நீதித் துறை - குறிப்பாக உச்சநீதிமன்றம், நாட்டின் முழுமையான அதிகாரங்களைக் கைப்பற்றும் நோக்கத்தோடு, தீர்ப்புகளை வழங்கி வருகிறது. நாடாளுமன்றங்கள் நிறைவேற்றும் இடஒதுக்கீடு சட்டங்களை முடக்குவது; வழக்கு விசாரணைக்கு அப்பாற்பட்டு, தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் கருத்துகளை முன்வைப்பது என்று உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து, எதிர்ப்புகளும், வரத் துவங்கிவிட்டன.
பார்ப்பனர்களின் பாதுகாப்பு அரணாகவே உச்ச நீதிமன்றம் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் சென்னையில் வழக்கறிஞர்கள் சங்கம் இது பற்றி நடத்திய கருத்தரங்கு ஒன்றில், நீதிபதிகள் நியமனம், ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது. நீதித் துறையில் ஊழல் மலிந்து விட்டதையும் கருத்தரங்கு சுட்டிக் காட்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அரசு வழக்கறிஞராக இருந்த ‘சொலிசிட்டர் ஜெனரல்’ கே.டி.எஸ். துளசி பேசுகையில், அமெரிக்கா, நியுசிலாந்து போன்ற நாடுகளில், நீதிபதிகளை, வழக்கறிஞர்களே வாக்களித்து, பொதுத் தேர்தல் போல் தேர்வு செய்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளார். பிளவுபடாத சோவியத் ஒன்றியத்தில், நீதிபதிகளை மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது.
இந்தியாவில் அகில இந்திய சர்வீசுகளைப் போல் நீதிபதிகளும், தேர்வு முறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து வலிமை பெற்று வருகிறது. சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கும், இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். பெரியார் திராவிடர் கழகம் அண்மையில் சென்னையில் நடத்திய மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இதை வற்புறுத்தினார்.
அரசியல் சட்டத்தின் 312வது பிரிவின் படி நீதிபதிகள் நியமனத்துக்காக அகில இந்திய நீதிப் பணி ஒன்றை அமைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர முடியும். இதற்காக அரசியல் சட்டத்தில் 43வது திருத்தம் கொண்டு வரப்பட்டு அரசியல் சட்டத்தின் 312வது பிரிவில் சேர்க்கப்பட்டது. ஆனாலும், அப்படி ஒரு அமைப்பு இதுவரை உருவாக்கப்படவே இல்லை.
நீதிபதிகள் ஊதியம் - ஓய்வு வயதை உயர்த்தக் கோரி அகில இந்திய நீதிபதிகள் சங்கம் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளில், 1998 இல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகளுக்கு வீட்டுவசதி, வாகன வசதி, நூலக வசதி, ஓய்வு வயது உயர்வு, ஊதிய உயர்வு வழங்குமாறு பல கட்டளைகளை அரசுக்கு பிறப்பித்தது. அதில் ‘அனைத்திந்திய நீதிப்பணி’யை அமைக்க வேண்டும் என்பதும் ஒரு கட்டளை. ஆனால் அதைத் தவிர ஏனைய கட்டளைகள் அமுலாக்கப்பட்டுவிட்டன.