ஜல்லிக்கட்டு என்ற இந்த - ஜாதி ஆதிக்க - ஆணாதிக்கப் பண்பாட்டு விழாவுக்கு ஆதரவான போராட்டத்தை இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதரவு பெற்ற சில தொண்டு நிறுவனங்களும், பிற்படுத்தப்பட்ட சாதிவெறிக் குழுக்களும் தான் தொடங்கின. ஆனால் பொங்கல் நாளுக்குப் பிறகு 17.01.2017-லிருந்தே இந்தப் போராட்டத்தில் தன்னெழுச்சியாக, ஜாதி, மத அமைப்புகளில் இல்லாத மாணவர்களும் திரண்டனர்.

இயல்பாக இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டைத் தாண்டி பல சிக்கல்களை விவாதிக்கின்றது. ஆனால் இதன் தொடக்கம் வெறும் ஜல்லிக்கட்டு தான். இந்தப் போராட்டம் வென்று, ஜல்லிக்கட்டு நடப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஜல்லிக்கட்டு என்ற பண்பாடு, மீண்டும் நம்மை மிக எளிதாக அதே பார்ப்பன, மதவாத, ஜாதிவெறிக் கும்பலிடம் அடகு வைக்கவே பயன்படும் என்பதே கசப்பான உண்மை. ‘ஜாதிகளைக் கடந்து, தமிழராக ஒன்றிணைவோம்’ என்று களமாடிக் கொண்டிருக்கும்போதே, இந்த ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் வெட்டப்பட்டுள்ளனர்.

இக்கட்டுரை போராட்டத்தைப் பற்றியோ, போராடும் புதிய தலைமுறையைப் பற்றியோ விவாதிக்கும் கட்டுரை அல்ல. போராடும் மாணவர்களோடு இணைந்துள்ள சில அமைப்புகளின் அணுகுமுறைகளைப் பற்றி ஒரு விவாதத்தைத் தொடங்கும் முயற்சியே இக்கட்டுரை. மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

தமிழர் பண்பாண்டைக் காப்பாற்றப் போன பள்ளர்களுக்கு வெட்டு

ஜல்லிக்கட்டில் ஜாதி ஆதிக்கம் நிலவுகிறது என்பதற்கு உச்சநீதிமன்ற வழக்குகளும், தீர்ப்புகளும் சான்றாக உள்ளன. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டியதில்லை என்பது போல, நூற்றுக்கணக்கான கிராமங்களில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் தீண்டாமை வன்கொடுமைகள் வெளிப்படையாகவே நடந்தன. தமிழராக ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம் என்று முழங்கிவரும் இதே நேரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் சட்டத்தை மீறி தமிழரின் பண்பாட்டைக் காப்பாற்றப் போன பள்ளர் சமுதாய இளைஞர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் காளாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளர் இன இளைஞர்கள் 15.1.2017 அன்று நடந்த மஞ்சுவிரட்டில் (ஜல்லிக்கட்டு) சிங்கம்புணரி கிழக்குத் தெருவைச் சேர்ந்த கள்ளர்கள் மாட்டை அடக்கியதில் ஏற்பட்ட தகறாறை அடுத்து, பள்ளர்கள் எப்படி எங்கள் சமுதாய மாட்டை அடக்கலாம் எனக்கூறி, மாலை 6.30 மணியளவில் சிங்கம்புணரி கிழக்குத் தெருவைச் சேர்ந்த 80 பேர் கொண்ட முக்குலத்தோர் கும்பல் பள்ளர் இன இளைஞர்கள், பெண்கள் உள்பட நான்கு பேரை அரிவாளால் வெட்டிவிட்டு “இனிமேல் எங்கள் மாட்டைப் பிடிக்க நினைத்தால் ஊரோடு அனைவரையும் காலியாக்கி விடுவோம்” என மிரட்டல் விடுத்துத் தப்பினர். (எஸ்.வி.மங்கலம் காவல்நிலையம்,குற்றஎண் 4/2017. தோழர் அன்புச்செல்வம் வெளியிட்டுள்ள ஒரு தகவல்)

jallikattu FIR

தமிழரின் அடையாளம், தமிழரின் பண்பாடு, பாரம்பரியம் என அனைத்து ஊடகங்களும் ஜல்லிக்கட்டைப் புனிதப்படுத்திக் கொண்டு, தமிழராக தன்னெழுச்சியாக இளைஞர்கள் திரண்டு வருவதாகக் காட்டப்படும் இந்த நேரத்திலேயே, ஜல்லிக்கட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் வெட்டப் படுகிறார்கள். இனி இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு ஜாதியின் கோரத்தாண்டவத்திலிருந்து இந்த மக்களைக் காப்பாற்ற எந்தத் தமிழனும் தன்னெழுச்சியாக வரமாட்டான்.

தன்னெழுச்சியாகத் திரண்ட இளைஞர்களை விட்டுவிடுவோம். ஜல்லிக்கட்டை “ஜனநாயகப்படுத்த வேண்டும்” என்று கூறிப் புறப்பட்டுள்ள கம்யூனிஸ்ட்டுகளும், தமிழ்த் தேசியவாதிகளும் - “போராட்டத்தின் போக்கை நாம் மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ள சில பெரியாரிஸ்ட்டுகளும், சில அம்பேத்கரிஸ்ட்களும் இன்னும் காளாப்பூர் பள்ளர்கள் தாக்குதல் பற்றிப் பேசவே இல்லை. பரபரப்புகள், எழுச்சிகள் வரும், போகும். அவற்றில் நம்மைக் கரைத்துக் கொள்வது சரியல்ல.

ஜல்லிக்கட்டை ஜனநாயகப்படுத்த வேண்டுமா?

“ஜல்லிக்கட்டில் சாதிப்பாகுபாடு இருப்பது உண்மைதான். அதற்காக அந்தப் பாரம்பரியத்தை அழித்து விடமுடியாது. அதை ஜனநாயகப்படுத்த வேண்டும். அரசு நிர்வாகத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, இடஒதுக்கீடுதான் கேட்கிறோம். நிர்வாகத்தையே அழிக்கச் சொல்லவில்லை. பெரியார் கோவில் நுழைவுப் போராட்டம்தான் நடத்தினார். கோவில்களை அழிக்கச் சொல்லவில்லை.”

இதுதான் ஜனநாயகக்காரர்களின் நிலைப்பாடு. பலமுறை பதில் சொல்லிவிட்டோம். பெரியார் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினார். அச்சமயங்களில் அவர் பேசிய உரையை அவசியம் படிக்க வேண்டும்.

“இந்தப் பொதுக்கோவிலுக்குள் எல்லோருக்கும் செல்ல உரிமை உண்டு என்று விளம்பரம் செய்ய வேண்டும். யாராவது ஆட்சேபித்தால் அவர்களை சிறையிலிட வேண்டும். இதை பொது ஜனங்கள் கூட்டம் போட்டு கண்டிக்க ஆரம்பித்தார்களானால் உடனே கோவிலை இடித்தெறிந்து விட வேண்டும்.”

“ஜாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். உயர்வு தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொதுஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளை தீவாந்திரத்திற்கு அனுப்பிவிட வேண்டும். சுவாமிகளுக்கு உள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அவைகளை விற்று படிப்பில்லாதவர்களுக்கு படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலும் ஜீவனமும் ஏற்படுத்த உபயோகப்படுத்திவிட வேண்டும்.” - குடி அரசு 09.12.1928

சொல்லியது மட்டுமல்ல 1953-ல் விநாயகர் உருவபொம்மையை உடைக்கும் போராட்டத்தை நடத்திக் காட்டினார்.

“இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டு விடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27–ம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்கு ஆக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப் போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகி கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27–ம் தேதியன்று உடைத்தோம்.

இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள இந்தி எழுத்துக்களை 500-க்கு மேற்பட்ட ஊர்களில் 1000க் கணக்கிலே, 10000-க் கணக்கிலே ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பு ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்ந்து உடைக்கப்பட்டது!

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் - உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!” - தோழர் பெரியார் 11.07.1953 விடுதலை

கோவில் நுழைவுப் போராட்டங்களின் போதே, அந்த நேரத்திலேயே, அந்தக் கோவில்கள் ஜாதி, மத ஆதிக்கங்களின் அடையாளம். கோவில்கள் அழிக்கப்பட வேண்டியவை. அந்தக் கோவில்களுக்கு அடிப்படையான கடவுள்கள் அழிக்கப்பட வேண்டியவை. அந்தக் கடவுள்களைப் பின்பற்றும் மதம் அழிக்கப்பட வேண்டிது என்று விடாமல் பரப்புரை செய்து கொண்டே இருந்தார். விநாயகனைத் தெருவில் போட்டு உடைத்தார்; இராமனை எரித்தார். ஒரே நேரத்தில் கடவுள், மதம், கோவில் ஆகியவற்றின் புனிதப் பிம்பங்களைத் தகர்த்தெறிந்து கொண்டே கோவில் நுழைவையும் நடத்தினார்.

ஆனால் இந்த மாடுபிடிக்காத - மாடு வளர்க்காத - மாட்டைப் பற்றி துளியும் தெரியாத ஜனநாயகக்காரர்கள் ஜல்லிக்கட்டில் ஜாதி, தீண்டாமை கோரமாக உள்ளது என்பதை எங்கும் பேசியதில்லை. ‘ஜல்லிக்கட்டை ஒழிக்க வேண்டும்’ என்றும் பேசியதில்லை. ஜல்லிக்கட்டின் புனித பிம்பத்தை - தமிழர் பாரம்பரியம், தமிழர் பண்பாடு என்ற பிம்பங்களை விமர்சித்ததே இல்லை. இதுபற்றி அவர்களது மனதிற்குள்ளாகக்கூட விவாதித்ததில்லை.

திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகமும், தந்தை பெரியார் திராவிடர் கழகமும், புதிய குரல் ஆகியவற்றின் தோழர்கள் அவ்வாறு தங்களுக்கு ஜல்லிக்கட்டில் உடன்பாடு இல்லை என்பதைப் பதிவுசெய்து, மாணவர் போராட்டங்களை ஆதரிக்கின்றனர்.

ஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், மார்க்சிய - லெனினியக் குழுக்கள், தமிழ்த் தேசியக் குழுக்கள், மே 17, இளந்தமிழகம் போன்ற அமைப்புகள் ஜல்லிக்கட்டு பற்றிய விமர்சனத்தை எங்குமே வைத்ததில்லை. அது தமிழர்களின் பாரம்பரியம், தமிழர்களின் அடையாளம் என்று ஜல்லிக்கட்டைப் புனிதப்படுத்திக்கொண்டு தான் களத்தில் நிற்கின்றனர்.

ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம் எனப் புகழ்ந்துகொண்டு, அதன் இந்துமத அடையாளங்கள், ஜாதி ஆதிக்க, ஆணாதிக்கக் கூறுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, எந்த விமர்சனமும், எந்த எதிர்க்கருத்துப் பரப்பலும் நடத்தாமல், அதை ஜனநாயகப்படுத்தப் போகிறோம் என்று கூறுவது, பார்ப்பன ஆதிக்கத்திற்கும் தமிழன் இனமாக ஒன்றிணையாமல் போவதற்கும்தான் பயன்படும்.

அரசு நிர்வாகம், தெருக்கள் என்பவை, ஊர்கள் ஆகிய அனைத்திலும் ஜாதியும், தீண்டாமையும் இருக்கிறது. அதற்காக அவை எல்லாவற்றையும் அழிக்கச் சொல்வீர்களா?”

என்றும் ஒரு கேள்வி வருகிறது.

வாழ்க்கைக்குத் தேவையான அரசு நிர்வாகத்தையும், தேவையற்ற பண்பாடுகளையும் ஒப்பிடுவது தவறு. பண்பாட்டைப் பற்றி விமர்சிக்கும் போது மாற்றாக மற்றொரு பண்பாட்டைத் தான் ஒப்பிட வேண்டும். அமைப்புகளைப் பற்றிய விமர்சனங்களின் போது அமைப்புகளைப் பற்றிய நிலைப்பாடுகளைப் பேசலாம்.

ஜல்லிக்கட்டில் தாழ்த்தப்பட்டோர்

முற்போக்குச் சிந்தனையாளர்கள் என நாம் நம்பிய பல அறிவுஜீவிகளும், பேராசிரியர்களும், களப்பணியாளர்களும் கூறியுள்ள கருத்துக்கள் வேதனைக்குரியவை. அவைகளில் சில.

“அலங்காநல்லூர் முனியாண்டிகோவில் பூசாரியாக பள்ளர்தான் உள்ளார். அலங்காநல்லூரில் முதல் மாடு பள்ளர்களுடையது தான். அந்த மாட்டை யாரும் அடக்கமாட்டார்கள். அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கே ‘டாக்டர் அம்பேத்கர் பேருந்து நிலையம்’ என்றுதான் பெயர் வைத்துள்ளார்கள். அலங்காநல்லூரில் தேவர் சமுதாயத்தினர் சிறுபான்மையினராகத்தான் உள்ளனர்”. அவனியாபுரத்தில் பறையர் தான் ஜல்லிக்கட்டுக் குழுவுக்குத் தலைவராக உள்ளார்”

என்றெல்லாம் தங்களது முகநூல் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர்.

அலங்காநல்லூர் பேருந்து நிலையப் பலகையின் படத்தை தனது முகநூலில் வெளியிட்டு, இந்த மாபெரும் கண்டுபிடிப்பை அறிவித்தவர் தோழர் சுபகுணராஜன் தான். பேராசிரியர் இராஜன்குறை அவர்களும் இவரது கருத்தை ஆதரித்துத் தானும் ஒரு பதிவு போட்டுள்ளார். இன்னும் பல அறிவுஜீவிகள் அந்த முகநூல் பதிவில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.  

தோழர் அம்பேத்கர் பெயரை பேருந்து நிலையத்திற்கு வைத்து விட்டால், அந்த ஊர் சமத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஊர் என்று பொருளா? அப்படியானால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் கடந்த 2016 ஏப்ரல் 17ல் அம்பேத்கர் படத்தை அட்டைப்படமாக அச்சிட்டு, ஒரு சிறப்பிதழே வெளியிட்டது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-ன் விஜயபாரதம் ஏடும் அம்பேத்கர் 125 ஆம் ஆண்டு பிறந்ததினச் சிறப்பிதழே வெளியிட்டது. இந்து முன்னணி அம்பேத்கர் பிறந்த நாளை நடத்துகிறது. மோடி, அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை வெகுசிறப்பாகக் கொண்டாடுகிறார். பி.ஜே.பியும், இந்து முன்னணியும் தங்களது விளம்பரங்களில் தோழர் அம்பேத்கரின் படத்தை மிகவும் பெரியதாக அச்சிட்டு வருகின்றனர். எனவே ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பி.ஜே.பி ஆகிய அமைப்புகள் எல்லாம் சமத்துவத்திற்காகப் போராடும் அமைப்புகள், சமூக ஜனநாயகத்திற்காகப் பாடுபடும் என அறிவித்து இணைந்து விடலாமா?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் மாடு பள்ளர்களுடையது, பள்ளர் தான் பூசாரி, பறையர் தான் தலைவர் என்பவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள செய்தியைப் பாருங்கள்.

“நான் பிறந்து, வளர்ந்த விருதுநகர் மாவட்டத்திலேயே ஊர் தெரு மாடுகளை சேரி இளைஞர்கள் பிடிப்பதற்கு அனுமதி இல்லை. அதை மீறி அந்த மாடுகளை தலித்துகள் பிடித்துவிட்டால் கலவரம் வெடிக்கும். தென் தமிழகம் முழுவதும் இது தான் பரவலான நிலை, அதற்கான சான்றுகள் பல உள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் கூட இதே நிலைதான் இருந்து வந்தது. ஆனால் அரசின் மேற்பார்வையின் கீழ் அவை வந்த பிறகு தான் அந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது, சனநாயகப்படுத்தப்பட்டது. இன்றும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகளிலும் ஊர்த் திருவிழாக்களிலும் சாதி ரீதியான தீண்டாமை அப்படியே இருக்கத்தான் செய்கிறது.”

அலங்காநல்லூரில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடப்பதில்லை. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் நடக்கின்றன. இந்த மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் பங்கேற்க முடியாது என்பதே உண்மை.

உசிலம்பட்டியைச் சுற்றி, கள்ளர்கள் கூறும் எட்டு நாட்டில் ஒரு நாடான கொக்குளத்தில் இன்று வரை தலித் சமுதாயத்தவர் தான் பூசாரியாக இருக்கின்றார். அவரிடம் தான் கொக்குளம் ஆறு ஊரைச் சேர்ந்தவர்களும், வாக்கு கேட்டு, திருநீறு வாங்கி பூசிக் கொண்டிருக்கின்றனர். உசிலம்பட்டி கள்ளர்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்யவும், சத்தியம் செய்யவும் முக்கியக் கோயிலாக இருப்பது வடுகபட்டி போயன் கருப்பு கோயில். இது தலித்துகளின் கோயில். தலித் தான் பூசாரி. கள்ளர்களும் பள்ளர்களும் இணைந்து கும்பிடும் கோவில்கள் கூட உள்ளன. எனவே உசிலம்பட்டி பகுதி சமத்துவம் தழைத்தோங்கும் பகுதி என உறுதிப்படுத்திவிடலாமா?

பாப்பாபட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துக்களில் உள்ளாட்சித் தேர்தலையே நடத்த முடியாத நிலைதானே இருந்தது? இன்றும் பெயரளவுக்குத்தான் தேர்தல் நடந்தது. இடைநிலைச்சாதிகள் ஒத்துக்கொண்ட பிறகுதான், அங்கு ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவரைத் தேர்வு செய்ய முடிந்தது.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடந்து, தாழ்த்தப்பட்டவர்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்தப் பஞ்சாயத்து அலுவலகங்களில்கூட அந்தத் தலைவர்கூட நுழைய இயலாத நிலைதான் இருக்கிறது.

இந்த நாட்டின் குடியரசுத் தலைவராகவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் வந்து விட்டார். எனவே இந்த நாட்டில் ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று அறிவித்துவிட முடியுமா? இஸ்லாமியர் குடியரசுத் தலைவராக வந்துவிட்டார். இந்தியா மத ஆதிக்கமற்ற நாடு என சொல்லிவிட முடியுமா? எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் பிரதிநித்துவத்தைப் பொதுவான பிரதிநிதித்துவமாகக் காட்டுவது மிகப்பெரும் துரோகமாகும்.

முதல்மாடு: அடக்கக்கூடாத அழகத்தேவருக்கான மாடு

முக்கியமாக, அலங்காநல்லூரில் முதல் காளை தாழ்த்தப்பட்டவர்களுடையது தான். அதை யாரும் அடக்க மாட்டார்கள் என்ற கருத்து குறித்து நாம் தெளிய, அதுபற்றிய ஒரு கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

sorikkampatti temple arch

மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியைச் சேர்ந்த அழகத்தேவருக்கும், கீழக்குயில்குடி ஒய்யம்மாளுக்கும் திருமணம் பேசப்பட்டது. ஒய்யம்மாள் வீட்டில் வளர்க்கப்பட்ட ஏழு காளைகளை அடக்கினால்தான் ஒய்யம்மாளைத் திருமணம் செய்ய முடியும் என அவரது சகோதரர்கள் நிபந்தனை விதித்தனர். அதன்படி ஏழு காளைகளையும் அழகத்தேவர் அடக்கினார். ஆனால் காளையை அடக்கிவிட்டாரே என்ற ஆத்திரத்தில் ஒய்யம்மாளின் சகோதரர்கள் அழகத்தேவரைக் கொன்று விட்டனர். ஒய்யம்மாள் உடன்கட்டை ஏறிவிட்டாள். அழகத்தேவரின் உயிர் நண்பர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாயாண்டி ஆவார். அவரது உதவியால்தான் அழகத்தேவர் காளைகளை அடக்கியுள்ளார்.

இன்றும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் அழகத்தேவர் நினைவாகத்தான் தாழ்த்தப்பட்டோரின் முதல் மாடு விடப்படுகிறது. அழகத்தேவருக்காக விடப்படும் மாட்டை எவரும் அடக்கக்கூடாது என்பது பல ஆண்டுகளாக அங்கு ஒரு சடங்காகப் பின்பற்றப் படுகிறது.  

அழகத்தேவர் நினைவாக, மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம் பட்டியில் ‘அருள்மிகு அழகத்தேவர் திருக்கோவில்’ என்ற பெயரில் ஒரு கோயில் கட்டப் பட்டுள்ளது. பாட்டையாசாமி கோவில் என்றும் இதற்குப் பெயர் உள்ளது. அந்தக் கோவிலின் கருவறையில் காளையோடு அழகத்தேவர் நிற்கிறார்… ஆனால், தாழ்த்தப்பட்ட சமுதாய நண்பர் மாயாண்டி, கோயிலுக்கு வெளியே வாசலில், நினைவு வளைவில் சிலையாக நிற்கிறார்.

sorikkampatti temple statue

மேற்கண்ட கதை நடந்ததற்கு தொல்லியல் சான்றுகளோ, நம்பத்தகுந்த சான்றுகளோ இல்லை. இக்கதை போன்று அழகத்தேவர் ஏழு காளைகளை அடக்கியது பற்றி இன்னும் சில கதைகளும் மக்களிடையே உள்ளன. இக்கதைகள் அனைத்தையும் அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதைக் கடவுளின் வாக்காக மதித்து இன்றும் செயல்படுத்துகிறார்கள். தாழ்த்தப்பட்டோருக்கு ஜல்லிக்கட்டில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது, அவர்களுக்கு சமத்துவத்தை அளிக்கும் நோக்கில் அல்ல. அவர்களது அடிமைத்தனத்தை அவர்களுக்குக் காலங் காலமாக நினைவுபடுத்துவதற்காகவே ஆகும். மாட்டை வளர்ப்பதும், பயிற்றுவிப்பதும் பள்ளர்களின் கடமை. அந்த மாடுகளை அடக்கி வீரப்பட்டம் பெறுவது இடைநிலைச் சாதியினரின் உரிமை. இது தான் தமிழர் பண்பாடு.

ஜல்லிக்கட்டை ‘ஜனநாயகப்படுத்துகிறோம்’ என்று கூறும் பொதுவுடைமை இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தமிழீழ ஆதரவு அமைப்புகள் என எதாவது ஒரு இயக்கம், அவர்கள் கூறுவதில் நேர்மை இருக்குமானால்,

1.அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் அந்த முதல் மாட்டை - பள்ளர்கள் பூசாரியாக இருந்து - பள்ளர்கள் வளர்த்து விடும் முதல் மாட்டை - பள்ளர்களை வைத்தே அடங்குவோம் என்று களத்தில் இறங்க வேண்டும்.

2.சொரிக்காம்பட்டி கோவிலில் நினைவு வளைவில் உள்ள மாயாண்டி சிலையை, அவரது நண்பர் அழகத்தேவர் சிலைக்கு அருகேயே நிறுவ முன்வர வேண்டும்.

3. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் கிராமங்களில் சமத்துவ ஜல்லிக்கட்டுகளை நடத்த வேண்டும்.

இதுதான் ஜல்லிக்கட்டை ஜனநாயகப்படுத்துவது. அப்படி ஜனநாயகப்படுத்துங்கள். வரவேற்போம்.

தமிழர் பண்பாட்டுக்கு எதிரான இந்து மதத்தை அழிப்போம்!

தமிழர் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடும் நண்பர்களே, ஜல்லிக்கட்டு மட்டும் தான் தமிழர் பண்பாடா? அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிப்பதில் தமிழ்ப்பண்பாடு என்று எதுவுமே இல்லை. அதைப் பற்றி இனியாவது நாம் அக்கறை கொள்ள வேண்டும்.

periyar 314ஒரே ஜாதிக்குள் திருமணம், வரதட்சணை, வளைகாப்பு, குலசாமி கும்பிடு, காதுகுத்து, மூக்குக்குத்து, முதல் குழந்தைக்குக் குலதெய்வத்தின் பெயர்சூட்டுவது, கிடாவெட்டு, பூப்புனித நீராட்டுவிழா, பெண்ணுக்கு அணிகலன்கள், தாலி, அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், 60 ஆம் கல்யாணம், காசி யாத்திரை, கருமாதிச் சடங்குகள், இரட்டைச் சுடுகாடு,  கிராமக்கோவில் திருவிழா, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தைப்பூசம், மாரியம்மன் பண்டிகை போன்ற இந்துமதப் பண்டிகைகள், வாஸ்து, சோசியம், ஜாதகம், அட்சய திருதியை, பிரதோசம், இராசிக்கல் என தமிழர்கள் பின்பற்றும் பண்பாடுகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடுகள் தானா? இந்துப் பார்ப்பனப் பண்பாடுகள் தானே? இன்றுவரை இவற்றை எதிர்த்து நின்ற பொதுவுடைமை - தமிழ்த்தேசிய - தமிழீழ ஆதரவு அமைப்புகள் எவை?

ஊர் - சேரி என்பது தமிழர் பண்பாடா? சேரிகளை ஒழிப்போம், பண்பாட்டு ஒடுக்குமுறையை ஒழிப்போம் என்று எந்த ஜல்லிக்கட்டுப் போராளியும் கிளம்பவில்லையே? அவர்களது பாணியில் ‘ஜனநாயகப்படுத்துவோம்’ என்றுகூட இன்றுவரை குரல் வரவில்லையே? போராடும் புதிய தலைமுறையிடம் இதைக் கேட்கவில்லை. நன்கு அரசியல்படுத்தப்பட்ட அமைப்புகளின் தோழர்களிடம் கேட்கிறோம்.

இந்தப் பார்ப்பனப் பண்பாடுகளுக்கு அடிப்படையான மனுசாஸ்திரங்களை எரிக்கும் போராட்டத்தை 2013-ல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. அதில் பங்கேற்ற தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் யார்? யார்? இன்று தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றப் போராடுவதாகக் கூறும் ஒரு அமைப்புக்கூட 2013-ல் வரவில்லை. வராவிட்டால்கூட தவறில்லை. ‘மனு’வையும் இந்து மத வேதங்களையும் எதிர்த்து இவர்கள் நடத்திய களப்போராட்டங்கள் என்ன? பரப்புரைகளின் எண்ணிக்கை என்ன? வெளியீடுகள் எவை? எவை? பட்டியல் தர முடியுமா? பரவாயில்லை. வரும் 2017 மார்ச் 10ம் நாளில் திராவிடர் கழகம் மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளது. அதற்காவது இந்தப் பண்பாட்டுப் போராளிகள் வருவார்களா? வரமாட்டார்கள்.

பசு மாட்டுக்கறி உண்பது தமிழர் பண்பாடுதானே? அந்தப் பசுமாட்டிறைச்சிக்கு தமிழ்நாட்டில் இன்றுவரை தடை உள்ளது. சட்டப்படி தடை உள்ளது. அந்தத் தடையை எதிர்த்து, அந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்துக் களமிறங்கிய ஏறுதழுவல்காரர்கள் யார்? ஜனநாயகக்காரர்கள் யார்?

தாலி தமிழர் பண்பாடா? ஆரியப் பண்பாடு தானே? ஏறுதழுவல்காரர்கள் எத்தனைபேர் தாலி கட்டாமல் திருமணம் செய்தார்கள்? சரி. கட்டும்போது பல சூழல்களால் கட்டியிருக்கலாம். திருமணத்திற்குப் பிறகாவது அவற்றை அறுத்தெறிந்தீர்களா? அதற்கு உங்கள் குடும்பத்தை அரசியல்படுத்தியிருக்க வேண்டும். யாரென்றே முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட ஒரே நாளில், மெரினா கடற்கரையில் அரசியல்படுத்த முடிந்த உங்களால், இத்தனை ஆண்டுகளாக சொந்த வீட்டில் அரசியல்படுத்த முடியாதது ஏன்?

தமிழர், திராவிடர் பண்பாடுகளுக்கு எதிரான, இந்துமதப் பண்பாடுகள் அனைத்தையும் தவறாமல் பின்பற்றிக்கொண்டு, ஜல்லிக்கட்டில் மட்டும் தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றுவோம் என்று முழங்குவது மக்களை முட்டாளாக்கும் முயற்சியாகும்.

ஜல்லிக்கட்டு, பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு உதவும் பண்பாடு என்பதால்தான் ஜல்லிக்கட்டை மட்டும் தமிழர் பண்பாடு என்று ஆர்.எஸ்.எஸ் தூண்டியுள்ளது. இதை மறுப்பவர்கள் இனிமேலாவது, இந்தக் களத்திலாவது, இந்தியாவை எதிர்க்கும் அதே நேரத்தில் இந்துமதப் பண்பாடுகளைப் புறக்கணிப்போம்!. தமிழர்களுக்கு எதிரான இந்து மதத்தை அழிப்போம்! என அறிவிக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து விடுதலை அடைந்து விட்டால், தனித் தமிழ்நாடு ஆகிவிட்டால், பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து விடுமா? இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலேயே, ஜல்லிக்கட்டுக்கு எதிரான பார்ப்பனர்களை அம்பலப்படுத்தும் அமைப்புகள், இதே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பார்ப்பனர்களையும், இந்தப் போராட்டத்தை முதலில் தூண்டிவிட்ட பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்தவில்லை. இன்றுவரை ஜல்லிக்கட்டு ஆதரவுக் களத்தில் பின்னணியில் உள்ள பார்ப்பனர்களை எவரும் அம்பலப்படுத்தவில்லை.

தமிழர் பண்பாட்டு மீட்புப் போராட்டம் என்றால் அதில் பார்ப்பானுக்கு என்ன வேலை? அவர்களை அம்பலப்படுத்துவதைத் தடுக்கும் சக்தி எது? இப்போதே இந்தநிலை என்றால், தனித் தமிழ்நாட்டிலும் பார்ப்பன ஆதிக்கம் அப்படியேதான் இருக்கும் என்பதுதானே களத்தின் யதார்த்த நிலவரம். பார்ப்பன எதிர்ப்பற்ற தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்படி அழிக்கப்பட்டது என்பதைக் கண்முன்னே நாம் பார்த்தோம். தமிழீழ இன அழிப்பில் பெரும்பங்கு வகித்த ஶ்ரீஶ்ரீரவிசங்கர், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணிப் பார்ப்பனர்கள் தான் ஜல்லிக்கட்டு ஆதரவுக் களத்திலும் உள்ளனர். அவர்களை அம்பலப்படுத்தி அப்புறப்படுத்தாமல் வெறும் ஜல்லிக்கட்டு உரிமை பெறுவதோ, தனித் தமிழ்நாடே பெறுவதோ எந்த வகையில் மக்களின் உண்மையான விடுதலைக்குப் பயன்படும்?

ஜாதி ஒழிப்பா? நாட்டு விடுதலையா?

ஜல்லிக்கட்டில் ஜாதி, தீண்டாமை இருக்கிறது. அது ஜாதி ஆதிக்க, ஆணாதிக்கப் பண்பாடு தான். ஆனால், தன்னெழுச்சியாக மாணவர்கள் கிளர்ந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காகத் தொடங்கிய போராட்டம் இன்று, தேசிய இன விடுதலைப் புரட்சியாக மாறியுள்ளது. குடி அரசு நாள் புறக்கணிப்பு, தனித் தமிழ்நாடு என்றெல்லாம் பேசப்படுகிறது. இந்தச் சூழலில், ஜாதிப் பிரச்சனையைப் பற்றிப் பேசுவது சரியல்ல. தாழ்த்தப்பட்டவர்களிடம் இருந்து தங்களது உரிமைக்காக ஒரு போராட்டம் எழுந்திருந்தால் அதை நாம் ஆதரிக்கலாம். அப்படி ஏதும் எழவில்லை. எனவே இந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

மேற்கண்ட பொருளில் பல தோழர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய இன விடுதலையா? ஜாதி ஒழிப்பா? என்றால் ஒரு பெரியார் தொண்டன், ஜாதி ஒழிப்பைத் தான் தேர்வு செய்வான். தோழர் பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டதுகூட தேசிய இனவிடுதலை என்ற கருத்திலோ, ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் தவறென்ன? என்ற நிலையிலோ அல்ல. ஜாதி ஒழிப்பிற்காகத் தான் தனித் தமிழ்நாடு போராட்டத்தை அறிவித்தார். ஜாதியை - ஜாதியின் அடையாளங்களை - ஜாதிப் பண்பாடுகளை அப்படியே காப்பாற்றிக் காண்டு, அவற்றைக் காப்பாற்றுவதற்காக ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக பெரியார் தனித் தமிழ்நாட்டை அறிவிக்கவில்லை. பெரியாரின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள ‘சைமன் கமிஷன்’ வரவேற்பு பற்றி நாம் அறிய வேண்டும்.

சைமன் குழு ஆதரவும் தேசத்துரோகி பட்டமும்

1928-ல் ஆங்கிலேய அரசு சர் ஜான் சைமன், கிளமண்ட் அட்லி, ஹென்ரி-லெவி லாசன், பர்னாம் பிரபு, எட்வர்ட் காடோகன், வெர்னான் ஹார்ட்ஷோம், ஜார்ஜ் லேன்-ஃபாக்சு, டோனால்ட் ஹோவார்ட் ஆகிய ஏழு இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்றக் குழு ஒன்றை அமைத்தது. இதன் தலைவர் சர். ஜான் சைமனின் பெயரால் இது ‘சைமன் கமிஷன்’ என்று வழங்கப்பட்டது. இந்தியாவுக்கு வந்து ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள், அனைத்து ஜாதி அமைப்புகள், சமூக இயக்கங்கள் என பல தரப்பினருடன் கலந்தாலோசித்து அவர்களது கருத்துகளைக் கேட்டறியவும், அடுத்து எந்த மாதிரியான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம் என்பவை குறித்துப் பரிந்துரை செய்யவும் இக்குழு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 3, 1928 ல் சைமன் குழு இந்தியா வந்தது.

இந்தியர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம் பெறாததால் அனைத்து இந்தியர்களும் எதிர்த்தனர். 10.10. 1928-ல் சைமன் கமிஷன் இந்தியா வந்த போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. அத்தகைய ஒரு போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் காயமடைந்த லாலா லஜபதிராய் மரணமடைந்தார். மிகப்பெரும் தலைவர் காவல்துறையின் தடியடியில் கொல்லப்பட்டார் என்பதால் நாடுமுழுவதும் பெரும் கலகம் வெடித்தது. சைமன் குழுவின் அறிக்கைக்குப் போட்டியாக மோதிலால் நேரு ‘நேரு அறிக்கை’ என்ற அறிக்கையை வெளியிட்டார்.

இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைவிட மிகப் பெரும் போராட்டமாக சைமன் குழு எதிர்ப்புப் போராட்டம், இந்திய விடுதலைப் புரட்சியாக நடந்தது. அன்று இருந்த அச்சு ஊடகங்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் அந்நிய ஆங்கிலேயரை எதிர்ப்பதில் முனைப்பாக இருந்தனர். பெரியாருக்கு மிகவும் அணுக்கமான ஜஸ்டிஸ் கட்சி முதற்கொண்டு, இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுவுடைமைப் போராளிகள் என அனைவருமே சைமன் கமிஷனை எதிர்த்தனர். ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவிலும், இந்திய விடுதலைப் போராட்டம் காட்டுத்தீயாகப் பரவியிருந்த அந்த நேரத்திலும் மிகவும் தெளிவாக முடிவெடுத்தவர்கள் இருவர் மட்டுமே. தோழர் பெரியார், தோழர் அம்பேத்கர்.

பெரியாரும், அம்பேத்கரும் மட்டுமே, இந்திய விடுதலையைவிட தாழ்த்தப்பட்டோர் விடுதலையே முக்கியம் எனக் கருதி, சைமன் கமிஷனை வரவேற்றனர். அந்தக் குழுவை வரவேற்றதால், பெரியார் ‘தேசத்துரோகி’ என்றும், ‘வெள்ளையனுக்கு வால்பிடித்தவர்’ என்றும் மிகக் கடுமையாகக் கொச்சைப் படுத்தப்பட்டார். ஆனால் சைமன் குழுவை வரவேற்று, அவர்களிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி முறை - இரட்டை வாக்குரிமை என்ற மாபெரும் விடுதலைக் கருவியை முன்மொழிந்தனர். அது குறித்துப் பெரியார் பேசுகிறார்...

“சைமன் கமிஷன் இந்தியாவுக்கு முதலில் வந்த பொழுது, இந்திய அரசியல் ஸ்தாபனங்கள் முழுவதும் ஜஸ்டிஸ் கட்சி உள்பட எதிர்த்து பஹிஷ்காரம் செய்த காலத்தில் சுயமரியாதை இயக்கம் ஒன்று மாத்திரமே அதை வரவேற்று, தீண்டப்படாதவர்கள் என்று சமூக வாழ்வில் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கும் 7 கோடி மக்களின் நிலைமையையும், இந்தியப் பெண்கள் நிலைமையையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என்றும்; அதற்காகவே வரவேற்கிறோம் என்றும், தெரிவித்த பின்பு சைமன் கமிஷன் தீண்டாமைத் தத்துவத்தையும், தீண்டப்படாதவர்களின் நிலைமையையும், பெண்கள் நிலைமையையும் தெரிந்து கொண்டு போய் கடைசியாக தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்குத் தனித்தொகுதி பிரதிநிதித்துவம் கொடுத்தார்கள்.”

-தோழர் பெரியர் -குடி அரசு - 27.01.1935

***

“சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்தபோது இந்தியா பூராவும் அதை எதிர்த்தும் உங்களுடைய நலனை உத்தேசித்தும் தான் சைமன் கமிஷனை வரவேற்று பாமர மக்களாலும், பார்ப்பனர்களாலும் தேசத் துரோகப் பட்டம் பெற்றேன். அப்படியிருந்தும் அதனால் ஏற்பட்ட பலனை நீங்களே கெடுத்துக் கொண்டு உங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டீர்கள்.

இனிமேலாவது நீங்கள் பூனா ஒப்பந்தத்தை ரத்து செய்ய முயற்சி செய்து அது முடியாவிட்டால் உங்கட்கு இருக்கும் 30 ஸ்தானங்களையும் பகுதியாகவாவது தனித் தொகுதி தேர்தலுக்கு விடும்படி கேட்டுப் பாருங்கள்.

அதுவும் முடியவில்லையானால் பொதுத் தொகுதியைவிட சர்க்கார் நியமனத்தின் மூலம் பெறும்படியாகவாவது செய்து கொள்ளுங்கள். இப்போது இதுவே உங்கள் முன்னாலிருக்கும் அவசர வேலையாகும். உங்களைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை பொது ஜனங்களிடை கொடுக்கப்பட்டிருக்கிறதென்பது எலிகளைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை பூனைகளிடம் கொடுத்தது போலவே இருக்கும்.

02.02.1935 நாமக்கல் வட்ட, மோகனூர் பள்ளர் சமூக மாநாட்டில் தோழர் பெரியார் - குடி அரசு - சொற்பொழிவு - 10.02.1935

ambedkar 241சைமன் கமிஷன் வந்தபோது தமிழ்நாட்டில் எந்தத் தாழ்த்தப்பட்டவரும் இந்திய விடுதலையைப் போராட்டத்தை மீறி தங்களுக்கு தனித்தொகுதி வேண்டும் என்று கோரவில்லை. அந்த நேரத்தில் அப்படி ஒரு போராட்டம் நடைபெறவே இல்லை. ஆனால், பெரியார் தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் சார்பாக சைமன் கமிஷனை வரவேற்று, அவர்களது உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிலைகளான, சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், தண்டி உப்பு யாத்திரை, அந்நியத் துணிகள் பகிஷ்கரிப்பு ஆகியவைகள் நடந்த காலத்தில் பெரியார், அவற்றின் பக்கம் கவனத்தைத் திருப்பாமல், தாழ்த்தப்பட்டோர் விடுதலை குறித்தே பேசினார், எழுதினார். விடுதலைப் போராட்டம் நடக்கும்போது ஜாதிப்பிரச்சனையைப் பேசலாமா? என்று எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாட்டுப் பற்று, போராட்டப் பற்று எதுவும் இல்லாமல் தாழ்த்தப்பட்டோருக்காகக் குரல் எழுப்பினார் பெரியார்.

“சமீப காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சட்டமறுப்பு கிளர்ச்சியில் உப்புக் காய்ச்சுவது, வனத்தில் பிரவேசிப்பது, கள்ளுக்கடை மறியல் செய்வது, ஜவுளிக்கடை மறியல் செய்வது, என்பவைகள் போன்ற சில சாதாரணமானதும், வெறும் விளம்பரத்திற்கே ஆனதுமான காரியங்கள் செய்யப்பட்டு 40 ஆயிரம்பேர் வரையில் ஜெயிலுக்குப் போயும் அடிப்பட்டும் உதைபட்டும் கஷ்டமும்பட்டதாக பெருமை பாராட்டிக் கொள்ளப் பட்டதே தவிர இந்த மிகக் கொடுமையான தீண்டாமையென்னும் விஷயத்தைப் பற்றி எவ்வித கவலையும் யாரும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் ஒரு சமயம் இது மேல்கண்ட மற்றவைகளைப் போன்ற அவ்வளவு முக்கியமான காரியம் அல்லவென்று அரசியல்காரர்கள் கருதியிருப்பார்களோ என்னவோ என்பதாக யாராவது சமாதானம் சொல்லக்கூடுமா? என்று பார்த்தால் அந்தப்படியும் ஒருக்காலும் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

- தோழர் பெரியார், குடி அரசு - 24.05.1931

***

“வருணாச்சிரமம் இருக்க வேண்டும், ஜாதி இருக்க வேண்டும் ராஜாக்கள் இருக்க வேண்டும், முதலாளிகள் இருக்க வேண்டும், மதம் வேண்டும், வேதம் புராணம் இதிகாசம் இருக்க வேண்டும், இன்றைக்கு இருக்கிறதெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இவைகளையெல்லாம் பலப்படுத்த - நிலைக்க வைக்க வேண்டி - “வெள்ளைக்காரன் மாத்திரம் போக வேண்டும்” என்கின்ற காங்கரசோ, சுயராஜ்யமோ, தேசீயமோ, காந்தீயமோ சுயமரியாதை இயக்கத்திற்கு வைரியேயாகும்.”

- தோழர் பெரியார், பகுத்தறிவு - டிசம்பர் 1938

பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்கான நிலைப்பாடுகளைப் பற்றி இன்னும் கூடுதலாக அறிய ‘பெரியார் - அம்பேத்கர்: இன்றைய பொருத்தப்பாடு’ என்ற நூலைப் படிக்க வேண்டும். பெரியார் திராவிடர் கழகம் 2008-ல் அதை வெளியிட்டது. 22.02.2008 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய ‘பெரியார் அம்பேத்கர்: இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவில் பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள் ஆற்றிய உரையே அந்நூல்.

“ஒரு காலத்தில் இந்த நாட்டின் மீது சீனா படையெடுத்து வந்தபோது இந்த நாட்டிலுள்ள தலைவர்களெல்லாம் துண்டேந்தி வசூல் செய்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா உட்பட. ஆனால் பெரியார் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. நான் கர்ப்பக்கிரகத்திற்குள்ளே போகிறேன் என்று சொன்னார். பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், சீனா படையெடுத்து வருகிறது, நாடு பறிபோகிறது, நீங்கள் இப்போதுதான் ஜாதியை ஒழிக்கிறேன். மதத்தை ஒழிக்கிறேன் என்கிறீர்களே என்று கேட்டபோது பெரியார் சொன்னார்:

ஒருவேளை சீனாக்காரன் படையெடுத்து வந்து என்னுடைய சூத்திரப்பட்டம் போகுமானால், பற, பள்ளு பட்டம் போகுமானால் அவனையும் வரவேற்பதற்கு நான் தயார் என்று சொல்லுவதற்கு ஒரே ஒரு தலைவன் தான் இந்த மண்ணிலே இருந்தார்.”

என்றார் ஆ.இராசா. அதேபோல, ஜல்லிக்கட்டு என்ற ஜாதி ஆதிக்க விழாவை நடத்தித்தான் ஆக வேண்டும் என்றால், அதுதான் தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளம் என்றால் நடத்திக் கொள்ளுங்கள். மக்களுக்குள் பிரிவினையை வளர்க்கும் ஒரு பண்பாடுதான் நமது பண்பாடு என்றால், எங்களுக்கு அந்தப் பண்பாடு வேண்டாம் - அதை நடத்திக் காட்டுவதோ, ஜனநாயகப்படுத்துவதோ எங்கள் வேலை அல்ல என்ற நிலையைத்தான் எடுக்க வேண்டியுள்ளது.

அதே உரையில் தோழர் அம்பேத்கர் இந்திய விடுதலை பற்றிய நிலைப்பாட்டையும் ஆ.இராசா அவர்கள் விளக்கியுள்ளார். அதையும் பார்ப்போம்.

“சுதந்திரம் என்பது வெள்ளைக்காரர்கள் பிராமண கொள்ளைக்காரர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர். நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். இதைச் சொல்லுகிற போது 1947. ஆனால் இது 1937 , 39லேயே அம்பேத்கருக்கு ஒரு சங்கடம் வருகிறது. இரண்டாம் உலகப்போர் வந்த போது அந்த இரண்டாம் உலகப்போரில் வின்சென்ட் சர்ச்சில் இங்கிலாந்தினுடைய பிரதமர். நம்முடைய நாடு அவருக்குக் கீழே இருக்கிறது. அவர் ஹிட்லரை எதிர்க்க வேண்டுமென்பதற்காக இந்தியத் துருப்புகளைப் பயன்படுத்துகிறார். யாருக்கு எதிராக? நாஜிப் படைகளுக்கு எதிராக. ஹிட்லருக்கு எதிராக இந்தியாவினுடைய துருப்புகளை அவர் பயன்படுத்துகிற பொழுது, காந்தி ஒரு கேள்வியை வைக்கிறார் காங்கிரஸ் சார்பில். என்ன கேள்வி என்றால் வின்சென்ட் சர்ச்சில் அவர்களே, உங்களுக்கு எதிரி ஹிட்லர், எங்களுக்கு அல்ல. இந்தப் போரில் எங்களுடைய சிப்பாய்களை, எங்களுடைய துருப்புக்களை, எங்களுடைய ஆயுதங்களை நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் எங்களுக்குக் கிடைக்கப் போவது என்ன?'' என்று கேட்கிறார். What will be the benefit after the war, having deployed our sources? இது காந்தி வைக்கிற கேள்வி, வின்சென்ட் சர்ச்சிலுக்கு. வின்சென்ட் சர்ச்சில் ரொம்ப அமைதியாக பதில் சொன்னார்: To restore traditional Britain என்னுடைய மரபுமிக்க தொன்மைமிக்க பெருமை மிக்க பிரிட்டனை நான் மீண்டும் பெறுவதற்காகத் தான் போராடப் போகிறேன்.

எவ்வளவு பெரிய கொழுப்பு? காந்தியாருக்குக் கோபம். என்னுடைய சகோதரன் இரத்தம் இழக்கிறான். என்னுடைய சகோதரன் வாழ்வை இழக்கப் போகிறான். குற்றுயிரும், குலை உயிருமாக இளம் மனைவிகளை இழக்கப் போகிற கணவனை என் கண்ணெதிரிலே பார்க்கிறேன். ஆனால் நீ சொல்லுகிறாய், To restore traditional Britain உன்னுடைய சிப்பாய்களை நான் கொல்லப் போகிறேன் என்று சொன்னால் இது உனக்குத் திமிரல்லவா என்று கேட்கிறார். இது ‘யங் இண்டியா’வில் வருகிறது.

அடுத்தநாள் அம்பேத்கர் கேட்கிறார். Yes, the question that was asked by Mr.Gandhi is legitimate காந்தி கேட்கிற கேள்வி ரொம்ப நியாயமான கேள்வி. ஆனால் திரும்ப நான் கேட்கிறேன் காந்தியை. வின்சென்ட் சர்ச்சிலுக்கு சிப்பாயை அனுப்பிவிட்டு என்ன பயன் என்று கேட்கிறாயே? நான் கேட்கிறேன், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்று நீ கேட்கிறாயே, அந்த சுதந்திரத்திற்குப் பின்னால் எனக்கும் பிற்படுத்தப்பட்டவனுக்கும் பற, பள்ளனுக்கும் என்ன கிடைக்கப் போகிறது? What will be the social order after independence since you are fighting for independence?”

ஆ.இராசா இவ்வாறு உரையாற்றினார்.

சுதந்திரத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கப் போவது என்ன என்று தோழர் அம்பேத்கர் வினவினார். ஆனால், இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றி பெற்றாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு கிடைக்கப் போவது என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆம். அனுமதி மறுப்பு. தாழ்த்தப்பட்டோருக்கு பறையன் பட்டம். பிற்படுத்தப்பட்டவருக்கு சூத்திரப்பட்டம். இதுதானே உறுதியாகப் போகிறது?

தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்து சமரசமின்றிப் போராடுகிறோம். ஆனால் அதே தீண்டாமை வன்கொடுமையின் மற்றொரு வடிவமான ஜல்லிக்கட்டை, தமிழர் பண்பாடாக நிலைநிறுத்தத் துடிக்கும் போராட்டத்தை ஆதரிக்கிறோம். இது எப்படி சரியான அணுகுமுறை ஆகும்? இதேபோன்ற நிலையை 1965 மொழிப் போராட்டம் உருவாக்கியது. அந்தப் போராட்ட முறையை மட்டுமல்ல, போராட்டத்தின் நோக்கத்தையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார் பெரியார். பெரும் பரபரப்புகள், நாட்டு விடுதலைப் புரட்சிகள் எல்லாம் நடந்த போராட்டச் சூழலில்கூட நம் தலைவர்கள் தெளிவாகத் தத்தம் நிலைகளில் உறுதியாக நின்றனர்.

ஜாதிகள், இந்துமதம், கடவுள், வேதங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், புராண, இதிகாசங்கள், இவை உருவாக்கிய பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவை முற்றிலும் அழியாமல் நாம் தமிழராக ஒன்றிணைய முடியாது. வழக்கம்போல அந்தப் பணியை நாம் முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும். இந்துப் பண்பாட்டு அடையாளங்களாக மாறிப்போன ஜல்லிக்கட்டுகளைப் பாதுகாக்கும் போராட்டங்களால் தமிழராக இணைய முடியாது. இந்தப் போராட்டங்களின் வெற்றிகூட சூத்திரப்பட்டமும், பஞ்சமப்பட்டமும் நிலைக்கவே பயன்படும்.

- அதிஅசுரன் 

(காட்டாறு 2017 ஜனவரி இதழில் வெளியானது)

Pin It