மோசடித்தனமான ஊதாரித்தனத்தின் உச்சம் தொடும் திட்டம், முற்றிலும் கைவிடப்பட வேண்டும்

ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிகவும் முதன்மையான பங்குவகிப்பது போக்குவரத்துத் துறை நிலவழியில் சாலைகள் மூலம் பல்வகை உந்துகள், தொடர்வண்டிப் பாதைகள் மூலம் பயணிகள், சரக்குத் தொடர் வண்டிகள், நீர் வழி மூலம் பயணிகள், சரக்குக் கப்பல்கள், வான்வழியில் பயணிகள், சரக்குக்கான வானூர்திகள் என பல்வகைப் போக்குவரத்து முறைகள் உள்ளன. இவற்றுள் தொடர்வண்டித்துறை நாட்டின் அனைத்து மக்களுக்கும் இன்றியமையாத தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். அதாவது குறிப்பாக நாட்டுக்கு அடிப்படைத் தேவையான அனல் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி போக்குவரத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது, விவசாயத்திற்கு வேண்டிய உரங் களை, வேளாண் விளைபொருள் ளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்குச் சரக்குத் தொடர் வண்டிகள் தான்  பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றன.

இன்னும் பல்வகைச் சரக்குகளை நாடெங்கும் எடுத்துச் செல்வதற்கும் தொடர்வண்டித் துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. பெரும்பாலான மக்கள் பயணங்கள் மேற் கொள்வதற்கும் தொடர் வண்டிகள் மிகவும் தேவை. இவ்வாறான வெகுமக்கள் தேவைகளை நிறைவு செய்கின்ற வகையில் நம் நாட்டின் தொடர் வண்டித் துறை வளர்ச்சி கண்டிருக்கின்றதா? நாடு விடுதலையடைந்ததிலிருந்து 71 ஆண்டுகளில் பெருகி யுள்ள மக்கள் தொகைக்கு ஈடாக இத்துறை வளர்ச்சி பெற்றுள்ளதா? என்ற பெரு வினாக்களுக்கு எதிர்மறையான விடைதான் என்பதுதான் தொடர்வண்டித் துறையின் தற்போதைய உண்மை நிலை, இன்னும் விரிவாகக் கீழே பார்க்கலாம். இதை உறுதி செய்யும் வகையில் சென்ற நான்காண்டுகளுக்கு முன் நாட்டின் திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்த மான்டெக் சிங் அவுவாலியா அனைத்து மாநிலங்களுக்கும் நாட்டின் போக்குவரத்துத் துறை நிலையை பற்றி எழுதிய கடிதத்தின் தொடக்க வரியிலேயே தொடர் வண்டித் துறை வளர்ச்சியைக் குறிப்பிடும் போது அது குறிப்பிடத்தக்க எந்த வளர்ச்சியுமின்றி படுபாதகமான நிலையில் உள்ளது எனச் சுட்டியிருந்தார். அது சென்ற பத்தாண்டு பா.ச.க. ஆட்சியில் இன்னும் மோசமடைந்துவிட்டது.

இந்தப் பின்னணியில் 2016 இறுதிவாக்கில், குசராத்-அகமதாபாத்-மகராட்டிர-மும்பை இருநகரங்களுக்கு இடையி லான 500 கி.மீ. தொலைவுக்கு ரூ.96,000 கோடிச் செல வில் ‘புல்லட் தொடர் வண்டி’ப் பாதை தனியாக அமைக்கப் பட்டு அவ்வழிக்கெனத் தனித் தொடர் வண்டி இயக்கப்படும் என மோடி அறிவித்தார். இதற்குச் சப்பான் நிதி அளிக்கும் என்றும் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக ஓராண்டு கழித்து 2018-19க்கான நடுவணரசு நிதிநிலை அறிக்கை நாடாளு மன்றத்தில் வைக்கப்படும் போது ‘புல்லட்’ திட்டம் ரூ.1.25 இலட்சம் கோடிச் செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கான ஆய்வு கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒரு திட்டம் அறிவிக்கப்படும் போது அதற்கான அடிப்படைத் தேவைகள், அதன் குறிக்கோள்கள் (Object of the Scheme/ Project) பயன்பாடுகள், பலன்கனள் என அடிப்படையான விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் ‘புல்லட்’ திட்டத் திற்கான மதிப்பீடு, நிதிக்கான வழிவகைகள், திட்டத்தின் சிறப்பு இயல்புகள் என பயண நேரம் 2.30-3.00 மணியளவுக்குள்ளாக இருக்கும் என்றும், உயர்ந்த சிறப்பு வசதிகள் வண்டியின் பெட்டிகள் கொண்டிருக்கும் என்றும், பலவாறு பெரிதும் விவரிக்கப்பட்டது. இத்தொடர் வண்டி இணைப்பு வளர்ந்த நாடுகளுக்கு இணையான தன்மையில் அமைக்கப்படும் என்பதாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தேவை குறித்து விரிவாகப் பேசப்படவில்லை. இது எந்தத் தட்டு மக்களுக்கு எந்தளவுக்கு குறுகிய கால, நெடுங்கால பயன்களை, பலன்களை அளிக்கவல்லதாக திட்டமிடப்பட்டுள்ளது என்ற இன்றியமையா விவரங்கள் விரிவாகச் சொல்லப்படவில்லை. ஆனால் வளத்துடனும், வனப்புடனும் வாழும் மேல்தட்டு மக்களான சில ஆயிரம் மக்களின் பெரும் மகிழ்வான பயணத்திற் கானது இத்திட்டம் என்று மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

இந்தப் பின்னணியில் திட்ட மதிப்பீட்டை ஆய்வுக்குட் படுத்த வேண்டும். 2016 அறிவிக்கப்பட்ட போது இது ரூ.96,000 கோடி அளவு எனச் சொல்லப்பட்டு ஓராண்டுக்குள் 2018 தொடக்கத்தில் ரூ.1.25 இலட்சம் கோடி என ஆகியுள்ளது. திட்டக்காலம் குறைந்தளவு 5 அல்லது 6 ஆண்டுகளுக்குக் குறைவாக இருக்க முடியாது. இந்த இடைவெளியில் தொடர் பணவீக்க மிகுதியால் திட்ட மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந் தாலும் வியப்படைவதற்கில்லை. அந்த நிலையின் திட்ட மதிப்பு ரூ.2.50-3.00 இலட்சம் கோடியைத் தொட்டுவிடும். நடுவணரசின் நடப்பு ஆண்டு வரவு-செலவு மதிப்பு ரூ.22 இலட்சம் கோடியிலிருந்து ரூ.35-40 இலட்சம் கோடியாக உயர்ந்துவிடுவதாகக் கொண்டால், திட்டத்திற்குச் சராசரியாக ஆண்டுச் செலவு திட்டக்கால ஒவ்வொரு ஆண்டு வரவு செலவுத் தொகையில் 1.5 விழுக்காடு வரை ஆகலாம். அப்படியெனில் தற்போது ஆண்டுக்கு 15-20 விழுக்காடு அளவில் பாதுகாப்புக்கு ஒதுக்கீடு செய்யப்படுவது ஒருபோதும் வரும் ஆண்டுகளில் குறையப் போவதில்லை; மேலும் மேலும் உயரத்தான் செய்யும். இந்நிலையில் திட்டக் காலமான அய்ந்தாறு ஆண்டு ஒவ்வொன்றிலும் வெகுமக்கள் சார் மக்கள் நலத் திட்டங்க ளான கல்வி, மருத்துவம் இப்போது பெற்றுவரும் குறைந்த அளவு (உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் முறையே ஈ3ரூ, 1ரூ) ஒதுக்கீடும் மேலும் மேலும் வெட்டப்பட்டு குறைக் கப்படும். இதே நிலைதான் வெகுமக்கள் சார்ந்த வேளாண் நெசவுத் தொழில்களுக்கும் ஏற்படும். மொத்தத்தில் ஏழை, எளிய மக்கள் நலன்கள் காற்றில் பறக்க விடப்பட்டு இன்னலுக் குள்ளாக்கப்படுவார்கள்.

இத்திட்டம் சப்பானிடமிருந்து மிகக் குறைந்தளவு வட்டிக்கு கடன் உதவித் தொகை பெற்றுத்தான் செயல்படுத்தப்பட விருக்கின்றது என்று இந்தப் பா.ச.க. அரசு சப்பக்கட்டுச் சொல்கிறது. உண்மையிலேயே மக்கள் பற்றுள்ள அரசெனில் வெகுமக்கள் நலம் சார்ந்த திட்டங்களுக்குச் செலவிட வேண்டும். மாறாக வெகுமக்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வளமான மேல்தட்டு மக்களுக்காக இந்த ஒரு திட்டத்திற்கு மட்டும் 4 இலக்கம் கோடி ரூபாய்கள் செலவிட முற்படுவது ஒட்டுமொத்த நாட்டு நலனுக்கு விளைவிக்கப்படும் வஞ்சகம் அல்லவா?

இவ்வாறெல்லாம் ஊதாரித்தனமாகத் தொடர் வண்டித் துறைக்கு செலவிட முற்படுகின்ற இத்துறையின் உண்மை நிலையை மான்டேக் சிங் அலுவாலியா சொன்ன கருத்தின் பின்னணியில் பார்ப்போம். ஆங்கிலேயன் 1947இல் வெளி யேறிய போது 60,000 கி.மீ. அளவுக்கு இருந்த தொடர் வண்டிப் பாதை விடுதலை பெற்ற 71 ஆண்டைய இந்தியாவில் வெறும் 10,000 கி.மீ. அளவுக்கு மட்டுமே புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒப்புமையில் சமகாலத்தில் சீனா கிட்டத்தட்ட இரண்டு இலக்கக் கிலோ மீட்டர் அளவுக்குப் பாதைகள் அமைத்து நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் தொடர்வண்டிப் பாதைகளால் இணைத்துள்ளது. மக்கள் நெருக்கம் அதிகமாகக் கொண்ட நாட்டுக்கு ஏற்ற போக்குவரத்து தொடர் வண்டிப் பாதை தான் என்பதை வெகுமக்கள் நலன் கருதி உணர்ந்து அங்கு இலக்கக் கணக்கு கிலோ மீட்டரில் தொடர் வண்டிப் பாதைகள். ஆனால் தொடர்வண்டிப் பாதை வளர்ச்சியே இல்லாது பெரும் பகுதி தொடர் வண்டி இணைப்பே இல்லாது இந்தியாவில் உள்ள பொருளியல் வல்லுநர்களே, மேம்போக்காக பயணி, சரக்குத் தொடர் வண்டிகள் பெருகியுள்ளன பாதைகள் இருவழிகளாக ஆக்கப்பட்டுள்ளன, மின்மயமாக்கப்பட்டுள்ளன எனத் துதிபாடிக் கொண்டிருப்பது அறியாமை; வெகுமக்கள் மீதான அக்கறையின்மை என்பதைக் காட்டுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

இத்திட்டத்தின் தேவையை அரசு விரிவாக, வெளியிடாத நிலையில் இது வெற்றுத் தம்பட்டத்திற்கானதுதான் என்பதுடன், உண்மையில் இது முற்றிலும் தேவையற்றது என்பதற்கான காரணங்கள். கீழே மும்பை, அகமதாபாத் இடையே பற்பல வழிகளில் உயர்தரமான பலவகைச் சாலைகள், பல்லாயிரக் கணக்கில் பல்வகை பேருந்துகள், மகிழுந்துகள் மற்றும் எண்ணி லடங்காத சரக்குந்துகள், பலப்பல சிறப்பு விரைவுத் தொடர் வண்டிகள், சரக்குத் தொடர் வண்டிகள் கணக்கிலடங்கா பல்வேறு வானூர்திகள்.

இவையெல்லாம் அனைத்துத்தர மக்களின் பயணத் தேவைகளை நிறைவு செய்வனவாக உள்ளன. இரு பெரு நகரங்களும் தொழில் மயமானதால் அனைத்து மக்களின் தேவைக்கான உற்பத்திப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படு கின்றன. ஆனால் புல்லட் வண்டிகள் வெறும் மூன்று, நான்கு நகரங்களில் மட்டும் நிற்பவை. முற்றிலும் குளிரூட்டப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்டவை. பயணக் கட்டணம் பல ஆயிரம் ரூபாய்கள். நடுத்தர, எளிய மக்கள் எண்ணிப் பார்க்க முடியாத கட்டணம். எனவே அவர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படும் வகையான திட்டம். ஆனால் இது முழுமையுமாக பெரும் வளம், வசதி படைத்தோர் மட்டும் பயணிப்பதற்கான தொடர் வண்டிகள். எனினும் இவர்களுக்குப் பாய்ச்சலுடன் வளர்ந்து வரும் வானூர்திகள், புல்லட் தொடர் வண்டிகளின் மூன்று மணிநேரப் பயண நேரத்தை வெறும் 45 மணித்துளி நேரத்தில் கடக்கக் கூடிய ஒப்பீட்டளவில் குறைந்த அளவு கட்டணத்தில் கிடைக்கும் ஏற்ற மாற்றுப் பயணமாக இருக்கும். காட்டுக்குச் சொன்னால் சென்ற அக்டோபர் திங்களில் மட்டும் வானூர்திப் பயணம் மேற்கொண்டோர் 1.18 கோடிப்பேர் எனவே இரண்டு, மூன்று இலட்சம் கோடி ரூபாய்கள் எனப் பெரும் செலவில் அமைக்கப்படும் ‘புல்லட்’ திட்டம் மிகப்பெரும் தோல்வியாக முடியும். இது வளர்ந்த மேலை நாடுகள் அமெரிக்கா, சப்பான், சீனா போன்ற நாடுகள் இவ்வாறான சிறப்புத் தொடர் வண்டி களை இயக்குகின்றன என்ற போட்டி மனப்பான்மையில் புலியைப் பார்த்துப் பூனையும் சூடு வைத்துக் கொண்டது என்ற சொற்றொடர்களுக்கு ஒப்ப மோடி ஊதாரித்தனமாக பல இலக்கம் கோடி ரூபாய்களை வீணடிக்கும் வகையில் வெற்றுத் தம்பட்டத்திற்காகவும் பெருமைக்காகவும் இப்‘புல்லட்’ திட்டத்தை முன்மொழிகிறார் மோடி.

இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தி இந்திய நாடு பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது எனப் பொய்யுரை கூறப்பட்டு வருகிறது. அடிப்படையில் இந்த வளர்ச்சி யாருக் கான வளர்ச்சி என்ற வினா எழுகின்றது. உண்மை நிலை என்ன? நாட்டின் 30ரூ மக்கள் - 35 கோடி மக்களுக்குமேல் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் கொடுமை இதில் சரி பாதிப்போர் - 15 கோடிப் பேருக்கு நாளுக்கு ஒருவேளை உணவு மட்டுமே என்ற இழிநிலை. மக்கள் மருத்துவத்திற்கு ஆண்டுக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் ஒரு விழுக்காடு அளவில்தான். இதிலும் நாட்டின் 135 கோடி மக்களுக்கான சேவைத் துறையாக விளங்க வேண்டிய மருத்துவம் வணிகமயமாக்கப்பட்டு தனியார் கையில்தான் செல்வம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டு நாட்டிலுள்ள 600 மருத்துவக் கல்லூரிகளுள் 200 மட்டுமே அரசுக்கானவை. 400க்கும் மேற்பட்டவை தனி நிதிக் கல்லூரிகள் என்ற நிலை. இதையடுத்து நாட்டின் படிப்பறிவு நிலை-25 விழுக்காடு மக்கள் தற்குறியாகவே வைக்கப்பட்டுள்ளனர். இதில் இன்னும் இழிநிலை என்ன வெனில் 50 விழுக்காடு பெண்கள் தற்குறியாக வைக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் 80-90 விழுக்காடு பட்டியல்குலப் பெண்கள் படிப்பறிவற்றவர்களாக வைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும் அவலம் மக்களுக்கான சேவையாக விளங்க வேண்டிய கல்வி முற்றிலும் தனியாரின் வணிகத் தொழிலாக மாற்றப்பட்டு அரசு கல்வி தருவதிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு வருகின்றது. இதற்குக் காட்டாக நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 இலட்சத்திற்கும் மேலான அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன.

இரண்டு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியை தந்துவிட்டு சென்ற அய்ந் தாண்டு பாரதிய சனதா கட்சி ஆட்சியில் வேலை வாய்ப்பு வளர்ச்சியே இல்லை என்பதுடன் எதிர்மறையாக அருகிக் கொண்டே வருகின்றது. 70-80 கோடி மக்கள் வேளாண் துறை சார்ந்து வாழும் நாடான இந்தியாவில் வேளாண் தொழில் நசுக்கப்பட்டு உழவர்கள் வதைக்கப்படுகின்றனர். பல இலக்கத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

மக்கள் மேம்பாடு அடைவதற்கான எல்லாப் பொறுப்பு களிலிருந்து அரசுப் பங்களிப்பு அற்றுவரும் சூழலில் நாடு வளர்ச்சிப் பாதையில் அதாவது 6-7 விழுக்காடு வளர்ச்சி என ஓலமிடுவது வெறும் வெற்றுக் கூச்சல் என்பதுடன் உலகையும் மக்களையும் மனமறிந்து வஞ்சகமாக ஏமாற்றிக் கொண்டு வருவதுதான் மோடி அரசு. எனவே பல இலக்கம் கோடி ரூபாய்கள் மதிப்பீட்டில் முன்மொழியும் ‘புல்லட்’ திட்டத்தைக் கைவிட்டுவிட்டு மக்களின் குறிப்பாக அடித்தட்டிலுள்ள ஒடுக்கப் பட்டுள்ள பாட்டாளி, உழைப்பாளி, உழவர்கள், நெசவுத்துறைத் தொழிலாளர் போன்றோரின் மேம்பாடான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் வகுத்து செயல்படுத்த வேண்டும். அந்த வளர்ச்சியைத்தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்று சொல்ல முடியும். எனவே இவர்கள் வளர்ச்சி எனச் சொல்லிவரும் ‘புல்லட்’ திட்டம் போன்றவை உண்மையானதல்ல; அது வளமானோரை வளப்படுத்தும் வெறும் பொருளாதார வீக்கமே.

இந்த ஊதாரித் திட்டத்திற்கு மாற்றாக மக்கள் நலனுக் கான திட்டங்கள்

வெகுமக்களின் நலன்களைப் புறக்கணித்து ஊதாரித் தனமாக மேற்கொள்ளப்படுவதன்றி கி.மீட்டருக்கு ரூ.300 கோடிக்கு மேல் என 500 கி.மீ. தொலைவிற்கான மும்பை-அகமதாபாத் ‘புல்லட்’ திட்டம் அய்ந்தாறு ஆண்டுகள் கழிதது நிறைவுறும் நிலையில் ரூ.2.50-3.00 இலக்கம் கோடி செலவு செய்து உருப்படாது போவதற்குப் பதிலாக இத்திட்டத்தைக் கைவிட்டு நாட்டின் பெறும் 70000 கி.மீ. அளவிலேயே உள்ள தொடர்வண்டிப் பாதைகளை விரிவுபடுத்தும் வகையில் கி.மீட்டருக்கு ரூ.30-40 கோடி அளவில் செலவிட்டு கிட்டத் தட்ட 5000-6000 கி.மீட்டருக்கு தொடர்வண்டிப் பாதைகள் அமைத்து குறைந்த அளவிற்கு மாநிலந்தோறும் மாவட்டத் தலைநகர்களை இணைத்திட முடியும். இது முற்றிலம் வெகு மக்களின் நலன் சார்ந்ததாகும். இதனால் பயணிகள், சரக்குத் தொடர்வண்டிகள் போக்குவரத்து பெருகி அனைத்து மக்கள் நலன்களுக்குமாக அமையும்.

இவ்வளவு பெரும் செலவுடன் ஒரே காலக்கட்டத்தில் தொடர்வண்டிப் பாதை மேற்கொள்ளப்படுவதில் இடர்பாடுகள் இடையுறலாம். அதனால் முதல்கட்டமாக இரண்டாயிரம் மூவாயிரம் கி.மீ. தொலைவு பணிக்கான தொகையை ஒதுக்கிவிட்டு வெகுமக்கள் நலன்சார்ந்த ரூ.250-ரூ.350 கோடி செலவே பிடிக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் என 300 முதல் 400 வரை அமைத்து தற்போதுள்ள வெறும் 200 அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையைப் பெருக்கலாம்.

பெருமளவு செலவிலான ஒரே வகையான திட்டங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுமெனக் கருதினால் ஏழை எளிய வெகுமக்களின் கல்வி மேம்பாட்டுக்கென ஒரு பள்ளிக் கூடம் அமைப்பதற்கு 1, 2, 3, 4, 5 (அ) 6 கோடிச் செலவு என்ற அளவில் பல்லாயிரம் அரசு பள்ளிகள் தொடங்கலாம். இதுபோன்ற வெகுமக்கள் நலன் சார்ந்த பணிகளுக் கெனவும் ஒதுக்கீடுகள் செய்யப்படலாம்.

இவ்வாறான பல்வகைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப் படுவதால் வெறும் 500 கி.மீ. ‘புல்லட்’, தொடர்வண்டி அமைக்க அந்தப் பகுதிக்கு மட்டும் என்று குவிக்கப்படும் 3-4 இலக்கம் கோடி ரூபாய்  விரையமாக்கப்படுவதைத் தவிர்க்கப் படுவதன்றி. இத்திட்டச் செலவுகள் முற்றிலும் பெருந்திரளான பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை கொள்வதற்காக என்றாகிவிடும் என்பதாலவும் பணிகள் மேற்கொள்வதைத் தடுத்தும், வேலை வாய்ப்புகள் ஒரே பகுதியில் குவிந்துவிடும் என்பதையெல்லாம் தவிர்த்து நாடெங்கிலும் பரவலாக வெகு மக்கள் நலன்கள் பேணப்படும் என்பதுடன் அனைத்து தர, வகை மக்களுக்கும் வேலை வாய்ப்புகள் பரவலாக்கப்படும்.

இக்கொடூரமான ஊதாரித்தனத்தின் உச்சம் தொடும் மோடியின் கேடு கெட்ட ’புல்லட்’ திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை எதிர்த்து எதிர்வினை பெயரளவில்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படுகின்றது. ஆனால் இத்திட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு கைவிடப்பட வேண்டிய திட்டம் என்பதை ஆழச் சிந்தித்தால் அனைவரும் உணரலாம்.

எனவே வெகுக்களுக்கெதிரான இத்திட்டத்திக்கெதிராகப் பொதுவுடைமைக்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து இடதுசாரிக் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், வெகுமக்கள் நலன் நாடும் அரசியல் நோக்கர்கள், அச்சு, காட்சி ஊடகங்கள் என அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து இத்திட்டம் ஒழிக்கப்படவேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளை இலக்காகக் கொண்டு போராட்டத் திட்டங்கள் வகுத்து செயல்பட்டு மோடியின் அரசுக்கு கடும் நெருக்கடி தந்து இத்திட்டம் உடனடியாகக் கைவிடப்படுவதற்கு எந்த விலையும் கொடுக்கு மளவுக்கு அனைவரும் அணியமாவோம்.

Pin It