தொத்து நோயும் பலவிதம்

தோற்றுப் போகும் நம்மிடம்

சொத்தை வாழ்வு சோர்வுமே

சொத்துத் தேடிச் சாகுமே

முத்து தேடி மூழ்குமே

மோகச் சாமி மூடமே

நித்தம் வாழ்வு நீச்சலே

புத்தன் வாழ்வு புனிதமே !

 

முத்தி தேடும் மூடர்காள்

அத்திக் கட்டை அறிவீரோ !

சித்தம் தேடும் பித்தர்காள்

முத்திக் கேடு பெறுவீரோ !

நித்தம் அத்தி விரதர்காள்

பத்திக் கூட தத்தைகாள்

நத்தை போல வீதியில்

கத்துங் கழுதை காணேகாண்!

 

பிளிறும் களிற்றுக் கூட்டமே

பிழையே நீரும் வாட்டமே

தளிரும் கருகிக் கொட்டுமோ

குளிரும் கானல் தோட்டமோ ?

கொளுத்தும் வெய்யில்

    காஞ்சியில்

கொழுத்த உடலம் வீதியில்

நெளியும் புழுவும் மிஞ்சுமோ

நீளும் வரிசை மஞ்சமோ !

 

அத்திக் கட்டை சாமியோ

புத்திக் கெட்ட கூட்டமே

சுத்தி நிற்கும் நாமமே

சுகமே நித்தம் கூவுமே

ஒத்தை நாமம் ஏற்குமோ

சொத்தைக் கட்டை பார்க்குமோ

செத்து வீழும் நாமமோ

கத்தும் வரிசை ஊமையோ !

 

சுத்தப் பொய்யும் மெய்மையோ

சூதும் வாதும் உண்மையோ

வித்தை காட்டும் வீணரே

வியர்வை வேண்டா வேட்டரே!

செத்தக் கட்டை கேட்குமோ

சேர்த்த சொத்தும் நிலைக்குமோ

மெத்தை வீட்டு மாந்தரே

மிரளும் நிழலின் வேந்தரே!

 

பொய்யை விற்கும் புனிதர்காள்

நைய்யப் புடைக்கும்

    வணிதைகாள்

மய்ய ஆட்சி மாந்தர்காள்

செய்யும் நீசப் பூசர்காள்

கய்மை நோன்பு காடர்காள்

காக்கும் கயமைத் தீயர்காள்

அய்யம் ஆட்சி நாட்டிலே

அத்தி வரதர் அறிவரோ ?

Pin It