விஞ்ஞானம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் என்ன கூறியுள்ளனர் என்பதைக் காணும் முன்னர், விஞ்ஞானம் மார்க்சியத் தத்துவப்படி, அடிப்படையைச் சேர்ந்ததா, அல்லது மேற்கட்டு மானத்தைச் சேர்ந்ததா என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அடிப்படை மேற்கோப்பு பற்றி மார்க்ஸ் அவருடைய “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். அதனை முழுவது மாக இங்குக் காணலாம்.

“வாழ்வதற்கான சமுதாய உற்பத்தியில், மனிதர்கள் திட்டவட்டமான உறவுகளை மேற் கொள்கின்றனர். இவை அவர்களுடைய, இச்சை சாராதவை, அவர்களது பொருள் உற்பத்தியின் குறிப்பிட்ட கட்டங்களுக்கு இவை பொருத்தமாக உள்ளன. இந்த உறவுகளின் மொத்தம் தான் சமுதாயத்தின் பொருளாதார அமைப்பினை உருவாக்குகிறது. இதுதான் உண்மையான அடிப் படை. இதன் மீது சட்டம், அரசியல் ஆகிய மேற் கட்டுமானங்கள் எழுகின்றன.

இதற்கு இணையாக குறிப்பிட்ட சமுதாயப் பிரக்ஞை வடிவங்கள் உள்ளன. பொருள் உற்பத்தி முறையானது சமுதாய வாழ்வு, அரசியல், அறிவு உலகம் ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது. மனிதர்களது பிரக்ஞை அவர் களது இருப்பைத் தீர்மானிப்பதில்லை. அவர்களது சமூக இருப்பு அவர்களது பிரக்ஞையைத் தீர்மானிக் கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமுதாயத்தின் பொருள் உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகளுடன் முரண்படுகின்றன. அல்லது இதனைச் சட்டரீதியாகக் கூறினால், இதுவரை செயல்பட்டு வந்த சொத்துரிமை உறவுகளுடன் முரண்படுகின்றன. வளர்ச்சிக்குரிய உற்பத்தி சக்திகளின் வடிவங்கள் என்பது மாறி இவை அதற்குத் தடையாக உள்ளன. இப்பொழுது சமூகப் புரட்சி தோன்றுகிறது.

பொருளாதார அடித்தளத்தில் தோன்றும் மாறு தல்கள் தாமதமாகவோ அல்லது விரைவாகவோ, பிரம்மாண்டமாக மேற்கட்டுமானத்தில் மாறுதல் களைக் கொண்டு வருகின்றன. இத்தகைய மாறுதல் களைப் பற்றி ஆராயும் பொழுது, உற்பத்திக்கான பொருளாதார சூழ்நிலைக்குரிய பொருளியல் மாறுதல்களிலிருந்து (இவற்றை இயற்கை விஞ்ஞானத் திற்குரிய துல்லியமாக அளவிட முடியும்) சட்டம், அரசியல், மதம், கலை, தத்துவம் போன்ற கருத்தியல் வடிவங்களிலிருந்து பிரித்தறிய வேண்டியது அவசியம்.

ஏனென்றால் இவற்றில் தான் முரண்பாடுகளை உணர்ந்து போராடுகிறார்கள். ஒருவன் என்ன நினைக்கிறான் என்பதிலிருந்து எவ்வாறு ஒருவனை மதிப்பிட முடியாதோ அதே போன்று, மாறு தலடையும் காலகட்டத்தினை அதன் பிரக்ஞை மூலம் மதிப்பிட முடியாது. இதற்கு மாறாக, இந்த பிரக்ஞையை பொருளாதார வாழ்வில் உள்ள முரண்பாடுகள் மூலமே விளக்க வேண்டும். அதாவது சமூக உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய வற்றிற்கு இடையே உள்ள முரண்பாடுகள் மூலமே விளக்க வேண்டும்”.

அடிப்படை மேற்கோப்பு ஆகியவற்றிற்கான உறவினைப் பற்றி மார்க்ஸ் கூறவிரும்புவது மிகத் தெளிவாக இடம் பெற்றுள்ள பகுதி இது. இது பற்றி மாரிஸ்டாப் என்ற அறிஞர், இதன் பல பகுதிகளை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று கூறுவார். இதனை நாம் கருத்தியல் பற்றிய மார்க்சீய ஆய்விற்குத் திறவுகோலாகக் கொள்ள வேண்டும்.

இந்த மேற்கோளில் இயற்கை விஞ்ஞானம் துல்லியமானது என்ற கருத்து இடம் பெறுகிறது. அவ்வாறாயின் அது அடிப்படையின் பிரதிபலிப்பாக, ஆனால் துல்லியமான பிரதிபலிப்பாக, இடம் பெறுகிறது என்று பொருள். இயற்கை விஞ்ஞானம் துல்லியமானது என்றால் துல்லியமற்ற கருத்தியல் வடிவங்களாகச் சட்டம், மதம், கலை, தத்துவம் போன்றவை இடம் பெறுகின்றன. இவை எல்லாம் உள்ளடங்கியவை தான் இந்தக் கருத்தியல் என்பது; இதில் விஞ்ஞானமும் அடங்கும்.

இதனை மனதில் கொண்டு தான் “தத்துவ அகராதி” (ஞசடிபசநளள; ஆடிளஉடிற) என்பதில் விஞ்ஞானம் பற்றிய பின்வரும் வரையறை இடம்பெறுகிறது “விஞ்ஞானம் என்பது சமூகப் பிரக்ஞையின்

ஒரு வடிவம் ஆகும். இது வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்ற அறிவு அமைப்பு ஆகும். இதன் உண்மைத் தன்மையானது சமுதாயத்தின் நடை முறை அனுபவத்தின் மூலம் சரி பார்க்கப்படுகிறது, தொடர்ந்து செழுமைப்படுத்தப்படுகிறது”.

இந்த மேற்கோள்கள் விஞ்ஞானம் என்பது மேற்கட்டுமானத்தினைச் சார்ந்தது என்பதைக் காட்டுகின்றன. இதில் குறிப்பிடப்படும் கருத்தியல் என்பதில் இருவகை உண்டு. 1. தலைகீழான கருத்தியல். இதில் மதம், இலக்கியம் போன்றவை அடங்கும் 2. உண்மையான அல்லது நேரான கருத்தியல். இதில் விஞ்ஞானம் இடம் பெறுகிறது. தலைகீழான கருத்தியலின் வளர்ச்சியுடன் கூடவே நேரான கருத்தியலும் வளர்கிறது. இவை பொருள் பற்றி மனிதன் கொண்டுள்ள கருத்துக்கள் ஆகும்.

மனிதன் உற்பத்தியில் ஈடுபடும் பொழுது பொருள் களுடன் உறவு கொள்கிறான். இதன் மூலம் பொருள் பற்றிய சில முடிவுகளுக்கு வருகிறான். உற்பத்தி வளர்ச்சி பெற வேண்டும் என்றால் பொருளின் தன்மை, அதன் உறவுகள் இயக்கம் ஆகியன பற்றிய அறிவு வேண்டும். ஒரு பொற் கொல்லன் தங்கம் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு தச்சன் மரம் பற்றி நன்கு அறிந் திருக்க வேண்டும். இத்தகைய அறிவு இல்லா விட்டால் உற்பத்திச் செயலில் இறங்க முடியாது. இந்த உற்பத்தி முறை சிக்கலாக சிக்கலாக இவை பற்றிய அறிவும் சிக்கலாகி விடுகிறது.

 இந்த அறிவினைப் பெறுவதற்கு மிக அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இது ஒன்றும் கற்பனையின் மூலம் பெறும் அறிவு அல்ல. அதனால் தான், விஞ்ஞானம் என்பது மேற்கட்டுமானத்தில் இருந் தாலும், அது அடிப்படையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று மார்க்ஸ் கூறினார். இந்தத் தொடர்பிற்குக் காரணம், விஞ்ஞானமானது தொழில் உற்பத்தி முறையிலிருந்து தோன்றுகிறது. எனவே விஞ்ஞானம் துல்லியத் தன்மை உள்ளதாக விளங்குகிறது. உதாரணமாக புராதன கால மனிதன் அவனது சுற்றுப்புறம் பற்றி நன்கு அறிந்து கொண் டிருந்தான்.

செடி, கொடிகள், விலங்குகளின் தன்மை ஆகியன பற்றி அவன் தெரிந்து வைத்திருந்தான். இது தொழில் உற்பத்தி மூலம் கிடைத்த அறிவு. இதனை அவன் மந்திரம் என்பதன் மூலம் விளக்க முயன்றான். இது தவறான விளக்கம் என்றாலும் அந்தக் கால உற்பத்தி முறைக்கு ஏற்ப இது இருந்தது. இந்தத் தொழில் முறை விரிவடையும் பொழுது இதில் உள்ள மர்மத் தன்மை அகன்று பொருள் பற்றிய உண்மையான அறிவு தோன்றுகிறது. எனவே தொழில் உற்பத்தி, நடைமுறை ஆகியவற்றுடன் விஞ்ஞானம் இணைந்தே வளர்ந்தது எனலாம்.

உற்பத்தி முறையானது விஞ்ஞான வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது என்பது பற்றி எங்கல்ஸ் பின்வரு மாறு கூறுகிறார்.“ஆரம்பத்திலிருந்தே விஞ்ஞானத்தின் தோற்றமும், வளர்ச்சியும், உற்பத்தியால் தீர் மானிக்கப்பட்டு வந்திருக்கின்றன” ( Dialectics of Nature – Notes ).

ஆனால் உற்பத்தியானது ஒவ்வொரு கால கட்டத்திலும் சீராக இல்லாததால், அதன் தன்மைக்கு ஏற்ப விஞ்ஞான வளர்ச்சியும் சீராக இல்லை. விஞ்ஞான வளர்ச்சியானது சமச் சீரற்றதாக இருந்தது. உதாரணமாக இயந்திரவியல் அதிகமாக வளர்ந்த பொழுது வேதியியல் வளர்ச்சி பெற வில்லை. வேதியியல் சற்றுப் பின்னால்தான் வளர்ச்சி பெற்றது.

விஞ்ஞானம் தோன்றுவதற்குக் காரணம் உற்பத்தி வளர்ச்சியும், விரிவான வேலைப் பிரி வினையும் ஆகும். இதன் பிரதிபலிப்பாகப் பல துறைகள் வளர்ச்சி பெறுகின்றன. விவரங்கள் நிறையக் கிடைக்கின்றன. இவற்றைத் தொகுத்து ஒழுங்கு செய்யும் பொழுது விஞ்ஞானம் அறிவு சம்பந்தமான விஷயமாக மாறிவிடுகிறது. ஆனால் உண்மையில் அது நடைமுறையுடன் தொடர் புடையது என்பதை எல்லோரும் மறந்து விடு கின்றனர். அது உற்பத்தியுடன் தொடர்புடை யதாக இருந்து, அதிலிருந்து வளர்ந்தாலும், அது ஒரு தனித்துறையாக மாறிவிடுகிறது.

வேதியியல், இயற்பியல், உயிரியல், வானவியல் என்று நிபுணத்துவத் துறைகளாக உருமாறி விடுகிறது. பல விஞ்ஞானிகள் தீர்க்க தரிசனம் போன்று சில விஷயங்கள் பற்றிக் கூறுகின்றனர். மென்டலியேவின் தனிம ஆவர்த்த அட்டவணை இத்தகையது. தெரிந்த தனிமங்களின் அணு எடையைக் கொண்டு சில தெரியாத தனிமங்கள் இருப்பது பற்றி அவர் கூறினார். பின்னர் அவை கண்டுபிடிக்கப்பட்டன.

சமுதாய அரங்கில் விரிவான வேலைப் பிரிவினை ஏற்பட்ட பின்னர் விஞ்ஞானம் தோன்றியது. வேலைப் பிரிவினை என்று வரும் பொழுது வர்க்கங்கள் வளர்ச்சி பெறுகின்றன. உற்பத்தி யுடன் தொடர்புடையது என்றாலும், விஞ்ஞானம் அறிவுச் செயலாகவே உள்ளது. எனவே ஆளும் வர்க்கம் அதன் மீது அதிகமான ஆதிக்கம் செலுத் தியது. இதற்கு உட்பட்டே விஞ்ஞான வளர்ச்சியும் இருந்தது. எந்த வர்க்கம் சமுதாயத்தின் செயல் களைத் திட்டமிடுகிறதோ அது விஞ்ஞானத்தையும் நெறிப்படுத்தியது.

தற்கால விஞ்ஞானம் என்பது பூர்ஷ்வாக்களின் விஞ்ஞானம் ஆகும். பூர்ஷ்வா வர்க்கத்தின் கருத்தியலானது விஞ்ஞானத்தின் போக்கைத் தீர்மானிக்கிறது. பழைய நிலஉடைமை அமைப்பில் விஞ்ஞான வளர்ச்சியானது பெரிய அளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டது. உதாரண மாக மதத்திற்கு விரோதமாக எந்த விஞ்ஞானியும் புதிய எதையும் கூறமுடியாது. அவ்வாறு கூறிய ஜியாளர் டோ புரூனோ என்பவரைத் தீயிலிட்டு எரித்தனர்.

சூரியனை கிரகங்கள் சுற்றி வருகின்றன என்று கருதிய நிக்கோலஸ் தாப்பர் நீக்கஸ் தனது கருத்தை வெளியிடவே அஞ்சினார். கலிலியோ சிறையிடப்பட்டார். ஆனால் பூர்ஷ்வா சமுதாயம் தோன்றும் பொழுது இத்தடைகள் இல்லை. பரிசோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் பூர்ஷ்வா சமுதாயம் அதிக இடமளித்தது. எனவே விஞ்ஞானம் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றது. ஆனால் பூர்ஷ்வா, அமைப்பின் கருத்தியல் அதன் மீது ஆதிக்கம் செலுத்தியது.

நியூட்டன், ஐன்ஸ்டைன் எடிங்டன், தாம்சன் என்று பல விஞ்ஞானிகள் இருந்த போதிலும், கருத்தியல் ரீதியாக அவர்கள் பூர்ஷ்வாக் கண்ணோட்டம் கொண்டவர்களாகவே இருந்தனர்.

இதுவரை நாம் கண்டது இயற்கை விஞ்ஞானம். ஆனால் மற்றொரு பகுதி உள்ளது. அது சமூக விஞ்ஞானம். இது மனிதர்களைப் பற்றியது. இயற்கை விஞ்ஞானத்தில் பொருள் பற்றிய பல விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை பொதுமைப்படுத்தப்பட்டு, பொதுவான விதிகள் உருவாக்கப்படுகின்றன. இது விஞ்ஞானக் கொள்கை. ஆனால் இதனைக் கட்டுப்படுத்தும் வர்க்கம் இருப்பினும் கொள்கைகள் ஓரளவிற்கு வர்க்கத்தினை மீறியே வளர்கின்றன. இது பூர்ஷ்வா சமுதாயத்தின் ஆக்க பூர்வமான அம்சம்.

ஆனால் சமூக விஞ்ஞானங்களின் நிலை வேறு. சமூக விஞ்ஞானம் மனிதர்களுக்கு இடையே உள்ள உறவுகள் பற்றிப் பேசுகிறது. இது பற்றிப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. சமூக விஞ்ஞான மானது இயற்கை விஞ்ஞானத்திலிருந்து பின்வரும் விஷயங்களில் வேறுபடுகிறது.

1. இயற்கை விஞ்ஞானங்களைவிட அதிகமான அளவிற்கு வர்க்க நலன்கள் சமூக விஞ்ஞானங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இயற்கை விஞ்ஞானங் களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், சமூக விஞ்ஞானங் களுக்கு அதிகமான எதிர்ப்பு உண்டு. வர்க்க நலன் களுக்கு முரணாக எந்தக் கருத்தும் சமூக விஞ்ஞானங் களில் இடம் பெற முடியாது. சில சமயங்களில் வர்க்க நலன்களுக்கு முரணான கருத்துக்கள் திரித்தும் மாற்றியும் கூறப்படுகின்றன. சுரண்டலுக்கு ஆதரவான கருத்துக்கள் பிரபலப்படுத்தப்படுகின்றன. எதிரானவை புறக்கணிக்கப் படுகின்றன.

சமூக நிகழ்வுகளுக்கு உந்து விசையாக இருக்கும் வர்க்கப் போராட்டம் என்பது விஞ்ஞான ரீதியான அணுகுமுறை. இதனை மார்க்ஸ் வளர்த்தெடுத்தார். ஆனால் பூர்ஷ்வா சமூக விஞ்ஞானிகள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் சமூக நிகழ்வு களைத் தனித்தனியாகப் பிரித்துக் காண்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் இயங்கியல் அணுகுமுறை என்பதைக் கவனிப்பது இல்லை.

வர்க்க நலன்கள் காரணமாக சமுதாயம் பற்றிய ஆய்வுகளில் தடைகள் இடம் பெறுகின்றன. (நமது நாட்டில் சாதீயம் தடையாக உள்ளது). இதன் காரணமாக சமூக விஞ்ஞானிகளில் இடம் பெறும் பல முடிவுகள் பொய்யான உணர்வுத் தன்மை (false consciousness) கொண்டவையாக உள்ளன. அதுவும் ஆளும் வர்க்கத்தின் சார் பாகவே உள்ளன.

எனவே சமூக விஞ்ஞானத்தில் இடம் பெறும் பல முடிவுகள் ஆளும் வர்க்கத்தின் எண்ணங்களையே பிரதிபலிக்கின்றன. இதன் காரணமாக இயற்கை விஞ்ஞானங்களில் உள்ள துல்லியத் தன்மை இவற்றில் இருப்பதில்லை.

இயற்கை விஞ்ஞானம் உற்பத்தி முறையோடு நெருங்கிய தொடர்புடையது என்பது மார்க்சியம். உற்பத்தி முறையானது மாறுதல் அடையும் பொழுது விஞ்ஞானமும் மாறுதலடைகிறது. ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்ட பொழுது இயற்பியல் பெரிய அளவில் வளர்ந்தது. தொழில் துறைக்காகப் பல இயந்திரங்களை அமைத்தனர்.

இது விஞ்ஞானத்தில் சில அடிப்படைக் கண்டு பிடிப்புகளுக்குப் பின்புலமாக இருந்தது. நியூட்டன் இந்தக் கட்டத்தில் இயக்க விதிகளை உருவாக்கினார். இந்த விதிகள் பிரக்ஞையின் கூறுகளாக மாறின. உலகம் பற்றிய ஒரு விளக்கத்தை நியூட்டன் அளித்தார். அது இயந்திரம் போன்று இயங்கு கிறது என்று அவர் கூறினார். இந்த விதிகள் தொழில்துறையில் பயன்பட்டன. தொழில்துறை மூலம் விஞ்ஞானம் மேலும் வளர்ச்சி பெற்றது.

இங்கு விஞ்ஞானம் பற்றிய ஒரு கேள்வி எழுகிறது. அது மேல் கட்டுமானத்தினைச் சேர்ந்ததா? அல்லது பொருளாதார அடிப்படையைச் சேர்ந்ததா? என்பது அக்கேள்வி. இதற்கு இரண்டு விடைகள் உள்ளன. விஞ்ஞானம் பிரக்ஞையில் இடம்பெறும் பொழுது ஒவ்வொருகால கட்ட வர்க்கக் கண்ணோட்டம் அதனைப் பாதிக்கிறது. இதன் காரணமாக நாம் புராதன விஞ்ஞானம், அடிமைச் சமுதாய விஞ்ஞானம், நிலப்பிரபுத்துவ விஞ்ஞானம், பூர்ஷ்வா விஞ்ஞானம், (இன்று உள்ளது) சோஷலிச விஞ்ஞானம் என்று கூறுகிறோம். சிந்தனை வடிவமாக அது மாறும் பொழுது மேல்கட்டுமானத்தினைச் சேர்ந்ததாக அது உள்ளது.

அதே சமயத்தில் இயற்கை விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு உற்பத்திமுறைதான் உந்துவிசையாக உள்ளது. இதன் காரணமாக விஞ்ஞானமானது அடிப்படைக்கு நெருக்கமாகவே உள்ளது. அடிப் படையில் பல மாறுதல்களுக்கு அது துணையாக உள்ளது. இன்று உள்ள தொழில்நுட்ப தகவல் முறையை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

இதனை நாம் முதலில் கொடுத்த மேற் கோளின் பின்புலத்தில் காணலாம். விஞ்ஞான வளர்ச்சியைத் தீர்மானிப்பது உற்பத்திமுறை. ஆனால் விஞ்ஞானம் என்பது பிரக்ஞையின் வடிவம். பிரக்ஞையைத் தீர்மானிப்பது மனிதனது இருப்பு. எனவே விஞ்ஞானம் என்பது அடிப்படையைப் பிரதிபலிக்கிறது. கலை, இலக்கியம், தத்துவம் போன்ற மற்ற வடிவங்களைப் போன்று அல்லாமல் விஞ்ஞானம் துல்லியமாகப் பிரதி பலிக்கிறது. அடிப்படையின் மூலம் பொருள் களைப் பற்றிய நமது அறிவை விரிவடையச் செய்கிறது எனலாம். இதன் காரணமாக அடிப் படைக்கு நெருக்கமான நடைமுறை விஞ்ஞானம் (Applied Science) இதிலிருந்து சிந்தனை வடிவமாக உள்ள கொள்கை விஞ்ஞானம் என இரண்டாக அது உள்ளது எனலாம்.

ஆதாரம்

1. Theory of knowledge - Maurice cormforth. Lawrence & Wishart.

2. Dialectics of Nature: Engels.

3. The Fundementals of Marxist Leninist Philosophy - Moscow (1979).

4. Science And Society - Ed: A.Rahman P.N.Chowdry - ‘Karl Marx on the Economic Role of Science’ –Nathem Rosenbrerg CSIR Delhi 1980.

Pin It