இந்திய நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ் சாலைகளின் இருமருங்கிலும் 500 மீட்டர் தொலைவு வரை மது விற்பனை கூடாது என்று கடந்த 15.12.2017 அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங் கியது. மதுக் கடைகளில், 90 விழுக் காட்டுக்கும் மேல் இப்பகுதியில் தான் உள்ளன. இந்த ஆணையை அமல்படுத் துவது என்பது கிட்டத்தட்ட மது விலக்கை அமல்படுத்துவது போல் தான்.

மது நாட்டிற்கு, வீட்டிற்கு, உயிருக்கு விளைவிக்கும் நன்மைகள் கொஞ்சமா நஞ்சமா? அதை எப்படி ஒழிக்க முடியும்? ஆகவே மக்கள் நலனுக்கு என்றே தங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கும் மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தின் ஆணையைப் புறம் கண்டு மக்கள் சேவையைத் தொடர்வதற்கான வழி வகைகளை யோசித்தன. மதுவினால் மக்கள் அடையும் நன்மைகளை விளக்கி உச்ச நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்யலாம். ஆனால் அம்முறையீடு விசாரிக்கப்பட்டு `நல்ல தீர்ப்பு` பெறுவதற்கு வெகுநாட்கள் ஆகும். அதுவரை மக்கள் அடையும் நன்மைகளைக் கிடப்பில் போட்டு வைக்க முடியுமா?

இது மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பதால் எல்லா மாநில அரசுகளும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டன; தங்களுக்குள் ஒரு அறிவுப் போட்டியையே நடத்தின. இந்தப் போட்டியில் அரியானா மாநில அரசு முதல் பரிசைத் தட்டிச் சென்றது. உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகில் மது விற்பனை கூடாது. இந்நெடுஞ்சாலைகளை மாவட்டச் சாலைகள் என்று அறிவித்து விட்டால் ,,, ? ஆகா ,,, ! என்ன அறிவுத் திறன்? எல்லா மாநில அறிவாளிகளும் அரியானா மாநில அறிவாளிகளின் நுண்ணறிவைக் கண்டு, திக்குமுக்காடிப் போய் நன்றி கூறினார்கள். மதுக் கடைகள் உள்ள நெடுஞ்சாலைகள் எல்லாம் மாவட்டச் சாலைகளாகப் பெயர் சூட்டப்பட்டன. அச்சாலைகளுக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் அதைப் போன்ற ஆடம்பர மதுக் கடைகள் தொடர்ந்து தங்கள் சேவை செய்ய வசதி செய்து கொடுத்தனர். வழக்கம் போல சிறு வணிகர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். 

அரசுகள், மதுக் கடைகள் செழித்து வளர வேண்டும் என்பது மட்டும் அல்லாமல், பல விஷயங்களில் மக்களின் நலன்களுக்கு எதிராகவே நடந்து கொள்வதன் உண்மையான காரணத்தை அறியாத, அக்காரணம் தெரிந்தால் உச்ச நீதிமன்றமும் தன் ஆணையைத் தானே மாற்றிக் கெள்ளும் என்பதையும் அறியாத, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தான் "பாதுகாப்பாக வந்து சேர் சமூகமே" எனும் நிறுவனம்.

அந்நிறுவனம் அரியானா மாநில அறிவாளிகளின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தது. அவ்வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது. நெடுஞ்சாலைக்கு மாவட்டச் சாலை என்று பெயர் மாற்றி நீதிமன்ற ஆணையைப் புறங்கண்ட அரசின் செயலைக் கேட்டு நீதிபதிகள் கடும் கோபம் கெண்டனர். தங்களது ஆணை சில்லரைக் கடைகளுக்கு மட்டும் அல்ல என்றும், நட்சத்திர விடுதிகள், களியாட்ட இடங்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் என்றும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி விபத்து நடந்து, அதில் மக்கள் கொல்லப் படுவதைத் தடுப்பது தான் தங்கள் நோக்கம் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறி விசாரணையை 4.7.2017 அன்று ஒத்தி வைத்தார்கள்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு கூறி இருந் தாலும், அரசுத் தலைமை வழக்கறிஞர் வேறு விதமாக விளக்கம் அளித்தார். உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் சில்லரை மது விற்பனையைத் தடுப்பது தான் என்றும், நட்சத்திர விடுதிகள் போன்ற பெரிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது என்றும் அவர் தன்னுடைய சட்டபூர்வக் கருத்தில் விளக்கம் கூறியிருந்தார்.

அரசுத் தலைமை வழக்கறிஞரின் விளக்கமும் நீதிபதிகளின் கருத்தும் முரண்பட்டு இருப்பதைக் கண்ட மாநில அரசுகள், தாங்கள் எப்படியும் தப்பித்துக் கொள்ள வழி கிடைத்தது என்று நிம்மதியுடன் இருந்தன. எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்று பா.ஜ.க.வின் முகத்தையே குறிப்புக்காகப் பார்த்துக் கொண்டு இருக்கும் தமிழக அரசு கூட, மது தொடர்பான அனைத்துப் பிரச்சி னைகளையும் ஒரே ஆணையின் மூலம் தீர்த்து விட முயல்வது நன்மை அளிப்பதை விட அதிகமாகத் தீமை பயக்கும் என்று துணிச்சலாகத் திருவாய் மலர்ந்து அருளி விட்டது.

2017 மார்ச்சு மாதம் கோபாவேசமாகப் பேசிய உச்ச நீதிமன்றம் 4.7.2017 அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, எடுத்த எடுப்பிலேயே நெடுஞ்சாலைகள் மாவட்டச் சாலைகளாக மாற்றம் செய்ததில் தவறு இல்லை என்று கூறியது. அது உச்ச நீதிமன்ற ஆணையின் நோக்கத்திற்கு எதிரானது என்று தொண்டு நிறுவனம் சுட்டிக் காட்டிய பேது, நகரங்களில் வாகனங்கள்  மெதுவாகச் செல்வதால் விபத்துகள் நடந்தாலும் அவை கடுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டது.

அவ்வழக்கு மீண்டும் 11.7.2017 அன்று விசார ணைக்கு வந்தது. அரியானா மாநில அறிவாளிகளின் யோசனைப்படி நெடுஞ்சாலைகளை மாவட்டச் சாலை களாக மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று நீதிபதிகள் கூறினர். நெடுஞ்சாலைகள் மாவட்டச் சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ள நிலையில், மதுக் கடைகள் கூடாது என்ற ஆணை அங்கு பொருந்தாது என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

வழக்கைத் தொடுத்த தொண்டு நிறுவனம் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த முழித்துக் கெண்டு இருக்கிறது. அது சரி! இது போன்ற வழக்குகள் அனைத்துமே இறுதியில் மக்கள் நலனுக்கு எதிராகவே முடிகின்றனவே என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்றாவது யோசித்து இருக்கின்றனவா?      மது உற்பத்தி, விற்பனையில் முதலாளிகளில் பலர், தங்கள் மூலதனத்தை முதலீடு செய்து உள்ளனர். மது விற்பனைக்கு ஊறு விளைவித்தால், அவர்கள் தங்கள் மூலதனத்தை வேறு தெழில்களுக்குக் கொண்டு செல்ல வேண்டி இருக்கும். ஆனால் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இலாபகரமாக முதலீடு செய்வதற்கான தொழில்கள் இல்லை. ஆகவே முதலாளிகள் இத்தொழி லிலேயே தங்கள் மூலதனம் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர்; அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அரசின் அனைத்து அமைப்புகள் மீதும் தங்கள் செல்வாக்கைச் செலுத்தி, தங்கள் மூலதனம் தங்களுக்கு இலாபம் அளிக்கும் தொழிலிலேயே தொடரும் வழி வகைகளைப் பார்த்துக் கொள்கின்றனர்.

இதில் மூலதனப் பயணத்திற்கு உராய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்குத் தான் முதன்மையான முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

இதை நிலைநிறுத்துவதற்குத் தான் கையூட்டு முதலிய ஊழல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் நமது தன் னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசை ஆட்டிப் படைக்கும் மூலதன ஆட்சியைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல் ஊழலைப் பற்றியும், அதனால் விளையும் கேடுகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்றன. மூலதனத் தின் ஆட்சியை, அதாவது முதலாளித்துவத்தை அடி யோடு ஒழித்தால் தான், அது ஆட்டிப் படைக்கும் ஊழலையும் அதனால் வரும் கேடுகளையும் ஒழிக்க முடியும் என்று என்றைக்குத் தான் புரிந்து கொள்ளப் போகிறேமோ?

Pin It