பார்த்தறியேன்; படித்தறிந்தேன். சுசீலா அன்னை

பண்பறிந்தேன்; மாண்பறிந்தேன். ஆனைமுத்தார்

நேர்த்தியறிந்தேன்; நேர்ந்த துயரறிந்தேன்.

நறுமலர்கள் பரப்பிய நேர்ப் பாதை யார்க்கும்

சீர்த்தியாக அமைவதில்லை என்றறிந்தேன்.

திருக்கணவர் கொள்கைவழி நின்று அன்னை

போர்த்திவிட்ட வறுமையிலும் செம்மை காத்துப்

புகழ்வாழ்வின் துணைநலமாய்ச் சான்று தந்தார்!

இடருற்றுப் பசியுற்று ஈர மண்ணை

எடுத்துண்டு நோயுற்று, மருந்தில்லத்தில்

கடிதுற்றும் சாவுற்ற மகளைக் கண்டு

கதறியவர் தாய்மட்டுமா? நாமும்தாம்

கெடலுற்றுக் கதறுவோமே! அந்த நேரம்

கணவர்தாம் வேற்றூரில் (தொட்டியத்தில்)

பெரியார் வந்து

நடத்தி வைக்கும் திருமணத்தில் இருந்தார் என்றால்

நயமான முரண்பாடா? சுடுந்தீக்காடா?

நிலையாமை என்பதுவே நிலைத்ததென்பார்.

நிலைத்தமையே யாதென்றால் புகழே என்பார்.

அலையாமை மனத்துக்கு நல்லதென்பார்.

அலையாத மனமேது என்போர் பல்லோர்.

மலையாத அறிவுகூட உணர்ச்சி முன்னே

மண்டியிட்டு மடங்கிவிடும்; ஆனைமுத்தார்

தலையாய இல்வாழ்க்கைத் துணைவி, அந்தோ!

துஞ்சியதால் நெஞ்சொடிந்து வெதும்புகின்றார்.

இடர்ப்பாடு இலம்பாடு (வறுமை) தாக்கும் போதும்

இருட்காடு வீட்டோடு படுத்த போதும்

சுடர்க்காடாம் முகத்தையே காட்டி வாழ்க்கைச்

சுதலோடு போராடிக் காரல் மார்க்சின்

கடப்பாடு (கடமை) கொண்டாடும் ஜென்னிபோல

 கருங்காட்டு வறுமையிலும் கணவர்தம்மின்

திடப்பாடு கொண்டாடும் சுசீலா அன்னை

தம்முயிரில் விடைபெற்றார்; வினாவில் வெந்தோம்?

Pin It