இரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்), சென்னையில் இருக்கிறது. இங்கே, கடந்த சில வாரங்களாக அமைதியற்றச் சூழல் நிலவுகிறது. கார்ப்பரேஷனாக மாற்றப் போகிறோம் என்ற பெயரில் தனியார் மயமாக்குவதற்கான முயற்சி நடப்பதாக தி.மு.க. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வின் தொழிற் சங்கங்கள் உட்பட அத்தனை தொழிற் சங்கங்களும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.

தனியார் ரயில்களுக்கு அனுமதி அளிப்பது, ஐ.சி.எஃப் உள்ளிட்ட ரயில்வேயின் முக்கிய உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்பரேஷனாக மாற்றுவது என்ற முடிவானது, மத்திய அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் முக்கியமான அம்சம். அதன்படி, டெல்லி – லக்னோ இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி யுள்ளது. அடுத்து, டெல்லி – அகமதாபாத் இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. இதையடுத்து உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்ப ரேஷனாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வருவதால், பதறிக் கிடக்கிறார்கள் தொழிலாளர்கள்.

‘‘தமிழகத்தின் பெருமையை தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கிறார்கள்!’’

மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் லோகோ ஒர்க்ஸ், உத்தரப்பிரதேசம் வாரணாசி யில் செயல்பட்டுவரும் டீசல் லோகோமோடிவ் ஒர்க்ஸ், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இயங்கிவரும் டீசல் லோகோ மாடர்னைசேஷன் ஒர்க்ஸ் ஆகிய மூன்று தொழிற்சாலைகளும் ரயில் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள ரயில் கோச் ஃபேக்டரி, உத்தரப்பிரதேசம், ரேபரேலி யில் உள்ள மாடர்ன் கோச் ஃபேக்டரி, சென்னை யில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) ஆகிய மூன்று தொழிற்சாலைகளும் ரயில் பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இவைபோக, பெங்களூரில் ரயில் வீல் ஃபேக்டரி என்ற தொழிற்சாலை ரயில் சக்கரங்களைத் தயாரிக்கிறது. அரசு நிறுவனங்களான இந்த ஏழு உற்பத்திக் கேந்திரங்களையும் கார்ப்பரேஷனாக மாற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகச் சொல்கிறார்கள்.

தமிழகத்தின் பெருமை!

சென்னை பெரம்பூரில் 1955-ல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப் பட்ட ஐ.சி.எஃப், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலும் ஏராளமான மாடல்களிலும் இரயில் பெட்டிகளைத் தயாரிப்பதால், இந்திய அளவில் புகழ்பெற்ற தொழிற்சாலையாகத் திகழ்கிறது ஐ.சி.எஃப். இங்கு தயாரிக்கப்பட்ட ரயில்கள் மற்றும் இரயில் பெட்டிகள் இலங்கை, பங்களா தேஷ், மலேசியா உட்பட 17 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன. புறநகர் ரயில்கள், மின்சார ரயில்கள் உள்ளிட்ட வழக்கமான ரயில் பெட்டிகளைத் தயாரிப்ப தோடு ஐ.சி.எஃப் நின்றுவிடவில்லை. பிரமிக்கத் தக்க வகையிலான சொகுசு ரயில் பெட்டி களையும், அரண்மனை போன்ற வசதிகளுடன் கூடிய பேலஸ் ஆன் வீல்ஸ், மஹாராஜா எக்ஸ்பிரஸ், டெக்கான் ஒடிஸி போன்ற அதி நவீன சொகுசு ரயில் பெட்டிகளையும் தயாரித்து அசத்தியிருக்கும் ஐ.சி.எஃப் நிறுவனத்தின் சமீபத்திய சாதனை, `டிரெயின் 18’ என்றழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இது, முழுக்க முழுக்க ஐ.சி.எஃப் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு. இந்த ரயிலைத்தான் கடந்த பிப்ரவரியில் பெருமிதத்துடன் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

இதுகுறித்து ஐ.சி.எஃப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சி.ஐ.டி.யூ) தலைவரான ராஜாராம் கூறுகிறார்: ‘‘ஐ.சி.எஃப் உள்ளிட்ட ஏழு உற்பத்திக் கேந்திரங்களும், இந்திய ரயில்வேக்குத் தேவையான ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள் மற்றும் உதிரிபாகங்களைத் தயாரித்துக் கொடுக்கின்றன. அரசு நிறுவனமாக இருப்பதால்தான் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளோம். வில்லுப் பட்டறை போன்ற பழங்காலத் தொழில்நுட்பத்தில் ஆரம்பித்து அதிநவீன தொழில்நுட்பமான லேசர் கட்டிங் வரை தன்னை காலத்துக்கு ஏற்றவாறு உருமாற்றி வளர்ந்திருக்கிறது ஐ.சி.எஃப். தொழிலாளர் களும் தொழில்நுட்பரீதியாக முன்னேறியுள்ளனர். அதனால்தான் எங்களால் அடுத்தடுத்த உயரங்களைத் தொட முடிந்தது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், முழுக்க முழுக்க எங்களின் சொந்த தயாரிப்பு. நூறு கோடி ரூபாயில் அதைத் தயாரித்துள்ளோம். இப்போது வடிவமைப்பு கையில் இருப்பதால், அது போன்ற ரயிலை இனி 70 கோடி ரூபாயில் தயாரித்து விட முடியும். ஆனால், அதே ரயிலை வெளி நிறுவனத்திடம் வாங்கினால் 230 கோடி ரூபாய் செலவாகும். ஐ.சி.எஃப் உள்ளிட்ட உற்பத்திக் கேந்திரங்களில் தயாரிக்கப்படும் ரயில்களை இந்திய ரயில்வே இயக்குவதால், பயணிகளிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

உதாரணமாக, எழும்பூரிலிருந்து கிண்டி செல்வதற்கான கட்டணம் வெறும் ஐந்து ரூபாய் தான். ஐ.சி.எஃப் உள்ளிட்ட ஏழு உற்பத்திக் கேந்திரங்களும் கார்ப்பரேஷனாகிவிட்டால், அவற்றிடமிருந்து இந்திய இரயில்வே விலை கொடுத்துதான் பொருள்களை வாங்க வேண்டி யிருக்கும். இதனால், தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு பாதிக்கப் படும். தொழிலாளர்கள் தற்போது அனுபவித்துவரும் உரிமைகள் பறிபோகும். வேலைவாய்ப்புகளில் சமூகநீதி பாதிக்கப்படும்’’ என்கிறார்.

வளர்ச்சியா… வீழ்ச்சியா?

இதுகுறித்து இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் மூத்த இணை பொதுச்செயலாளர் கே.வி.ரமேஷி கூறுகிறார்: “இரயில்வே தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்பாகப் படிப்பதற்கு இந்தியாவில் இன்ஜினீயரிங் கல்லூரியோ, ஆராய்ச்சி நிறுவனமோ கிடையாது. பிரதமர் முன்வைத்த `மேக் இன் இந்தியா’ திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டுமென்றால், ரயில்வே தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும். வெளி நாடுகளிலிருந்து ரயில்களை வாங்கிக் கொண்டிருந்த சீனா, கடந்த 20 ஆண்டுகளில் ரயில் தயாரிப்பில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. அதற்குக் காரணம், ரயில்வே தொழில்நுட்பங்கள் கற்றுத்தர அங்கு சுமார் 50 கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், இங்கு சிறப்பாகச் செயல்பட்டு வரும் உற்பத்திக் கேந்திரங்களை மேலும் வளர்ப்பதற்குப் பதிலாக, தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபடு கிறார்கள். கார்ப்பரேஷனாக மாற்றினாலும் சரி, தனியார் மயமாக்கினாலும் சரி, சேவை நோக்கம் அடிபட்டுவிடும். இதனால் தொழிலாளர்கள் மட்டுமல்ல... பொதுமக்களும் பாதிக்கப்படு வார்கள்’’ என்றார் கவலையுடன்.           

Pin It