளர் நிறுவனங்களும் சமூகத்தின் பலவீனமான பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கும் தொழிலாளர்களுக்குப் பயன்படுபவையாக இல்லாமல் போய்விட்டன.
தவறான நிர்வாக ஆணைகளின் மூலம் வேலை நீக்கம் செய்யப்படும் தொழிலாளருக்குப் பின் சம்பளம் வழங்கும் தீர்ப்புகள் தற்போதெல்லாம் வருவதே இல்லை. பெரும்பாலான தீர்ப்புகள் மீண்டும் வேலை என்பதை மட்டுமே தொழிலாளருக்கு வழங்குகின்றன. அதுபோன்றத் தீர்ப்புகளின் மூலம் தவறான நிர்வாக ஆணை பிறப்பித்த முதலாளிகள் அதற்கு எவ்விதத் தண்டனையும் இன்றித் தப்பி விடுகின்றனர்.
ஆனால் தொழிலாளரோ பல ஆண்டுகள் வேலையும் சம்பளமும் இன்றிக் கடும் தண்டனை அனுபவித்தவர்களாக ஆகின்றனர். இது நீதியின் அடிப்படையையே நிலை குலைப்பதாக உள்ளது.
தொழிலாளர் துறைகளில் நிலவும் ஊழலும் முதலாளிகளுடன் அவ்வமைப்புகளின் அதிகாரிகளும் ஊழியர்களும் கைகோர்த்து செயல்படும் போக்கும் பல நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைப்பதையே தற்போது சாத்தியமற்றதாக்கி விட்டது.
ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து இடையில் சுகவீனமுற்றுப் போன தொழிலாளருக்கு மாற்று வேலை வழங்குவது குறித்துத் தற்போது வந்துள்ள மற்றொரு நீதிமன்ற ஆணையும் நீதிமன்றங்கள் தொழிலாளர் நலனைப் பராமரிப்பதைக் கவனத்திற் கொள்வதில்லை என்பதை உறுதி செய்கிறது.
அதாவது அப்படிப்பட்ட தொழிலாளருக்கு வழங்கப்படும் மாற்று வேலை எது என்பதை நிர்வாகம் தீர்மானிக்குமே தவிர சம்பந்தப்பட்ட தொழிலாளி கேட்க முடியாது என்றதொரு தீர்ப்பினை சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை சமீபத்தில் வழங்கியுள்ளது.
அத்தொழிலாளி ஏற்கனவே பார்த்த வேலை அவரது கல்வித் தகுதி போன்றவற்றைக் கணக்கில் கொண்டு ஆலையில் இருக்கும் வேலைகளில் அவற்றிற்கு உகந்த வகையில் ஒத்துவரும் வேலையை வழங்குவது என்று கூறாமல் முதலாளி மாற்று வேலை என்று எதை வழங்குகிறாரோ அதைப் பெற்று அத்தொழிலாளி திருப்தி அடைய வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு கூறுகிறது.
இந்தப் போக்குகள் தொழிலாளர் அலுவலகங்கள் மற்றும் தொழிலாளர் நீதிமன்றம் ஆகியவை தொழிலாளருக்குச் சாதகமானவையாக இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன என்பதையே கோடிட்டுக் காட்டுகின்றன. இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்து தனது உரையை அவர் நிறைவு செய்தார்.
தோழர் ஆனந்தனின் உரை
இறுதியில் உரையாற்றிய தோழர் ஆனந்தன் தனது உரையில் முன்வைத்த கருத்துக்களின் சராம்சம் பின்வருமாறு:
சிவகாசி நகரில் 1980-களில் தொடங்கி கடந்த 30 ஆண்டு காலமாகப் பல்வேறு தொழிற்சங்கப் பணிகளை நாம் செய்து வந்துள்ளோம்.
அப்போது தொழிலாளர் அலுவலங்களில் நிலவிய நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. அப்போதெல்லாம் நிறையத் தொழில் தாவாக்கள் தொழிலாளர் அலுவலகங்களில் நிலுவையில் இருக்கும். தற்போது அச்சூழ்நிலை அறவே இல்லை. தொழிலாளர் அலுவலகங்கள் தூங்கி வழிகின்றன.
ஏனெனில் தொழிலாளர் அலுவலகங்களின் மீது தொழிலாளருக்கு இருந்த நம்பிக்கை அறவே இல்லாமல் போய்விட்டது. பஞ்சாலைகள் போன்ற ஆலைகளில் சம்பள வெட்டை அப்பட்டமாக வலியுறுத்தும் நிறுவனங்களாக தொழிலாளர் அலுவலகங்கள் மாறிவிட்டன. அனைத்துத் தொழிலாளரின் அவநம்பிக்கையையும் சம்பாதித்தவையாக அவை முழுமையாக ஆகிவிட்டன.
மேதினத் தியாகிகள் வலியுறுத்திய 8 மணி நேர வேலை நாள் சிவகாசியில் எப்போதுமே இல்லை.
ஆனால் 1995-ம் ஆண்டுவரை தமிழகத்தின் அமைப்பு ரீதியாக அணிதிரட்டப்பட்ட அனைத்துத் தொழில்களிலும் 8 மணிநேர வேலைநாள் என்பது அமல்படுத்தப்பட்டே வந்தது.
எனவே அக்கால கட்டங்களில் நடந்த மேதினக் கூட்டங்களில் 8 மணிநேர வேலைநாள் கோரிக்கையை மட்டுமே வலியுறுத்துவது கிளிப்பிள்ளை வாதமாக எங்களுக்குப் பட்டது.
அலுப்புத் தட்டும் முழக்கம்
அப்போது நாம் நடத்திய மேதினக் கூட்டங்களில் மனிதனைக் கூலி அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்க எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியே 8 மணிநேர வேலைநாள்; அது இன்று நிலைபெற்ற பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கூலி அடிமைத் தனத்திலிருந்தான விடுதலை என்ற திசை வழியை நோக்கி எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினோம்.
ஆனால் இன்று மீண்டும் 8 மணிநேர வேலைநாள் கோரிக்கையை வலியுறுத்தக் கூடியதாக நிலை மாறிவிட்டது. அந்த அளவிற்குத் தொழிலாளர் நிலை சீரழிந்துள்ளது.
தொழிற்சங்கம் அமைப்பதே இன்று சாத்தியமில்லாததாகி விட்டது. வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத் தொழில்களில் 8 மணிநேர வேலைநாள் என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக ஆகியுள்ளது. வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு வீடு செல்ல வேண்டும் என்பது நியதியாகிவிட்டது.
நமது நாட்டின் வேலைச் சூழ்நிலை இதுவென்றால் மேலை நாடுகளில் வேலை வாய்ப்பே அறவே இல்லாத ஒரு அவலநிலை தோன்றியுள்ளது. நமது நாட்டின் தொழிலாளி வர்க்கம் தேவை அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு கோரிக்கையாக எழுப்பிக் கொண்டிருந்த வேளையில் மேலை நாடுகளின் தொழிலாளர்கள் வாழ்க்கைச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.
அந்தத் தொழிலாளர் இன்று வேலை வாய்ப்பை ஒருபுறம் அறவே இழந்து நிற்பதோடு தங்களது ஊதியத்தையும் பெரிதும் இழந்து நிற்கின்றனர்.
ஒரு காலத்தில் அனைவரையும் கவர்வதாக இருந்த விமான ஓட்டி வேலைக்குக் கூட இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்டிற்கு 20,000 டாலர்கள் எனும் அளவிற்கே ஊதியம் கிடைக்கிறது.
எனவே அந்நாடுகளில் விமான ஓட்டிகள் கூடத் தங்களது வாழ்க்கைச் செலவினங்களை ஈடுகட்டுவதற்காக வேறு பகுதிநேர வேலைகள் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவ்வாறு ஓய்வின்றி உழைப்பதால் பல விமான விபத்துக்கள் அங்கு நேர்ந்து கொண்டுள்ளன.
வாழ்க்கைச் சம்பளம் கிட்டியதால் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதையே மறந்து மயக்கத்திலிருந்த மேலை நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தை சுதந்திரம் என்ற கண்ணோட்டமும் மேலும் மயக்கத்தில் ஆழ்த்தியது.
நவீனக் கூலி அடிமைத் தொழிலாளிக்கு இன்று கிடைக்கும் சுதந்திரம் அவன் சுதந்திரமாக பட்டினி கிடக்கலாம் என்பதாகவே அந்நாடுகளில் ஆகியுள்ளது.
தொழிலாளர் இயக்கங்கள் இத்தனை பின்னடைவைச் சந்தித்திருப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் ஒன்றினை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
அதாவது தொழிலாளர் இயக்கங்களும் சோசலிசமும் இன்று இல்லாமல் போயிருப்பதுதான் தொழிலாளர் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் மூல காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் உலகமயம் ஏற்பட்ட உடன் அதன் விளைவாக ஒரு குறுகிய காலம் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டு நமது பஞ்சாலை முதலாளிகள் சிக்கலில் இருந்தனர்.
இந்தோனேஷியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அந்நாடுகளின் நாணய மதிப்புக் குறைவின் காரணமாக அந்நாடுகளின் பஞ்சாலைப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்தது. அதனால் அந்த நிலை ஏற்பட்டது.
நிற்காத எதிரொலி
அதைக் காரணமாகக் காட்டி பஞ்சாலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கங்கள் முதலாளி சிரமப்படுகிறான் என்ற வாதத்தை முன்வைக்கத் தொடங்கின.
முதலாளியின் சிரமத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்பவையாக தொழிலாளர் அமைப்புகள் அடிப்படையில் ஆகிவிட்டால் அங்கு தொழிலாளர் போராட்டங்கள் எப்படி நடக்கும்?
ஆனால் பஞ்சாலைகளில் சிக்கல் என்ற நிலை சில ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிட்டது. பஞ்சாலைப் பொருள் ஏற்றுமதியில் கடைப்பிடிக்கப் பட்ட கோட்டா முறை முடிவுக்கு வந்ததால் இந்தியாவின் பஞ்சாலைப் பொருள்களின் ஏற்றுமதி மிகப் பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் மிகவும் கூடுதல் எண்ணிக்கையில் பஞ்சாலைகள் உருவாகத் தொடங்கின.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவை தங்கச் சுரங்கங்களாக விளங்கின. இருந்தாலும் முதலாளி சிரமப்படுகிறான் என்று தொழிற்சங்கங்கள் முழக்கிய முழக்கத்தின் எதிரொலி நிற்கவில்லை.
நெருக்கடியைக் காரணமாகக் காட்டி நிரந்தரத் தொழிலாளர் ஒழிப்பு, தொழிலாளரின் ஓய்வூதியப் பலன்களைக் கபளீகரம் செய்வது, சுமங்கலித் திட்டம் போன்றவற்றின் மூலம் தயவு தாட்சண்யமற்ற சுரண்டல் ஆகியவை காட்டாற்றின் வெள்ளமெனப் பெருகின.
தொழிற்சங்கங்களால் அதனை எதிர்க்கத் திராணியற்றவராக்கப்பட்ட தொழிலாளரின் எதிர்வினை ஆற்றல் முடக்கப்பட்டதால் தொழிலாளர் இயக்கம் இருந்த இடம் தெரிந்த சுவடே இல்லாமல் அழிந்து போய்விட்டது.
எந்தவொரு நாட்டிலும் அந்நாடுகளில் இருக்கும் கட்சிகள் அனைத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே மிகப்பெரிய மக்கள் சக்தியின் ஆதரவுக்கான புறச் சூழ்நிலை இருக்கும். ஏனெனில் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்புலம் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையினராக இருக்கும் உழைக்கும் வர்க்கமாகும்.
அவ்வர்க்கத்தின் மீது நடைபெறும் சுரண்டலை மையமாக வைத்து வர்க்கப் போராட்டங்கள் நடத்தி அதன்மூலம் தனது வர்க்க அணியைத் தன்பக்கம் வைத்திருந்தால் எந்தவொரு நாட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சியே முதற்பெரும் சக்தியாக விளங்கும்.
ஆனால் நமது நாட்டில் தேச விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்தைக் குறைவின்றிக் கொண்டிருந்தாலும் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய அக்கட்சிகளின் நிலை பரிதாபகரமாகவே உள்ளது. ஏதாவதொரு தேசிய அல்லது பிராந்திய முதலாளித்துவக் கட்சியிடம் சில சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களுக்காகத் தாஜா செய்து அணிசேரும் அவல நிலையிலேயே அவை உள்ளன.
அதற்கான காரணம் என்ன? அக்கட்சிகள் தங்களது தவறான அடிப்படை அரசியல் வழியினால் சுரண்டலின் கோரத் தாண்டவம் நடைபெறும் இடங்களில் தொழிலாளரை அணிதிரட்டி வர்க்கப் போராட்டங்களை முனைந்து கட்டத் தவறுவதே.
முதலாளிகளைத் தரம் பிரிக்கும் போக்கு
ஏனெனில் சுரண்டலின் கோரத் தாண்டவத்தை நடத்தும் முதலாளிகள் சிறு மற்றும் தேசிய முதலாளிகள் என்ற அடிப்படையில் அக்கட்சிகளின் நேச சக்திகள் என்ற வட்டத்திற்குள் வந்துவிடுகின்றனர்.
அதே சமயத்தில் தொழிலாளர் போராட்டம் பெரும் முதலாளிகளை மையம் கொண்டதாகவே இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்து மிகப் பெருமளவு நடைமுறை சாத்தியமாகவே இருப்பதில்லை. ஏனெனில் தற்போதெல்லாம் பெரும் முதலாளிகள் தரக்கட்டுப்பாட்டைப் பராமரிக்கும் வேலைகளுக்கே பெரும்பாலும் நிரந்தரத் தொழிலாளரை வைத்திருக்கின்றனர்.
பிற வேலைகள் அனைத்தையும் ஒப்பந்த அடிப்படையில் சிறு முதலாளிகளிடம் விட்டுவிடுகின்றனர்.
கூடுதல் ஊதியம்
அப்படிப்பட்ட தரக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பவர்கள் உயர் தொழில்நுட்பம் கற்ற வல்லுனராக இருப்பதால் இயல்பாகவே கூடுதல் ஊதியம் பெறுபவர்களாக அவர்கள் உள்ளனர்.
அவர்களும் கடுமையாகச் சுரண்டப் படுகிறார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மைச் சூழ்நிலையில் அவர்கள் சுரண்டலை எதிர்த்துப் போராடி அதனால் நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாகி வேலை இழக்க நேர்ந்தால் அத்தகைய கூடுதல் சம்பளம் கிட்டும் வேலையை உடனடியாக வேறு எங்கும் பெற முடியாது என்ற அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.
சிறு மற்றும் பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் இரண்டிலுமே இவ்வாறு வர்க்கப் போராட்டம் நடைபெறாத நிலையே இன்று நிலவுகிறது.
இதற்கு முழுப் பொறுப்பும் இங்கு இடதுசாரி, கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டு சோசலிச ரீதியான சமூக மாற்றத்தை வலியுறுத்தாமலிருக்கும் கட்சிகளையே சேரும்.
சிறு முதலாளித்துவ நிறுவனங்களிலும் வர்க்கப் போராட்டங்கள் நடைபெற்றால் அதன் விளைவாகத் தொழிலாளருக்கு கூடுதல் கூலி வழங்க நேர்ந்தால் அவர்கள் உற்பத்தி செய்து பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு விற்கும் பொருட்களுக்கும் கூடுதல் விலையினைக் கேட்கும் நிலை சிறு முதலாளிகளுக்கும் உருவாகும்.
அதைப் பெருமுதலாளிகள் தர மறுக்கும் பட்சத்தில் அவர்களை எதிர்த்துச் சிறு முதலாளிகளும் போராடத் தொடங்குவர். இதனால் சமூக மாற்றத்தை வலியுறுத்தும் சமூக இயக்கங்கள் அனைத்துப் பிரிவினராலும் நடத்தப்படும் சூழ்நிலை உருவாகும்.
நேசசக்தி முழக்கம் எப்போது முன்வைக்கப்பட வேண்டும்
மேலும் யார் நேசசக்தி யார் எதிர்சக்தி என்பது சமூகமாற்ற எழுச்சிகள் மிகப் பெருமளவு நடைபெற்று வெகு சீக்கிரத்தில் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடும் என்ற சூழ்நிலை நிலவும் போதே தத்ரூபமாக நம்முன் எழும்.
பாரி கம்யூன் எழுச்சி 1873-ம் ஆண்டு ஏற்பட்ட போது மாமேதை மார்க்ஸ் கம்யூனை வழிநடத்துபவர்களை விவசாயிகள் மற்றும் சிறு முதலாளிகள் ஆகியோரை தங்கள் பக்கம் வைத்திருக்கப் புரட்சியாளர்கள் முயலவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எழுச்சி நிலவிய வேளையில் அவர் எழுப்பிய அவ்வேண்டுகோள் தற்போது துளியளவு கூட விவேகமின்றி, எழுச்சியே மேலெழும்பாதிருக்கும் வகையில் மக்கள் ஜனநாயகம், தேசிய ஜனநாயகம் என்று முழங்கும் சக்திகளால் இன்று நம் நாட்டில் முன்வைக்கப்படுகிறது; அதனால் போராட்டங்கள் முடக்கப் படுகின்றன.
சைடு பிசினெஸ்
மேதினம் 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர சமூக சிந்தனை என்ற அடிப்படையில் மேதினத் தியாகிகளால் அன்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இன்று சமூக சிந்தனைக்காக ஒதுக்கப்பட வேண்டிய அந்த 8 மணிநேரமும் அமைப்பு ரீதியாக ஒருங்கு திரண்டுள்ள தொழிலாளரின் ஒரு பகுதியினரால் சைடு பிஸினஸ் செய்வதற்கும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தங்களுடைய சம்பளத்தை மட்டும் நம்பியிருந்தால் தனியார் கைவசம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுவிட்ட அதிகக் கட்டணம் செலுத்தி மட்டுமே பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கல்வியினைத் தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றுத்தர முடியாது என்று அவர்கள் கருதுகின்றனர்.
அதுவே அவர்களின் இந்த முதலாளித்துவ சீரழிவுப் பாதையில் செல்வதற்கான காரணமாக அமைகிறது.
இழப்பதற்கு ஒன்றுமில்லாத தொழிலாளர்
பாரி கம்யூன் எழுச்சியில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு இத்தகைய ஊசலாட்டம் இல்லை. ஏனெனில் அவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லாத தொழிலாளர்களாக அசலும் நகலும் இருந்தனர்.
அதன் பின்னர் தான் சோசலிசப் புரட்சி சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்டது. அதன் பின்னர் தாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்கள் இல்லை என்ற மனநிலையை தொழிலாளரிடம் ஏற்படுத்துவதற்கு முதலாளித்துவம் திட்டமிட்டுச் செயல்பட்டது.
அதன் சீரழிந்த தன்னலவாத லாப நோக்கக் கலாச்சாரத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் கலாச்சாரமாக்க முயன்றது. அதில் பெருமளவு வெற்றியும் பெற்றது. இதற்கு எதிர் வினையாற்றக் கம்யூனிஸ்ட்கள் தவறிவிட்டனர்.
பத்தாயிரக் கணக்கில் தொழிலாளர் வேலை செய்யும் நிறுவனங்கள் தொழிலாளரிடம் தங்கள் வலு மீதான மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்குகின்றன என்பதை உணர்ந்த முதலாளித்துவம் ஒப்பந்தத் தொழில் முறைக்குத் தாவியது.
இவ்வாறு சோசலிச அமைப்பு என்று எதுவும் இல்லாமல் போகும் வரை முதலாளித்துவம் ஒன்றன்பின் ஒன்றாக தன் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் திட்டமிட்டு ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இங்கு கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்படுபவர்களோ மாறியுள்ள சூழ்நிலைக்கு உகந்த வகையில் தத்துவத்தைச் செறிவு செய்யாமல் மாபெரும் கம்யூனிசத் தலைவர்களால் கட்சியின் தலைமை குறித்து உருவாக்கப்பட்ட கருத்துக்களின் தரத்தைக் கூட சீரழித்துக் கொண்டிருந்தனர்.
அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு மேற்கு வங்கத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகுவீர்களா என்று சமீபத்தில் பிரகாஷ் காரத்திடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறிய பதிலாகும்.
இக்கேள்விக்குத் தேர்தல் வெற்றி தோல்வி அல்ல உழைக்கும் வர்க்கக் கட்சியின் வலுவினைத் தீர்மானிப்பது என்று கூட அவர் கூறியிருக்கலாம். ஆனால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை கூட்டுத் தலைமை எனவே தோல்வி, வெற்றி எதுவானாலும் அதற்கான பொறுப்பும் பாராட்டும் கூட்டாகவே கட்சியால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற பொருள்பட சில கருத்துக்களை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் அல்லது பொலிட் பீரோவின் கருத்தை விளக்கி முன்வைக்கக் கூடியவரே கட்சியின் பொது செயலாளர் என்ற முத்தையும் உதிர்த்தார்.
ஆங்கிலத்தில் ஸ்போக்ஸ் பெர்ஸன் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். அந்த வார்த்தை காங்கிரஸ் கட்சியின் அபிசேக் சிங்வி, மணீஸ் திவாரி, ஜெயந்தி நடராஜன், பி.ஜே.பி. கட்சியின் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் குறித்து ஊடகங்கள் பயன்படுத்துவது ஆகும்.
கூட்டுச் சிந்தனையின் ஒட்டுமொத்த வடிவம்
உலகில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பொதுச் செயலாளர்களாக இருந்த மாபெரும் தோழர்களான தோழர் லெனின், ஸ்டாலின் போன்றோர் அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளின் கூட்டு சிந்தனையின் நிதர்சன வடிவங்களாக விளங்கினர்.
அவர்கள் தொழிலாளி வர்க்க இயக்கத்தை வழிநடத்துவதற்கான கருத்துக்களை அடக்கிய நூல்களை மத்தியக் கமிட்டிக் கூட்டங்கள் போட்டு அதில் கலந்து கொள்ளும் தோழர்களின் கருத்துக்களை ஒருங்குதிரட்டி எழுதவில்லை. அவர்களே எழுதி மத்தியக் கமிட்டியின் பார்வைக்கு வைத்தனர்.
இணைத் தலைவர்கள் கண்ணோட்டம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொருந்தி வராது. அது முதலாளித்துவக் கட்சிகளின் தலைமைக் கண்ணோட்டம். அக்கட்சிகளில் தான் அதன் பொதுச் செயலாளர்கள் ஸ்போக்ஸ் மேன்களாக இருப்பர்.
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் கண்ணோட்டம் தலைவர்களின் தலைவர் என்ற கண்ணோட்டமாகும். அதானல்தான் லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்கள் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை அவர்கள் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுச் செயலாளர்களாக விளங்கினர்.
அத்தகைய தரத்தை அடையாதவராக இருப்பது பிரகாஷ் காரத்-ன் சொந்த விஷயம். ஆனால் பொதுச் செயலாளர் மத்தியக் கமிட்டியின் ஸ்போக்ஸ் மேன் என்று கூறுவது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் கண்ணோட்டத்தின் அடிப்படையையே சீரழிப்பதாகும்.
இவ்வாறு முதலாளித்துவம் அதன் நலனைப் பாதுகாப்பதற்காகத் திட்டங்கள் வகுத்து செயல்படும் போது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற பெயரில் இங்கு செயல்படும் கட்சிகள் எந்த முதலாளிக்கு என்ன சிரமம் என்பதையே கவனத்திற் கொள்பவையாக இருக்கின்றன. அதன் காரணமாகவே வர்க்கப் போராட்டங்களும், தொழிலாளி வர்க்க எழுச்சியும் மிகவும் மங்கிப் போயுள்ளன.
மேலை நாடுகளைப் பொறுத்தவரை அந்நாட்டு முதலாளிகள் சம்பளவெட்டு போன்றவற்றைக் கொண்டு வந்தால் தொழிலாளர் எழுச்சி கிளர்ந்தெழும் என்பதை உணர்ந்து அவர்களின் தொழில்களையே மலிவான கூலிக்கு உழைப்பாளி கிடைக்கும் நாடுகளுக்கு மாற்றி சொந்த நாட்டுத் தொழிலாளரின் வேலை வாய்ப்புகளுக்கே உலை வைத்துவிட்டனர்.
வேலைப் பாதுகாப்பு என்பது குறித்து கவலையேதும் இல்லாதிருந்த மேலைநாட்டுத் தொழிலாளரின் மனநிலையைப் பயன்படுத்திக் கொண்டு அந்நாட்டு முதலாளி வர்க்கம் இதனை அத்தனை சிரமமின்றிச் செய்து முடித்துவிட்டது.
அதனால் இன்று மேலை நாடுகளின் தொழிலாளி வர்க்கத்திடம் அவர்களே அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் தெரிந்து கொண்ட ஒரு உண்மை அவர்களின் புரிதலாக வடிவெடுத்துள்ளது.
இன்று அவர்களின் மேதின முழக்கங்கள் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கின்றன. அதாவது தங்களின் வாழ்க்கைப் பிரச்னைகள் அனைத்திற்கும் காரணமாக இருக்கும் முதலாளித்துவத்தை ஒழிப்போம் என்பதாகவே அவை இருக்கின்றன. ஒரு காலத்தில் அங்கு நடத்தது போல் மேதினம் தொழிலாளரின் கேளிக்கை தினமாக இன்று இல்லை.
நமது நாட்டிலும் இங்குள்ள இடதுசாரி கட்சிகளின் வர்க்க சமரசப் போக்கையும் எதிர்கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் புரிதல் சரியான அமைப்புகளைத் தேடி அதனை நகர்த்திச் சென்று கொண்டிருக்கிறது.
பல துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நம்மை அணுகிக் கொண்டிருக்கின்றனர். உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி கண்ணோட்டத்தை அமல்படுத்தி சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளருக்கும் நம்பிக்கையூட்டி அவர்களைப் போராட்டப் பாதையில் வழிநடத்தி அந்தப் பின்னணியில் பெரு முதலாளித்துவ நிறுவனத் தொழிலாளரிடமும் நம்பிக்கையையும் போராட்ட உணர்வையும் நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பிரான்ஸின் வர்க்கப் போராட்டங்கள் நூல்
மகத்தான பாரி கம்யூன் வீழ்ந்த வேளையிலும் கூட மாமேதை மார்க்ஸ் அது முன்வைத்த வரலாற்றுப் படிப்பினைகளைப் பார்க்கத் தவறாதிருந்தார். அப்போது அவர் எழுதிய பிரான்ஸ்-ன் வர்க்கப் போராட்டங்கள் என்ற நூலின் கருத்துக்களை முழுமையாக மேற்கத்திய பத்திரிக்கைகள் இருட்டடிப்புச் செய்தன. கதிரவனின் செவ்வொளியை கரங்கொண்டு மறைத்துவிட முடியாது.
அவ்விதத்தில் ஆசிரியருக்குக் கடிதங்கள் போன்றவற்றின் மூலம் அப்புத்தகம் குறித்து வந்த கருத்துக்களுக்கு வேறு வழியின்றிப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பிரிட்டன் நாட்டுப் பத்திரிக்கைகள் ஆளாயின.
மார்க்ஸ் அந்நூலில் கூறிய கருத்துக்கள் தவறானவை என்று அவதூறு செய்தன. அந்நிலையில் மாமேதை மார்க்ஸ் இந்த அற்ப வியத்தில் தலையிடுவானேன் என்று எண்ணவில்லை. அதை எழுதியவன் நான் அதில் வந்த கருத்துக்கள் அனைத்தும் சரியானவை என்று சவால் விட்டு அவற்றை நிறுவவும் நிரூபிக்கவும் முன்வந்தார்.
அந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து அதனைப் பின்பற்றி முதலாளித்துவ அவதூறுகள் தப்பபிப்பிராயங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு முறியடிக்கவும் முதலாளித்துவ சதித் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றவும் நாம் தயாராக இருந்தால் நீறுபூத்த நெருப்பாக கனன்று எரிந்து கொண்டிருக்கும் பிரச்னைகளை உள்ளடக்கமாகக் கொண்டு விளங்கும் இச்சமூக அமைப்பில் மாற்றத்தை நிச்சயம் நாம் கொண்டுவர முடியும். அதனைக் கொண்டுவர வீரசபதம் ஏற்பதே மேதினத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உரிய அஞ்சலியாகும்.
சோசலிச, கம்யூனிச ரீதியிலான சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி; அதனை ஆளும் வர்க்கம் தள்ளிப்போட முடியுமே தவிர, தவிர்க்க முடியாது என்று கூறி தோழர் ஆனந்தன் தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதிவரை கவனம் சிதறாது இன்னும் தொடரட்டும் என்ற மனநிலையோடு இருந்த கலந்து கொண்ட தோழர்கள் ஆர்வத்துடன் இக்கூட்டத்தை கேட்டுக் கொண்டிருந்தது இக்கூட்டத்தின் சீரிய சிறப்பம்சமாக இருந்தது.
சி.டபிள்யு.பி. அமைப்பை சாராத வேறு பல அமைப்பின் தோழர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.