உலகத்திலுள்ள மூன்றில் ஒரு பங்கு நாடு களை ஆங்கிலேய வெள்ளைக்காரன், 1700க்குப் பிறகு 250 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

“இந்தியா” என்கிற ஆப்கானிஸ்தான், பர்மா உள்ளிட்ட பிரிட்டிஷ் இந்தியா, சுதேச இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம் இவற்றை முப்படைகளைக் கொண்டும் ஆங்கிலேயன் அடக்கி ஆண்டான். எல்லா நாடுகளிலும் மக்கள் பேசிய அவரவர் மொழியில் 5ஆம் வகுப்பு வரை கல்வி கற்க அவனே வழி செய்தான்.

ஆனால், எல்லா உயர் அதிகாரப் பதவிகளிலும் ஆங்கிலேயனையே அமர்த்தி னான். அந்த உயர் அதிகாரிகளுக்கு உதவி செய்திட - ஏவல் வேலை செய்திட அந்தந்த நாட்டு மேல்தட்டு - பணக்கார - மேல்சாதி மக்கள் ஆங்கிலம் கற்றிட வழி செய்தான். 6ஆம் வகுப்புமுதல் எல்லாத்துறை - எல்லா நிலை உயர்நிலைக் கல்வியையும் 1836க்குப் பிறகும், 1857க்குப் பிறகும் ஆங்கில மொழி வழியில் படிக்க ஏற்பாடு செய்தான்.

மேலே சொல்லப்பட்ட எல்லா நாடுகளிலிருந்தும் ஆங்கிலேய வெள்ளையன் 1947 - 1949இல் வெளியேறிவிட்டான்.

ஆனால் ஆங்கில மொழியை மட்டும் - இந்தியாவிலிருந்தும், பாக்கிஸ்தானி லிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும் அகற்றப்பட, அந்தந்த நாட்டில் 1947இல் - 1949இல் உயர் பதவிகளில் இருந்த மேல்தட்டு - பணக்கார - பெருநில உடைமை - பெருந்தொழில்காரர்கள் வேண்டுமென்றே வழிகோலவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தந்த நாட்டு வெகுமக்கள் - பாட்டாளிகள் - கீழ்ச்சாதி - கீழ்த்தட்டு மக்களுக்கு “விடுதலை” என்பதன் அருமையை - “சுதந்தரம்” என்பதன் பெருமையை எந்த நாட்டிலும் அதிகாரத் திலிருந்த மேல்தட்டுக்காரர்கள் கற்றுத்தரவில்லை.

விடுதலை வந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் - தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடக்காரன், மராட்டியன், குசராத்தி, பஞ்சாபி, அசாமி, காஷ்மீரி என்கிற எந்த இந்திய மொழிக்கார மக்களுக்கும் அவரவர் தாய்மொழி வழியில் எந்தத் துறைக் கல்வியையும் அங்கங்கே ஆட்சி செய்தவர்கள் தரவில்லை. இது உண்மை.

இந்தியாவில் 765 பல்கலைக்கழகங்களும், 39,000 கல்லூரிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் 460 பொறியியல் கல்லூரிகளும், 30 மருத்துவக் கல்லூரிகளும், 400க்கும் மேற்பட்ட கலை-அறிவியல் கல்லூரிகளும் உள்ளன.

இந்தியா முழுவதிலும் ஓர் ஆண்டில் 12ஆம் வகுப் பில் தேர்ச்சி பெறுகிற மாணவர்-மாணவிகள் ஒரு கோடிப் பேர். இவர்கள் 1986க்குப் பிறகு ஆங்கில மொழி வழியிலும், இந்தி மொழி வழியிலும், அவரவர் தாய்மொழிகள் வழியிலும் படித்தவர்கள்.

இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரி களில் 52000 பேர்கள் தான் சேரமுடியும்; பொறியியல் கல்லூரிகளில் 6 இலட்சம் பேர் தான் சேர முடியும்.

கலை-அறிவியல் கல்லூரிகளில் 25 இலட்சம் மாண வர்கள்தான் சேரமுடியும்.

பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு 20 இலட்சம் மாண வர்களுக்கு - மொத்தம் 6 இலட்சம் மாணவர்களே சேர இடம் இருக்கிறது.

எனவே, ஒரு மாணவன் எந்தத் தொழிற் படிப்பில் சேரவேண்டும் என்றாலும் கைநிறைய கைக்கூலி தந்துதான் சேரமுடியும். இது முதலாவது தடை.

மருத்துவப் படிப்பில் சேர்ந்திட 50 இலட்ச ரூபா முதல் ஒரு கோடி ரூபா வரை கைக்கூலி தரவேண்டும். இது இரண்டாவது தடை.

எந்தப் பட்டப்படிப்பு, மேற்பட்டப்படிப்புப் படித் தாலும், தொழில் படிப்பும், தொழில்நுட்பப் படிப் பும் படித்தாலும், எந்த ஆராய்ச்சிப் படிப்புப் படித் தாலும் ஆங்கில மொழி வழியில்தான் படிக்க முடியும்.

இது மூன்றாவது தடை. அத்துடன் இது மானங் கெட்ட - தரங்கெட்ட நிலை என்பதை இந்தக் கல்விகளைத் தருகிற கல்வி நிறுவனத்தாரும், கல்வியாளர்களும், பேராசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் - ஏன், மாணவர்களும் உணர மறுக்கிறார்கள்.

அவரவர் தாய்மொழி வழியில்தான், பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி தருவது அரசின் - ஆட்சியாளரின் கடமை என்பதை கடந்த 70 ஆண்டுகளில் எந்த ஆட்சிக் காரரும் குறிக்கோளாகக் கொள்ளவில்லை.

பொதுமக்களும், இளைஞர்களும், மாணவர்களும் -நாம் சுதந்தரம் பெற்றவர்கள் என்பதற்கு முத லாவது அடையாளம்-இன்றியமையாத அடையாளம் தம்தம் தாய்மொழி வழியில் கல்வி பெறுவது தான் என்பதை உணர்ந்திட - உணர்த்திட எவரும் ஏற்ற முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

தமிழ்நாடு தனிஉரிமை பெற்ற ஒரு நாடு அல்ல; ஓர் அடிமை நாடு. உரிமை என்கிற - பன்னாட்டு ஏகாதி பத்தியத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்புத் தரும் இந்திய அரசு என்கிற காட்டு விலங்காண்டி அரசுக்குப் பச்சை அடிமை, நாம்.

இதற்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருக்கிற “இந்திய அரசமைப்புச் சட்டம்” என்கிற - மதப்பாது காப்பு, வருணப் பாதுகாப்பு, கோயில் கருவறையில் தீண்டாமை பாதுகாப்பு-முதலாளித்துவப் பாதுகாப்பு, பழமைப் பாதுகாப்பு என்கிற கெட்டியான கோட்டைக் குள் சிக்கிக் கொண்டிருக்கிற, பச்சை அடிமைகள் - சிந்திக்க மறுக்கிற - “விடுதலை”யின் அருமை தெரியாத பத்தாம் நூற்றாண்டைய மனப்பான்மையில் ஊறிய வர்கள், நாம்.

விடுதலை பெற்ற ஒரு நாட்டுக் குடிமகனின் முதலாவது உரிமை மானிட சமத்துவ உரிமை. அது இங்கே இல்லை.

அடுத்து குறிப்பிட்ட காலத்துக்குள் - எல்லாக் குடிமக் களுக்கும் குடிக்க நல்ல தண்ணீர்; எதையும் எளிதில் அறிந்திட ஏற்ற தாய்மொழி வழியிலான கல்வி; 18 அகவை நிரம்பிய ஆணும் பெண்ணும் மற்றும் குழந் தையும் குறைந்த அளவு நுகர்வு வசதிகள் அளிக்கப் படுவதற்கு வழி; எல்லா மக்களும் இலவசமாக எல்லா மருத்துவமும் பெற்றிட வசதி, இடம் விட்டு இடம் பெயரப் போதுமான பொதுப் போக்குவரவு வசதி; வேளாண் மைக்கான நீர்நிலைகள் பாதுகாப்பு; எல்லாப் பயன் பாட்டுக்கும் மின்வசதி ஆகிய இவற்றை அடைந்திடப் போராடுவதுதான் மக்களின் கடமை.

இதற்குத் தடைகள் உண்டா? உண்டு.

முதலாவது தடை, எல்லா மட்டத்திலும் தோய்ந்து விட்ட சாதியப் பண்பாடு.

இரண்டாவது தடை, அரசியல் உரிமை பற்றிய அறியாமை.

மூன்றாவது தடை குடும்பம் - அல்லது தனிமனிதப் பெருமை பேசுதல்.

இது தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. ஏன்?

இங்கே தான், தந்தை பெரியார் 1922 முதல் 1973 வரை - 51 ஆண்டுக்காலம் பட்டிதொட்டியெல்லாம் சென்று படித்தறிந்தவர், படிப்பில்லாதவர் எல்லார் மட்டத்திலும் மேலே கண்ட உண்மைகளை எடுத்துரைத்தார்.

முதலில் பெரியார் தொண்டர்கள் இவை பற்றி நன்கு ஆய்வு செய்ய வேண்டும். அதே தன்மையில், எல்லாத் தமிழர்களும் இவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்; பேச வேண்டும்; புதிய செயல் களம் அமைக்க வேண்டும்.

இவை மா.பெ.பொ.க.வின் உண்மையான நிலை பாடுகள்.

- வே.ஆனைமுத்து

Pin It